மெரீனாக் கூட்டம்
சென்னை மெரீனா கடற்கரையில் 35 ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட தினம் தினம் ஒரு குழு கூடும்.
காந்தி சிலைக்குப் பின்னால் மணல் வெளியில் கொஞ்சம் நடந்து வலது கைப்பக்கம் திரும்பி ஒரு பத்து அடிகள் சென்றால் அங்கே ஒரு கூட்டம் வட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டு இருக்கும்.
இந்த விவாத வட்டம் மாலை ஆறு மணிக்கு அங்கே ஆஜர் ஆகும்.
இரவு 11 மணிக்கு எழுந்து செல்ல மனம் இல்லாமல் எழுந்து புறப்படும்.
ஆப்பனூர் மர்ஹும் காசிம் அண்ணன், எங்கள் இனிய சகா மர்ஹும் கவிஞர் சலா என்ற நாகப்பட்டினம் சலாஹுதீன், ஆப்பனூர் பீர்முஹம்மது, சில நேரங்களில் அப்துஸ் ஸமது சாஹிப் மகன் அப்துல் ஹமீது பாகவி, பல சமயங்களில் புலவர் அ. ஷேக் அலாவுதீன், சூ. அஜீஸ் அஹமது, பல நேரங்களில் கவிஞர் நாகூர் இஜட். ஜபருல்லாஹ், நான் என்று இப்படி குழுமி இருப்போம்.
அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா, ஆன்மீகம் இப்படி எல்லா பக்கங்களிலும் எங்கள் விவாதம் கடற் காற்றோடு கலந்து கலந்து பொங்கிக் கொண்டு இருக்கும்.
நாங்கள் அமர்ந்திருக்கும் அந்த இடத்திற்கு சுமார் 500 அடி தாண்டி, இரவு 9 மணி அளவில் சில நாற்காலிகள் சகிதம் ஒரு கூட்டம் வந்து அமரும்.
10 மணிக்கெல்லாம் கலைந்து போய்விடும்.
அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர். பாலு, திருவல்லிக்கேணி ஹுசேன், இன்னும் சிலர் இருப்பார்கள்.
ஆப்பனூர் காசிம் அண்ணன் மனித பலம், பலஹீனம் நிறைந்த உயர்ந்த மனிதர்.
பர்மாவில் வாழ்ந்து அகதியாக தமிழகம் வந்து உன்னதமான பல பணிகளை செய்து முடித்த அரிய மனிதர். நல்ல மார்க்க, இலக்கிய, அரசியல் ரசிகர். "அள்ளித் தருவது" என்ற வார்த்தை தமிழில் பயன்படுத்தப்படுவது உண்டு, ஆனால் அள்ளித் தருவது என்பதற்கு என்னிடம் பொருள் கேட்டால், ஆப்பனூர் காசிம் அண்ணன் என்பேன்.
என்னிடம் அளப்பரிய பாசமும் உயர்ந்த மதிப்பும் வைத்திருந்தார். அவர்தான் அந்த விவாதக் கூட்டத்திற்கு subject அள்ளி வைப்பார்.
இந்த கடற்கரை விவாத வட்டத்தில்தான் தமிழகத்துக்கு ஒரு இஸ்லாமிய அரசியல் நாளிதழ் வேண்டும் என்று விவாதங்கள் தொடர்ந்து நடந்தன.
அதற்குத் தேவையான பணம்?
இந்த இடம் வந்த உடனே எங்கள் விவாதம் குட்டிக் கரணம் போட்டு விடும்.
ஒரு நாள் ஆப்பனூர் காசிம் அண்ணன் ஒரு முடிவோடு வந்திருந்தார். நாம் தினசரியை ஆரம்பிக்கிறோம். தேவையான பொருளாதாரத்தை நான், என் சகோதரர்கள், என் குடும்பத்தினர்கள் முழுவதுமாகத் தந்து விடுகிறோம் என்றார்.
மறுநாள் ஆப்பனூர் காசிம் அண்ணனை நான் அழைத்துக் கொண்டு அடையாறு இந்திரா நகரில் உள்ள சிராஜுல் மில்லத் இல்லத்திற்கு சென்றேன்.
நேற்று இரவு கடற் கரையில் எடுத்த முடிவுகளைச் சொன்னோம்.
அப்துஸ் ஸமது சாஹிப் இரண்டே சொற்களை உச்சரித்தார்.
"இன்ஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ்"
நாளிதழ் உதையமாகிவிட்டது. அது தான் மணிச்சுடர்.
அந்த வாரமே ஸமது சாஹிப், காசிம் அண்ணன், ஸமது சாஹிப் பிள்ளைகள் பாக்கவி, அப்துல் ஹக்கீம் நால்வரும் மும்பை சென்றார்கள்.
இன்று இருக்கும் மணிச்சுடர் அச்சு இயந்திரத்தை புக் பண்ணி பணம் கட்டி வந்து விட்டார்கள்.
இன்று ஆப்பனூர் குடும்பத்திடம் மணிச்சுடர் இல்லை, அது வேறு கதை.
கடற் கரை விவாதக் குழுவில் உருவானது தான் மணிச்சுடர்.
கடற் கரை அந்தக் கூட்டத்தில் நான் இந்திய அரசியல் அமைப்பு அடிப்படைச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டு வந்தேன். காசிம் அண்ணன், "அண்ணே நாளையில் இருந்து இந்தப் பிரச்னையை மட்டும் இங்கே பேசுகிறீர்கள்" என்றார். நான் சரி என்றேன்.
சலாஹுதீனிடம், "நீங்கள் ஒரு டேப் ரிக்கார்டர் எடுத்து வந்து விடுங்கள்" என்றார்.
மறு நாளில் இருந்து நான் சரியான குறிப்புகளோடு அடிப்படை அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றி பேசினேன். என் பேச்சு அனைத்தையும் சலாஹுதீன் ரிகார்டு செய்தார்.
20 அல்லது 21 நாட்கள் இது நடந்திருக்கும்.
சலாஹுதீன் இந்தப் பேச்சுக்களைப் பூராவும் பேப்பரில் பதிவு செய்தார்.
என்னிடம் தந்தார். சிலவற்றை நீக்கி, சில ஆதாரங்களைப் பதிவு பண்ணி அவரிடமே திரும்பக் கொடுத்து விட்டேன்.
காசிம் அண்ணன் அவரது வணிகம் சம்மந்தமாக சிங்கப்பூர், மலேசியா இன்னும் சில நாடுகளுக்கு உடனடியாக செல்ல வேண்டியது இருந்தது. புறப்பட்டு போய் விட்டார். கிட்டத்தட்ட 4-5 மாதங்கள் இந்தியாவுக்குள் அவர் வரவில்லை.
இந்த நிலையில் ஒரு நாள் சலாஹுதீன் ஒரு கத்தை அச்சடித்த ப்ரூப் காப்பியை கொண்டு வந்து தந்தார்.
மெரீனாவில் சட்டத்தைப் பற்றி நான் பேசிய எல்லாம் அச்சாகி இருந்தது.
நான், சலாஹுதீனிடம் கேட்டேன், "என்னய்யா காசிம் அண்ணனும் இல்லை, பணத்திற்கு என்ன ஏற்பாடு செய்தீர்" - என்று.
"நீர் ப்ரூபைப் பார்த்துத் தாரும். இந்த வாரம் புத்தகம் ரெடி. ஏறக்குறைய 200 பக்கங்கள் வரலாம்" என்றார் சலாஹுதீன்.
சலாஹுதீன் சொன்னது மாதிரி புத்தகம் ரெடியாகி விட்டது. சலாஹுதீன் மூத்த மகளார் சாரா பெயரில் "சாரா பதிப்பகம்" என்று தொடங்கி என்னுடைய இந்த "தேவையான தீர்ப்புகள்" என்ற புத்தகத்தை வெளிக் கொணர்ந்தார்.
இந்த இடத்தில் மர்ஹூம் சலாஹுதீனை பற்றி நான் சிலது சொல்ல வேண்டும்.
சலாஹுதீன் மாதிரி ஒரு மனிதப் படைப்பை எல்லாம் வல்ல இறைவன் அரிதாகத்தான் படைப்பான் போலும். அவர் வாயிலிருந்து இல்லை என்ற சொல் வந்ததே கிடையாது. அவரிடம் கேட்டுவிட்டால் அவர் கையில் இல்லை என்றாலும் யாரிடமாவது வாங்கி வந்து நம்மிடம் தந்து விட்டுப் போய் விடுவார்.
காசிம் அண்ணன் ஒரு முன்மாதிரி என்றால் சலாஹுதீன் அடுத்தொரு நல்ல மாதிரி.
தேவையான தீர்ப்புகள் அச்சுச் செலவுக்காக சலாஹுதீனுக்கு அவர் மனைவி வழியில் வந்த தேக்கு மரக் கட்டிலையும் மெத்தையையும் விலைக்கு விற்று விட்டு பணத்தை அச்சகத்திற்கு கொடுத்துவிட்டார்.
இதனால் அவர் குடும்பத்துக்குள் குழப்பம். படுத்த படுக்கையை விற்றால் யாருக்குத்தான் கோபம் வராது?..
எங்கள் சலாஹுதீன் அப்படித்தான். அவரின் அனைத்துப் பாவங்களையும் மன்னித்து உயர்ந்த பதவியைக் கொடுக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.
காசிம் அண்ணன் வெளி நாட்டில் இருந்து வந்துவிட்டார். என் புத்தகத்தைப் பார்த்து பேரானந்தம் கொண்டார்.
சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் புத்தகத்தை வெளியிட ஏற்பாடு செய்தார்.
சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது சாஹிப் தலைமை தாங்கினார். என் நண்பர் கவிஞர் மு. மேத்தா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க. சுப்பு, ஜமாலியா மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இக்பால், இஜட். ஜபருல்லாஹ், புலவர் அ. ஷேக் அலாவுதீன் இந்த வெளியீட்டு விழாவில் பேசினார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றிய தமிழில் வந்த முதல் விமர்சன நூல் இதுவாகத்தான் இருக்கும். இந்த நூலுக்கு தமிழக நூலக ஆர்டர் கிடைத்தது.
தேவையான தீர்ப்பு கடற்கரை எங்கள் குழுக் கூட்டத்தில் கருத்தரித்து தேவநேயப் பாவாணர் நூலகத்தில் பிரசவமானது.
Save our soul என்பதின் சுருக்கம் S.O.S.
இந்த S.O.S. தலைப்பில் சுமார் 500 பக்கம் கொண்ட ஒரு சமூக விமர்சனப் புத்தகம் கொண்டுவர மேட்டர் முழுவதையும் எழுதி சலாஹுதீனிடம் கொடுத்துவிட்டேன்.
நான் எழுதியதில் எனக்குப் பிடித்த புத்தகம் இதுதான். ஆனால் இன்று வரை வெளிவரவில்லை. புத்தகம் அச்சாகி விட்டது. பைண்டிங் நடக்க வில்லை. புத்தகத்தை எடுத்து வர, அச்சகத்திற்கு தருவதற்கு எங்களிடம் பணம் இல்லை.
நாங்கள் தலைமறைவாகி விட்டோம். 30 ஆண்டுகளாகி விட்டன. அச்சகம் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
பிரதிகள் என்ன ஆனதோ பாவம்...
No comments:
Post a Comment