பேரீச்சம் பழத்துக்கு ஈயம் பித்தளை
முந்தைய தலைமுறை முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர்கள் மேல்மட்ட பொறுப்புக் காரர்கள். இவர்களுக்கு எல்லாம் பலராமன் என்கிற ஒரு எளிய மனிதரை நன்குத் தெரியும்.
காயிதே மில்லத் , 8, சென்னை மரைக்காயர் லெப்பை தெரு , முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு மாலை வந்தால், இரவு தாம்பரத்திற்கு செல்லும் கடைசி மின்சார ரயிலில் தான் குரோம்பேட்டை இல்லத்திற்கு செல்வார்கள்.
அப்படி செல்லுகிற பல நேரங்களில் முஸ்லிம் லீக் தலைமையகத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்திற்கு குறிப்பிட்ட சிலர் துணையாக போய் வருவார்கள். அப்படி செல்பவர்களில் பல நேரங்களில் பலராமனை பார்க்க முடியும்.
பலராமன் அவருடைய பதினாறு வயதில் இருந்து மண்ணடி முஸ்லிம்கள் மத்தியிலேயே பழகி வந்தவர்.
முஸ்லிம் லீக் தலைவர் அப்துஸ் ஸமத் சாஹிபின் தந்தையர் மௌலான மௌலவி ஆ.கா . அப்துல் ஹமீது பாக்கவியின் மணிவிளக்கு அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவராக பணியில் சேர்ந்தவர் பலராமன்.
கவிஞர் தா.காசிம், பலராமன், குப்புசாமி, மெஷின் மேன் ராமகிருஷ்ணன், குளச்சல் செய்யது இவர்களெல்லாம் ஒரே குழுவாக அச்சுப் பணியில் ஈடுபட்டவர்கள்.
பலராமன், மௌலானா எழுதிய தர்ஜுமத்துல் குர்ஆனை மூன்று முறைக்கு மேல் முழுவதுமாக அச்சுக் கோர்த்தவர். ஒரு சராசரி முஸ்லிமை விட குர்ஆனின் அர்த்தங்கள் அதிகம் தெரிந்தவர். M .R .M. அப்துற் - றஹீம் யுனிவர்சல் பப்ளிகேஷனில் பணி புரிந்தவர். மண்ணடி இப்ராஹீம் சாஹிப் தெருவில் இருந்த மௌலவி யூசுப் பாக்கவியின் நூருல் இஸ்லாம் மாத இதழில் பணி புரிந்தவர். முஸ்லிம் லீகின் வார இதழ் உரிமைக் குரலில் அச்சுக் கோர்த்தவர். மணிவிளக்கு, அறமுரசு பத்திரிகைகளில் தொடர்ந்து பணியாற்றியவர்.
பலராமன் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர். தமிழில் நல்ல இலக்கிய ரசிகர். சிறுகதை எழுதக் கூடியவர்.
புனித ரமலான் மாதத்தில் முப்பது நோன்புகளையும் நோற்கக் கூடியவர். நோன்பின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர். தெளிவான இந்து மத அடிப்படை நம்பிக்கை கொண்டவர்.
பலராமன் என்னை அதிகம் நேசிப்பார். என்னமோ தெரியவில்லை என் எழுத்துகளில் ஒரு வசீகரத்தை அவர் கண்டு ரசிப்பார்.
மணிவிளக்கில் பல அரசியல், இலக்கிய கட்டுரைகள், சிறுகதைகள் என்னை எழுதுவதற்கு தூண்டிக் கொண்டே இருப்பார்.
ஒருமுறை 8, மரைக்காயர் லெப்பை தெரு முஸ்லிம் லீக் தலைமையகத்தில் இரவு கவிஞர் காசிம், நான், பலராமன் இன்னும் சிலர் உக்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது பேரீச்சம் பழக் காட்டு பிரதிநிதிகள் என்ற தலைப்பில் நபிமார்கள் பற்றி புதுக்கவிதையில் எழுத எனக்கு ஆசை இருக்கிறது என்று சொன்னேன்.
உடனே கவிஞர் தா.காசிம் "டேய் மருமகனே நீ எழுது , அதை நான் புத்தகமாக வெளியிடுகிறேன் என்றார்". அந்த இரவு பேச்சோடு முடிந்து விட்டது.
8, மரைக்காயர் லெப்பை தெரு மூன்றாவது மாடியில் உள்ள அறையில் நான் தங்கி இருப்பேன். அந்த அறைக்கு மரச் சட்டங்களில் பச்சை நிறத்தில் தகரம் அடித்த கதவு இருக்கும். இன்னொரு புறத்தில் ஜன்னல் இருக்கும். அந்த எட்டாம் நம்பர் தான் பின்னர் 35, மரைக்காயர் லெப்பை தெருவாக மாறியது.
இரண்டு மாதத்திற்கு பின்னர் ஒரு நாள் காலை ஒன்பது மணிக்கு பலராமன் என் அறைக்கு வந்து என்னை எழுப்பினார். காலை ஒன்பது மணி என்பது எல்லாம் எனக்கு நடு ராத்திரி. இரவு முழுதும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்போம்.
விழித்த நான் பலராமனை பார்த்தேன். அவர் கையில் ஒரு பிளாஸ்க் இருந்தது. மறுகையில் பேப்பர் பொட்டலம் இருந்தது. அந்த பொட்டலத்தில் மூஸா காக்கா கடைப் பிறை பிஸ்கட்கள் இருந்தன. "இதெல்லாம் என்ன பலராமன்?" என்றேன்
"இந்த அறைக் கதவை வெளியே பூட்டுப் போட போகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவர் தோளில் தொங்கிக் கொண்டிருந்த பையில் இருந்து இரண்டு மூன்று கொயர்கள் பேப்பர்களை எனக்கு பக்கத்தில் எடுத்து வைத்தார். மூன்று பால் பேனாக்களை அதன் மீது வைத்தார்.
"நீங்கள் பேரீச்சம் பழக் காட்டு பிரதிநிதியை எழுத ஆரம்பியுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதுங்கள். மதியம் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே சாப்பாடு பொட்டலங்களை நான் தருவேன். நடு நடுவே, டீயும் பட்டர் பிஸ்கெட்டும் வரும். பேசிங் ஷோ சிகரத்ட் பாக்கட்டுகளும், தீப் பெட்டியும் தரப் படும். மாலை மணிவிளக்கு அலுவலகத்தில் இருந்து நான் திரும்பும்போது வந்து கதவை திறப்பேன். அதுவரை முடிந்தளவு எழுதிக் கொண்டே இருங்கள்" என்று சொல்லியவாறே விருட்டென்று வெளியே சென்று, கதவை தாழிட்டு பூட்டு போட்டு விட்டார்.
எனக்கு திக்பிரமை பிடித்த நிலை. கனவில் நடப்பது போல் இருந்தது. இயற்கை உபாதைகளை கூட போக்கிக் கொள்ள முடியாத நிலை.
சற்று நேரம் கழித்து வேறு வழியில்லாமல் எழுத உட்கார்ந்தேன். நடு நடுவே ஜன்னல் வழியே டீ, பட்டர் பிஸ்கட் வந்தது. எழுதிக் கொண்டே இருந்தேன். மதியம் வந்த சாப்பாட்டு பொட்டலத்தை நான் பிரிக்கவே இல்லை.
பலராமன் சொன்னதைப் போல மாலை கதவைத் திறந்தார். கூட கவிஞர் காசிம் வந்தார். நான் எழுதி வைத்திருந்ததை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு இயற்கை உபாதைகளை நீக்க குளியலறை ஓடி விட்டேன்.
அறைக்குள் திரும்பி வந்து பார்த்தால், எனக்கே ஆச்சர்யம். முழுப் புத்தகத்தையும் எழுதி முடித்திருந்தேன். பேரீச்சம் பழக் காட்டு பிரதிநிகள் புத்தகம் உருவான விதம் இப்படித் தான்.
மறுநாளில் இருந்து, கவிஞர் காசிமின் அச்சகத்தில் கம்போஸ் தொடங்கி விட்டது. முழுப் புத்தகத்தையும் பலராமன் தான் கம்போஸ் செய்தார். புத்தகத்திற்கு தேவையான பேப்பர் வாங்கி வந்தது. ட்ரெடிலில் அச்சடித்தது அனைத்தும் கவிஞர் தா.காசிம். அச்சுக் கோர்த்ததற்கு பலராமன் பணம் வாங்க மறுத்து விட்டார்.
ஒரு வாரம் சென்றது. அச்சடித்த பிரதிகளை எடுத்துக் கொண்டு கவிஞர் தா.காசிம் எங்கள் ஊரான வாவா நகரம் சென்றார்.
உடல்நலக் குறைவின் காரணமாக என் தந்தையார் வாவா நகரத்தில் இரண்டு ஆண்டுகள் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
கவிஞர் காசிம் அச்சு பிரதிகளை என் தந்தையாரிடம் தந்தார். என் தந்தையார் ஒரே மூச்சில் அத்தனையும் படித்தார். கவிஞரைப் பார்த்து "ரொம்ப நல்லா வந்திருக்கு, நீ எப்போம் இவ்வளவு வித்தியாசமாக புதுக் கவிதைகள் எழுதத் தொடங்கினாய்?". அப்போது தான் கவிஞர் காசிம் என் தந்தையாரிடம் "இது ஹிலால் எழுதியது" என்றார். என் தந்தையார் முகத்தில் அதுவரை காணாத மலர்ச்சியை கண்டேன் என்று கவிஞர் பின்னர் என்னிடம் சொன்னார்.
அது சரி, இதற்கெல்லாம் எவ்வளவு செலவானது என்று என் தந்தையார் , கவிஞரிடம் கேட்டு இருக்கிறார்.கவிஞர் கணக்கு சொல்லி இருக்கிறார். அந்தக் கணக்கில் பிரிண்டிங் செலவும் , கம்போசிங் செலவும் குறிக்கப் படவில்லை. என் தந்தையார் இது குறித்து கவிஞரிடம் கேட்டு இருக்கிறார்.
கவிஞர், "பிரிண்டிங் நான் செய்தேன் எனக்கு கூலி வேண்டாம். கம்போசிங் பலராமன் செய்தான் அவனும் கூலி வேண்டாம் என்று விட்டான்."
"அதெல்லாம் வேண்டாம் முழு செலவும் என்னிடம் சொல்லு, நான் முழுப் பணத்தையும் தந்து விடுகிறேன். மேலும் ஒரு ஆயிரம் தருகிறேன். அதை ஹிலாலிடம் தந்து விடு என்று முழுப் பணத்தையும் கொடுத்து விட்டார்"
பலராமன் கடைசி வரை பணம் வாங்கவில்லை. கவிஞர் பிரிண்டிங் சார்ஜும், பலராமன் கம்போசிங் சார்ஜையும் சேர்த்து கவிஞர் அச்சகத்திற்கு எழுத்துக்களையும் பேஜ் கட்ட தேவைப் படும் செம்பு பாடர்களையும் வாங்கி அச்சகத்தில் போட்டு கொண்டார்கள்.
பேரீச்சம் பழம் காட்டு பிரதிநிதி உருவாகி வெளிவந்து விட்டது. 1200 பிரதிகளை கவிஞர் காசிம் என்னிடம் கொடுத்து விட்டார்.
இதை எப்படி விற்பது?
நாகூர் கவிஞர் மச்சான் ஜபருல்லாவும் நானும் எங்களுக்கு பசி எடுக்கும் பொழுதெல்லாம் முஸ்லிம் லீக்காரர்கள் தலையில் கட்டி விடுவோம். அவர்களுக்கு இதில் ஆர்வம் இருக்குமோ, இல்லையோ அதைப் பற்றிக் கவலை இல்லை. எங்கள் பசிக்கு பணம் வேண்டும்.
இறுதியாக 600 அல்லது 700 பிரதிகள் தங்கி விட்டன. அவற்றை நாகூர் ஜபருல்லாஹ் வீட்டில் வைத்து விட்டோம். அவர் தேவைப் பட்டவர்களுக்கு கொடுத்து வந்தார்.
ஜபருல்லாஹ் நகைச் சுவையாக சொல்வார். ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் விற்பார்கள். ஆனால் நாம் பேரீச்சம் பழத்தை வாங்கிக் கொண்டு, ஈயம் பித்தளையை கவிஞர் பிரசுக்கு கொடுத்து விட்டோம்.
அந்தக் கவிஞர் காசிமும் இல்லை. பலராமனும் இல்லை. என் தந்தையார் A .K .ரிபாய் சாஹிபும் இல்லை.
சென்ற பத்து தினங்களுக்கு முன் நான் நாகூர் ஜபருல்லாஹ் இல்லத்திற்கு சென்றேன். அவர் வீட்டுக்குள் எங்கோ கிடந்த பதிமூன்று பேரீச்சம் பழக் காட்டு பிரதிநிதிகள் பிரதிகளை எடுத்து வந்தார். "யோவ் மச்சான் , தமிழகத்தில் எவன்ட்டையும் இருக்காது, பேரீச்சம் பழக் காட்டின் கடைசி 13 பிரதி இந்தாரும்" என்று தந்தார்.
நான் புத்தகங்களை பார்த்தேன். எப்படியோ உருவாகி, எப்படியோ செலவாகி, இப்படி 12 இதழாக என் கைக்கு வந்திருக்கிறது.
ஜபாருல்லாஹ் ரீ பிரிண்ட் போடணும் என்றார்.
பலராமன், கவிஞர் தா.காசிம், A .K .ரிபாய் சாஹிப் இவர்கள் வேண்டுமே. அதற்கு எங்கே போவது?
No comments:
Post a Comment