Thursday, November 28, 2013

சங்கடம்தான்

சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் - 1


தமிழக முஸ்லிம்களுக்கும் திராவிடப் பாரம்பரிய இயக்கங்களுக்கும் ஒரு அணுக்கமான உறவு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கொஞ்சம் கூடுதலாகவே இந்தப் பிணைப்பு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

தமிழக வரலாற்றில், இந்திய விடுதலைக்குச் சற்று முன்னும் அதன் பின்னுமான காலகட்டங்கள் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று. இது இந்திய முஸ்லிம்களுக்கே பொதுவாக இருந்தாலும் தமிழக முஸ்லிம்களைப் பொறுத்தவரை கூடுதலாக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒரு காலகட்டம்.

காங்கிரஸ் பேரியக்கம், அகில இந்திய முஸ்லிம் லீக் ( ஜின்னா தலைமையிலான லீக்) இந்த இரு இயக்கங்களில் இந்திய முஸ்லிம்கள் கலந்திருந்தனர். முஸ்லிம் லீகில் கணிசமாக இருந்தனர்.

தமிழக முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்திய விடுதலைக்கு முன்னால் , காங்கிரஸ் பேரியக்கத்தினுடைய கூட்டமும், கிலாஃபத் இயக்கத்தினுடைய கூட்டமும் ஒரே மேடையில், ஒன்று காலையிலும் மற்றொன்று மாலையிலுமாக நடந்திருக்கின்றன.

அதாவது காங்கிரசோடு நல்ல தோழமையோடுதான் முஸ்லிம்கள் இருந்தனர்.

ஆனால் காங்கிரஸ் பேரியக்கம் தனக்குள் மதத்துவேஷத்தை வைத்திருந்தது லேசாகத் தெரிய ஆரம்பித்தது. இதனை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனக்குச் சாதகமாக்கி ஊதிப் பெருக்கச் செய்தது. ஒரு கட்டத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் இயக்க கூட்டமும், கிலாஃபத் இயக்கக் கூட்டமும் நடந்த ஐக்கியத்திற்குக் குந்தகம் நிகழ்ந்து விட்டது.

இதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒரு காரணம். காங்கிரஸ் பேரியக்கத்தின் மேல்மட்டத்தில் உள்ள பிராமணர் உள்ளிட்ட உயர்சாதி வர்க்கத்தினர் மற்றொரு காரணம்.

காங்கிரஸுக்குக் கீழ் நம்பிக்கையோடு இனி வாழ்வதற்குச் சந்தேகமாக இருக்கிறது என்ற உணர்வு முஸ்லிம்களில் பெரும்பான்மையோருக்குத் தோன்றியது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நினைத்தது நிகழ்ந்தது. நாடு துண்டானது.

முஸ்லிம் லீகில் உள்ள தலைவர்களில் பலர் , ஜின்னா உட்பட காங்கிரஸிலிருந்து வெளியேறி லீக் தலைமை ஏற்றவர்கள்தான். காயிதே மில்லத்தும் அப்படித்தான்.

இப்பொழுது தமிழகத்துக்குள் நாம் பார்வையைத் திருப்ப வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தில் முஸ்லிம்கள் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர்.

ஆனால் எண்ணிக்கையில் சிறுபான்மையினர். விடுதலைக்குப் பின் அகில இந்திய முஸ்லிம் லீக் இல்லை. அது இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்றானது.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் குறைந்திருந்தாலும் பின்னர் அது முஸ்லிம்களின் தாய்ச் சபை என்ற அந்தஸ்த்தில் வலுப்பெற்றது.

தமிழகத்தில் அப்பொழுது தென்பட்ட இயக்கங்கள் காங்கிரஸ் பேரியக்கம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், பொதுவுடைமை இயக்கம், நீதிக் கட்சி. இன்னும் சில ஜாதீயம் சார்ந்த இயக்கங்கள்.

முஸ்லிம்கள், நீதிக் கட்சியில் இல்லையென்ற அளவிற்குத்தான் இருந்தனர். இந்த நீதிக் கட்சிதான் திராவிட இயக்கத்தின் அம்மா.

பொதுவுடைமைக் கட்சியில் தமிழத்தில் அங்கே இங்கே என்று சில முஸ்லிம் முகங்கள் தெரிந்தன. இதற்கு ஒரு காரணம் இருந்தது. மேற்கு வங்காளத்தில் மௌலானா மொஹானீ , மௌலானா கோலத்தோடு தோளில் ஒரு பையைத் தொங்கப் போட்டு , அந்தப் பைக்குள் ஒரு குவளை, பிரட் பாக்கெட்டு ஒன்று வைத்துக் கொண்டு வங்காளம் முழுக்க பொதுவுடைமைக் கருத்துக்களைப் பேசிக் கொண்டிருந்தார்.

திருமறையிலிருந்து சில வசனக் கருத்துக்களைப் பொதுவுடைமைக் கோட்பாடு வசீகரித்துக் கொண்டிருக்கிறது என்ற பாணியில் அவருடைய பேச்சுகள் இருந்தன.

பொதுவுடைமை இயக்கத்தை இந்தியத்தில் தோற்றுவித்த முதுபெரும் தலைவர்களில் மௌலானா மொஹானீயும் ஒருவர்.

மௌலானா மொஹானீயின் சொற்பொழிவுகள் , பொதுவுடைமைக் காரர்களால் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப் பட்டது.

இதனால் இந்தியா முழுவதுமே உள்ள சில முஸ்லிம்கள் பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப் பட்டனர். தமிழகத்திலும் இப்படிக் கொஞ்சம் நிகழ்ந்தது. கேரளத்தில் கொஞ்சம் அதிகம் நிகழ்ந்தது.

ஆனால் திராவிட இயக்கத்தின் தாயென்று சொன்ன நீதிக் கட்சிக்குள் முஸ்லிம்களின் பங்களிப்பு அவ்வளவாக நடக்கவில்லை.

நீதிக்கட்சியிலிருந்தும் காங்கிரஸிலிருந்தும் வெளியேறி ஈரோட்டு ஈ.வே.ராமசாமி பெரியார் திராவிட இயக்கத்தைத் தோற்றுவிக்கிறார்.

அதுவரை அரசியல் பேசி வந்த பெரியார் , திராவிடக் கழகம் தோற்றுவிக்கப் பட்டபின் சமூக இயக்கமாக மாற்றிக் கொண்டு அரசியலைச் சற்று பின்னுக்குத் தள்ளி விட்டார். பிராமண ஆதிக்க எதிர்ப்பு, பெரியாரின் பேச்சுப் பொருளாகச் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

பிராமண ஆதிக்க எதிர்ப்பைத் தொடங்கியவுடன் , பிராமணர் கொண்டு வந்து சேர்த்திருந்த இந்து தர்மத்தையும், இந்துக் கடவுளர்களையும் எதிர்க்கத் தொடங்கினார்.

இந்தத் தோற்றத்தைத்தான் பெரியாரின் நாத்திகம், அதிகம் வலியுறித்தியது. அதனால் தமிழகத்தில் அடக்கப் பட்ட சாதியினரின் பெருந்திரள் பெரியாரின் இயக்கத்தில் இணைந்து கொண்டது. இந்துக்களில் மற்ற பிற்படுத்தப் பட்ட சாதியினர் மற்றும் மேல் சாதியினர் பெரியாரை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை.

பெரியாருக்கு ஒரு நடைமுறைச் சிக்கல் இப்பொழுது ஏற்பட்டது. அவர்தம் பிரச்சாரத்திற்குத் தேவையான மேடைகளைத் தமிழகத்தில் அமைக்கச் சிரமப் பட்டார்.

ஒடுக்கப் பட்ட மக்கள் உடலுழைப்புத் தந்தார்கள். ஆனால் அவர்களிடம் பொருளாதார பலம் இல்லை. பெரியாரின் பிரச்சார மேடைகளுக்கு இதுதான் இடைஞ்சல்.

இந்தக் கட்டத்தில் பெரியார் புத்த, இஸ்லாமிய, கிறித்துவ மதக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்வது போல தன் பேச்சை மாற்றி அமைத்தார். இதனால் முஸ்லிம்களில் கணிசமானவர்களின் பார்வையில் பெரியார் புதுமையாகக் காணப் பட்டார்.

தமிழகத்தில் நடந்த மீலாது மேடைகளில் எல்லாம் பெரியாருக்கு முஸ்லிம்கள் இடம் தரத் தொடங்கினார்கள். இதனடிப்படையில் முஸ்லிம்களுடைய ஒரு பெருத்த ஆதரவின் காரணமாகத் திராவிட கழகத்தின் பிரச்சார மேடைகளுக்குப் பொருளாதார பின்புலம் ஏற்படலாயிற்று.

இந்தத் தொடக்கம்தான் தமிழக முஸ்லிம்களுக்கும் திராவிட கழகத்திற்கும் தொடங்கிய உறவின் தொடக்க நிலை.

அன்றைய திராவிட இயக்கத்தில் இருந்த அண்ணா, ஈ.வே.கி. சம்பத், பட்டுக்கோட்டை அழகிரி போன்ற தி.க வின் சிறந்த சொற்பொழிவாளர்கள் அடிக்கடி மீலாது மேடைகளில் தென்பட ஆரம்பித்தனர்.

பொதுவாக ஒரு குறை உண்டு. ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள், இன்னொரு மதக் கோட்பாட்டை விமர்சிக்கும் அதே மதத்தில் பிறந்த ஒருவருக்குப் பூதாகர வரவேற்பைத் தருவது இயல்பு. இப்படி வரவேற்றது முஸ்லிம்கள் பக்கமும் நடக்கத்தான் செய்தது. இந்தக் குணக்கேடு இன்றுவரையில் தொடரத்தான் செய்கிறது.

பெரியார் இஸ்லாத்தை ஆதரித்ததினால், இஸ்லாத்திற்குப் பெருமை என்று முஸ்லிம்களில் சிலர் நினைக்கத் தொடங்கினர். அதே மாதிரி அண்ணாவும் அவரைச் சார்ந்த பிறரும் இஸ்லாமியக் கோட்பாட்டைப் பிரமிக்கத் தக்க அளவு வியந்து பேசியதால், இவர்களே நம் நண்பர்கள் என்ற சின்ன நப்பாசையும் முஸ்லிம்களிடம் இருந்தது.

இன்றுகூட இஸ்லாத்தின் பெருமைகளில் ஒன்றாய் நீரோட்ட அடியார்இஸ்லாத்தைத் தழுவி, மீலாது மேடைகளைக் கண்ட போதும் , வலம்புரி ஜான் இஸ்லாத்தைப் பற்றி எழுதிய போதும் , பெரியார்தாசன் அப்துல்லாவாகி மேடைகளைச் சந்தித்த போதும் , வீரபாண்டியனார் இஸ்லாமியச் செய்திகளை இஸ்லாமிய மேடைகளில் விளக்கும் பொழுதும் இஸ்லாத்திற்கு ஒரு புத்துயிர் வந்துவிட்டது போன்ற எண்ணம் எழுந்து விடுகிறது. இவர்களுக்கு அதிகப்படியான வரவேற்பையும் , மேடைகளையும் அமைத்துக் கொடுப்பது முஸ்லிம்களின் வழக்கமும் ஆகிவிட்டது.

இந்த ஒட்டுறவுதான் முஸ்லிம்களில் பெரும்பாலோர் தி.மு.க வுடன் தங்கள் ஆதரவுகளைப் பெருக்கிக் கொள்ள காரணமாக இருந்தது.

அரசியல் நிர்பந்தம் காரணமாகத் தமிழகத்திலிருந்து காங்கிரஸை நீக்க வேண்டிய அவசியம் முஸ்லிம் லீகிற்கும் , பொதுடைமைக் கட்சிக்கும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து சுதந்திரா கட்சி தொடங்கி இருந்த ராஜ கோபாலாச்சாரிக்கும் (ராஜாஜி) ஏற்பட்டது .

திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் இயக்கமாகத் தன்னைப் பூரணமாக ஆக்கிக் கொண்டாலும், பெரியாரின் தி.க வின் தாக்கம் காரணமாக இதுவும் நாத்திகக் கட்சி என்ற ஒரு எதிர்ப்பு ராஜாஜிக்கு இருந்தது. முஸ்லிம் லீகிலும் சிலருக்கு இருந்தது.

பல அரசியல் காரணங்களால் தி.மு.க வை அங்கீகரிக்க முடியாத கட்டாயம் பொதுவுடைமைக் கட்சிக்கும் இருந்தது.

கருத்து முரண்கள் இருந்தாலும், பொது எதிரியான காங்கிரசை விழுத்தாட்ட இந்த மூன்று இயக்கங்களும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தர முன்வந்தன.

தி.மு.க சட்ட மன்றத்தில், ஐந்தாகத் தொடங்கி ஐம்பதாக பெருத்தது. அடுத்த கட்டம் அண்ணாவே எதிர்ப்பார்த்திராத நிலையில் தமிழக ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணிகள் அதன் பின்னால் ஒன்றொன்றாக உடைந்து போயின.

ஆனால் முஸ்லிம் லீக், தி.மு.க கூட்டணி நன்றாக இறுக ஆரம்பித்தது. தி.மு.க , முஸ்லிம் லீக் கூட்டணியைக் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ஏற்படுத்திக் கொள்ள முனையும் பொழுது முஸ்லிம் லீக் செயற் குழுவில் சில கருத்துகள் பரிமாறப் பட்டன.

செயற்குழு உறுப்பினர்களில் ஒரு சிலர், “ஒரு நாத்திக அரசியல் இயக்கத்தோடு நாம் கூட்டணி வைக்க வேண்டுமா?” என்றும் கேட்டனர். மேலும் அவர்கள் குறிப்பிட்டனர், “தி.மு.கக்காரர்கள் தங்களுடைய வசீகர பேசாற்றலால் நாளாவட்டத்தில் நம் இளைஞர்களைக் கபளீகரம் செய்து விடுவார்களோ என்ற பயமும் இருக்கிறதுஎன்றும் குறிப்பிட்டனர்.

ஆனாலும் காங்கிரஸை விழுத்தாட்ட இந்தத் தருணத்தில் இதுதான் சரியான வழி என முஸ்லிம் லீக் செயற்குழுவில் மிகப் பெரும்பாலோர் ஆதரவு தெரிவித்தனர்.

இந்தப் பெரும்பானமையினரின் ஆதரவின் அடிப்படையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் தி.மு.க முஸ்லிம் லீக் கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை ஒப்புக் கொண்டார்கள்.

No comments:

Post a Comment