(என்றோ பெய்த கவித்துளிகள்!)
அல்லாஹ்வின்
அருள் கனிந்த
அண்ணல்நபி
சமுதாயம்!
பொல்லாங்கு
பொய்சூது
புரியாத
சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
மானத்தை
விலைபேசி
ஈனத்தில் கிடக்காது!
தேவைக்குக்
கரமேந்தி
ஓரத்தில்
நிற்காது!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
உண்மையே
இறைசக்தி
என்றுரைத்த
அபூ பக்கர்!
என்றைக்கும்
அச்சத்தை
ஏற்றறியா
உமர் பாரூக்!
அருள்
மறையைத் தொகுத்தளித்த
அன்பு
நிறை அருள் உதுமான்!
இருகரத்தில்
வாளேந்தி
எதிர்ப்பழித்த
புலி அலியார்!
வழி
வந்த சமுதாயம்
வளம்
கண்ட சமுதாயம்!
பழிசொல்லித்
திரிவோரைப்
புறம்
கண்ட சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
நம்ரூத்தை
பிர்அவனை
எதிர்கொண்ட
சமுதாயம்!
கொம்பனாம்
அபுஜஹலைக்
கூறுப்போட்ட
சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
பெண்ணுக்குச்
சொத்துரிமை
பிள்ளைகட்கு
முழுஉரிமை
கண்ணுக்கு
நிகரான
கல்விக்கு
முன்னுரிமை!
ஈட்டுகிற
பொருளுக்கும்
ஏழைவரி
விதிபடைக்கும்
ஆட்சியை
உலகுக்கு
அறிவிக்கும்
சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
உன்னத
சமுதாயம்
ஒருக்காலும்
தாழாது
என்னதான்
எதித்தாலும்
எப்போதும்
வீழாது!
அல்லாஹ்வின்
அருள்கனிந்த
அண்ணல்நபி
சமுதாயம்!
பொல்லாங்கு
பொய்சூது
புரியாத
சமுதாயம்!
எவருக்கும் பணியாது
ஈமானை இழக்காது!
No comments:
Post a Comment