Thursday, November 21, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–29

தடுமாற்றம் சரிவல்ல!!!




காரைக்குடி மற்றும் அதைச் சார்ந்த பகுதியில் வாழும் நகரத்தார் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் இலங்கை, பர்மா போன்ற நம் அண்டை நாட்டுப் பகுதிகளில் வணிகம் மற்றும் வட்டிக் கடை வைத்திருந்தார்கள்.

இலங்கையில் ஒரு வட்டிக் கடையில் பிள்ளைப் பிராயத்தைத் தாண்டி இளையப் பிராயத்தின் தலைவாயிலில் நிற்கும் பருவத்தைச் சார்ந்த ஒருவன் வேலைக்குச் சேர்ந்தான். அந்த இளைஞன் அந்தப் பருவத்திலேயே பொய் சொல்வதை முற்றிலுமாகத் தவிர்த்திருந்தான். மெய் சொல்லுவது மட்டுமே அவன் வார்த்தை மொழியாக இருந்தது. வேலை பார்த்த வட்டிக் கடை முதலாளி அந்த இளைஞனிடம், ஒரு வாடிக்கையாளரிடம் பொய் சொல்லச் சொல்லி இருந்தார்.

அந்த இளைஞன் பொய் சொல்ல மறுத்து விட்டான். இதனால் செய்த பணி முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்தத் தோணியில் தாய்நாட்டுக்கு அனுப்பப் பட்டான்.

இங்கு வந்து சில கடைகளில் எடுபிடி பணி. தானே சுயமாகப் படித்த கல்வியின் தரம். இந்தத் தரத்தின் அடிப்படையில் பள்ளிக்கூட வாத்தியார். மேலும் படிப்பு. கல்லூரி விரிவுரையாளர். இன்னும் கல்வி. M.A, M.Lit, Ph.D., போன்ற பட்டங்கள். பல்கலைக் கழக விரிவுரையாளர். அடுத்து ஒரு கல்லூரி முதல்வர். மீண்டும் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் பணி. அடுத்துப் பல்கலைக் கழகத் துணை வேந்தர். இப்படியெல்லாம் தன்னை வளர்த்துக் கொண்டவர். தமிழ் மாமேதை பேராசிரியர் டாக்டர் வ.சுப.மாணிக்கனார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக அவர் பொறுப்பெடுத்த காலத்தில் நான் தமிழ்த்துறை மாணவனாக இருந்தேன்.

டாக்டர் வ.சுப.மா அவர்களின் மாணவனென்று சொல்வதில் நிச்சயமாக ஒரு மகத்துவம் இருக்கிறது. அவர் பேரறிஞர். அவர் வகுப்பெடுக்கும் பொழுது தமிழ் ஞானம் அலையடித்து அந்த அறை முழுதும் பரவி கிடக்கும். அதனை அள்ளிக் கொள்வது ஒவ்வொரு மாணவனின் அறிவு நிலையைச் சார்ந்தது.

அவரின் செல்ல மாணவர்களில் நானும் ஒருத்தன். அவர் தனித்தமிழில் அழுத்தமான பிடிப்பும் ஞானமும் பெற்றவர். என்னளவில் தமிழ் என்பது ஒன்றுதான். தனித்தமிழ், கலப்புத் தமிழ் என்றெல்லாம் பிரித்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லாதவன்.

ஆனாலும் என்னை அவர் செல்லப் பிள்ளையாகத் தட்டி, கட்டியணைத்து வளர்த்தார்.

ஒருமுறை என்னுடைய நண்பன், தட்சிணாமூர்த்தி, (அவன் அந்த நேரத்தில் ஆலமர்ச் செல்வன்) திருமணம் செய்து கொண்டவன். முதல் மகன் பிறந்து விட்டான். எங்கள் பேராசிரியர் வ.சுப. விடம் இந்தச் செய்தியைச் சொல்லி இனிப்பு வழங்கினான்.
 

பேராசிரியர், “குழந்தையின் பெயர் என்னப்பா?” என்று கேட்டார்.

தட்சிணாமூர்த்தி சொன்னான், “ஐயா, சிவபுண்ணியம்என்றான்.

பேராசிரியர் உடனே சொன்னார், “அடுத்த பிள்ளை பிறந்தால், வைணவப் பாவி என்று வை. என்னப்பா நீங்கள் எல்லாம் கூட நல்ல இனிய தமிழ்ப் பெயர் வைக்காமல்., சிவனுக்கு புண்ணியம், வைணவனுக்கு பாவியன் என்றெல்லாமா வைக்கிறது?” என்று கடிந்து கொண்டார். தமிழ்ச் சொல் மீது அவ்வளவு ஆர்வம் அவருக்கு.

அவருடைய நேர்மைக்கு ஒரு சோற்றுபதம்சொல்கிறேன். வ.சுப அவர்களின் மகன் கல்லூரியில் தேர்வு எழுதும் பொழுது எல்லா மாணவனையும் போல அவனும் பிட் அடித்துவிட்டான். தேர்வறையில் இருந்த ஆசிரியர் கையும் களவுமாகப் பிடித்து விட்டார். ஆனால் வ.சுப அவர்களின் மகன் என்று அறிந்தவுடன், ‘பிட்டைகிழித்துப் போட்டு, கண்டித்து விட்டு தேர்வெழுத அனுமதித்து விட்டார்.

மறுநாள் வ.சுப மகன், தேர்வு எழுத தேர்வறைக்கு வந்து விட்டார். நேற்று நடந்த நிகழ்வு எப்படியோ வ.சுப விற்குத் தெரிந்துவிட்டது. மகன் தேர்வெழுதிக் கொண்டிருந்த அறைக்கு நேரே வந்தார். அவன் எழுதுவதை நிறுத்தினார். நேற்று தேர்வறையிலிருந்த ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தார். பிட்டடித்த காரணத்திற்காக இரண்டு ஆண்டுகள் தேர்வு எழுதத் தடை செய்துவிட்டார்.
 

இப்படி ஒரு அற்புதமான மனிதரின் மாணவனாக இருந்ததற்கும் அவரின் செல்ல பிள்ளைப் போல் தமிழ்த்துறையில் நடமாடியதற்கும் இறைவனுக்கு நாங்கள் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

வ.சுப அவர்கள், அவருக்கு நெருக்கமான விருப்பமான மாணவர்களிடம் தமிழ்முறைத் திருமணத்தைத்தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துவார். அதற்காக நீங்கள் எத்தகைய போராட்டங்களை வேண்டுமானாலும் மேற்கொள்ளுங்கள் என்பார்.

ஆரிய மந்திரங்கள் நம் இல்லங்களில் வேண்டாம். தமிழ்மறைகளை ஓதி மணம் புரியுங்கள் என்றெல்லாம் உணர்வு பூர்வமாகவும் அவர் வலியுறுத்துவார்.
 

ஒருமுறை பேராசிரியர் ஆணைப்படி, ஒரு மாணவர் தன் திருமணத்தில் தமிழ் திருமணமுறைப்படி தான் நான் மணம் புரிவேன் என்று அவர் இல்லத்தாரிடம் பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

ஆனால் மாணவனின் இல்லத்தாரும், மணப் பெண்ணின் இல்லத்தாரும் நீங்கள் தமிழ்முறைப்படி திருமணம் செய்து கொள்ளுங்கள். ஆனால் மந்திரம் ஓதி முறைப்படி தாலியும் கட்டிக் கொள்ள வேண்டும்எனவும் கூறிவிட்டார்கள்.

மந்திர முறைக் கூடாது என்பது அந்த மாணவனின் உறுதியான முடிவு. மந்திரம் ஓதித்தான் திருமணம் நிகழ வேண்டும் என்பது இல்லத்தாரின் பிடிவாத கண்டிப்பு.
 

மாணவர், பேராசிரியரிடம் வந்து இந்த நிலையைப் பேராசிரியரிடம் எடுத்துச் சொன்னார். பேராசிரியர் வ.சுப அவர்கள் ஒரு முடிவு சொன்னார்.
 

மந்திரம் ஓதித்தான் திருமணம் என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று உன் வீட்டாரிடமும், பெண் வீட்டாரிடமும் சொல்லிவிடுஎன்றார்.

மாணவனும் அப்படியே வந்து உறுதியுடன் சொல்லிவிட்டான். முடிவாக அந்த மாணவனின் திருமணம் தமிழ்முறைப்படியே நடந்தேறியது.

காலங்கள் கடந்தன. வ.சுப அவர்கள் மகளார் திருமணம். அதுபோது, இதே நிலை ஏற்பட்டது. மாப்பிள்ளை வீட்டார், மந்திர முறைத் திருமணம்தான் செய்து கொள்வோம் என்ற பிடிவாதத்தில் இருந்தார்கள். பேராசிரியர் தமிழ்முறைத் திருமணம்தான் என்பதில் உறுதியாக இருந்தார்.

கிட்டத்தட்ட இதனால் திருமணமே நின்றுவிடக்கூடிய நிலைமை வந்துவிட்டது. ஆனால் அந்தத் திருமணம் நடந்தாக வேண்டிய கட்டாய நிலையில் இருந்தது. இறுதியில் மாப்பிள்ளை வீட்டார் உறுதியே வெற்றி பெற்றது. எங்கள் பேராசிரியர் நொறுங்கி விட்டார். மந்திர முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தில் தமிழ்முறையும் தழுவி இருந்தது.
 

நாங்கள் எல்லாம் மிக வேதனைப் பட்ட ஒரு சம்பவம் நடந்தது. வ.சுப அவர்களிடம் ஒரு மாணவன் சென்று கேட்டான், “ஆரிய மந்திரப்படி திருமணம் என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என ஒரு மாணவனை நீங்கள் சொல்லச் சொன்னீர்களே! உங்கள் மகளுக்கும் இதைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாமே?” என்று கேட்டு விட்டார்.

நேர்மையினால் நிமிர்ந்திருந்த மனிதருக்கு, பொய் சொல்லி அறியாத ஒரு உத்தம மாமனிதருக்கு, எந்தத் தகுதியும் இல்லாத ஒருவன் தந்த நெருக்கடியை ஏனோ தெரியவில்லை இன்றுவரை என் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

தன் மகனிடம் கல்லூரித் தேர்வில் காட்டிய நேர்மையை, தன் மகள் திருமண நிகழ்வில் நடைமுறைப் படுத்த முடியவில்லையே என்று அந்த மாமனிதர் நொந்து கொண்டு இருந்த நேரத்தில் இந்தச் சின்னஞ்சிறு மாணவன் வேல் பாய்த்து விட்டான்.

தர்க்க ரீதியில் இது சரியாக இருக்கலாம். ஆனால் தர்மமுறையில் மனம் வலிக்கிறது.

இப்பொழுதும் என் போன்றவர்கள் எண்ணத்தில் நினைவுகளில் வ.சுப வுக்கு நாங்கள் வழங்கி இருந்த உயர்ந்த பீடம் ஒரு சிறிதும் அசைந்து விடவில்லை.

அந்த மாமனிதரை இப்பொழுதும் நாங்கள் மதிக்கத்தான் செய்கிறோம். அவர் இன்று இல்லை. அதனால் என்ன? அவரை அறிந்தவர்கள் இறை அருளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே?

அவருக்கு இழுக்காக நான் இதைப் பதிவு பண்ணவில்லை. பொய் சொல்லி அறியாத எங்கள் ஆசிரியரைப் பற்றி உண்மையைச் சொல்வதுதான் அவருக்கு நாங்கள் செய்யும் மரியாதை என்ற கண்ணியத்தோடு இதைப் பதிவு செய்கிறேன்.

No comments:

Post a Comment