Monday, December 2, 2013

சங்கடம்தான்

சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் – 2


காலம் பலப்பல விசித்திரங்களை நிகழ்த்தி விடும். இறைப் படைப்பின் விதிப் பாகுபாடு இப்படி ஒரு அருளைக் காலத்திற்குக் கொடையாக வார்த்து இருக்கிறது. உடன்பாடுகள் குறைவாகவும், முரண்பாடுகள் நிறைவாகவும் இருந்தாலும்கூட, எதிரில் உள்ள ஒரு எதிர்முகாமை விழுத்தாட்ட உடன்பாடாகிக் கொள்வது, ஒரு கால தர்மம். இதுதான் முஸ்லிம் லீக், திராவிட இயக்கங்களின் கூட்டுறவுக்கு அடிப்படையாக இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸை நீக்கி ஆக வேண்டிய பொறுப்பு முஸ்லிம் லீகிற்கு அழுத்தமாக இருந்தது. ஆனால் அண்டை மாநில கேரளத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி முஸ்லிம் லீகிற்கு அவசியமானது. கேரளத்து முஸ்லிம்கள் மனோபாவமும், தமிழகத்து முஸ்லிம்கள் மனோபாவமும் பல நேரங்களில் பாரதூர இடைவெளிகள் கொண்டவைகளாக இருக்கும்.

அனைத்து தேசிய இயக்கங்களுக்கும், இப்படி ஒரு சமூக சுகக்கேடு ஒரு தர்மமாகவே இந்தியத்தில் இருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள், தி.மு.க வுடன் வைத்த அரசியல் கூட்டணியை ஒரு ஆழமான சொந்தபந்த உறவணியாகவே கொண்டு விட்டனர்.

தி.மு.க எப்பொழுதுமே நிரம்பப் பேசும். வசீகரமான வார்த்தைகளை அள்ளி வீசும். புதிது புதிதாகக் கற்பனை எதிரிகளை உருவாக்கிப் போராட்ட களத்திலே ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதுபோல களமமைத்துக் கொள்ளும்.

இப்படி உள்ள ஏற்பாடுகளால், தி.மு.க தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளும். நிலைப்படுத்திக் கொள்ளும்.

தி.மு.க முஸ்லிம்கள் , உறவு நிலைகளிலும் இந்த விசித்திரங்கள் நிறைந்திருக்கும்.

முஸ்லிம்களுக்கும் சில எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்தன. ஆனால் அதை ஒரு உறுதியான எதிர்ப்பாக மாற்றி அரசியல் செய்ய சில மத உணர்வுச் சக்திகளும், முஸ்லிம் நட்பான சக்திகளும் செயல் பட்டுக் கொண்டிருந்தன.

தமிழக முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு மகாபாரத யுத்தம் நடத்துவது போல, பிறமத உணர்வுச் சக்திகள் தூண்டிவிடப்பட்டன. இதைக் காரணம் காட்டி , முஸ்லிம்கள் நட்புக்கு நாங்கள்தாம் நிலையான தோழர்கள் என்ற தோற்றத்தை தி.மு.க முன்வைத்தது.

தி.மு.க தலைமை, பொது மேடைகளில் பேசிய பேச்சுகள் இதை உறுதிப் படுத்தின.

யாரேனும், முஸ்லிம்களைத் தாக்க வருவார்களேயானால், முஸ்லிம்களுக்குக் கேடயமாக நாங்கள் இருப்போம்.

இன்னும் சொல்லப் போனால் , எங்களின் பிணங்களின் மீது நடந்து சென்றுதான் , முஸ்லிம்களை எவரேனும் தாக்க முடியும்எனக் கருணாநிதி பல மேடைகளில் முழங்குவார். இந்த முழக்கம் , உள்ளபடியே முஸ்லிம் இளைஞர்களின் உள்ளம் எங்கும், பேரானந்தமாகக் குடியமர்ந்தது.

முஸ்லிம் இளைஞர்கள், தி.மு.க வை ஒரு நிழல் தாய்ச்சபையாகவே கருதினர். இந்தக் கருத்தோட்டத்தால், முஸ்லிம்களைத் தவறாகப் புரிந்திருந்த பிற சமூகத்தினரில் சிலரை, தனது சொந்த எதிரிகளாக முஸ்லிம்கள் கருத வேண்டும் என்ற ரீதியில், தி.மு.க வின் பேச்சுக்கள் மறைமுகமாகத் தூண்டிவிட்டன.

ஆனால் உண்மையில் தி.மு.க முஸ்லிம்களை மட்டுமல்ல , யாரையும் காக்கும் கவசமாக இருந்ததில்லை. அது தன்னைக் காத்துக் கொள்ளும் கவசமாகவேத் தனக்கு தானே எப்போழுதும் இருந்திருக்கிறது.

பல அரசியல் காரணங்களுக்காக பின்னாளில், முஸ்லிம் லீக் - தி.மு.க உறவை விலக்கிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

தி.மு.க விலிருந்து அன்று புதிதாகப் பிரிந்திருந்த அ.தி.மு.க வுடன் கூட்டுறவு வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அப்பொழுது முஸ்லிம் லீகிற்கே ஒரு உண்மைத் தெரிய ஆரம்பித்தது. முஸ்லிம் லீக் இளைஞர்கள், அரசியல் விழிப்புணர்வைக் காட்டிலும், தி.மு.கவுடன் உள்ள பந்தமே மேலானது எனக்கருதி இருந்தனர்.

அதே சமயம் சமுதாயப் பெண்கள் மத்தியில் வேறொரு அரசியல், காட்சித் தெரியத் தொடங்கியது.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால், சினிமா என்கிற திரைச் சம்பவம் கொஞ்சம் கூட அவர்களுக்கு அறிமுமாகி இருக்கவில்லை.

இல்லங்களுக்குள் டி.வி சப்திக்காத காலம் அது. அதாவது, சின்னத்திரை என்ற சாதனமே இந்தியத்தின் எந்த மூலைக்குள்ளும் இறங்கி வராத காலம் அது.

இல்லங்களில் வானொலியில் பாடல்களைக் கேட்க முடியும். திரையரங்குகளுக்குச் சென்றால்தான் படங்களைப் பார்க்க முடியும். ஆனால் நாடக மேடைகள் அங்கங்குத் தென்பட்டன.

முஸ்லிம் பெண்களைப் பொறுத்த மட்டில் திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது கடுமையான ஹராமாக்கப் பட்டிருந்தது.

இந்தக் கட்டுப்பாடு ஒரு சில இடங்களில் வேறு வடிவில் முறிந்தது. வெளியில் தெரியாமல் தன்னை மறைத்துக் கொண்டு திரையரங்குகளில் படம் பார்க்க முஸ்லிம் பெண்களை அது தூண்டியது.

அப்படிச் சென்ற பெண்களை ஜமாத்தார் கண்டுபிடித்து, அபராதமும், சமயங்களில் கரும்புள்ளி, செம்புள்ளிக் குத்தியும் தண்டித்து இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் முஸ்லிம் ஆண்களுக்கு இப்படி எல்லாம் ஒரு தண்டனை நடந்ததே இல்லை.

இந்த நிலை ஒரு கட்டத்தில் முழுமையாகத் தகர்க்கப் பட்டது. முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாகவே திரை அரங்கிற்கு வந்து படம் பார்க்க ஆரம்பித்தனர்.

பெரும்பான்மையாகப் பெண்களைத் திரைக் காட்சிகளில் M.G.R தான் அதிகம் கவர்ந்தார். திரையில் M.G.R, ஏழைப் பங்காளனாக வருவார். போதை வஸ்திற்கு எதிரானவராக இருப்பார். பெண்களுக்குப் பாதுகாவலாகத் தன்னைக் காட்டிக் கொள்ளுவார். தாய்மார்களைத் தெய்வமாகவே கருதுவார்.

இப்படிப்பட்ட சங்கதிகளை எல்லாம் நிஜம் என்று, மனப் பூர்வமாகவும் உணர்வுப் பூர்வமாகவும் ஏற்றுக் கொண்டனர். இதன் விளைவு, முஸ்லிம் பெண்களிடமும் நிரம்பவே தெரிந்தது.

அ.இ.அ.தி.மு.கவை, M.G.R தொடங்கியபின் பெருவாரியான முஸ்லிம் பெண்களின் ஆதரவு அ.தி.மு.க வுக்குதான் இருந்தது.

முஸ்லிம் ஆண்களில் பெரும்பான்மையினர், தி.மு.க தான் தங்களின் பாதுகாவலன் என்று நம்பிக் கொண்டிருக்கும் வேளையில், முஸ்லிம் பெண்கள், M.G.R தான் நம்பிக்கையானவர் என்கிற நிலைக்கு வந்திருந்தனர்.

முஸ்லிம் குடும்பத்தினுடைய ஆண்கள் , தி.மு.க வுக்கு வாக்களிக்கச் சொன்னபோது பெண்களில் பலர் அதை ஏற்காமல் அ.தி.மு.க வுக்குத்தான் வாக்களித்தனர்.

தமக்கெதிராகத் தம் பெண்களை M.G.R தயார் படுத்தி விட்டார்என்ற மன அழுத்தம் முஸ்லிம் ஆண்களிடம் ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இதனால் அ.தி.மு.க மீது இனம் புரியாத எரிச்சல் முஸ்லிம் ஆண்களிடம் தலைத் தூக்கியது.

பல முஸ்லிம் ஊர்களில் இந்த மனோபாவம் வெளிப்படையாகவே தெரிந்தது.

முஸ்லிம்களின் அரசியல் இந்த நிலையில் பலவாறான குளறுபடிக்கு உள்ளாக நேர்ந்தது. மகா பலமாக திகழ்ந்த முஸ்லிம் அரசியல் இயக்கமான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்தப் பாதிப்பால் தத்தளித்தது உண்மை.

வரலாறு, வேறொரு செய்தியை நிகழ்த்திக் காட்டியது. முஸ்லிம்களை இந்தியாவை விட்டே நீக்கி விடவேண்டுமென்ற உணர்வோடு மதவெறியைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த R.S.S இன் முரட்டுப் பிள்ளை , ஜனசங்கம். இந்த ஜனசங்கம், ஜனதாதளம் என்ற போர்வைக்குள் மறைந்து, மத்திய அரசில் ஆட்சியில் அமரும்பொழுது, தமிழகத்திலிருந்து, அந்தக் ஆட்சியின் கூட்டணியில் இணைந்தது தி.மு.கதான்.

இந்த நிலையிலும், முஸ்லிம் ஆண்களின் ஆதரவு தி.மு.க வுக்குக் குறைந்து விட வில்லை.

ஜனதாதளத்திலிருந்து வெளிவந்து, பழைய ஜனசங்கம் புதிய பாரதிய ஜனதாவானது.

இன்றைய பாரதிய ஜனதாவை M.G.R உம் ஆதரித்து இருக்கிறார். ஜெயலலிதாவும் ஆதரித்து இருக்கிறார்.

M.G.R ஆதரவுத்தரும் பொழுது, அது அரசியல் நடவடிக்கையாகத் தெரியவில்லை. பார்ப்பன ஆதரவாகக் கருதப் பட்டது.

ஜெயலலிதா, பாஜகவை ஆதரிக்கும் பொழுதெல்லாம் , பாப்பாத்தி-பாப்பான் உறவாகப் பேசப் பட்டது.

கருணாநிதி ஆதரிக்கும் போது மட்டும் இப்படிப் பேசாமல் அரசியல் காரணங்கள் பேசப் பட்டன. இதுதான் தி.மு.க வின் விமர்சன யுக்தி.

கருணாநிதியின் மனசாட்சிஎன்று அவரே சொன்ன அவரின் மருமகன் முரசொலி மாறன் வெளிப்படையாகச் சொன்னார்,

பாரதிய ஜனதா ஒன்றும் தீண்டத்தகாதக் கட்சியல்லஎன்று சொன்னார்.

இவ்வளவுக்குப் பின்னும் தி.மு.க வின் போக்கை அரசியல் போக்காகவே ஏற்றுக் கொண்டனர்.

எப்படியோ திராவிட இயக்கங்கள் முஸ்லிம் சமுதாயத்தில் ஒட்டுறவாக ஒட்டி, அட்டைப் போல் ரத்தம் உறிஞ்சி முஸ்லிம் குடும்பத்திற்குள்ளும் ஆண், பெண் மன மோதல்களை உருவாக்கி தன்னை முஸ்லிம்களின் உறவுக்காரர் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.

இதில் திராவிடர் கழகமும் விதிவிலக்கல்ல , தி.மு.க வும் தப்பிப் போகவில்லை. அ.இ.அ.தி.மு.க.வும் வித்தியாசப் படவில்லை.

காமராஜர் மொழிதான் நினைவுக்கு வருகிறது.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்”.

No comments:

Post a Comment