தொண்டரான தலைவர்!!!
நம்மால்
அண்ணாந்து பார்க்கும் பெருமைக்குரியவர்களால் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தன்
கிரீடத்தைச் சூட்டிக் கொண்டது உண்மையாக இருக்கலாம். அதே நேரம் தன் அடிமட்டத்
தொண்டர்களாலும் வெளிப்புறம் தெரியாத வீரம் செறிந்த உழைப்புத் தோழர்களாலும் தன்
தண்டுவடத்தை நிமிர்த்திக் கொண்டிருந்தது என்பதும் பென்னம்பெரிய உண்மையாகும்.
தமிழ்ப்
பத்திரிகை உலகின் ஜாம்பவான்களாக இருந்தவர்களில் தனி இடம் பெற்றிருந்தவர் தமிழர்த்
தந்தை சி.பா. ஆதித்தனார். ஆதித்தனார்
லண்டனில் பார் அட் லா படித்து வந்து தமிழகத்தில் பாமர மக்களுக்கு பத்திரிகை உலகைக்
காட்டியவர்.
தமிழகத்தின்
டீக்கடைகளில், முடி திருத்தகங்களில், இன்னும் சின்ன சின்ன கடைகளில், கிராமத்து
நூல்நிலையங்களில், படிப்பகங்களில் பாமர மக்களைக் கண்டடைந்து அவர்களை அரசியல் பேச
வைத்த மகத்தான பணியை சி.பா. ஆதித்தனார் அவர்கள் தினத்தந்தி நாளிதழ்களின் மூலம்
சாதித்துக் காட்டினார்.
நெல்லை
மாவட்டத்துக்காரர். திருச்செந்தூருக்கு அருகாமையில் உள்ள காயாமொழியிலும் திருவைகுண்டத்திலும்
பிள்ளைப் பருவத்தைக் கழித்தவர்.
சென்னையில் ஓடிய
டிராம் வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த எழும்பூரில் உள்ள குடோன் இடத்தை ஏலத்திற்கு
விட்டனர். இரண்டு பெரும் தலைவர்கள் சம பங்காக அந்த இடத்தை ஏலத்தில் எடுத்தனர்.
ஒருவர் தந்தை பெரியார். அதுதான் இன்று இருக்கும் பெரியார் திடல். மற்றொருவர்
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார். அந்த இடம்தான் இன்று இருக்கும் தினத்தந்தி அலுவலக
இடம்.
சி.பா.ஆதித்தனார்
அவர்கள் தினத்தந்தியைச் சென்னையில் தொடங்கியபோது, அலுவலகத்தில் பணிபுரிய தன்னுடைய
மாவட்டத்துக்காரர்களையும் குறிப்பாகத் தன் ஊருக்கு அருகாமையில் உள்ள
ஊர்க்காரர்களையும் தேர்ந்தெடுத்து பணியில் அமைத்துக் கொண்டார்.
ஆதித்தனாருக்கு
தன் சமுதாயமான நாடார் சமுதாயத்தின் மீது பிடிமானம் அதிகம் உண்டு. அடுத்தபடியாக தன்
ஊரிலும் பக்கத்து ஊர்களிலும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் மீதும் கூடுதலான பாசம் இருந்தது.
தன் அலுவகத்தில் கூடுதலாக நாடார் சமுதாய மக்களுக்கும், அடுத்ததாக முஸ்லிம்
சமுதாயத்தினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார்.
பின்னர், “நாம் தமிழர்”
என்ற இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்திலும் மேற்சொன்ன இரு சமுதாயத்தவர்கள்
அதிகம் இருந்தனர். நாம் தமிழர் இயக்கம் அரசியல் பணியையும், சமுதாயப் பணியையும்
ஆற்றுமென கொள்கை வகுத்திருந்தார்.
இந்த நாம் தமிழர்
இயக்கத்தில் காயல்பட்டினத்தைச் சார்ந்த பாமரத் தொழிலாள முஸ்லிம்கள் கணிசமாகப்
பங்கு பெற்று இருந்தனர். இந்தப் பாமரத் தொழிலாள முஸ்லிம்கள் தங்கள் பெயருக்கு
முன்னால் ‘காயல்’ என்ற தன் ஊர் பெயரைத் தரித்துக் கொள்வார்கள். காயலின் பூர்வீகக்
குடி நாங்கள் என்ற அறிவிப்பு போல இது இருக்கும்.
காயல் ஹம்ஸா -
இவர் ஒரு அற்புதமான மனிதர். ஆதித்தனாரால் கவரப்பட்டுச் சென்னைக்கு வந்தவர்.
நாம் தமிழர்
இயக்கத்தில் சென்னையில் களப்பணி புரிந்தவர். தன் குடும்ப வருவாய்க்காக எலக்ட்ரிக்கல்
பணியில், எலக்ட்ரீஷியனாக அனுபவத்தில் உயர்ந்தவர்.
எலக்ட்ரீஷியனாக
வரும் வருமானம் வீட்டிற்கு. களப்பணியும், அரசியல் பணியும் ‘நாம் தமிழர்’
இயக்கதிற்கு என வாழ்வை அமைத்துக் கொண்டவர்.
ஒரு கால
கட்டத்தில் அண்ணா ஆட்சி பீடத்தில் அமர்கிறார். அதன்பின்னர் ஆதித்தனாரோடு ஒரு
கூட்டுறவு தி.மு.க வைத்துக் கொள்கிறது. இந்தக் கூட்டுறவு இன்னும் நெருக்கமாகி
முடிவில் ‘நாம் தமிழர்’ இயக்கம் கலைக்கப் பட்டு தி.மு.க வில் இணைக்கப்பட்டது என
சி.பா.ஆதித்தனார் அறிவித்துவிட்டு தி.மு.க வில் இணைந்துவிட்டார்.
இந்த இரு
இயக்கங்களும் இணைந்த காலகட்டத்தில், சென்னை மாவட்ட நாம் தமிழர் கட்சிச் செயலாளராகக்
காயல் ஹம்ஸா இருந்தார்.
தி.மு.க வோடு,
காயல் ஹம்ஸா இணையவில்லை. இதற்கு முக்கிய காரணம் சி.பா.ஆதித்தனார்.
சி.பா.
ஆதித்தனார், தன் ‘நாம் தமிழர்’ இயக்கத்தைக் கலைத்தவுடன், அவர் இயக்கத்தில் இருந்த
முஸ்லிம்களில் சிலரை ஒன்றுத் திரட்டி, காயல் ஹம்ஸா தலைமையில் சென்னைக் குரோம்பேட்டையில்
உள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் இல்லமான தயா மன்ஸிலுக்குத் தாமே
அழைத்து வந்தார்.
“ஐயா, இங்கு
வந்திருக்கும் தோழர்கள், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள். இதோ இவர்
காயல் ஹம்ஸா. சென்னை மாவட்ட எங்கள் இயக்கச் செயலாளர். இவரையும், இங்கு வந்திருக்கும்
பிறரையும் உங்கள் வசம் ஒப்படைக்கிறேன். என் இயக்கத்தில் முஸ்லிம்கள் இருந்தார்கள்.
அவர்களுக்கு நான் கண்ணியமான இடம் கொடுத்து இருந்தேன்.
நான் இயக்கத்தைக்
கலைத்துவிட்டேன். ஆனால் பொறுப்புணர்வுடன் இவர்கள் இருக்க வேண்டிய இடத்திற்குக்
கொண்டு வந்து சேர்த்துவிட்டேன்.” என்று கூறி காயிதே மில்லத்திடம் அவர்களை ஒப்படைத்துவிட்டு
ஆதித்தனார் தான் போய் தி.மு.க வில் சேர்ந்து கொண்டார்.
அந்த
நிமிடத்திலிருந்து, காயல் ஹம்ஸா, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் தொண்டராக
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் பூரணமாகத் தன்னை இணைத்துக் கொண்டார்.
காயல்
ஹம்ஸாவிற்கு ஒரு பெரும் ஆற்றலை இறைவன் வழங்கி இருந்தான். இந்திய அரசியல்
நிகழ்வுகளையும், தமிழக அரசியல் போக்கினையும் துல்லியமாகவும், விவரமாகவும் அறிந்து
வைத்து இருந்தார்.
அவருக்குத்
தமிழைத் தவிர எந்த மொழியும் படிக்கத் தெரியாது. சென்னை ராயபுரத்தில் அடிமட்ட
மக்களோடு கலந்து வாழ்ந்த வாழ்க்கைக் கொண்டிருந்ததால் உருது நன்றாகப் பேசத்
தெரியும்.
நான் இப்போது
சொல்லும் செய்தி ஆச்சர்யமாக இருக்கலாம். முஸ்லிம் லீகின் முன்னணித் தலைவர்கள்
இந்திய அரசியலின் சில நிகழ்வுகளை மறந்து விடும் பொழுது காயல் ஹம்ஸாவைத் தனியே
அழைத்து அந்த நிகழ்வைப் பற்றிக் கேட்பார்கள். தன் நினைவாற்றலிலிருந்து காயல் ஹம்ஸா
சரியாக எடுத்துச் சொல்லுவார்.
அப்படிச் சில
நேரங்களில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் கேட்டு இருக்கிறார். A.K. ரிபாய் சாஹிப் கேட்டு இருக்கிறார். M.A. அப்துல் லத்தீப் கேட்டுத் தெரிந்து
இருக்கிறார்.
காயல்
ஹம்ஸாவிற்குத் தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி அந்தரங்க நண்பர்.
ஆதித்தனார் அவரோடு அதிகம் கலந்து நட்புக் கொண்டிருந்தவர். நமது அண்டை கர்நாடக
மாநில முஸ்லிம் லீகின் மாநில பொதுச் செயலாளர் கம்ருல் இஸ்லாம் நெருங்கிய தோழர்.
மேற்கு வங்க முஸ்லிம் லீக் மாநில அமைச்சராக இருந்த ஹஸனுஸ் ஸமான் அணுக்கத் தோழர்.
சுலைமான் சேட்
சாஹிப், பனாத்வாலா சாஹிப், முஹம்மது கோயா சாஹிப், அவுக்காதர்குட்டி நஹா சாஹிப்
போன்றவர்களுக்கும் காயல் ஹம்ஸா பரீட்சயமானவர்.
காயிதே
மில்லத்தின் பூரண நம்பிக்கைக்கும் அன்பிற்கும் உரியவர். சென்னை மாநகராட்சித் துணை
மேயராக இருந்த சிலார் மியான் சாஹிபுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர். சிலார்
மியானோடு சேர்ந்து பிறைக்கொடி மாத இதழை காயல் ஹம்ஸா தொடங்கினார். அதன்
வெளியீட்டாளரும் அவரே.
இத்தனை
பட்டியல்களை அவரோடு இணைத்துப் பார்க்க முடியும். ஆனாலும் காயல் ஹம்ஸா ஒரு பீடியைப்
பற்ற வைத்துக் கொண்டு, கைலியை மடித்துக் கட்டி, உள் அணிந்து இருக்கும் காக்கி
டவுஸர் வெளித்தெரிய எலக்ட்ரீஷியன் பணியைச் செய்து கொண்டிருப்பார்.
என்னோடும்
மற்றும் இஜட்.ஜஃபருல்லா, கவிஞர் காசிம் போன்றவர்களோடும் விளையாட்டு மொழிகளில்
பேசிக் கொண்டிருப்பார். ஹம்ஸா அன்புமயனாவர்.
சென்னைத்
துறைமுகத்தின் அருகில் உள்ள காயல் நகரைச் சார்ந்த வாவு குடும்பத்தாருக்கு சொந்தமான
பலமாடிக் கட்டிடத்தை அவர்கள் வாடகைக்கு விட்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தினுடைய
எலக்ட்ரீஷியனாக வாவு குடும்பத்தார் வேலையில் அமர்த்தி அவரைப் பாதுகாத்து வந்தனர்.
சென்னை ராயபுரம்
தொப்ப முதலித் தெருவில் உள்ள அவர் குடியிருந்த
ஒரு பொந்து வாடகை வீட்டிற்குத் தமிழக்கத்தில் உள்ள முஸ்லிம் லீகின் மூத்தத்
தலைவர்கள் ஏதாவதொரு நிகழ்விற்கு வந்து சென்றிருக்கிறார்கள் என்பது தனிப் பெருமை.
கண்ணியத்திற்குரிய
காயிதே மில்லத் மறைந்து விட்டார்கள். அவர்கள் ஜனாஸா புதுக் கல்லூரி வளாகத்தில்
வைக்கப் பட்டு இருக்கிறது. ஜனாஸா மீது முஸ்லிம் லீகின் இளம்பச்சைப் பிறைக் கொடி
போர்த்தப் பட்டு இருக்கிறது.
தமிழகத்தில்,
கேரளத்தில், இந்தியத்தில் உள்ள பெரும் தலைவர்கள் அனைவரும் வந்து கலந்துக்
கொண்டனர். திருவல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதுக்கு அடக்கம் செய்ய ஊர்வல பவனி
செல்கிறது. முடிவில் கபரில் வைத்து மூடப் படுகிறது.
அந்த நேரத்தில்,
சற்றுக் கருநிறம் கொண்ட இரு கரங்கள், காயிதே மில்லத் ஜனாஸாவை மூடியிருந்த
இளம்பச்சைக் கொடியைப் பிடித்திழுத்துத் தன் வசமாக்கிக் கொண்டது. அந்தக்
கரத்திற்குரியவர் காயல் ஹம்ஸா. அதற்குப் பின்னால் மறைந்த முஸ்லிம் லீக் தலைவர்கள்
ஜனாஸாவில் காயிதே மில்லத்தைப் போர்த்திய பிறைக் கொடியைப் போர்த்துவதற்காகக் காயல்
ஹம்ஸா அந்தக் கொடியை தன் கழுத்தில் துண்டு போல் போட்டுக் கொண்டு அங்கு வந்து நிற்பார். போர்த்துவார். பின்பு மறக்காமல்
எடுத்துச் சென்று விடுவார்.
இந்தியன் யூனியன்
முஸ்லிம் லீகின் உரிமை ஏடான ‘உரிமைக் குரல்’ வார இதழின் வெளியீட்டாளரும், சென்னை மாவட்ட
முஸ்லிம் லீக் பொருளாளருமான இளையாங்குடி பி.என்.ஐ.
அபுதாலிப் அண்ணன் ஒரு அஸர் தொழுகைக்கு ஒளுச் செய்தார். அந்த நிலையிலேயே இறை
நாட்டப்படி இறைவனடிச் சேர்ந்தார்.
அவர் ஜனாஸாவில்
போர்த்துவதற்காகக் காயல் ஹம்ஸா, காயிதே மில்லத்திற்குப் போர்த்திய துணியைத் தன் கழுத்தில்
தாங்கி வந்தார். போர்த்தினார். அருகில் அமர்ந்து கண்ணீர் சிந்தி அழுதார். காயல்
ஹம்ஸா அழுது நான் முதன்முதலில் அப்பொழுதுதான் பார்த்தேன்.
ராமநாதபுர
நாடாளுமன்றத் தொகுதியில் இருந்தும், அடுத்த முறை பெரியகுளம் நாடாளுமன்றத்
தொகுதியில் இருந்தும் முஸ்லிம் லீக் வேட்பாளராக வெற்றிப் பெற்றுச் சென்ற மதுரை
ஷரீப் அண்ணன் மறைந்து விட்ட செய்தி வந்தது.
தலைவர் அப்துஸ்
ஸமது சாஹிப், S.A. காஜா முஹைதீன் M.P. , வந்தவாசி வஹாப் சாஹிப், கவிஞர் தா.காசிம்,
இஜட். ஜபருல்லா, நான் மதுரைக்குச் சென்றோம். எங்களோடு காயல் ஹம்ஸாவும் வந்தார்.
அப்பொழுதும் அவர் கழுத்தில், சென்னையில் இருந்து மதுரை வரை காயிதே மில்லத்தைப்
போர்த்தி இருந்த முஸ்லிம் லீக் கொடி, அவர் கழுத்தில் துண்டாகத் தவழ்ந்து கிடந்தது.
மதுரையில் ஷரீப்
சாஹிப் ஜனாஸா மீது போர்த்தப்பட்டது. அப்பொழுதும் ஜனாஸா அருகில் அமர்ந்து காயல் ஹம்ஸா
விக்கல் கலந்து அழுதார். ஹம்ஸா அழுகையை இரண்டாம் முறை அப்பொழுது பார்த்தேன்.
இன்று அந்த ஹம்ஸா
இல்லை. அவர் ஜனாஸாவைக் காயிதே மில்லத்தைத் தழுவிய பச்சிளம் பிறைக் கொடி போர்த்தி
இருந்தது. அதன்பின் அந்தக் கொடி என்ன ஆனது? எனக்குத் தெரியவில்லை.
ஒரு கொடி வரலாறு முற்றுப்
பெற்று விட்டதோ?
No comments:
Post a Comment