கொஞ்சம் அரசியல் பேசுவோம்!
எம்.ஜி.ஆர் 1964-இல் தமிழக மேலவை உறுப்பினராக இருந்த காலம். திமு.கவின் பொதுச் செயலாளர் அண்ணா.
இந்தக் காலக்கட்டத்தில் ஏதோ ஒரு மனக்கசப்பின் காரணமாக தி.மு.கழகத்திற்கும் அதன் தலைமைக்கும் அதிர்ச்சி தர நினைத்த எம்.ஜி.ஆர் தனது M.L.C பதவியை ராஜினாமா செய்து அந்தக் கடிதத்தை அண்ணாவுக்கு அனுப்பினார்.
ஒரு சின்ன அதிர்வு தி.மு.க விற்குள் எழுந்தது. எம்.ஜி.ஆரின் ராஜினாமாவைப் பெற்றுக் கொண்ட அண்ணா இரண்டு மூன்று நாட்கள் அமைதிக் காத்தார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் ‘என் கடமை’ படம் வெளியானது.
திரையரங்குகள், எம்.ஜி.ஆர் படங்கள் வெளியீட்டு நாள்களில் எப்பொழுதும் நிரம்பி வழியும். ‘என் கடமை’ வெளியான தியேட்டர்கள், வெளியான நாள்களில் நிரம்பவில்லை. முதல் மூன்று நாட்களும் நிரம்பவில்லை. உடனே எம்.ஜி.ஆர் அண்ணா கேட்டுக் கொண்டதன் பேரில் ராஜினாமாவைத் திரும்ப பெற்றுக் கொண்டேன் என அறிக்கை விட்டார்.
அண்ணாவும் சம்மதம் சொன்னார். அடுத்த தினங்களில் இருந்து திரையரங்குகள் நிரம்பி வழியத் தொடங்கின.
எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்க அங்கேதான் பரிசோதித்துப் பார்த்தார். உடனே சுதாரித்துக் கொண்டார். அதன்பின் எம்.ஜி.ஆர் மன்றங்களை விரிவு படுத்தினார். பொறுமையாகக் காத்து இருந்தார். மதுரை தி.மு.க மாநாட்டில் கருணாநிதியிடம் கட்சிக் கணக்குக் கேட்டு எதிர் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது எம்.ஜி.ஆரை பொருத்தளவில் உண்மையாகி விட்டது.
எம்.ஜி.ஆர். தனிக்கட்சித் துவங்க அண்ணா காலத்திலேயே ஒரு அந்தரங்க அடித்தளம் அமைக்க முயன்றார் அது நடவாத போது சுதாரித்துக் கொண்டார். இது உண்மையான அரசியல் தான்.
ஆனால் பிராமணீய மதச் சக்தி இதற்கு முக்கால் பங்குக் காரணம் என்பது போன்ற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது.
தமிழகத்தில் காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி இவற்றுகிடையே அரசியல் தாக்கங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் கை சற்று ஓங்கத் துவங்கியது.
அண்டை மாநில கேரளாவைப் போன்று காங்கிரஸ் பேரியக்கம், பொதுவுடைமை தேசிய இயக்கம், முஸ்லிம் லீக், பசும்பொன் முத்து ராமலிங்கத்தேவரின் ஃபார்வர்டு பிளாக் (சுபாஷ் சந்திரபோஸ்), ராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சி போன்ற இவைகள்தாம் தமிழக அரசியலில் பெரிதானக் கட்சிகளாக வெளித்தெரிந்தன.
நீதிக் கட்சி தென் பிராந்திய காங்கிரஸ் எதிர்ப்பு இயக்க கட்சியாக முன் நின்றது. பசும்பொன் தேவரின் ஃபார்வர்டு பிளாக் ஒரு ஜாதியக் கட்சியாகச் சுருங்கிக்கொண்டது. ராமசாமி படையாட்சியின் ‘உழைப்பாளர் கட்சி’ இன்றைக்குள்ள பாட்டாளி மக்கள் கட்சி போன்று மற்றோரு ஜாதிக் கட்சியாக இருந்தது.
காங்கிரசுக்குத் தேவரின் கட்சியையும், ராமசாமி படையாட்சியின் கட்சியையும் சமாளிப்பது சுலபமாக இருந்தது.
காங்கிரசுக்குத் தேவரின் கட்சியை இணைத்துக் கொள்ளவோ அல்லது உடைத்துச் சிதறடிக்கவோ வாய்ப்பு இல்லாது போனது. அதனால் தலித் பெருமக்களைக் கங்கிரஸ் கைவசம் எடுத்து ஜாதி மோதலை உருவாக்கி ஃபார்வர்டு பிளாக்கைச் சமாளித்துக் கொண்டது.
ராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சியைக் காங்கிரஸ் எளிய முறையில் ஜீரணித்து விட்டது. ராமசாமி படையாட்சிக்கு மாநில அமைச்சர் பதவி கொடுக்கச் சம்மதித்த உடன் ராமசாமி படையாட்சி தன் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரசோடு இணைந்து கொண்டார்.
மீதமுள்ள கட்சிகள் பொதுவுடைமைக் கட்சி, முஸ்லிம் லீக், நீதிக் கட்சி.
நீதிக் கட்சி பிராமண எதிர்ப்பு மனோபாவத்தோடும் பிராமணர் அடுத்த மேல் ஜாதி வகுப்பாரின் முக்கியத்துவத்தோடும் உருவாக்கப் பட்ட கட்சி. காங்கிரஸ் பிராமண ஆதிக்கக் கட்சி, என்ற கோதாவை முன்னிறுத்தித் திராவிட உணர்வை மேனிலைப் படுத்தி நீதிக்கட்சி பிரச்சாரத்தில் இறங்கி இருந்தது.
காங்கிரஸ் இதனையே வாய்ப்பாக்கி, முகமூடிக்குள் தன்னை மறைத்து நீதிக் கட்சியை உடைத்து திராவிடக் கழகம் உதயமாக உதவியது. இதில் பிராமணச் சதி நிரம்ப உண்டு.
திராவிடக் கழகம் சமூக அமைப்பானது. திராவிடர் கழகம் பின்நாளில் அண்ணா தலைமையின் கீழ் திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கமானது.
காங்கிரசுக்கு ஆழ்மனதில் மகிழ்ச்சியும் அதன் முகத்தில் குறுஞ்சிரிப்பும் மலர்ந்தது. இந்த மலர்ச்சியின் பின்னணியில் பிராமணீய அரசியல் ரொம்பவுமே செழித்து இருந்தது.
தன் பெயரளவில் திராவிடர் என்று இருந்தாலும் தி.மு.க. தமிழ் மொழி, தமிழினம் என்ற நம்பத்தகுமான கோஷத்தை முன் வைத்தது. காங்கிரசுக்கும் இதில் உள்ளூர மகிழ்ச்சிதான்.
ஏனென்றால் பெருகி வரும் பொதுவுடைமை இயக்கத்துக்குத் தி.மு.க. தான் சரியான எதிர் விளைவு எனக் காங்கிரஸ் சரியாகவே தப்புக்கணக்குப் போட்டது.
தி.மு.க. மேடைகள், பொதுவுடைமைக் கோட்பாட்டை ஆதரிப்பது போல் பேசிக்கொண்டு பொதுவுடைமை இயக்கத் தலைவர்களைக் கொச்சைப் படுத்தியது.
பொதுவுடைமை இயக்கம் ஒரு கொலைகாரக் கட்சி போலவும், அரசியல் காரணமாகக் கைதாகி இருந்த பொதுவுடைமை இயக்கத்தவர்களைக் கொலைக் குற்றவாளிகள் போலவும், ஆயுள் கைதிகள் போலவும் தி.மு.க. மேடைகளில் அசிங்கம் அரங்கேறியது.
பொதுவுடைமை இயக்கம் ஏற்கனவே கங்கிரசால் தடை செய்யப்பட்டு இருந்தது. பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் தலைமறைவாகி அரசியல் நிகழ்த்திக் கொண்டு இருந்தனர்.
இந்த நிலையில் இருந்து விடுபட்டுத் தடை நீங்கி பொதுவுடைமை இயக்கம் தமிழகத்தில் அரசியல் நடத்திக் கொண்டு இருந்த காலகட்டத்தில் தமிழகம் எங்கும் தி.மு.க. வின் மேடைகைள் முழங்கிக் கொண்டு இருந்தன.
பொதுவுடைமை இயக்கத்திற்குச் சரியான கவ்ண்ட்டர் தி.மு.க.தான் என்பதைப் புரிந்து கொண்டு தி.மு.க.வின் மீது அதிகம் பாயாமல், பாய்வது போல பாசாங்குக் காட்டி தி.மு.க.வைக் காங்கிரஸ் வளர்த்து விட்டது.
தி.மு.க.வைப் பின்நாளில் சமாளித்துக் கொள்ளலாம் என்பது காங்கிரசின் கணிப்பு. தி.மு.க. ஒரு கட்டத்தில் கங்கிரசின் நினைப்பையும் மீறி கங்கிரசுக்கே கவ்ண்ட்டராக மாறியது.
காங்கிரஸ், பொதுவுடைமைக்குக் கவ்ண்ட்டர் என நினைத்தத் தி.மு.க. தனக்கே கவ்ண்ட்டர் ஆனதால் கொஞ்சம் அதிர்ந்தது. இனிமேல் தி.மு.க.வை உடைத்தாக வேண்டியதுதான்.
பிராமண முகத்தைப் போர்த்திக் கொண்டு காங்கிரஸ் நரித்தனத்தில் இறங்கியது. ஏற்கனவே பிராமணீய அரசியலுக்கு நரித்தனம் வரலாற்று ரீதியாகக் கூடப் பிறந்தது. பிராமணீய அரசியலுக்குப் பல தற்காப்புக் கலைகள் தெரியும்.
தன்னுடைய பிராமண முகத்தையே காட்டித் தாக்குதலைத் தன் மீது நிகழ்த்திக் கொண்டு எதிரியை உடைக்கும் சதியை நிகழ்த்தி தன்னை நிலைப்படுத்துக் கொள்ளும் சாணக்கியத்தனம் பிராமணீய அரசியலின் ராஜதந்திர முறைகளில் ஒன்று.
தி.மு.க.வில் இருந்து ஈ.வே.கி.சம்பத் வெளியேறினார். அவரால் அரசியல் நடத்த முடியவில்லை. தான் தோற்றுவித்தத் தனிக் கட்சியைக் கலைத்து விட்டு இறுதியில் காங்கிரசில் போய் இணைந்துக் கொண்டார். அதாவது எந்தக் கை பின்புலத்தில் தூண்டியதோ அந்தக் கையிலேயே சம்பத் சரணாகதி அடைந்தார்.
அடுத்து எம்.ஜி.ஆர். வெளியே வந்தார். இங்கும் பிராமண முகத்தை நிழலாகக் காட்டியது காங்கிரஸ் இயக்கம்தான்.
நீண்ட காலமாகத் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப் படுத்திக் கொண்டிருந்த பொதுவுடைமை இயக்கம் தானும் இரண்டானது. இது இந்திய அளவில் நடந்தது. தமிழகத்தில் பிளவு பட்டு இருந்த பொதுவுடைமை இயக்கத்தின் ஒரு பிரிவான இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழகத்தின் அரசியலை உன்னிப்பாகக் கவனித்து தி.மு.க.வுக்குக் கவ்ண்ட்டர் எம்.ஜி.ஆர்.தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டது.
அதனால்தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் கல்யாண சுந்தரம், எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகப் பின்புலம் இருந்து இயக்கத் தொடங்கினார் (தோழர் கல்யாண சுந்தரம் பிராமணர் அல்லர்).
எம்.ஜி.ஆர். தன்னுடையக் கட்சியின் சின்னமாகத் “தாமரைப் பூ”வைத்தான் நினைத்து இருந்தார்.
“இது தவறான முடிவு. இந்தச் சின்னத்தின் பின்புலத்தை வெளிப்படுத்தி தொடக்கத்திலேயே உங்களைத் தி.மு.க. நசுக்கி விடும். கொடியில் தாமரைச் சின்னம் வேண்டாம். அண்ணா படத்தையே கொடியில் வைத்துக் கொள்ளுங்கள்” என எம்.ஜி.ஆருக்கு அறிவுறுத்தியவர் தோழர் கல்யாண சுந்தரம் என ஒரு மறைமுகத் தகவல் இருக்கிறது.
அகில இந்தியத்திலும் காங்கிரசை ஜீரணிக்க இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒரு ரகசிய நடவடிக்கையில் இறங்கியது. காங்கிரசுக்குள் ஊடுருவதுதான் அதற்கான வழி எனத் தீர்மானித்துச் செயலில் இறங்கியது.
தோழர் மோகன குமார மங்களம் காங்கிரசுக்குள் சென்றார் மத்திய அமைச்சர் ஆனார். அஸ்ஸாமிலிருத்து வந்த தோழர் பரூவா காங்கிரசுக்குள் நுழைந்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார். ஒரிசாவில் தோழியர் நந்தினி சத்பதி காங்கிரசுக்குள் நுழைந்தார், மாநில முதல்வர் ஆனார். மேற்கு வங்கத்திலும் பல தோழர்கள் காங்கிரசுக்குள் நுழைந்து உயர் மட்டத்துக்கு வந்தார்கள். காங்கிரசுக்குள் ஊடுருவல் நன்றாகத்தான் நடந்தது. ஆனால் வெற்றி பெறவில்லை. ஊடுருவல்களைக் காங்கிரஸ் ஜீரணித்து விட்டது.
தோழர் பாலதண்டாயுதம் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பலர் மரணம் அடைந்தார்கள். அதில் தோழர் பாலதண்டாயுதத்தோடு சேர்ந்து மார்க்ஸிய சிந்தனை உள்ள தலைவர்கள், அரசு அதிகாரிகள் மொத்தம் 11 பேர் கூண்டோடு இந்த விமான விபத்தில் இறந்து போனார்கள். இவர்கள் அனைவருமே காங்கிரசுக்குள் கம்யூனிஸ்டுகள் ஊடுருவலை ஆதரித்தவர்களும் செயல் பட்டவர்களும் ஆவார்கள். இந்த விபத்தில் சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினர் இந்திய தேசிய கம்யூனிஸ்டு கட்சியின் தோழியர் ஜெயலட்சுமி மட்டும் உயிர் தப்பினார். இந்த விமான விபத்து ஒரு சதி என்று அந்த நேரத்தில் சொல்லப் பட்டது.
முடிவாக இந்த ஊடுருவல் முழுவதுமாகத் தோற்றுவிட்டது.
தமிழகத்திலும் தி.மு.க.வுக்கு எம்.ஜி.ஆர் நல்ல எதிரிதான் என ஆலோசனை செய்து வளர்க்கப் பட்ட அ.தி.மு.க.வும் பின்நாளில் கம்யூனிஸ்டுகளுக்கு ஆபத்தான இயக்கமாக ஆகி விட்டது.
பிராமண எதிர்ப்பு உணர்வை மறைமுகமாகத் தூண்டி விடுவதும் பிராமணீய அரசியல்தான். எதிர்ப் புறத்தில் இருப்பவர்களைப் பிராமண எதிர்ப்பு இயக்கங்களிலேயே சிக்கவைத்து அதை ஜாதி மத மோதல்களாகத் திசை திருப்பி விட்டு அதனால் பிராமணீய அரசியல் தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது.
இதனுடையத் தோற்றம்தான் இந்திய தேசிய காங்கிரசும், பாரதிய ஜனதாக் கட்சியும். இந்த ராஜதந்திரத்தை முறியடிக்க வேற்றுப் பாதையினை இன்றைய அரசியல் சிந்தனைகள் மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.
No comments:
Post a Comment