Monday, November 18, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–27

மக்கத்தில் வெளியிட்ட முதல் தமிழ்க் கவிதை நூல்!!!


தமிழகத்தின் ஆலிம் பெருமக்களுக்கு மகத்தான பணிகள் எப்பொழுதுமே காத்துத்தான் கிடக்கின்றன.

ஆலிம் பெருமக்கள் இந்தியச் சுதந்திரக் களத்தில் தேச விடுதலைக்கு ஆற்றிய பணிகள் எவருக்கும் சளைத்ததல்ல.

ஆலிம் பெருமக்கள் ஆன்மீகப் பாதையில் வழிகாட்டுப் பிரகாசங்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

ஆலிம் பெருமக்கள் தமிழ் இலக்கியப் பணியில் உச்சத்தைத் தொட்டுக் காட்டிய பிரம்மாண்டத்தைக்  கண்டவர்கள்.

ஆலிம் பெருமக்கள் அரசியலின் ஆழத்திலும் உயரத்திலும் அளப்பரிய பணியாற்றியவர்கள்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகைப் பொருத்தவரை ஆலிம் பெருமக்களுக்கு எப்பொழுதுமே உயர்ந்த இடம் உண்டு. எத்தனையோ ஆலிம் பெருமக்கள் முஸ்லிம் லீகின் அரசியலில் துருவ நட்சத்திரங்களாகத் துலங்கி இருக்கிறார்கள்.

பள்ளிவாசல்களில் தொழுகைப் பணிகளையும், இஸ்லாமிய மார்க்க மேடைகளையும் மட்டுமே இடமாகக் கொண்டில்லாமல் சமுதாயப் பிரச்சனைகளிலும் இலக்கிய வளங்களிலும் இவர்கள் ஆற்றியுள்ள பணி காலங்களைக் கடந்து நினைவு கூர்தலுக்குரியன.

மௌலான மௌலவி சிராஜ் பாக்கவி. இந்தப் பெயர் இன்றைய இஸ்லாமிய இளைஞர்களுக்கு அறிமுகம் இல்லாத பெயராக மாறி இருக்கலாம். ஆனால் ஒரு கட்டத்தில் முஸ்லிம் லீக் மேடைகள் சிராஜ் பாக்கவியால் தொடர்ந்து வளம் பெற்று இருந்திருக்கிறது.

என்னுடைய ஐந்தாவது வயதில் என்னுடைய பெற்றோர்கள் சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவில் குடியிருந்தார்கள். நானும் என் அண்ணன் பிலாலும் அவர்களுடன் இருந்தோம். என்னுடைய தந்தையார் A.K. ரிஃபாய் சாஹிப், அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்களுடைய மணிவிளக்கு மாத  இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார்கள்.அப்துஸ் ஸமது சாஹிபும் அந்தக் குழுவில் இருந்தார்கள். இவர்களோடு இணைந்து சிராஜ் பாக்கவியும் மணிவிளக்கில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தார்.

எனக்கும் என் அண்ணனுக்கும் முதன்முதலில் அலிஃப், பே சொல்லித் தந்தவர் சிராஜ் பாக்கவி.

சிராஜ் பாக்கவி அற்புதமான கவிஞர். முஸ்லிம் லீகின் மாநாட்டுக் கவியரங்கங்களில் கவிஞர்களோடு கவிஞராகக் கவிதை படித்த முதல் ஆலிம் கவிஞர் சிராஜ் பாக்கவிதான்.

சிராஜ் பாக்கவி “நெஞ்சில் நிறைந்த நபிமணிகள்” என்ற ஒரு அண்ணலார் வரலாற்று காவியத்தைக் கவி நடையில் யாத்தளித்தவர்கள்.

நான்கு நான்கு வரிகளில் அண்ணலார் வாழ்க்கைச் சரிதம் கவிதைச் சந்த நயத்தோடு இக்காவியம் முழுதும் நடைபோடும். ஒவ்வொரு நான்காவது வரியிலும் “என் நெஞ்சே” என்ற இறுதி அசைவுடன் முடிவு பெற்று இருக்கும்.

இந்த நெஞ்சில் நிறைந்த நபிமணிகள், பருமனான புத்தகமாக இருந்தது. ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் இடம் பெற்று இருந்தன.

இஸ்லாமியக் கவி வரலாற்றில் இன்றுவரை யாரும் சாதித்திராத சாதனை நெஞ்சில் நிறைந்த நபிமணிக்குச் சொந்தமானது.

என் நினைவுக்குத் தெரிந்து அப்படி ஒரு அற்புதமான கட்டமைப்பு உள்ள கவிதைத் தொகுப்பு அந்தக் காலத்தில் வெளிவந்ததே இல்லை. இஸ்லாமிய கவிஞர்கள் மத்தியில் மட்டும் என்று நான் இதைச் சொல்லவில்லை. மொத்த தமிழ்க் கவிஞர்கள் மத்தியிலும் இதற்கு நிகரான சாதனை நிகழ்ந்திருக்கவில்லை.

உயர்தரமான வண்ண ரேப்பர். அதைப் புரட்டினால் நுழைவாயில் என்ற எழுத்தோடு மணிக் கதவுகள் திறப்பதுபோல் திறந்து பார்த்தால் கஃபதுல்லாஹ், மதீனத்து நபவிக் காட்சிகள், அச்சான தாள்கள் அனைத்தும் உயர்தர வகையைச் சார்ந்தவை. இப்படி ஒரு கவிதைத் தொகுப்பை ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் கற்பனை செய்து பாருங்கள். தமிழகக் கவிதையுலகம் கண்டறியாத ஒன்றாக அது இருக்கும்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் முதல்முறையாக ஹஜ்ஜுப் பயணத்தை மேற்கொண்டார்கள். அப்போழுது அவர்களோடு முஸ்லிம் லீக் ஆலிம் கவிஞர், மக்கத்துக்கு, ‘நெஞ்சில் நிறைந்த நபிமணிகளை’ ஏந்திப் புறப்பட்டுச் சென்றார்கள். நெஞ்சில் நிறைந்த நபிமணிகள் முதல்பிரதியை மதீனத்து நபவியில் வைத்தெடுத்து அந்தப் பிரதியை அன்றைய சவுதி மன்னர் ஃபைசல் திருக்கையால் வெளியிட கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் பிரதியைப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்தச் சிறப்பும் பாக்கியமும் பெற்ற தமிழ்க்கவிதை நூல் இன்றுவரை யாராலும் யாக்கப்படவில்லை. அந்தப் பெருமையை இறைவன் மௌலான மௌலவி, என்னுடைய ஆசிரியர் சிராஜ் பாக்கவி அவர்களுக்குத்தான் வழங்கி இருந்தான்.

சிராஜ் பாக்கவி அவர்களுக்குக் கிடைத்த பெருமையைப் போல எனக்கும் ஒரு சின்னப் பெருமையை இறைவன் வழங்கி இருந்தான்.

எனக்கு ‘அலிஃப்’, ‘பே’ சொல்லித் தந்த ஆசிரியர் அவர். பின்னாளில் தாய்ச்சபையின் அரசியல் மேடைகளிலும் கவியரங்கங்களிலும் அவருடன் இணைந்து பேசி இருக்கிறேன். கவிதைகள் வாசித்து இருக்கிறேன். வாழ்நாளில் தாய்ச்சபைப் பணியைத் தொய்வில்லாமல் நிறைவேற்றிய மௌலானா மௌலவி கவிஞர்மணி சிராஜ் பாக்கவி அவர்களை அடுத்தத் தலைமுறைக்கு அறிமுகப் படுத்த வேண்டிய பொறுப்பு முந்திய இளைய தலைமுறைக்கு இருக்கிறது என்ற கடமை உணர்வோடு இதைப் பதிவு செய்கிறேன்.

மதுரைத் தமுக்க மைதானத்தில் பிரம்மாண்டமான மீலாது விழா. அன்றைய மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் கமாலுதீன் ஹாஜியார் தலைமையில் நடந்தது. சிறப்புச் சொற்பொழிவைத் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் ஆற்றினார்.

அன்றைய மீலாது கூட்டத்தில் சிராஜ் பாக்கவி, கவிஞர் தா.காசிம், நான், இஜட். ஜஃபருல்லா கலந்துக் கொண்டு பேசினோம். சிராஜ் பாக்கவியினுடைய பேச்சு அன்று அற்புதமாக இருந்தது.

“சுவனப் புறத்திலிருந்து ஆதம் (அலை) இலங்கைப் பகுதியில் இறக்கப் பட்டார்கள். ஹவ்வா (அலை) ஜித்தா பாலைப் பகுதியில் இறக்கப் பட்டார்கள். அவர்கள் இறக்கப் பட்டதால்தான் அந்தப் பகுதிக்கு ஜித்தா என்று பெயர் வந்தது. ஜித்தா என்றால் மூதாட்டி என்று பொருள். மனித குலத்தின் முதல் மூதாட்டி ஹவ்வா அம்மையார்தானே. இன்றும் தமிழில் அவ்வை என்ற சொல் மூதாட்டி என்ற பொருளில் இருக்கிறது. அவ்வை என்ற சொல் ஹவ்வா என்பதின் மரூஉ.

ஆதம் இறங்கிய மலை ஆதம் மலையானது. ஆதம், ஹவ்வாவைத் தேடி வருகிறார். ஹவ்வா, ஆதத்தை நோக்கி வருகிறார். இவர்கள் சந்தித்துக் கொண்ட இடம் மதுரையாக இருக்கலாம். மதுர் என்றால், சந்திப்பு என்று பொருள். தமிழில் கூட , கூடல் மாநகர் என்ற சொல் மதுரைக்கு இருக்கிறது. இந்தத் தம்பதிகள் அரஃபா பெருவெளியில் சந்தித்துப் பாவமன்னிப்புப் பெற்று இருக்கலாம். ஆனால் இந்தக் கூடல் மாநகரில் மனித குல அபிவிருத்தி நிகழ்த்தி இருக்கலாம். முதல் மனிதனும், மனுஷியும் கூடிய இடம் மதுரை” என சிராஜ் பாக்கவி அவர்கள் அன்று மீலாதில் பேசிய பேச்சு இன்றும் என் நினைவில் இருக்கிறது.

சிராஜ் பாக்கவி பேசிய பேச்சில் பலருக்குக் கருத்து முரண் இருக்கலாம். அது வேறு விஷயம். நான் சிராஜ் பாக்கவி அவர்களை மேடையில் சந்தித்தது அதுதான் கடைசிமுறை. அந்தப் பேச்சுத்தான் நான் இறுதியாகக் கேட்ட அவரின் பேச்சு. அதன்பின் சில காலத்தில் இறைவன் நாட்டப்படி இறைவனடி சேர்ந்தார்கள்.

No comments:

Post a Comment