முஸ்லிம் லீகினுடைய சென்னை மாவட்டத்தின் தலைவர் என் இனிய தம்பி ஜெய்னுலாபிதீனின் அருமைத் தம்பி கவிஞர் ஜமாலுதீன் இன்று மதியம் பன்னிரண்டு மணியளவில் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டார்.
வேதனையான ஒரு தகவலைச் சொன்னார். கவிஞர் ம. முஹம்மது மைதீன் இன்று காலமாகி விட்டார். அவருடைய ஜனாஸா வண்ணாரப்பேட்டையில் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாகவும் செய்தி சொன்னார்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்)
இந்தச் செய்தி வந்த நேரத்தில் இருந்து கவிஞர் ம.மு. மைதீன் பற்றிய நினைவோட்டங்கள் என்னை அலைக்கழித்தன.
முஸ்லிம் லீக் வட்டாரத்திற்குக் கவிஞர் ம.மு. மைதீனை அதிகம் தெரியாது. கவிஞருக்கு அரசியல் நோக்கங்களோ கோட்பாடுகளோ பெரிய அளவில் இருந்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ராமநாதபுர மாவட்டத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் பிறந்தார் என்பது என் நினைவு. “கருவில் திரு உடையார்” என்று தமிழில் ஒரு சொலவடை உண்டு. அதாவது பிறப்பிலேயே ஆளுமை உடன்பிறந்திருக்கிறது என்பது இதன் பொருள். கவிஞர், பிறவிக் கவிஞர்.
முறைப்படித் தமிழ் கற்ற புலவரோ, பட்டங்கள் பெற்ற தகுதிக்குரியவரோ அல்லர் அவர்.
பொதுவாக புலவர் படித்தவர்கள், மற்றும் M.A போன்ற பட்டப் படிப்பு படித்தவர்கள் தாங்கள்தாம் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற கனவுக்கு அனேகர் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.
ஆனால் தமிழ்க் கவிஞர் ம.மு. மைதீன் போன்ற கவிஞர்களால்தான், தமிழ்த் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.
கவிஞரை நான் சந்தித்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். என்னுடைய வாழ்க்கை, மண்ணடியைச் சுற்றி பின்னிப் பிணைந்திருந்த கால கட்டத்தில் நாங்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தோம்.
மண்ணடிக்கும் எனக்கும் உறவுநிலை விடுபட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
கவிஞர் ம.மு. மைதீன் ஏழு கிணற்றுப் பகுதியில் ஒரு சின்ன, அவருக்குச் சொந்தமான பெட்டிக் கடையில் அமர்ந்து வணிகம் செய்து கொண்டிருப்பார். அது அவருக்கு ஜீவிதத் தொழில்.
வணிகத்திற்கு நடுவிலே அவருக்கே உள்ள இயல்பான கவிதா பிரவாகம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டே இருக்கும்.
அவர்தம் மத்திய வயதில் தமிழ் மாமேதைகளான, இலக்கணக் கடல் மே.வீ. வேணுகோபலனாரிடமும், தமிழறிஞர் பாலசுந்தரனாரிடமும் அவர் மாணவனாக இருந்த காலமும் உண்டு.
மரபுக் கவிதை, கவிஞரின் விளையாட்டு மைதானம். அற்புதமான கவியோட்டம், சந்தக் குதிப்புகள், உவமை லயங்கள் சர்வ சாதரணமாகக் கவிஞரின் கவிதைகளில் சல்லாபம் செய்து கொண்டிருக்கும்.
“நாயகப் பேரொளி” என்ற ஒரு அற்புதமான கவிதைத் தொகுப்பு, இவர் ‘நாயகப் பேரொளி கவிஞர் ம.மு. மைதீன்’ என்ற அடைமொழியால் பின்னர் அழைக்கப்பட்டார்.
இந்த நாயகப் பேரொளி நூல் வெளியீடு மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெரு எண் 8, பின்னர் 35 இலக்குடைய முஸ்லிம் லீகின் தலைமையகத்தில் நடந்தது. தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் தலைமைத் தாங்கினார். பல கவிஞர் பெருமக்களும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டார்கள்.
நாயகம் உதித்த காலகட்டம், அமாவாசை இருள் போன்ற இருண்ட காலகட்டம். அங்கே நாயகப் பிரகாசம் உதித்தது. இந்தச் செய்தியைக் கவியாக்கும் பொழுது, நாயகப் பேரொளி கவிஞர் ம.மு.மைதீன் ஒரு தலைப்புத் தந்திருந்தார்.
“கருப்பு நிலாக் காலம்”. அமாவாசைக்கு இருட்டு நிலா என்ற உருவகத்தின் அற்புதத்தைக் குறிப்பிட்டு நாயகப் பேரொளி வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப்
“இந்த ஒரு தலைப்புக்காக மனமகிழ்வோடு சன்மானமாக நான் 100 ரூபாய் அன்பளிப்பு செய்கிறேன்.” என அன்பளிப்புச் செய்தார்.
இந்த மகத்துவங்களால் நிரம்பி இருந்த கவிஞர் இன்று இறைவன் நாட்டப்படி அவனளவில் சேர்ந்துவிட்டார். அவரின் மரணத்திற்கு முந்தைய முப்பதாண்டுகள் வாழ்வுநிலைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது போனாலும், அதற்கும் முந்தைய காலகட்டத்தின் அவர் நட்பை இன்று நினைக்கும் பொழுதும் அது ஒரு பிரகாச நிலாக் காலம்தான்.
எங்கள் இறைவா! நாயகப் பேரொளியைத் தன்னால் முடிந்த அளவு கவியாக்கிய உன் அடியார் கவிஞர் ம.மு. மைதீனின் குற்றம், குறை, பாவங்களை மன்னித்து அருள்வாயாக! அவருக்கு மண்ணறை வாழ்வினை மலர்ச்சியாக்கி அருள்வாயாக! மறுமையில் அவர் எழுப்பப்படும் நாளில் நாயகப் பேரொளி பரவி இருக்கும் இடத்தில் அவருக்கும் நீ இடம் கொடுத்தருள்வாயாக! ஆமீன்!.
No comments:
Post a Comment