இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை...
இந்தப் பாடல் வரிகளை ஆக்கித் தந்த கிளியனூர் கவிஞர் அப்துஸ் ஸலாம். இப்படி ஒரு பல்லவியில் கவிதை எழுதி இருக்கிறார்.
“பயணத்தில் பிறந்தாய் – நீ
பயணப் படுகிறாய்!”
இதுதான் அந்த பல்லவி. அதாவது, முஸ்லிம்களின் ஆண்டுப் பிறப்பான ஹிஜ்ரியைப் பற்றிய கவிஞரின் கருத்தோட்டம் இது.
ஹிஜ்ரத்– பயணம். இந்தப் பயணத்தை முன்னிலைப் படுத்தி இஸ்லாமிய ஆண்டு குறிக்கப்படுகிறது.
அண்ணல் பெருமானார் வாழ்வில் நடந்த ஒரு பயணத்தை நினைவுப் படுத்தி ஆண்டு கணிக்கப் பட்டிருக்கிறது.
பொதுவாக நினைவுபடுத்துவது என்பது, விழாவாக மலரும்பொழுது இரு நிகழ்வுகள் அடிப்படைக் காரணமாக இருக்கும். ஒன்று, அந்த இயக்கத்தின் தலைவர் பிறந்த நாள் அல்லது மறைந்த நாள். இதிலிருந்து தான் காலம் குறிக்கப் படும்.
கி.மு, கி.பி என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின் என்று ஒரு பிறப்பில் இருந்து கணிக்கப் படுகிறது. இதுமாதிரிதான் ஏனையவைகளும்.
ஆனால், இஸ்லாம் பெருமானாரின் பிறப்பை நினைவு படுத்தியோ அவர்களின் மறைவை உணர்த்தியோ தன் ஆண்டுப் பிறப்பை அமைத்துக் கொள்ளவில்லை.
ஒரு பயணத்தை முன்னிலைப் படுத்தி இஸ்லாமிய ஆண்டு பிறந்து விட்டது.
பெருமானார் வாழ்வில் பயணங்கள் பல தருணங்களில் நிகழ்ந்திருக்கின்றன.
நபித்துவம் அண்ணலாரை வந்தடையுமுன் வணிகப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார்கள். பிள்ளைப் பருவத்திலும், பெரிய தந்தையார், சிறிய தந்தையாருடன் பயணம் செய்திருக்கிறார்கள்.
நபித்துவம் வந்ததற்குப் பின்னால், பெருமானார் செய்த பயணங்களை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
தூதுத்துவத்தை சுமந்து கொண்டு அண்ணலார் புறப்பட்ட முதல் பயணம் தாயிபு பயணம். மக்கத்தை அடுத்து சற்று தொலைவில் உள்ள தாயிப் நகருக்கு அண்ணலார் தூது செய்தி தூக்கி சென்ற பொழுது, அவமானப் படுத்தப் பட்டார்கள்.
ஏளன மொழிகளால் அர்ச்சிக்கப் பட்டார்கள். இளம்பிள்ளைகளால் கல்லெறிந்து தாக்கப் பட்டார்கள். பெரியவர்கள் என்ற பெயருக்கு உறியவர்களால் பெருந்தன்மையற்ற நிலையில் அண்ணலார் நையாண்டிச் செய்து அனுப்பப் பட்டார்கள்.
நபிகளார் ரத்தம் சிந்தி நிலை குலைந்து வேதனைப் பட்டார்கள். அண்ணலாரின் முதல் பயணம் தாயிப் பயணம். இந்தப் பயணம் வெளிப்படையாக பார்க்கும் பொழுது தோல்விப் பயணம்.
அண்ணலார் பட்ட வேதனைக் கண்டு, அந்த வேதனையை வழங்கிய ஊர்க்காரர்களை நசுக்கிக் கொல்ல வானவர்கள் அண்ணலாரிடம் அனுமதி கேட்டப் பொழுது,
“நான் மக்களுக்கு இறைச் செய்தி சொல்ல வந்தவன். அவர்களை அழிக்கும் அனுமதி எனக்கு இல்லை. இன்றைய தாயிபு வாசிகள் என்னை வருத்தி இருக்கிறார்கள். இவர்கள் சந்ததியர்கள் இஸ்லாத்திற்குள் வர இறைவன் வாய்ப்புத் தருவான் அல்லவா?” என்ற தொணியில் அண்ணலார் அருளுரை இருந்தது.
இந்த நிதர்சன உண்மை நிகழ்ந்தது. இந்த அடிப்படையில் முதல் பயணம் மகத்தான வெற்றிப் பயணம்.
அடுத்தொரு பயணம். ஒரு இரவு அண்ணலார், அழைத்துச் செல்லப் பட்டு இறைச் சந்திப்பு நிகழ இறையருள் கனிந்த பயணம். மிஃராஜ் பயணம்.
இந்தப் பயணம்தான் இஸ்லாமிய வணக்க வழிபாட்டு முறைகளைத் தாங்கி வந்த பயணம். மனித உருவில் இறைச் சந்திப்பு நிகழ்ந்த அருட்பயணம்.
மனித உருவில் இருந்தபடியே நபிகளார் இறைச் சந்திப்பை உணர்ந்தறிந்த உன்னதப் பயணம். இஸ்லாமிய வரலாறு இப்படி ஒரு பயணத்தை மிஃராஜுக்கு முன்னும் பின்னும் சந்தித்ததில்லை.
மூன்றாவது பயணம் தன்னை வெட்டிச் சாய்க்கத் தயாராக நின்ற எதிரிகளின் கண்ணுக்குத் தென்படாமல் தலை மறைவாகி மக்கத்தை விட்டு மதீனத்தை நோக்கிப் புறப்பட்ட பயணம்.
முதல் சந்திப்பு, பெருமானாரின் முதல் பயணம் என்ற அடிப்படையிலே ஹிஜ்ரி என்ற ஆண்டுக் கணக்கு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இரண்டாவது பயணம் மிஃராஜ் மனித வாழ்வில் எவருக்குமே நிகழ்ந்தறியாத புனிதப் பயணம். அந்தப் பயணம் ஹிஜ்ரி ஆண்டாக தொடங்கப் படுவதற்கு அத்தனை பாக்கியங்களும் நிறைந்த பயணம். ஆனாலும் அதுவும் கணிக்கப் படவில்லை.
மூன்றாவது பயணம் அடுத்தவர் அறியாமல் தலைமறைவாக யாருக்கும் தெரியாமல் யத்ரீபை நோக்கி நடந்த ஒரு பயணம். அதாவது, தலைமறைவாக ஒளிந்து வந்த பயணம். மதீனத்தில் இருந்து, மக்கத்தை நோக்கி நான்காவது ஒரு பயணம் அண்ணலாருக்கு நிகழ்ந்தது. அதுவும் தாயிபு போல் அல்லாது போனாலும் தன் தாய் பூமிக்கு தடைகளால் நிறைவேறிய உம்ரா பயணம்.
மீண்டும் ஒரு பயணம். இஸ்லாமியத்தின் ஆட்சி அதிகாரத்தோடு வெற்றி வீரராக மதீனத்திலிருந்து தான் பிறந்த மக்காவை நோக்கிப் புறப்பட்ட பயணம். முழு வெற்றிப் பயணம்.
மக்கமாநகரிலிருந்து, தலைமறைவாகி மதீனத்திற்கு வந்து மீண்டும் மக்கத்தை வெற்றி அடைந்த மாவீரராக நிகழ்த்திய பயணம்.
இத்தனை பயணங்களிலும் அண்ணலார் மக்காவிலிருந்து தலைமறைவாகி மதீனத்திற்கு வந்த பயணத்தை இஸ்லாமிய ஆண்டுத்துவக்கமாக இஸ்லாம் கணித்துக் கொண்டது.
மக்கவாசிகளின் அறியாமையிலிருந்து ஒரு ஞான வெளிச்சம் மதீனத்திற்குள் தலைமறைவாகி சென்றது. அந்த ஞான வெளிச்சம் உலக வரம்பிற்கே பிரகாசத்தை பின்னர் விளைவித்தது.
தாயிப் தொடக்கப் பயணம். மிஃராஜ் மார்க்கப் பயணம். மக்கமிருந்து மதீனம் நோக்கி வந்தப் பயணம் உலக அளவில் ஆட்சி அதிகாரத்தை தனக்குள் மறைத்துக் கொண்டிருந்த பயணம்.
தாயிபு ஒரு நபிக்குத் தேவையான பொறுமையை வெளிப்படுத்திய பயணம்.
மிஃராஜ் ஞானத்திற்கு முடிசூட்டு விழா பயணம்.
மதீனம் நோக்கிய தலைமறைவு பயணம் உலக அளவின் வரம்பை வெற்றிக் கொள்ள நிகழ்த்தப் பட்ட பயணம். அதனால்தான் இந்தப் பயணத்தை ஆண்டுத் துவக்கமாக இஸ்லாம் அங்கீகரித்துக் கொண்டது.
ஒவ்வொரு பயணத்திலும், இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது. புதுப்பிக்கப் படுகிறது. ஆண்டுப் பிறப்பிற்கு இதுதானே சரியான அடையாளம்.
No comments:
Post a Comment