Sunday, November 17, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–26

இறுமாந்தக் கவிஞன் - கவிஞர் திலகம்!!!



முப்பதைந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு, கூத்தானல்லூரில் ஒரு தெரு (பெயர் நினைவுக்கு வர மறுக்கிறது) அடி பைப்பில் தண்ணீர் அடித்து, ஒரு மனிதர் தெருவில் குளித்து கொண்டிருந்தார். நான் பார்க்க ஆசைப்பட்ட அந்த மனிதர்தான் அவர் என்று எனக்கு அப்போது தெரியாது. ஆனால் அவரைத் தேடித்தான் அந்தத் தெருவிற்குள் நுழைந்தேன்.

அந்த மகத்தான கவிஞன் பெயரைச் சொல்லித் தெருவில் இருந்த ஒருவரிடம் அவர் இல்லத்தின் அடையாளம் கேட்டேன். அந்த மனிதர் அந்தக் குளியல்காரரைச் சுட்டிக் காட்டி அவர்தான் என்றார். நான் பிரமித்துவிட்டேன்.

என்னுடைய ஒன்பது, பத்து வயதில் சென்னையில் அந்தக் கவிஞரை ஏற்கனவே நான் பார்த்து இருக்கிறேன். எங்கள் தந்தையாரின் தோழர் அவர். அந்த வயதில் இவர் ஒரு மகத்தான கவிஞர் என்றெல்லாம் எனக்குத் தெரியாது.

நான் தமிழ்ப் படித்த, அதாவது கவிதை ரசித்த வாலிபப் பருவத்தில் அவரைத் தேடிக் கூத்தானல்லூர் சென்ற போதுதான் அந்தக் கவிஞரைக் குளியல் கோலத்தில் வீதியில் சந்தித்தேன்.

அப்போது சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் படித்துக் கொண்டிருந்தேன்.

அந்த மனிதர்தான் கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார்.

கவிஞர் திலகம் அவர்கள் ஓர் இறுமாந்த உணர்வுக்காரர். ஏற்றுக் கொண்ட கருத்தை எவருக்கும் பணியாமல் எங்கேயும் எப்போதும் எடுத்து வைப்பதில் அச்சமற்ற ஆற்றலாளர்.

தாருல் குர்ஆன் மாத இதழின் ஆசிரியர் தாவூத் ஷா, அஹமதிய்யா இயக்கத்தின் போர்வாள். தமிழ்ப் புலமையில் அவருக்கு நிகராக எவரையும் ஏற்றுக் கொள்ளாதவர். ஆங்கிலத்திலும் நிபுணர். அரபியிலும் வல்லவர். தாருல் குர்ஆனில் ஒரு விளம்பரம் எப்பொழுதும் நிலைத்து இருக்கும்.

அந்த இதழில் ஒரு எழுத்துப் பிழையை யாராவது சுட்டிக் காட்டினால் சன்மானம் உண்டு என்ற விளம்பரம்தான் அது. அனைவருமே கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிப் பிழைகளைத் தேடுவார்கள். எவர் கண்ணிலும் பிழைகள் தென்படவில்லை.

கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார், தாருல் குர்ஆனில் ஒரு எழுத்துப் பிழையைக் கண்டுபிடித்து தாவூத் ஷாவிற்குத் தெரியப் படுத்தினார். விளம்பரத்தில் குறிப்பிட்டபடி சன்மானம் வந்து சேர்ந்தது. அதாவது தாவூத் ஷா சாரண பாஸ்கரனாரிடம் தோற்று விட்டார்.

கவிஞர்கள் மத்தியில் அகம்பாவமும், ஆணவமும் நிறைந்த இறுக்கமான பேர்வழி என்று இவரைப் பற்றி ஒரு கருத்து நிலவிக் கொண்டே இருக்கும்.

கவிஞர் எழுதிய யூசுப் சுலைஹா காவியம். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ஒப்பற்ற காவியங்களில் இதுவும் ஒன்று. கவிஞரின் இயற்பெயர் அஹமது. கவிஞர் திலகம் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் கவிதா மண்டலத்தில் பாரதிதாசன் கொடிக் கட்டிப் பறந்து கொண்டிருந்தார்.

இந்தக் காலத்தில் தமிழில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகள் அனைத்தும் பாரதிதாசனின் வாழ்த்துக் கவிதையைக் கேட்டு அவர் இல்லத்தில் வரிசையில் நின்ற நிலைமை இருந்தது.

சாரண பாஸ்கரனார் பாரதிதாசனின் சமகால நண்பர்.

கவிஞர் திலகத்தின் யூசுப் சுலைஹா வெளிவரத் தயாராகிக் கொண்டிருந்த காலத்தில் பாவேந்தர் பாரதிதாசன் கவிஞர் திலகத்திடம் வலிய வந்து என்னிடம் வாழ்த்துப்பா வாங்காமல் பெரும்பாலும் கவிதைத் தொகுப்புகள் வெளிவராது. ஆனால் நீங்கள் என்னிடம் யூசுப் சுலைஹா காவியத்திற்கு வாழ்த்துக் கவிதை கேட்கவில்லை. பரவாயில்லை. நானே எழுதித் தருகிறேன்என்று பாவேந்தர் பாரதிதாசன் கேட்டுக் கொண்டார்.

சாரண பாஸ்கரனாரின் பதில் நேர்மையாக இருந்தது. ஆனால் அந்தத் தொனி முரட்டுத்தனமாக அடாவடித்தனமாக இருந்தது. இதுதான் கவிஞர் திலகத்தின் அணுகுமுறை.

யூசுப் சுலைஹா திருக்குர்ஆனில் வரும் ஒரு அழகிய சரிதை. இறைத்தூதர் ஒருவரின் வாழ்க்கைப் படிப்பினை, அதனை நான் என் தமிழில் பதிவு செய்து இருக்கிறேன். அதற்கு வாழ்த்துரை வழங்க பாவேந்தர் என்ற அடைமொழிக்கு உரிய உங்களுக்கு அருகதை இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியவில்லை. நீங்கள் எல்லாக் காலங்களிலும் மதுபோதையில் ரசிக்கக் கூடியவர்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் ஒரு நபி வரலாற்றுக் காவியத்திற்கு ஒரு குடி போதைக்காரரிடம் வாழ்த்துரை நான் வாங்க மாட்டேன்என்று சாரண பாஸ்கரன், பாவேந்தர் பாரதிதாசனிடம் பதில் சொல்லி வாழ்த்துக் கவிதை தேவை இல்லை என்று சொல்லிவிட்டார்.

கவிஞர் திலகத்தின் கோட்பாடு இப்படித்தான் தெளிவாகவும் இருக்கும், ‘நம்ம பாஷையில்சொன்னால் முரட்டுத்தனமாகவும் இருக்கும். 

கவிஞர் திலகம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் ஆழமான பற்றுக் கொண்டவர். நாகைத் தொகுதியில் நாடாளுமன்ற முஸ்லிம் லீக் வேட்பாளராக 1962 இல் நின்றார். ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தார். 

ஒரு காலகட்டத்தில் முஸ்லிம் லீகிற்குள் கருத்துமுரண் தோன்ற ஆரம்பித்தது. திருச்சி நாவலர் A.M. யூசுப் சாஹிப் தலைமையில் ஒரு பிரிவு முஸ்லிம் லீகை விட்டு வெளியேறியது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் உதயமானது. 

அதில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளராக இருந்த கீழக்கரை தையன்னா.ஆனா, லெப்பைகுடிக் காடு ஜமாலி சாஹிப், கவிஞர் திலகம் சாரண பாஸ்கரனார், முஸ்லிம் லீகின் சென்னை மாநகராட்சி மேயராகவும் அடுத்து துறைமுகத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த டாக்டர் ஹபீபுல்லாஹ் பேக், கோட்டாறு செய்குத்தம்பி பாவலரின் பேரன் முழக்கம் மாத இதழின் ஆசிரியர் செய்குத்தம்பி. இன்றைய இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் போன்றவர்கள் இருந்தனர்.

ஏழெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழ் நாடு முஸ்லிம் லீக் கலைக்கப் பட்டு மீண்டும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகில் நாவலர் யூசுப் சாஹிப் தலைமையில் இணைந்தார்கள். இந்த இணைப்புக் காலத்தில் பிரிந்து போனவர்களில் சிலர் காலமாகி இருந்தனர்.

சென்னை மண்ணடியில் கவிஞர் மூஸா ஒரு மாடி அறையில் தங்கி இருந்தார். அங்கு வந்துதான் பிந்தைய காலங்களில் கவிஞர் திலகம் தங்குவார்.

புஷ்கோட் என்று சொல்லக்கூடிய சட்டை அணிந்திருப்பார். வெள்ளைக் கைலிக் கட்டி இருப்பார். ஒரு கையில் கர்சீப், மறுகையில் சிகரெட் பாக்கெட் தீப்பெட்டி. கலகலப்பான சிரிப்பு. எவருக்கும் அஞ்சாத நெஞ்சு நிமிர்ந்த நடை. இந்தத் தோற்றம்தான் கவிஞர் திலகத்தை நினைக்கும்பொழுது நெஞ்சில் நிழலாடுகிறது.

கவிஞர் தா. காசிமின் சரவிளக்கு மாத இதழிலில் யூசுப் சுலைஹா ஒரு விமர்சனம் என ஒரு ஆய்வுத் தொடர் எழுபது பகக்ங்களுக்கு மேல் எழுதி அதைக் கவிஞர் தா.காசிமிடம் கொடுத்துவிட்டேன்.

சரவிளக்கு இதழிலில் இது பற்றி விளம்பரம் வந்துவிட்டது.

சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் அலுவலகத்தில், கவிஞர் காசிம், M.A. அக்பர் அண்ணன், கவிஞர் நாகூர் இஜட். ஜபருல்லா, நான் முதலானோர் அமர்ந்திருந்தோம்.

அப்பொழுது தலைவர் சமது சாஹிப் என்னிடம் சொன்னார்கள்.

சரவிளக்கில், யூசுப் சுலைஹாவை நீங்கள் விமர்சிப்பதாக விளம்பரம் வந்திருக்கிறது. நன்றாக யோசித்துக் கொள்ளுங்கள். சாரண பாஸ்கரனார் கொடூரமான முரட்டுக் கவிஞர். அவரை விமர்சித்தால் அவருடைய பதில் உங்களை நிலைக் குலைய செய்துவிடும். தாட்சண்யம் இல்லாமல் தாக்கக் கூடியவர். அவர் தாக்குதலில் நானே பலமுறை தடுமாறி இருக்கிறேன்.

நான் அதுபற்றி கவலைப் படவில்லை. எழுதி விட்டேன். கவிஞரிடம் கொடுத்து விட்டேன். கவிஞர் தா.காவும் தயக்கமோ அச்சமோ கொண்டவர் அல்லர். அதை வெளியிட்டு விடுவார்.என்று பதில் சொல்லிவிட்டேன்.

சரவிளக்கில் தொடர்ந்து சுமார் ஒன்பது மாத காலம் வந்தது. 

இடைப்பட்ட காலத்தில் மரைக்காயர் லெப்பை தெரு முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு கவிஞர் திலகம் வந்தார். நான் அங்குதான் தங்கி இருந்தேன்.

டேய் படுவா, என்னையே விமர்சிக்க ஆரம்பிச்சிட்டியா? தொடர் முடியட்டும் நான் பதில் தருகிறேன்என்று கூறி என்னைத் தழுவிக் கொண்டார்.

நான் பார்த்து வளர்ந்த பையன் பேனா புடிச்சிட்ட. சபாஷ்என்று மேலும் சொன்னார்.

அந்த விமர்சன ஆய்வில் கவிஞர் திலகத்தைப் பல இடங்களில் கடுமையாக விமர்சித்து இருந்தேன். விமர்சனத் தொடர் முடிந்தது. சரவிளக்குக்கு நீண்ட பதில் எழுதி கவிஞர் திலகம் சென்னைக்குக் கொண்டு வந்திருந்தார்.

மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள தலைவர் சமது சாஹிபின் அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு, எனக்கும் கவிஞர் காசிமிற்கும் அங்கு வர அழைப்பு அனுப்பினார். நாங்கள் அங்கு வந்து சேர்ந்தோம்.

சமது சாஹிபிடம் கவிஞர் திலகம் இப்படிச் சொன்னார்.

சமதுபாய்! நம்ம செல்லப் பிள்ளை எழுதிய இந்த விமர்சனம் என்னைத் திகைக்க வைத்தது. யூசுப் சுலைஹா வெளிவந்து இருபத்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றைக்கு இந்தப் பிள்ளை அதை விமர்சித்து இருக்கிறான். அந்த விமர்சனத்தில் பல குறைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறான். இத்தனை ஆண்டுகளாக நம் அனைவரின் கண்களுக்கும் மறைந்திருந்த சில குறைகளை இறைவன் இவன் மூலம் நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறான். இந்தக் கட்டுரையில் கூறப்பட்ட பல குறைகளுக்கு நான் மறுப்பும் எழுதிக் கொண்டு வந்து இருக்கிறேன்.

சமதுபாய்! எனக்கு ஒரு ஆசை. இந்தப் பிள்ளைக்கு அரண்மனைக்காரர் தெருவில் உள்ள கோகலே மண்டபத்தில் பொற்கிழி கொடுத்து பொன்னாடை போர்த்தி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆசை. ஆனால் இன்றையப் பொருளாதாரம் எனக்கு இடம் தரவில்லைஎன்று கூறி என்னை அணைத்துக் கொண்டு முஸாபா செய்தார்.

கவிஞர் திலகம் எழுதிக் கொண்டு வந்த பதில் கட்டுரை சரவிளக்கில் வெளியானது.

தலைவர் சமது சாஹிப் அப்போது என்னிடம் சொன்னார்கள்.

தம்பி! சாரண பாஸ்கரனாரின் தாக்குதலுக்குத் தப்பி உள்ள ஒருவர் எனக்குத் தெரிந்து நீங்கள்தான். நான் உங்கள் விமர்சனத்தையும் படித்தேன். கவிஞர் திலகத்தின் பதிலையும் படித்தேன். இரண்டையுமே ஒரு சிறு நூலாகத் தொகுத்து வெளியிடுங்கள்.என்றார்கள். ஆனால் இது நடக்கவில்லை.

சென்னைப் புதுக்கல்லூரி பேராசிரியர் ஓ.ஏ.காஜா மைதீன், M.Lit ஆய்விற்கு யூசுப் சுலைஹாவைத் தேர்வு செய்து இருந்தார். அதற்காகச் சரவிளக்கில் வந்த என் விமர்சனத் தொடரை வாங்கிச் சென்றார்.

இன்றுவரை அது என்னிடம் திரும்பவில்லை. மாயவரத்தில் நீடூர் செய்யது சாஹிப் மூலம், சகோதர சமுதாய பேராசிரியர் ஒருவர். (அவர் பெயர் நினைவில் இல்லை). யூசுப் சுலைஹாவைத் தம் பட்டத்திற்கு ஆய்வுக்கு எடுத்திருந்தார்.

அந்த ஆய்வேட்டில் என்னுடைய சரவிளக்கு விமர்சனத் தொகுப்பில் இருந்து மேற்கோள்கள் காட்டி இருந்தார்.

என் விமர்சனத்தில் யூசுப் சுலைஹா சாரண பாஸ்கரனாரின் முற்றுப் பெறாத காவியம் என்று கூறி இருந்தேன். அது முற்றுப் பெற வேண்டுமானால் இன்னும் சற்று காவியம் விரிவுப் பெற்றாக வேண்டும் என்று விமர்சித்து இருந்தேன்.

இருபத்தேழு ஆண்டுகளில் பல பதிப்புகளாக வெளிவந்த யூசுப் சுலைஹா மீண்டும் பதிப்பிக்கப் பட்டது. கவிஞர் திலகம் யூசுப் சுலைஹாவை விரிவு படுத்தி இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னால் கவிதைகள் எழுதி முழுமைப் பெற்ற காவியமாக்கி வெளியிட்டார். 

அந்த இறுதி வெளியீட்டின் முன்னுரையில் இந்தச் சின்னவனின் பெயரையும் குறிப்பிட்டு முழுமைப் படுத்த இவனும் காரணமாக இருந்தான் என்று சொல்லி அந்த மகத்தான கவிஞர் நன்றி தெரிவித்து இருக்கிறார்.

இறைவனுக்கே புகழ் அனைத்தும்!

படம்: நன்றி - nagoori.wordpress.com

No comments:

Post a Comment