Friday, July 31, 2015

"சௌந்தர்யம்"



அநேகமாக 1995--ஆம் ஆண்டாக இருக்கலாம். சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச்சில் பாதர் கருணாகரன் (இதுதான் பெயர் என நல்ல நினைவுதான்) நட்பு, நண்பர் சினல் வழியே எனக்கு கிடைத்தது.

அந்த சர்சில் ஒரு வானொலி நிலையம் இயக்கப்பட்டது.அதன் பொறுப்பாளர பாதர் கருணாகரன்தான். இந்த வானொலில் எனக்கு ஒருமுறை சிலப்பதிகாரம் பற்றி ஒரு மணி நேரம் பேச வாய்ப்பும் தந்தார். பேசினேன்.

பாதர் கருணாகரனிடம் நண்பர் சினலும் நானும் ஒரு சமயம் பேசிக் கொண்டிருக்கும் போது, பைபிள் பற்றிப் பேச்சு நடமாடியது. பைபிளில் வரும் மக்தலேனா ஒன்றுக்கு மேற்பட்டவர். மேலும் மரியாள் மக்தலேனா என்பவர் வேறொருவர் என்ற செய்தியை பாதர் சொன்னார்.

நான் அப்படியிருக்க வாய்ப்பில்லை என மறுத்தேன். வேசியாக வரும் மக்கலேனாதான் மீண்டும் மீண்டும் வருகிறாள் என்றேன்.
கல்லடி பட்ட வேசியும் அவளே. ஏசுநாதருக்குத் தன்வீட்டில் விருந்து படைத்ததும் அவளே. தன் தம்பி, மரணித்ததும் அவனைக் கல்லறையில் புதைத்த பின்னர் மீண்டும் உயிர்ப்பிக்க ஏசுநாதரை நாடிசென்று சாதித்து வந்தவளும் அவளே. இறுதியில் ஏசுநாதர் கல்லறையில் இருந்து மூன்றாம் நாள் விண்ணுலகம் சென்ற காட்சியைத் தரிசித்தவளும் அவளே என நான் வாதிட்டேன்.

பாதருக்கு இது பிடித்திருந்தது. அவர் என்னிடம் சொன்னார், "ஹிலால்! நீங்கள் புதுக் கவிதை நடையில் காட்சிகளாக அமைத்து நாடக பாணியில் எழுதுங்கள். அதனை சினலுக்கும் உங்களுக்கும் அறிமுகமுள்ள நடிகையர் லஷ்சுமியிடம் கால் ஷீட் வாங்கி நடிக்கச் செய்து, வீடியோ ஆக்கி நாங்கள் வெளியிடுகிறோம்" எனறார்.

நானும் அதைப் புனைபெயரில் எழுதினேன். முயற்சி நடந்தது. லஷ்சுமி கணவர் சிவச்சந்திரன் விரும்பாததால் நிறைவேறவில்லை.

அந்த எழுத்துக் காப்பி அப்படியே பழைய கத்தையாகித் தேங்கி விட்டது.

மீண்டும் ஒருநாள் 2003-- ஆம் ஆண்டு கைக்குக் கிடைத்தது. அதனை
என் பெயரைப் புனைபெயராக்கிச் சிலநண்பர்கள் "சௌந்தர்யம்" என்ற பெயரில் நூலாக வெளியிட்டனர்.

அதனை இங்குத் தொடர்கிறேன்.

முதலில், "சௌந்தர்யம்" நூலுக்கு என் இனிய கெழுதகை நண்பர், நாகர் கோயில் பயோனியர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்து
ஓய்வு பெற்ற டாக்டர் மு. ஆல்பென்சு நதானியல், ஒரு அறிமுகவுரை
வழங்கி யிருந்தார். அதனை இப்போது இங்கே பதிவிடுகிறேன். அடுத்துத் தெடர்கிறேன்.

---அறிமுகவுரை---

ஒரே ஒரு நொடிப்பொழுது. ..
    ---பேராசிரியர. டாக்டர்.மு. ஆல்பென்சு நதானியேல்---

ஏசு பிரான்--இந்த வார்த்தையில் ஓர் மந்திரச் சக்திக் கலந்திருக்கிறது.

அன்பு, பாசம்,அர்ப்பணிப்பு என்பதற்கு மாற்றுப் பெயர் குறிக்க ஆசைப்பட்டால் அந்தப் பெயர் ஏசு என்னும் உச்சரிப்புக்குள் ஒளிந்து கிடப்பதைப் புரிய முடியும்.

வேதாகமத்தில் மூன்று மக்தலேனாகள் பற்றிவரும் குறிப்புகளை ஒரே நேர் கோட்டிறகுள் நிறுத்தி உலகுக்குப் பெண்ணிய வாதத்தின் வெற்றி முழக்கத்தை இந்தச் "சௌந்தரியம்" நிகழ்த்தி இருக்கிறது என்ற விமர்சனம் மட்டுமே இந்நூல் பற்றிய மதிப்பீடு.

வேசை என்ற வார்த்தையில் இருக்கும்கொடூரம் வலிமிகுந்தது. உடம்பை மட்டுமே பார்க்கத் தெரிந்த கண்களுக்கு தண்டிக்க மட்டுமே தெரியும். ஜீவனைத் தரிசிக்கச் தெரிந்த நெஞ்சத்துக்கு மன்னிக்கும் தகுதி இருக்கும். இந்தச் செய்தி ஏசு நினைவாக இந்தச் நூலில் தரப்பட்டிருக்கிறது.

இந்தச் வசனங்களைப் பைபிளில் தேட முடியமோ என்னவோ. .?

ஆனால் ஏசு இப்படிப் பேசியிருப்பார் என்று நம்புவதில் தவறு எங்கும்
இருப்பதாக நான் ஒரு போதும் நினைக்கவே மாட்டேன்.

தொடக்கத்தில் பேரழகி மக்தலேனா நம் முன் அதிகாரத்துடன் அறிமுகம் ஆகிறாள்.

அடுத்த மக்தலேனா அழுத்தமான நிலையில் தண்டனைக்கு அச்சமின்றி தலைநிமிர்ந்து எழுந்து நிற்கிறாள்.

கல்லெறி தரமுடியாத துடிப்பை, கண்ணீரை ஏசுவின் கனிந்த உரை அவளிடம் கொட்ட வைத்து விட்டது. அதில் மாசுகள் கரைந்து போய் விட்டன.

மன்னிப்புக்கும் தண்டனைக்கும் உரிய அடையாளத்தை மக்தலேனா வழியே ஏசு உலகுக்கு அறிவிக்கிறார்.

மக்தலேனா பாசத்தால் ஒரு பழுவைப்போல் மாறுகிறாள். அப்போது
ஏசுவின் செயல் அவளை நிமிர்த்துகிறது.

ஏசு என்ற புனிதம், புனிதம் அடைந்த கோலத்தை காணக்கிடைத்த
வழிகளுக்கு மக்தலேனா மட்டுமே முதல் உரிமை கொண்டாடுகிறாள்.

ஒரு மானுடப் பெண் பிறப்பு எப்படி எப்படி சமூக நிர்பந்தத்தால் உழல்கிறது? கருணை நிழலில் எப்படித் தகுதி பெறுகிறது?  இதைத் தோழர் நூலாசிரியர் ஓர் அற்புத நடையில் அடையாளம் காட்டியுள்ளார்.

நூலாசிரியர் என் இனிய நண்பர். மனிதர். அவருக்குள் ஓர் அன்புப் பிரளயம் உண்டு. இந்த நூல் அதில் துளி. இன்னும் பிரமாண்டத்தை நானும் நாமும் எதிர் பார்ப்போம்.

எதிர் பார்ப்பை இறைக் கருணை நிறைவு செய்யும். இதுதான் ஏசு போதனை.

ஏசு பிரான், நூலாசிரியர் வழியே இப்படி அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

என் கருத்து திருப்தி. உங்கள் கருத்து எப்படி?

விமர்சனங்களால் எப்போதும் தன்னிலை தவறாத நூலாசிரியர் அதற்கு மீண்டும் தயாராகிக் கொள்ளட்டும்.

நான் விளக்கம் கூற ஆசைப்படவில்லை. இதை விளங்கிக் கொள்வார்கள் எப்படி அடையாளப் படுகிறார்கள்? என்பதை நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

மு.ஆல்பென்சு நதானியேல்.

No comments:

Post a Comment