Thursday, July 23, 2015

7. மரண அடையாளம்...!



ஏ! இறைவா...!

நீ ஒரு
மனுசப் பிரசவத்தைச்
சொர்க்கத்தில்
நடத்தி முடித்தாய். ..!

அவரின்
ஜோடியை
அவரிலிருந்து எடுத்துக்
கொடுத்தாய்...!

பின்னர்...

புணர்ச்சி நடவடிக்கைப்
புலப்படாத நிலையில்
ஒரு
மனித ஜனனத்தை
மண்மேனியில் நிகழ்த்தி
முடிவில்
உயிரிருப்போடே
உன்னளவில்
உயர்த்திக் கொண்டாய்...!

சுவன மஞ்சத்தில்
இந்தப்
புவனப்
பாலுறவுக்கு மட்டும்
ஒரு தடைவிதிப்போ...?

ஆதத்தின்
இச்சை உணர்ச்சிச்
சுவனப் பதியின்
நாடு கடத்தல்...!

ஈஸாவின்
சுவனப் பிரவேசம்
சன்னியாசத்துடனேயே
சம்மதிக்கப்பட்டது...!

சொர்க்கத்தின்
நிரந்தரமே...!

உங்கள் தோற்றம்
மானுட மூளைக்கு
அல்லாஹ் அனுப்பிய
அறைகூவல்...!

ஆண் தொடுதல்கள்
அனுமதிக்கப்படாமலே
பெண் கருவறையில்
கர்ப்பச் சமிக்கினையா...?

ஆம் அது...
ஏகத்துவ உண்மைக்கு
இன்றுவரை
உள்ள அத்தாட்சி...!

இந்த
அல்லாஹ்வின் மந்தைகள்
அடிக்கடி
திருடு போனதால்
மேய்ப்பர் உத்தியோகம்
உங்களுக்கு
அனுமதியானது...!

இந்த ஆடுகளுக்கு
அக்கரைப்
பச்சையில்தான்
அதிக அக்கறை...!

உங்கள்
விரட்டுக் கோல்களால்
நாங்கள்
ஒழுங்குபட மறுத்து
மந்தையை விட்டே
வெருண்டு ஓடினோம்...!

நாங்கள்
காவலில் வாழ்வதைவிட
ஒரு
கயவாளி வாயில்
தீனிகள் ஆகவே
தயாராக இருந்தோம்...!

இந்த மந்தைகள்
புற்களுக்குப் பதிலாகப்
பூக் கொடிகளையே
சேதப் படுத்தின...!

கண்டிப்புக் கயிறுகள்
கழுத்தை இறுக்குகையில்
அதைத்
துண்டித்து விடவே
நாங்கள்
துரிதமானோம்...!

எனவே
அணுகுமுறையிலே
ஒரு மாறுதல்...!

அற்புதத் தொழுவத்தில்
அடைக்க முனைந்தீர்கள்...!

உங்கள்
விரல்களைக் கொண்டே
வியாதிகளுக்கு
விடையளிப்புச்
செய்தீர்கள்...!

உங்கள்
விழிப் பார்வையிலே
ஊமை நாவுகள்
வீணை நரம்புகளாக
ராகம் இசைத்தன...!

உங்கள்
பேச்சு மொழிகளோ
பேயாட்டத்தின்
கல்லறைக் கற்கள்...!

ஏன்...?

உங்கள்
அங்கிகளைத் தொட்டே
ஊனக் கால்கள்
உயர நிமிர்ந்து
ஓடிப் பார்த்தன...!

ஆனாலும்
இந்த ஆடுகள்
கள்ளப்பட்டுப் போனதால்
அகப்படவில்லை...!

லோகாயுதத்தின்
தாகத் தணிப்புகளைத்
தவிர்த்து விடுதலா
சன்னியாசம்...?

இல்லை...!

உங்கள் சன்னியாசம்
ஒரு
உலகப் புதுமை...!

அமைப்பு ரீதியில்
பிரச்சரப் படுகையில்
சன்னியாசத்தனம்
தலைமையின் தத்துவம்...!

ஆம்...!

உலகப் பற்றே
உங்களின்
சன்னியாசம்...!

இதோ... ஓர் உதாரணம்...!

வீதி இதழ்கள்
சந்திக்கின்ற
நாற் சந்தித் தாமரையில்
ஒரு வேசைக்குத்
தீர்ப்பு வழங்கப்பட்டு
ஈடேற்றம் நடக்கிறது...!

கலாச்சார மேனியின்
குஷ்டக் கொப்புளங்கள்தாம்
வேசைத் தனங்கள்...!

சமூகப் பழத்தின்
பூரணமான அழுகல்களே
விபச்சாரம்..!

ஆனாலும்
அதற்குப் பரிகாரம்
அனுதாபப்
பட்டு விரிப்பில்தான்
நடத்தப்பட வேண்டும்...!

சமூகப் பரிகாரமே
சுய விமர்சனம்தான்...!

அங்கே
உங்கள்
ஒலிச் சாட்டைகள்
ஒவ்வொருவரின்
முதுகுப்புறத்தையும்
உறித்து விட்டன...!

"இந்தத்
தீமைத் தாம்பூலம்
தின்னப்படாத வாயே
இவளின் மீது
வார்த்தை ஈட்டிகளைத்
தூவ வேண்டும்...!

இந்த
அழுகல் பதார்த்தத்தைத்
தொட்டறியாத
புனிதக் கரங்களே
இவளின் மீது
கல்வீச்சுகளைக்
கையாளட்டும்...!

இவள்...

அனைத்துத் தரப்பாரும்
அந்தரங்க உறவு வைத்தும்
சொந்தங்களே இல்லாத
அனாதை....!"

இந்தச்
சொல்லுக்குப் பின்னால்
அங்கே...

அந்தச்
சொந்தங்களே இல்லாத
அனாதையும்...
நீங்களும்...
மட்டுமே
எஞ்சி நின்றீர்கள்...!

இதுதான்
உலகப் பற்று
உருவாக்கிய
உங்கள் சன்னியாசம்...!

"எவருடைய
கரக் கோடரி
கன்னக் கிளையினைக்
காயப் படுத்துகிறதோ...
அவருக்கு
அடுத்த கன்னத்தையும்
அதற்காக ஈயுங்கள்"...!

இது
கருணைத் தனத்தை
வெளிச்சம் போடும்
காருண்யமா. ..?

அது மட்டுமில்லை...

தண்டிக்கும் தகுதி
தனக்கிருக்கிறதா...?

எனத்
தகுதிப் படுத்தி
இறைப் புறத்திற்கு
ஏவி விடுதலே...!

தவறுகளுக்காகத்
தண்டிக்கப் படுகையில்
அதனை
அதிகப் படுத்தல்
திருத்தத்திற்கு
ஒரு
தெய்வச் சாட்சியம்...!

எங்களின்
மேய்ப்புக்காரரே...!

வேதக் கரையினில்
ஞானக் குளியலை
நடாத்தி விட்டு
உலரும் முன்பே
பாவ நாணலைப்
பதியம் செய்து
அசுத்தப் படுத்தினோம்...!

வேத மேய்ச்சலை
மேய்ந்த பின்னும்
வெறும்
சாணங்களாகவே
அதைத்
தள்ளி விட்டோம்...!

உங்களின்
வேத வரிகளில்
எங்கள்
போதனைகளையும்
உள்ளே புகுத்தி
இறை வார்த்தைக்கு
இணை வார்த்தை
கண்டோம்...!

உங்கள்
அசல் மொழிகளை
அப்புறப் படுத்தி
நகல் ஓசைகளால்
நாங்களே
வேதப் புத்தகம்
விற்பனை செய்தோம்...!

நீங்கள் சொன்னது...!

"இந்தக்
குருக் கூட்டங்கள்
வெள்ளையடித்த
கல்லறைகள்"...!

ஆம்...
இந்தக்
கல்லறைகளுக் குள்ளே
உங்கள்
வார்த்தை மேனிகளைத்தாம்
புதைத்துக் கொண்டோம்...!

நாங்கள்
உங்கள்
மொழிகளின் கல்லறைகள்...!

இந்தக்
கல்லறைகள்தாம்
உங்களுக்கே
காலக் கெடு
கொடுத்தன...!

வேதம் பின்னிய
வெள்ளை அங்கியை
காசுக்காக்
காட்டிக் கொடுத்தோம்...!

காட்டிக் கொடுத்தவனே
உங்கள்
காட்சியானதால்
சிலுவைப் சுமையில்
சேதாரமானான்...!

விந்துச் சேர்க்கைகள்
விளைவிக்காத
பிறப்பை போலவே
உங்கள்
தலைமறைவு வாழ்வும்
சுவனக்காட்டில்
மறைக்கப் பட்டது...!

உங்கள்
வருகை ஒன்றுதான்
இந்த
மந்தைகளுக்கு
மரண நிரந்தரம்...!

அன்று
குறிதப்பிப்போன
குட்டி ஆடுகளே
இன்று
பூமித் தோட்டமெல்லாம்
அசுத்த வாய்களால்
மேய்கின்றன...!

உங்களின்
எதிர்பார்ப்பு வருகைக்கு
இது ஒரு
அறிவுறுத்தல் தானோ...?

உங்கள் வருகை
இந்த
உலகக் கிழவியின்
மரண
அடையாளமே...!

No comments:

Post a Comment