Sunday, July 19, 2015

4. சாம்பல் தத்துவம்...!

அது ஒரு
விநோதக் கூட்டம்...!

காமத் தளவாடங்கள்
கைமாறிப் போனதால்
குட்டிச் சுவராகவே
குறுகிய கூட்டம்...!

அந்தி சரிகிற
வெள்ளை
நிலா வேளைகளில்...

காற்றுத் தூறலின்
கண்ணியப் பொழுதுகளில்...

ஆண்மைக் கம்பீரம்
பெண்மையின்
மடிச் சரிவினில்
ஆனந்தப் படுதல்
அங்கீகரிக்கப்பட்ட
இயற்கை
அணுகு முறைகள்...!

காமத் திணவுகளுக்கு
அங்க உரசல்கள்
சம்மதமானது...!

சுக வியாபாரியின்
பண்டமாற்று முறைதான்
தாம்பத்தியம்...!

யுகத் தொடர் சசிக்கு
உடல் உறவில்தான்
முகாந்திரங்கள்
கிடைக்கின்றன...!

இந்தத்
தொழில் முறை
ஒப்பந்தங்கள்
மீறப் படுகையில்
சமூக வாழ்க்கையே
காலாவதி ஆகிவிடும்...!

இவைகள்
ஏதோ அசிங்க
நடைமுறைகள் அல்ல...!

ஜீவிதத்தின் மேலான
சரீரத்
தாகத் தணிப்புகள். ..!

இது
அல்லாஹ்வின் கட்டாய
அனுமதி அங்கீகரிப்பு...!

நடப்பு வாழ்விற்கு
தாம்பத்தியமே
அஸ்திவாரம்...!

ஆனால்...இவைகள்...

அனுமதிக்கப்பட்ட
அடைவுகளுக்கு
உட்பட்டே
அனுபவப் படவேண்டும். ..!

தடுமாற்றம் ஏற்படுமானால்
வாரிசு வர்க்கங்கள்
சிதலப்பட்டுச்
சீரழிந்து விடும்...!

இதில்
இன்பத்தின்
வரவு செலவுகள்
மட்டுமே
எண்ணப்படுமானால். ..

வியாதிகளின் இதழ்களுக்கு
நம்மை நாமே
விருந்து
படைத்தலாகும்...!

இதில்
கடினமான வடிவங்கள்
கையாளப் பட்டால்
மன
அடிவாரங்களில்
நமச்சல் பட்டு
புலம்பல் மந்திரமே
ஜெப ஒலியாகிவிடும்...!

தாம்பத்தியமே
கால பரிமாணங்களின்
கட்டாயத் தேவைகள்...!

இந்தப்
பிரசவத் தடங்கள்
மறைக்கப்படும் தினம்தான்
"கியாமத்"என
இறுதி எல்லையாய்க்
கணிக்கப்படுகிறது...!

அருளாளனின்
ஆகப் பெரும்
ஈகைத் தனத்தை
மானிட மூளைகள்
விரசக் கயிற்றால்
விளாசித் தள்ளுகையில். ..

தனியே ஒரு
நபித்துவ வரவை
நாயன் நல்கினான்...!

பால் மாறுபட்ட
மேனி ஒத்தடங்களே
காலத்
தொடர்ச்சிக்குக்
கட்டியம் கூறும்...!

எனினும்
மனித அவலங்கள்
ஒரு
புதிய சேற்றிலே
புதையுண்டு போனது...!

அது ஒரு
விநோதக் கூட்டம்...!

நெருப்பின்
தாக சாந்தி
நெருப்புகளாலா
நிவர்த்தியாகும்...?

நீருக்கு
வெப்பத்தை
நீரருவிகளாலா
நிகழ்த்த முடியும்...?

தாமரை
மொக்குடைப்பை
மற்றொரு
தாமரைப் பூவாலா
சாதிக்க ஏதாகும். ..?

உவர்ப்பு நீரைச்
சுவைப் படுத்த
உப்புக் குவியலா
உதவக் கூடும்...?..

இரவின்
இருண்ட தெருக்களில்
வெளிச்ச
விலாசத்தை
அமாவாசையாலா
எழுத இயலும்...?

இயற்கை நடவடிக்கைகளை
இழுபறி செய்து
ஒரு
செயற்கை யோசனையால்
இதனைச்
செய்ய நினைத்தனர்...!

அது ஒரு
விநோதக் கூட்டம்...!

தாம்பத்தியத்தை
மறுதலிப்பதைக் கூட
மன்னித்து விடலாம்...

னால்
அதற்கு ஒரு
இணைவைப்புத்தான்
வேதனை யானது...!

இந்தச்
சரித்திர நிகழ்ச்சி
மனித பூமியின்
முகத்திலே
நிகழ்த்தப்பட்ட
சாணியடிப்பு...!

இது
இயற்கைக் கனிபோல்
எழுதப்பட்ட-ஒரு
செயற்கைச் சித்திரம்...!

தாயே தன்பாலைத்
தனித்துச் சுவைத்து
வயிறை நிரப்ப
எத்தனிக்கும்
விநோதத் திட்டம்...!

ஆண்மையே
ஆண்மைத் தடவலில்
ஆனந்திக்கும்
அதிசயக் கூட்டம்...!

ஆம்...

அது ஒரு
விநோதக் கூட்டம்...!

யுகாந்திர
முடிவு மட்டும்
இதுபோல் ஒரு
பெண்மை அவமதிப்பை
யாராலும்
நிகழ்த்திட இயலாது...!

தாய்மைத் தனங்கள்
கேலிச் சித்திரங்களாக
அக்கால ஏட்டில்
பொறிக்கப் பட்டன...!

ஆண் பெண் தன்மைகள்
அகற்றப்பட்ட
"அலிப் தனங்களுக்கு
அன்றுதான்
அடுத்தொரு
அவமானம் ஆரம்பமானது...!

வேசித் தனத்திற்கு
இச்செயல்
சற்றுக்
கண்ணிய உயர்வைத்
தந்துவிட்டது...!

கொடுமைப் பட்டியலை
ஒட்டு மொத்தமாய்
ஒரே வரியிலே
இது
ஆணையாக்கியது. ..!

இந்தச்
சமூக அசிங்கத்தை
நெருப்புத்
துளிகளாலேயே
இறைவன்
கழுவிப் துடைத்தான். ..!

லூத் நபியே!

உங்கள் சமூகத்தினர்
உலக முற்றத்தில்
மலக் குவியல்களை
அல்லவா
நிரப்பி விட்டனர். ..?

அந்த
முடை நாற்றங்கள்
இன்றும் இங்கே
சந்து பொந்துகளில்
நாசி முனைகளை
நாறடிக்கின்றன. ..!

காதலிக்கக் கூடக்
கற்றுக் கொடுக்க
நபித்துவம் அனுப்பிய
எங்களின்
ஏக தலைவனே...!

உன்
கோபங்களிலே எல்லாம்
பொல்லாதது
நெருப்புப்
பரிச்சயம்தானா. ..?

படைப்புத் தொழிலுக்கே
பாதகம்
பண்ண இருப்பவர்களைத்
திருத்த முனைந்து
இயலாத நிலையில்
தீ அனுபவத்தால்
தீர்வளிக்கச்
சம்மதம் தந்தீர்கள்...!

லூத் நபியே...!

உங்கள்
பொறுப்புத்தான்
மகா உன்னதமானது...!

முன்னனுபவம்
குளிர்ந்த திரவத்தால்
கொடுக்கப்பட்டது. ..!

இந்தத் தாக்குதல்
வெப்பத் துண்டங்களால்
விளக்கப்பட்டது...!

காமாந்திரத்
தீச் சுருள்களின்
அடுப்பு மாற்றத்தால்
வீதி பூராவும்
வீணாய்த்
தீய்ந்து போனது...!

இது ஒரு
சாம்பல் தத்துவம்...!

சுகப்படுவதில் கூட
சுருதி பேதங்கள்
தட்டுப் படுகையில்
வீணைக் குடும்பமே
விறகுகள் ஆகலாம்...!

வித்தியாசப்பட்ட
இந்த
விவஸ்தை யற்றவர்களுக்கு
வானத்
துவாரங்களிலே
அனல் உருண்டைகளை
அனுப்பியவனே. ..!

தாம்பத்தியம்
சமூகத்தவர்களுக்குச்
சரியான
இளைப்பாறல்தான். ..!

அதிலே
விதிமாற்றம் செய்கையில்
விண்புறத்திலிருந்து
ஒரு
வெப்ப வெளிப்பாடு
நடந்துவிடும்
என்கிற
நாகரீகம்
கற்றுக் கொடுத்தாய். ..!

பெண்மைத் தத்துவம்
பரிகசிக்கப்படுகையில்
இறைச் சினம்
ஈவுகள் ஆகின்றது...!

ஆண்மைத் தத்துவம்
தன்னைத் தானே
அவமதிப்புச் செய்கையில்
நரக அனுபவம்
அந்த
நகரத்திலேயே
நடத்தப்படுகிறது...!

ஏ! வரலாற்றின்
கொச்சைத்தனமே. ..!

உனது
சாம்பல் நெடிகள்
இன்னுமா இங்கே
வீச்சம் தரவேண்டும்...?

நரகத்தின் சிரிப்பே
அந்த நகரத்தை
முழுக்காட்டியது. ..!

பூமிகளிலேயே
கொடிய பாகம்
தீகள் நடந்த
அந்த
நகரம்தானா...?

No comments:

Post a Comment