Tuesday, July 14, 2015

இசை மகா சமுத்திரம் இன்று விலகிவிட்டது!


எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப் பெயரே ஒரு இசைச்சொல். 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் திரை உலகின் உலக ஆளுமையாக எம்.எஸ்.வி. யின் அரசாட்சி கொடி கட்டிப் பறந்தது.

இன்று முதல் அக்கொடியின் பருவடிவம் கண்ணை விட்டு விலகிக் கொணடாலும் கொடியின் பறத்தல் ஓசை நீங்கி விடப்படவில்லை.

அந்த இசைச் சமுத்திரத்துடன் எனக்கும் ஒரு சின்னஞ்சிறிய அனுபவம் உண்டு.

மவுண்ட்ரோடு ஜெமினி ரவுண்டணாவில் இருந்து நுங்கம்பாக்கம் ஹை ரோடு தொடரும். அது நேராக ஸ்டெர்லிங் ரோட்டில் முட்டி நிற்கும்.

அந்த ஜங்ஷனில் அப்பல்லோ போட்டோ நிறுவனம் இருந்தது.
அங்கிருந்து ஒரு அழைப்பு என் இனிய நண்பர் மறைந்த கவிஞர்
நாகப்பட்டினம் சலாஹுதீனுக்கு வந்தது.

சலாஹூதீன் என்னை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கே யாரையும் எனக்குத் தெரியாது.

அங்கே எம்.எஸ.வி.இருந்தார். இன்னும் பலரும் இருந்தனர். எம்.எஸ்.வி. மட்டுமே நான் அறிந்தவர். என்னையும் அவருக்குத் தெரியும்.

எம்.எஸ்.வி.யைப் பார்த்தவன் அவர் அருகில் சென்றேன். "என்னப்பா கவிஞா! சலா(சலாஹுதீன்) செய்தி சொன்னாரா? என்றார் மெல்லிசை மன்னர்." இல்லையே" என்றேன்.

"அட போப்பா நான் ஒரு இஸ்லாமியக் கேஸட் போடப்போறேன்.
இந்த அப்பல்லோ நிறவனத்தார்தான் தயாரிக்கிறார்கள். நீ பாட்டு எழுதப் போகிறாய்" என்றார் எம்.எஸ்.வி.

என்னுடைய பஞ்ச காலம். இறைவன் அருளிய அருள் என மகிழ்ந்தேன்.

இதற்குரிய ஆவணப் பணிகளை ஹனீபா அண்ணன் (இவர் பூர்வீகம் மேலப்பாளையம்) கவனித்துக் கொண்டார்.

மெல்லிசை மன்னரின் முதல் இஸ்லாமிய கேஸட் "கலிமா"கேஸட்.
நானும், கவிஞர் சலாவுதீனும், இன்னும் ஒருவரும் பாட்டொழுதினோம். S .P.பாலசுப்ரமணியும், எம்.எஸ்.வியும் பாடியிருந்தனர்.

இந்த நிகழ்வுக்குப் பின் சிறிது நாள் கழித்து சலாஹுதீன் வழி எம்.எஸ்.வி. அழைப்பு மீண்டும் வந்தது.

அந்த நேரம் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்த நேரம்.
ஜனதா தளம், திமுக, கூட்டணி. ஜனதா தளத்தின் தமிழகத்
தலைவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தார்.
ஆனால அவரின் உடல் நலம் பாதிக்கப் பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்து வந்து அவர் இல்லத்தில் ஓய்வில் இருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு வர முடியாத நிலை. திமுக தலைவர் கருணாநிதி ஒரு ஆலோசனை வழங்கினார்.

ஜனதா தளம் சார்பாக கொள்கை விளக்கக் கேஸட் தயாரித்து தமிழகமெங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்பதே கருணாநிதி ஆலோசனை.

ஜனதா தளம் கட்சி, கேஸட்டை எம்.எஸ்.வி. மூலமே தயாரித்தது. இதுவும் கருணாநிதி வழி காட்டல்தான்.

ஜனதா தளம் கட்சி, கவிஞர் வைரமுத்துவைக் கொண்டு பாடல் எழுதச் சொன்னது.ஆனால் மெல்லிசை மன்னருக்கு இதில் நாட்டமில்லை.
எனவே அப் பாடல்கள் எழுத எம்.எஸ்.வி. என்னை அழைத்து வரச்
சலாஹுதீனை அனுப்பினார்.

என் பஞ்ச காலம் அப்போதும் முடிவுக்கு வராத நேரம். ஒப்புக் கொண்டேன். ஆனால் நான் ஜனதா தளக் காரனில்லை. ஜனதா தளம் எனக்கு உடன்பாடானதுமில்லை.

சென்னை அடையார் பெசன்ட் நகரில் ஒரு பங்களாவில் டியூனுடன்
எம். எஸ். வி .தயாராக இருந்தார். நான் பாட்டெழுதினேன். திருச்சி
சவுந்தரராஜன்(பாடகர்) எல் ஆர் ஈஸ்வரி, எழுத்தாளர் நண்பர் ஞாநி, ராஜசேகர் முதலானோர் அங்கிருந்தார்கள்.

ஜனதா தளம் பிரச்சாரப் பாடல்கள் தயாரானது. மண்டல்கமிஷன் விளக்கப் பாடல் டியூன் எம்.எஸ்.வி. போட்டார். நான் பாடல் எழுதினேன். உள்ள படியே அற்புதமாக அமைந்தது. ஜனாத தளம் சின்னம் சக்கரம் அது பற்றி ஒரு பாடல் எழுதியிருந்தேன்.

எம். எஸ். வி. என் கைகளைப் படித்துக் கொண்டு, " நான் திரைத் துறையில் ஒதுங்கிய பின்னால் உன் நட்புக் கிடைத்து விட்டது.
உன் நேரம் அப்படிப் பட்டது."என்று சொன்னார்.

சக்கரம் பாடலைத் தான்தான் பாடுவேன் எனக் கேட்டு எல்.ஆர் ஈஸ்வரி பாடினார். இந்தப் பாட்டு, பட்டுக் கோட்டையாரை நினைவு படுத்துகிறது என்று அவர் மகிழ்ந்தார்.

ஜனதா தளம் பிச்சாரப் பாடல்கள் தயாராகி விட்டன. எடுத்துக் கொண்டு
கருணாநிதியிடம் காட்டினார்கள் அத்தனைப் பாடல்களையும் அவர் கேட்டார். பூரண திருப்தி அடைந்தார். மீண்டும் ஒரு ஆலோசனை வழங்கினார்.


" இதில் வரும் மண்டல் கமிஷன் விளக்கப் பாடல் அற்புதமாக அமைந்திருக்கிறது. எனவே அடுத்த வாரம் காஞசிபுரம் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் வி. பி. சிங் கூட்டத்தை அப்படியே கேஸட் ஆக்கி அதன் பின்னணியில் இப் பாட்டை பதியுங்கள் அதைத் தமிழகம்
முழுவதும் வீடியோ காட்சியாக்கிப் பரப்புங்கள். சிவாஜி வர முடியாத குறை நீங்கி விடும்" என்றார் கருணாநிதி. இது நடைமுறை யானது.

இந்நிகழ்வுக்குப் பின்னால் எம்.எஸ்.வி.யை நான் பார்க்கவே இல்லை. இனிப் பார்க்க வாய்ப்பே இல்லை.

ஆனால் அந்தத் தேர்தலில்தான் சொல்ல முடியாத சோகம் நிகழ்ந்தது.
ஸ்ரீ பெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இன்று எம்.எஸ். வி யின் உடலை நீண்ட கண்ணாடிக் கூண்டுக்குள்
தொலைக் காட்சியில் காணும்போது என் நினைவோட்டம் இப்படிப் பதிவாகிறது. மனம் கனக்கிறது. என்ன வேதனைப் பட்டாலும் நிகழ வேண்டியது நிகழ்ந்தே தானே தீரும்.

No comments:

Post a Comment