Sunday, July 19, 2015

இசை மகா சமுத்திரம்



இசை மகா சமுத்திரம் இன்று விலகிவிட்டது --- என்ற தலைப்பில் நேற்றைய தினம் அய்யா எம்.எஸ்.வி.யை நினைவு கூர்ந்து பதிவைப் பதிந்தேன்.

அதில் மிக மிக முக்கியமான தகவலை ஏனோ தவிர்த்து விட்டேன்.
ஆனால் அது மறதிக்கு ஒருபோதும் சென்றிருக்கவே கூடாது. நிச்சயம் பகிரங்கமான நன்றி கெட்டதனமாக அது அமைந்துவிடும்.

பட்டினப் பாக்கம் மெயின் ரோட்டில் இருந்தது எம்.எஸ்.வி. வீடு. அங்கு வரச் சொல்லி எனக்குத் தகவல் அனுப்பினார். நான் உடனே அங்குச் சென்றேன். "ஏய்! கவிஞா! உன்னை பற்றி நேற்று சலாவிடம் (கவிஞர் சலாவுதீன்.) பேசிக் கொண்டிருந்தேன். ரொம்பவும் வேதனைப் பட்டேன். போதும் கஷ்டப்படுவது. பசி, சிரமம் பற்றி நான் யாரிடமும் கேட்டுத் தெரிய வேண்டியதில்லை.

எனக்கே நிறைய அனுபவம் உண்டு. சரி போகட்டும். தம்பி டி.ரஜேந்திரன் ஒரு வாரப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறார். அதில் நீ ஆசிரியர் குழுவில் சென்று சேர்ந்துவிடு. மாத வருமானம் நிச்சயம். நீ எந்த விளக்கமும் கேட்காமல் உடனே சேர்ந்துவிடு." என்றார்.

நான் மறுப்பின்றிஒப்புக் கொண்டேன். டி. ஆருக்குப் போன் போட்டார்
" நான் ஒரு கவிஞனை அனுப்புவேன். அவன் நல்ல எழுத்தாளன். அவனை உன் "உஷா" வார இதழில் ஆசிரியர் குழுவில்சேர்த்துக் கொள்." என எம்.எஸ்.வி.சொன்னார்.

டி.ஆர். எந்த மறுப்புமில்லாமல் உடனே என்னை பணிக்கு வரச் சொன்னார். பணி கிடைத்து விட்டது. பஞ்சம் கொஞ்சம் நீங்கியது.

சம்பளம் ரூபாய் 2750. அப்போது அது நல்ல தொகைதான். இனிமேல் வீட்டு வாடகைக்கு, மளிகைக் கடைக்குப் பதற வேண்டாம்.

மெல்லிசை மன்னர் அடுத்து ஒரு எச்சரிக்கை விட்டார்." டி.ஆர். ஒரு டைப்பானவன். நீ ஒரு விருதாக் கிறுக்கன். ஒழுங்காக நடந்துக்கோ.
பிரச்சினை வந்தா உன் புள்ளைங்க பசியை நினைச்சிக்கோ. 

இவ்வளவுதான் சொல்லுவேன். அதையும் மீறி நடந்தால் என்னை எப்பவும் வந்து பாத்துறாதே" இதுதான் எம்.எஸ்.வி.யின் எச்சரிக்கை.

"உஷா" வார இதழ், முதல் இதழில் இருந்து என் பணி தொடங்கியது. சில மாதங்கள் ஓடின. டி.ஆருக்கும் எனக்கும் ஒத்து வரவில்லை. பணி முடிந்தது.

அன்றிலிருந்து அய்யா எம்.எஸ்.வி.யை நான் இறுதி வரைச் சந்திக்கவே
இல்லை அவர் சொன்னது, ("மீறி நடந்தால் என்னை எப்பவும் வந்து பாத்துறாதே") நடந்து விட்டது.

இதை நேற்று நான் பதியவில்லை. இன்று பதியாமல் இருக்க முடியவில்லை.

No comments:

Post a Comment