Tuesday, July 14, 2015

2. முதல் ஜனாஸா. ..!



பூமித் தாம்பாளத்தின்
புற முதுகில்
நடை பாதைச்சித்திரம்
வரையப்படாத
அநாதி காலம் அது...!

மனித மச்சங்கள்
மண் முகத்திலே
தோற்றம் செய்யாத
தொலை தூரக்
காலம் அது...!

சுவன வீணையில்
மட்டுமே
சுருதிகள் உருண்ட
சொப்பனக்
காலம் அது...!

உறவுச் சங்கிலிகள்
ஒருவர் கழுத்திலும்
உறுத்தாத
அனாதைக் காலம் அது...!

படைப்பு ரகசியம்
பாழ் வெளியிலே
புதைக்கப்பட்ட
அந்தப்
பழைய காலத்தில்...!

ஓர் உருவம்
கிடக்கையில் கிடந்தது...!

பிரிவினை வாதத்துக்கு
அதுதான்
பிதாவாக இருந்தது...!

கூலியாளுக்கும்
கொண்டவனுக்கும்
தர்க்கப் பிரச்னைக்குத்
தானே
காரணமானது...!

மறுதலிப்பு உலக்கையைச்
செய்து கொடுத்து
மண்டையைப் பிளக்க
உதவி செய்தது...!

அந்த
முதல் ஜனாஸாவில்...
உருவத் துருத்தில்
உயிர்க் காற்றை
ஊதினான்
இறைவன்...!

அந்த
ஆதி ஒருவனின்
உள்ளப்படியே
உற்பவம் ஆன
கற்பனை எல்லாம்
ஒவ்வொன்றாக
உதயமாயின...!

மானிட வடிவம்
நெட்டி முறித்து
நிமிர்ந்து
எழுந்து நின்றது...!

அந்த
ஒருவரின் உள்ளே
ஒளிந்து கிடந்த
ஒருத்தியை
இறைவன்
பிய்த்தெடுத்துக்
கொடுத்தான். ..!

சுவன முற்றத்தில்
சுற்றித் திரிந்த
அந்தச்
செல்லப் பிள்ளைகள்
ஷைத்தானின்
விழிப்
பள்ளத் தாக்கை
எட்டிப் பார்க்க
வாய்ப்பு வந்தது...!

இறைவன் கற்பனை
எல்லாம்
நடந்து முடிந்தன...!

நிர்வாணம்
வெட்கமாக அறிமுகமான
தருணம் அது. ..!

அந்த
மானிட
மூலவிருட்சத்திற்கு
முதல்அறிமுகம்
மான உணர்வுதான்...!

வெட்க மைதானத்தில்
வேறுவேறு திக்குகளில்
ஓட்டம் பிடித்தனர்...!

சுவனப் பூங்காவின்
அந்தச்
செளந்தர்யப் பூக்கள்
காம்புகளுடனே
பிடுங்கி
வீசப்பட்டன...!

பின்னர்
தனித் தனியாக
மனித பூமியில்
தவம் கிடந்தனர்...!

ஒருநாள்
அரபாத் பெருவெளியில்
தண்டனைச் சுவரும்
தரைமட்டமாகத்
தகர்ந்து நொறுங்கியது. ..!

தனிமைக் கவசம்
விழிச் சந்திப்பில்
தவிடு பொடியாய்த்
தனித் தனியாகக்
கழன்று விழுந்தன...!

அதுவரை
சொர்க்கப் பூமியில்
சந்தித்து அறியாத
சோபனப் பார்வை
புழுதி மேட்டிலே
முதலாவதாகப்
பரிமாறப்பட்டது...!

ஆண் எரிமலையில்
பெண் மழைத்தூறல்
சப்தம் இன்றியே
ஒழுங்குப் பாதையில்
ஒரே சீராக
ஊற்றப்பட்டது...!

ஆவி எழுந்தது...!

ஒருவரில் ஒருவர்
புகுத்து எழுந்தனர்...!

பிறப்புப் பிரளயம்
பிரவாகம் எடுத்தது...!

அவர்கள்தாம்
நில முதுகை
மனிதச்
சுமை மூட்டைகளால்
நெறிக்கச் செய்தனர்...!

ஷைத்தானின்
கள்ளக்
கணக்கெழுத
அவர்களிடமிருந்தே
மனித ஏடுகள்
வழங்கப்படுகின்றன...!

ஷைத்தான்
பட்டறையில்
செய்யப்பட்ட
இயந்திரக் கருவிகள்
இறைவனுக்கு எதிரே
அனுப்பப்பட்டன...!

அந்த நேரங்களில்
அவர்களிலிருந்தே
தடுப்புத் தகட்டைத்
தயாரித்து
நபித்துவக் களத்தில்
இறக்கி விட்டான்...!

அந்தக்
களத்தில்
எதிரிக் கும்பல்
கூட்டிப் பெருக்கி
நரகத் தொட்டியில்
குப்புறத் தள்ளி
நிறைக்கப்பட்டது...!

ஒரு காலத்தில்
ஷைத்தான்
மலக்குகளில் எல்லாம்
மகத்தானவன். ..!

வேஷதாரிகளில் கூட
அந்த
நடிப்புச் சுதேசிதான்
மேலானவன் . ..!

மலக்குகள்
ஒளிச் செடியில்தானே
விழித் திறப்புச்
செய்தார்கள்...!

தீயின் கர்ப்பத்தில்
சிதறிய ஷைத்தான்
ஒளி வட்டத்தின்
உச்சப் பொட்டாக
எப்படி முடிந்தது...?

உயர்ந்த இடத்தில்
ஊடுறுவல்
செய்து பார்த்து
ஜெயிப்புச் சில்லறைகளை
எண்ணிப் பார்த்தவன்
ஷைத்தான்...!

அந்த
மறைப்பு நடிப்பை
மலக்குகளுக்கு
மானிட ஆதம் மூலம்
'ஸஜ்தா' வெளிச்சத்தில்
அம்பலப் படுத்தினான்
ஆதி முதல்வன். ..!

பிணத் தயாரிப்புக்குப்
பின்னால்தான்
உயிர் ஊதியத்தை
இறைவன் கொடுத்தான்...!

அதனால்தானா
பிண ஊர்வலங்கள்
இந்த மண்ணிலே
உயிர் நடமாட்டமாக
உலா வருகின்றன...?

No comments:

Post a Comment