Thursday, July 23, 2015

5. மகோன்னத மானிடம்...!



இஸ்லாமியப் பிரச்சார
ஸ்தாபனத்துக்கு
இவரிடம்தான்
நடைமுறை
வடிவ அமைப்பு
நல்கப்பட்டது...!

பின்னையத்
தூதுக்காரர்களுக்கு
இவரே
பிதாமகர்...!

நெருப்பு அணுக்களாலேயே
நீச நகரங்கள்
நிர்மூலமாயின. ..!

ஆனால்
நெருப்புபுக்
குண்டங்களுக்கு உள்ளே
இவரோ
நிழற்குடை பிடடித்து
நிம்மதி மஞ்சத்தில்
கண்ணயர்ந்திருக்கிறார்...!

விக்கிரகப்
பொம்மைகளுக்குச்
சிரச்சேதம் செய்து
முதல் "குர்பானி
முடித்திருக்கிறார்...!

அதுவரை
ரூப வடிவிலே
அகில நாயனுக்கு
இணைவைப்பு
உருவாகி வந்தது...!

இவரின் காலமோ
இதற்கு
வேறுபாடானது. ..!

உயிர் நடமாட்டம்
உள்ள ஒருவனே
இறையெனத் தன்னை
அறிவிப்புச் செய்தான்...!

இறை எதிர்ப்பிலே
இதுதான்
முதல்
விபரீதத் தத்துவம்...!

அன்றளவும் வந்த
நபிமார்கள்...
படைப்பாளனுக்கு
எதிரான
மனிதப் படைப்பினைத்தான்
மரணிக்க
மார்க்கம் கண்டார்கள்...!

இவரோ...

செருக்குத் தலைப்பாகைச்
சுற்றித் திரிகிற
மனிதனே
மகத்தான அழிம்புக்காரன்
என்கிற
இறையறிவிப்போடு
இங்கே வந்திருக்கிறார்...!

ஆணைகள் பிறப்பிக்கும்
அதிகாரக்காரன்
அல்லாஹ்வுடன்
ஒரு
நேரிடைப் போரை
நிகழ்த்திய
ஆணவக்காரன்
"நமரூத்"தின் இஸமே
மாபெரும்
நாசச் சுரங்கம்...!

வீத்க்கு வீதி
மோசடிக் கம்பங்களில்
தூபம் ஏற்றியவன்
நம்ரூத். ..!

ஏக முதல்வனுக்கே
அடிக்கடி
எரிச்சலைக்
கொடுத்தவன்...!

அறியாமைத்
தேரிழுப்பில்
அமர்ந்து அலைந்த
உற்சவ மூர்த்தி
நம்ரூத்...!

நம்ரூத் இஸத்தின்
நச்சு நாவுகள்
கொடிய
தர்க்க வசவுகளின்
சிம்மாசனங்கள்...!

ஒரு
சொற்ப ஆட்சி
அதிகாரத்தாலேயே
கற்பனை லஹிரியைக்
களவாடித் தின்றவன்...!

நல்லவைகளுக்குக் கெல்லாம்
நாள் குறித்தவன்...!

பொல்லாங்குச் சீமாட்டியைப்
புணர்ந்து கிடந்தவன்...!

இவனுக்கு எதிரே
இறையருள் உச்சாடனங்களே
ஆயுதங்களாகத்
தொழுகைத் தழும்புகளே
கவசங்களாக
இபுறாஹீம் நபித்துவம்
வழங்கப்பட்டது...!

இவர்
தோற்றங்கள் அனைத்தையும்
தோற்றுவித்தவன்
ஆற்றல் மா நதியின்
ஒரு சிறு
நுரைச் சிதறல்தான்...!

ஆயினும்
ஷைத்தானியத்தின்
சமுத்திர நீரினைச்
சகதிக் குட்டையாய்க்
கலங்கடித்தவர். ..!

இவர்...
அல்லாஹ்வுக்கு
அணுக்கமானதால்
அக்கிரமக் களைகள்
முளையிடாத
வெப்பப் பிரதேசம்...!

இவர்...
தீமை நாவுகளின்
எச்சில் படாததால்
நன்மைக் கொடிகள்
மண்டிப் படர்ந்த
தடாக மண்டபம்...!

இவரின்
பாதச் சுவடுகள்
துணிச்சல் வீதிகள்...!

எனவே
கோழைப் புழுதிகள்
அந்த வீதிகளில்
குறுக்காகக் கூடப்
பறந்ததில்லை. ..!

தன்னை
இறைவனிடம்
தக்கவைத்ததால்
தன்னம்பிக்கையில்
இவரொரு
வளர்ந்த பர்வதம்...!

இறைத் தொழுகையின்
முன்னே...

அங்கப் புஷ்பங்களைக்
கூம்பு வைத்து
இதய ஒலியுடனேயே
இறைவனோடு
சம்பாஷணை நடத்தியவர்...!

கொடுமைச் சிம்மத்தின்
குமுறல்களை
இவரின்
முணகல் ஓசையே
மூர்ச்சைக்க வைத்தது...!

"கபத்துல்லாஹ்"...

சுவனப் புறத்தின்
சோபனக் குறியீடு...!

இவரோ...அதன்..
காவல் மானியம்...!

ஒரு நாள்...
விழித் திரைகளின்
மூடல் வேளையில்
மௌன உறக்கத்தில்
கனவுச் செய்தி
அறிவிப்புக் கொடுத்து...!

முதல்வனிடத்திலிருந்து
அந்தக்
கனவு மொழிக்கு
ஒலி கிடைத்தது...!

ஆம்!
அது ஒரு
இறை வாக்குறுதி...!

உறக்கப் போர்வையை
உதறி எறிந்து
விழிப்புப் பூமியில்
அதை
நடத்திட முனைந்தார்...!

பூமித் தட்டுகளின்
தள்ளாடல்கள்
நிறுத்தப்பட
மலை ஆணிகள்
பொறிக்கப்பட்டன...!

அந்த
மலைமுகட்டுக்கு
மைந்தப் புறாவை
அழைத்துப் போனார்...!

இறை வாசகச்
சூத்திரத்துக்கு
அங்கே
விளக்கவுரை
வரையப்பட்டது...!

தியாகத் தோணியின்
பாய்மரம் விரிந்து
காலக் கடல்வெளியில்
இன்னும் அது
கண்ணியப் படுகிறது...!

இபுறாஹீம் நபியே...!

நீங்கள்தாம்
மகோன்னதம் மிகைத்த
மானுடப் பிறப்பு...!

ஏனென்றால்
உங்களின் மன்னிப்பே
நம்ரூத் மண்டையில்
செருப்படிகளாயின...,

அது மட்டுமா...?

இறை வசனத்திலே
நீங்கள்
உயர்ந்த
வார்த்தைகளால்
உச்சரிக்கப்படுகிறீர்கள்...!

உங்கள்
உதிரங்கள் எல்லாம்
நபித்துவ அணுக்களால்
உருவாக்கப்பட்டன...!

பாலை வெளிப்
பட்டணங்கள்
உங்கள்
வெளி வடிவத்தை
வேதனைப் படுத்தினாலும்
உங்கள் உருவம்
சொர்க்க வனத்திலே
தளிரிட்ட
சொர்ணப் பூக் கொத்து...!

நம்ரூத் கொடுக்குகள்
உங்கள்
மூலிகை மேனியை
முத்திய காரணத்தால்
விஷச் சுரம்
கண்டு மரணித்தன...!

நீங்கள்
எங்களின்
சர்ச்சைகள் அனைத்திற்கும்
சரியான தீர்வு...,

எங்களின்
ஞானக் குளியலுக்கு
உங்களிடமிருந்து
நீர்ச் சுனைகள்
நிரம்பி வழிந்தன...!

இபுறாஹீம் நபியே...!

நீங்கள்
ஏகத்துவத்திற்கு
உகப்பானவர்கள...!

இறுதிமட்டும்
இறையச்சத்தின்
அச்சாணி
நீங்கள்...!

No comments:

Post a Comment