பஸ்கள் அங்கே எப்போதும் ஒரு ஒழுங்கில்
நிற்காது. குஸ்திக்கு முண்டியடித்துக் குத்துவதற்குத் தயாராக உருமிக்
கொண்டேயிருக்கும். பயணிகளின் பரபரப்பு, பழவியாபாரிகளின் விற்பனை ஓலம், பெண்களின்
படபடப்பு, சிறுவர்களின் தறிகெட்ட துள்ளல், அண்ணா பேருந்து நிலையத்தின் தினசரி
நடவடிக்கை.
பஸ்களுக்கு இடுக்கில் புகுந்து ஓடி
மனிதர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் பன்றிக் கூட்டமும் அந்த பஸ் ஸ்டாண்டின்
இரண்டாவது இயற்கை.
கிழக்கு ஓரமாக பெரிய சாக்கடை ஓடை சதா
ஓடிக்கொண்டே இருக்கும். மூத்திர வாடை மூன்று கிலோ மீட்டருக்கு மூக்கை உறுத்தும்.
பெரியவர் சின்னவர் வித்தியாசமில்லாமல் எவராவது ஒருவர் கீழாடையினை வளித்துத்
தூக்கிக் கொண்டு இயற்கை உபாதையினை வெளியேற்றிக் கொண்டிருப்பர்.
பயணிகளின் பார்வைக்கு அந்தப் பிரதேசம்
கூச்சத்தை உருவாக்கும்.
கொஞ்ச காலமாக மொட்டை அசன்கனி அந்தச் சாக்கடை
விளிம்பில்தான் உட்கார்ந்திருப்பார். அவர் பேசுவதே கிடையாது.எங்காவது ஒரு துண்டுப்
பேப்பரைக் கண்டால் விட மாட்டார். ஓடி ஓடி எடுப்பார். அது அவருக்கு கிடைக்க முடியாத
தங்கம். ஏதாவது ஒரு குச்சியை அந்த துண்டு பேப்பரில் எழுத்தாணி போல நட்டு
எழுதுவார். எழுதிய பேப்பரை மடிப்பார். நைந்து கிழிந்து அழுக்குகள் விடாமல்
இறுக்கிப் பிடித்திருக்கும் தன் சட்டைப் பையில் பத்திரமாகத் திணித்துக் கொள்வார்.
சிகப்பாக ஒரு பெட்டி எந்தக் கம்பத்தில்
தொங்கினாலும் போதும் துண்டுப் பேப்பரை அதில் போட்டு விடுவார். யாருக்கோ அவர்
கடிதத்தைப் போஸ்ட் செய்து விடுவார்.
அசன்கனி என்றால் அந்த ஊரில் எவருக்கும்
தெரியாது. மொட்டை அசன்கனி என்றால் ஊருக்கு வெளியே உள்ள மருத மரத்தின் உச்சிக்
கிளையில் உட்கார்ந்து அலகை உரசிக் கொண்டிருக்கும் சின்னச் சிட்டுக் குருவி கூட எனக்கு
தெரியுமேன்னு கீச்சுக் கீச்சு மொழியில் கத்தும்.
ஒரு காலத்தில் பஜார் பெரிய மளிகை கடையில்
கணக்கெழுதிக் கொண்டிருந்தார். எல்லா நேரமும் குனிந்து கொண்டே இருப்பார். என்னதான் எழுதுவாரோ?
அவரின் சட்டைப் பையில் எப்போதும் சில அஞ்சல்
அட்டைகளும், கவர்களும் குடியிருக்கும்.
அந்த அஞ்சல் அட்டைகள் எத்தனையோ பேரின்
வயிற்றெரிச்சலை வாரி வாரிக் கொட்டிக் கொள்ளும். அவருக்கு பழக்கமானவரோ இல்லையோ
அதைப் பற்றி அசன்கனி கவலைப்பட மாட்டார் யாவரும் சுகமாக நிம்மதியாக வாழ்ந்து
விட்டால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.
அப்படி வாழ்பவரை ஒரு கணமாவது துடிக்க
வைத்தால்தான் அசன்கனிக்கு இடது மூக்கில் சுவாசம் உள்ளேறி வலது மூக்கில் சீராக
வெளியேறும் இல்லையென்றால் அவருக்கு மூச்சு முட்டிக்கொள்ளும்.
ராமையாத் தேவர் வெள்ளை வெளேர் உடையில்தான்
தெருவில் நடமாடுவார். நெற்றியில் சிவப்பு வண்ணத்தில் குங்குமப் பொட்டு அந்த
காலத்து காலணா அளவில் கம்பிரமாக ஜொலிக்கும். கழுத்தில் பட்டு நேரியல் சிவபெருமான்
கழுத்துப் பாம்பு போல மடித்து தவழும். சிரிப்பு என்று தனியாக ஒன்று தேவரிடம்
கிடையாது. அவர் வாயே சிரிப்புத்தான். அடுக்கி வைத்திருக்கும் அழகான பல்வரிசையினை
மீசை அடர்த்தி பாதி மறைத்துப் படர்ந்து கிடக்கும்.
மொட்டை அசன்கனிக்கு இதெல்லாம் பிடிக்காது.
தன் சட்டைப் பையில் இருந்து ஒரு போஸ்டு
கார்டை உருவினார். ராமையாத் தேவர் மனைவியின் பார்வைக்கு ஒரு கடிதம் தயாரனது.
கும்பத்தைத் தூக்கி ஆடும் நாட்டியக்காரி பேச்சிக்கும்
தேவருக்கும் கம்மாத் தோப்பில் ஏதோ கசமுசா நடக்கிறதாம். தேவரின் மனைவி ஜாக்கிரதையாக
இருக்கணுமாம்.
ராமையாத் தேவர்
அதன்பின் கம்மாத் தோப்பு பக்கம் போகவே இல்லை. தேவரின் மூத்த மகன்தான் தோப்பு
மகசூலை பார்க்கத் தொடங்கி விட்டான். தேவர் மனைவியும் கனத்த சரீரத்தைத் தூக்கி
அசைத்து வேர்த்து விறுவிறுத்து அடிக்கடித் தோப்புக்கு வர ஆரம்பித்து விட்டார்.
சூரிய வெளிச்சத்தில் தேவர் மனிவியின் காதில் தொங்கும் பாம்படம் படீரென்று டால்
அடிக்கும்.
மொட்டை அசன்கனி
கடையில் கணக்கு எழுதும்போதே குனிந்து வாயோரம் சிரித்துக் கொண்டார்.
பஸ் ஸ்டாண்டு சாக்கடையின் விளிம்பில் எவனோ
ஒரு ராஸ்கல் அசிங்கம் செய்துவிட்டு சற்று முன்தான் நகர்ந்து இருக்கிறான். காற்றில்
ஒரு துண்டுக் காயிதம் குவியலாகக் கிடக்கும் அந்த மனிதக் கழிவில் வந்து அப்பிக்
கொண்டது. மொட்டை அசன்கனிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. ஒடுங்கி உட்கார்ந்திருந்தவர்
ஓடிச் சென்று அந்த காயிதத்தை எடுத்தார். அதில் ஒட்டிக கொண்டிருந்த அசிங்கத்தைச்
சட்டையின் நெஞ்சுப் பக்கத்தில் தேய்த்துக் காயிதத்தைச் சுத்தம் செய்துக் கொண்டார்,
அக்கம் பக்கம் துருவித் துருவிப் பார்த்தார்.
ஒரு மெலிந்த வேப்பங் குச்சி கண்ணில் பட்டுவிட்டது. குடுகுடு ஓட்டம். அங்கேயே
சம்மணம் பொட்டு அமர்ந்தார். காயிதத்தில் குச்சியால் எழுதத் தொடங்கி விட்டார்.
யாருக்கு கடிதம் எழுதப் போகிறார்?
பேருந்து நிலையத்திற்கு வந்து போகும் எல்லா
பஸ்களும் முனிசிபாலிட்டிக்கு வரி கட்ட வேண்டும். அதை வசூலிப்பது பில்
கலெக்டர் மைதீன். சுறுசுறுப்பானவன். சுற்றித் திரிவதில் அவனுக்கு
அலாதியான சுகம்.
பில் கலெக்டர் மைதீன் அறியாமல் நான்கு சக்கர
வண்டி எதுவும் நகராட்சியின் எல்லைக்குள் வந்துவிடவே முடியாது. தொழிலில் படு
சுத்தம்.
மைதீன் குடும்பம் பெரிது. மூன்று
அக்காமார்கள், இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிமார்கள், அக்காமார்களுக்குக் கல்யாணம்
முடிந்துவிட்டது. தங்கைகள் நிக்காஹ்விற்குத் தயார்தான். தம்பி இருவரும் நோட்டுப்
புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு படிக்கப் போவதாகக் கூறிக் கொள்கிறார்கள். பல
நேரங்களில் சினிமாத் தியேட்டர்களில்தலை தென்படுவதாகத் தகவல்கள் வருகின்றன.
அம்மாவுக்கு ஆஸ்துமா. அத்தா கிடையாது.
வருமானமும் பத்து. சீட்டுப் பிடிக்க ஆரம்பித்தான்.
குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது. சீட்டுத்
தொழிலில் விருத்தித் தெரிந்தது. சைக்கிளில் திரிந்தவன் மொபட்டில் பறந்தான். எட்டு
முழ கரை வெட்டி பேண்ட்டாக மாறியது. தூக்கித் திரிந்த ரெக்ஸின் கைப்பை லெதர் ஹேன்ட்
பேக்காக உயர்ந்தது.
மொட்டை அசன்கனிக்கு இதெல்லாம் பிடிக்காது.
பில் கலெக்டருக்குச் சீட்டுத் தொழில் தேவைதானா?
முனிசிபல் கமிஷனருக்குக் கவனம் போதாது.
தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பை அசன்கனி எடுத்துக் கொண்டார்.
மறுவாரம் பில் கலெக்டர் மைதீன் முனிசிபல்
கமிஷனர் முன் அடக்கமாக நின்றான்.
"வட்டித் தொழில இன்னைக்கே நிறுத்திடனும்.
இல்லாட்டிப் போனா பில் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்திடணும். மக்களை வதைக்கக்
கூடாது. இப்போவெல்லாம் நீ வட்டி வசூலுக்குத்தான் நேரத்தை ஒதுக்குற.நான் வேற மாதிரி
ரிப்போர்ட் எழுதி வேலையே இல்லாம ஆகிடுவேன் ஒழுங்கா நடந்துக்கோ".
கமிஷனரின் மிரட்டல் பில் கலெக்டர் மைதீனுக்கு
எரிச்சலைத் தந்தது. இல்லை, அதையும் தாண்டி எச்சரிக்கிறார் எனப்பட்டது.
"பெரிய பிசாத்து வேலை. சரிதான்
போரூமையா. ஒரு துண்டுப் பேப்பர்ல ராஜினாமா எழுதித் தூக்கி மூஞ்சியில
விட்டெரிஞ்சிடுறேன். அப்போ என்ன செஞ்சி கிழிச்சிடுவீராம்" சொல்லி விட்டான்
மைதீன்.
வேலை முடிந்தது.
மளிகைக் கடையில் மொட்டை அசன்கனிக்கு வானமே
மடியில் வந்து விழுந்து புரண்டது. ஒரே புல்லரிப்புத்தான்.
சாக்கடையில் அழுகிக்
கிடக்கும் புழுத்த பழங்களின் குவியல் மீது புரண்டு கொண்டிருந்த ஈக்கள் ஒரே
பாய்ச்சலில் திப்பியாகக் கிடந்த மனித அசிங்கத்தின் மீது புரண்டு எழுந்தன. மொட்டை
அசன்கனி வாய் ஓரத்தில் கிச்சுமூச்சு மூட்டிப் பறந்தன. அசன்கனி வலது கையைத் தூக்கி
ஈயை ஓட்டிக் கொண்டார்.
பதினேழு வயதிலிருந்தே மாப்பிள்ளை
பார்த்தார்கள். எத்தனையோ பேர்கள் வந்து போனார்கள். எதுவும் கை கூடவில்லை.
இருபத்தெட்டு வயதாகிவிட்டது. கல்யாண சுகம் மனமெல்லாம் ஊது பத்தி வாசனை போல சுழன்று
சுழன்று பரவுகிறது. கண்களில் அதே ஏக்கம். முகத்தில் கூட ஒரு வறட்டுத்தனம் வந்து
விட்டது.
தேகம் ஒட்டடைக் குச்சியாக உருக்குலைந்து
போனது. தன் கூட சமஞ்ச பெண்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளைப் பெற்றுக்
கொண்டிருக்கிறார்கள். பல்கீஸுக்கு மட்டும் பரிதவிப்பே வாழ்வாகி விட்டது.
கடைசியாக அவளுக்கு ஒரு விடியல் உதிக்கத்தான்
செய்தது. தஞ்சாவூரில் இருந்து ஒரு வரன். அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது.
சம்மதத்துடன் தஞ்சாவூருக்குப் போனார்கள்.
பலகீஸ் முகத்தில் நிக்காஹ்வின் ரேகைப்
படர்ந்தது. உள்ளுக்குள் இனம் புரியாத ரம்மியமான நினைவுகள்.
மொட்டை அசன்கனிக்கு இதெல்லாம் பிடிக்காது.
தஞ்சாவூர்காரர்கள் முகவரியை மூன்று நாள்கள்
விடாமல் முயன்று கண்டுபிடித்து விட்டார். நிலாவில் முதல் முதல் ஆம்ஸ்ட்ராங் நடந்த
போது கூட இவ்வளவு ஆனந்தப் பட்டிருக்க மாட்டார். அசன்கனியின் வெற்றிக்கு ஈடே இல்லை.
அடுத்த சில நிமிஷங்களில் தஞ்சாவூருக்கு
கடிதம் தயாராகி விட்டது.
உள்ளூரில் பல்கீஸ் ஏன் விலை போகவில்லை?
முறைப் பையன்கள் எதற்காக அவளை ஒதுக்கி விட்டார்கள்? வெளியூர்காரர் அநியாயமாக வந்து
மாட்டிக் கொண்டாரே, இதுவென்ன நியாயம்?
பல்கீஸுக்கு சிறு பிராயம் முதல் காக்க
வலிப்பு வந்து விடுமாம். நின்ன நின்ன இடத்தில் விழுந்து காலையும் கையையும் உதறிக்
கோரமாக வலித்துக் கொள்வாளாம். பார்க்கவே விகாரமாக இருக்குமாம். போதாக்குறைக்கு
வலது பக்கத் தொடையிலிருந்து கால் முட்டி வரை வெள்ளை படர்ந்து இருக்குமாம். சின்னப்
பிள்ளையில் ஒரு துளிதான் வெள்ளை இருக்குமாம். துளி வெள்ளை இருபத்தெட்டு வயதில்
கால் முட்டி வரை வளர்ந்திருக்காம். வெளியூர்காரார்களுக்கு இதுவெல்லாம் தெரியவாப்
போகிறது?
கடிதம் தஞ்சாவூரில் சரியான முகவரியில்
கிடைத்து விட்டது. வீட்டில் இடி வந்து ஒழுகி விட்டது. மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள்
ஒரே முரண்டில் பேச்சு வார்த்தையினை முறித்து விடத் தீர்மானித்து விட்டனர்.
ஒரு மொட்டைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர
வேணாம் என்று தஞ்சாவூர்க்காரர் சொன்னார். பெண்கள் பக்கம் இதற்கு ஆதரவில்லை.
கல்யாணக் கதை முடிந்து விட்டது.
பல்கீஸ் வீட்டுக்காரர்கள் தகவல் வரும் வரும்
என்று காத்திருக்கிறார்கள். நாள்கள் மாதங்களுக்குள் நுழைந்தன. கடிதம் மட்டும் வரவே
இல்லை. இந்த சம்பந்தத்திற்கு உதவிய நண்பரை நெருக்கினார்கள். அப்போதுதான் தகவல்
தெரிந்தது.
பல்கீஸ் நொடிந்து போனாள். நிக்காஹ் நின்று
போனது. அவளுக்குள் பாறையாக இறுகிக் கனத்தது. தன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான
செய்தி வேறு அவளை கடப்பாரையால் குத்தி வகுந்தது.
கன்னி கழியாதவள் நெஞ்சில் கோடிக்கணக்கான உடை
முள்கள் குத்திக் குத்திக் கீறி குருதியினை பீறிட்டு வடியச் செய்தன.
எப்படியோ ஒரு நல்லது விலகிப் போனது.
மொட்டை அசன்கனி மளிகைக் கடையில் கணக்கெழுதிக்
கொண்டே நெஞ்சுக்குள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துச் சரிந்தார்.
மலத்தைச் சட்டைத் துணியில் துடைத்து
சுத்தமாக்கிய காயிதத்தில் அசன்கனி வேப்பங்குச்சிப் பேனாவால் தீவிரமாக எழுதிக்
கொண்டிருக்கிறார். யாருக்கோ? எந்த ஊருக்கோ?
பல்கீஸ் பல இரவுகள் தூங்கவில்லை. வெதும்பி
வெதும்பி அழுதாள். ஒரு வெள்ளிக்கிழமை இரவு பல்கீஸ் வேதனையின் இறுதிச் சுற்றுக்குள்
விழுந்து கிடந்து துடித்தாள். அந்தத் துடிப்பே அவளுக்குள் தூக்கத்தை விரட்டிக்
கொண்டு வந்து விட்டது.
காலும் கையும் வெட்டி வெட்டி இழுக்கிறது. வாயில்
நுரை நுரையாக வழிகிறது. கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. கீழ் உதட்டைப் பற்கள
வெறித்தனமாக கவ்விப் பிடித்திருக்கின்றன. ஆடைகள் அலங்கோலமாக எங்கெங்கோ விலகிக்
கிடக்கின்றன. உடம்பு குறுகிக் குறுகித் துடிக்கிறது. விறைப்பாக ஒரு கால் ஒரு பக்கம் இழுத்துக்
கிடக்கிறது. அங்கே வேறு யாருமே இல்லை.
பல்கீஸ் பதறி விழிக்கிறாள். தூ... தூ...
அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தானிர்ரஜீம். கனவு. இதுவென்ன கெட்ட கனவு? திடீரென்று
எழுந்தாள். நடந்தாள். பாத்ரூமில் தண்ணீர் விழுகிறது. பல்கீஸ் ஒளு செய்கிறாள்.
அலமாரி மேலிருந்து முஸல்லாவை எடுத்தாள். உதறி
விரித்தாள். மேற்குத் திசை நோக்கித் தக்பீர் கட்டி நின்றாள். இரண்டு ரக்அத்
தொழுதாள். அது தஹஜ்ஜத் தொழுகை. நட்ட நடு நிசி. ஒரே நிசப்தம். அல்லாஹ்வுக்கும்
அவளுக்கும் இடைவெளி இல்லாத அணுக்கம்.
முட்டியிட்டு இருப்பு நிலையில் உயர்ந்து இரு
கரங்களையும் தன் முகத்துக்கு முன்பாக மேலுயர்த்தி "யா அல்லாஹ்! என் மீது
அபாண்டம் சொன்னவர்களை நீ சும்மா விட்டு விடாதே. என் வேதனை அவர்களை ஒரு போதும்
மன்னிக்கவே மன்னிக்காது. இதுவரை என்னிடம் உள்ள ஒழுக்கத்தையும் மீதமுள்ள
நாள்களிலும் எனக்கு உருதிப்படுத்தித் தா! யா அல்லாஹ்! யா அல்லாஹ்! யா அல்லாஹ்!
பல்கீஸ் விழிகள் உதிர்க்கும் உப்புக் கண்ணீர்
அவளின் பிரார்த்தனை இதழில் வந்து விழுகிறது. முஸல்லாவிலேயே குன்னிக் குறுகிக்
குலுங்கிக் குலுங்கி அழுது கிடந்தாள். தூங்கி விட்டாள்.
மொட்டை அசன்கனியின் ஒரே மகன் ரயில்
தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டான். அவரின் மனைவிக்கு வயிற்றுப்
போக்கு ஏற்பட்டது. ஒன்று, இரண்டு, இப்படி பதினேழு முறை கழிந்தது. பதினெட்டாவது
முறைக்கு அவள் இல்லை. தெருக்களில் அலைந்தார். அவரின் கண்கள் மட்டும் துண்டுக்
காயிதங்களைத் தேடி தேடி அலுத்தன. கடைசியாக அண்ணா பேருந்து நிலையச் சாக்கடையில்
அவருக்கு ஒரு நிரந்தர குடியிருப்பு முகவரி கிடைத்து விட்டது.
பல்கீஸின் நடுநிசிப் பிரார்த்தனை பலித்தே
விட்டது.
மொட்டை அசன்கனி சாக்கடை ஓரத்தில் துண்டுக்
காயிதத்தில் எழுதி முடித்து விட்டார். அதை எங்கேயாவது கண்ணில் படும் சிகப்புப் பெட்டியில்
போட வேண்டும்.
ஒரு பஸ் புறப்படுவதற்குச் சப்தத்துடன்
குலுங்கியது. அடியில் படுத்துக் கிடந்த பன்றி பதறித் துடித்து வெருண்டு ஓடியது.
சாக்கடை விளிம்பில் இருந்த மொட்டை அசன்கனி மீது தாவிச் சரிந்தது. மீண்டும்
துடித்தெழுந்து சாக்கடை நீருக்குள் விழுந்து தெறித்து ஓடியது.
மொட்டை அசன்கனி சிரத்தையுடன் வேப்பங்குச்சிப்
பேனாவில் மலக்காயிதத் துண்டில் எழுதிய ஏதோ ஒரு மொட்டைக் கடிதமும் சாக்கடை நீரில்
விழுந்து நகர்ந்தது.
மொட்டை அசன்கனிக்கு உயிரே போய்விட்டது. ஒரு
மொட்டைக் கடிதம் போஸ்ட் ஆகாமல் வெறுமனே போகிறதே! அதனையே வெறித்துப் பார்த்துக்
கொண்டே மூத்திரத் தரையில் சம்மணம் பொட்டு அமர்ந்து விட்டார்.
No comments:
Post a Comment