Monday, August 12, 2013

உரைச் சித்திரம் - யாசகர்களே எஜமானர்கள்!



                துன்னூன் மிஸ்ரி , எகிப்து தேசம் உலகுக்கு வழங்கிய ஞானப் பிரகாசம். மிக உயர்ந்த கல்விமான். இறைநேசர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்கள்.


                எப்போதும் பயணம் பயணம். இதே வாழ்க்கை முறையாகிப்போனது. இறைவன் தன் படைப்புகளின் மீதெல்லாம் தன் அருள் கிருபைகளை வாரி வாரி வர்ஷிக்கிறான். அதைக் கண்டு களித்து சதா நேரமும் இறை சிந்தனையில் திளைப்பதும் ஞானப் பொக்கிஷத்தை நிறைத்துக் கொள்வதும் ஒர் அரிய வாழ்க்கை நடைமுறை. இந்த எகிப்து தேசக்காரருக்குத்தான் எத்தனை எத்தனை இறையருள் அனுபவங்கள்.

                ஒவ்வொரு அனுபவமும் ஞான வெளியில் ஒரு படித்தரம். பக்குவத்தில் ஒரு ரஸ மாற்றம். அலைவது என்பது ஒரு பொழுது போக்கல்ல. பறந்து விரிந்த உலக வெளியில் படைத்தவனின் காட்சிகளைச் சந்திக்கும் மகோன்னதம்.

                தனக்குள் இருக்கும் இறைவனை, வெட்ட வெளி எங்கும் கொட்டிக் கிடக்கும் காட்சிகள் கண்ணாடியாக மாறி காட்சிப்பட வைக்கிறது. இது ஞானச் செல்வர்களுக்கு இறைவன் வழங்கும் கருணைப் பிச்சை. இந்த யாசகம் பெற்றவரே பூமிகளின் எஜமானர்கள்.

                ஒரு நாள் துன்னூன் நடக்கிறார்கள். நடைக்கு ஒரு முடிவு இன்னும் வரவில்லை. நடக்கிறார்கள். அப்படி ஒரு நடை. எதற்கும் முடிவு வந்துதானே தீர வேண்டும். அவர்கள் நடைக்கு மட்டும் அது வராமலா போகும்? அவர்களுக்கும் ஒரு நாள் முடிவு இருக்கிறது. அவர்களின் நடை என்ன அவர்களை விட மகத்தானதா?

                நடை முடிவுக்கு வந்தது. எதிரில் ஒரு அழகான ஆறு. சுழிவுகள், நெளிவுகள், கண்ணாடி போன்ற தெளிவுகள், சின்னச்சின்ன அலையடிப்புகள் இத்தனையையும் போர்த்திக் கொண்டு அந்த ஆறு சரியச் சரிய ஓடுகிறது.

     ஆற்றை கண்ட துன்னூன் அவர்களுக்கு ஒளுச் செய்ய ஆர்வம் தட்டுகிறது. ஒளுச் செய்கிறார்கள். ஒரு உடல் சுத்தம் நிறைவேறுகிறது. சுற்றும் முற்றும் பார்க்கிறார்கள்.

     சற்றுத் தள்ளி பிரமாண்டமான தோற்றத்தில் ஒரு மாளிகை. பாலைக் கொண்டு மெழுகி விட்ட நிறத்தில் பளீரென்று கண்ணைக் கூசச் செய்கிறது.

                துன்னூன் அவர்கள் மாளிகையின் மீது துளித் துளியாக ஒரு இடம் மீதமில்லாமல் தன் வழியினை அனுப்பித் துழாவுகிறார்கள். அழகு என்ற ஒரு வார்த்தை இந்த மாளிகையை விமர்சித்துவிடாது. அதற்கு மேலும் ஒரு வார்த்தையைத் தேடி அலுத்துப் போகவும் அவர்களுக்கு விருப்பமில்லை.

                மாளிகையின் மேல் ஒரு உருவம் தெரிகிறது. அதை உருவம் என்பது தவறு. மின்னலை வெள்ளி நாறில் கட்டி நிறுத்தி இருப்பது போல ஒரு பிரகாசம். உற்று நோக்குகிறார்கள். அந்த உருவமும் அவர்களை ஊடுருவிப் பார்க்கிறது.

                துன்னூன் மாளிகைக்குப் பக்கம் நகர்கிறார்கள். மாளிகையின் மேல் மாடி உருவம் இப்போது தெளிவாகத் தெரிகிறது.

                ஆடை ஆபரணங்களால் ஒரு பேரெழில் தன்னைப் பெண்ணென்று காட்டி அங்கே ஒசிந்து நிற்கிறது.

                துன்னூன் அவர்கள் அந்தப் பெண்ணைப் பார்க்கிறார்கள். ஞானத்தின் இறுக்கமான கோட்டைக் கொத்தளங்களுக்குள் லேசாக ஒரு அருகம்புல் வேர் விட்டது.

                "மங்கையே நீ யார்?"

                "துன்னூனே! உம்மைத் தொலைவில் நான் பார்த்தேன். நீர் ஓர் பைத்தியம் என்று எண்ணினேன். உமது கோலம் அப்படி. கிட்ட நெருங்கி வரும்போது கண்டேன். நீர் ஒரு அறிஞர் என்று முடிவு கட்டினேன். உம்முடைய கனிவு அப்படி இருந்தது. மிக அண்மையில் வரும்போது நோக்கினேன். நீர் ஓர் மெய்ஞ்ஞானி என்று நம்பினேன். உம்முடைய பிரகாசம் அப்படி. இப்போது கருத்தை மாற்றிக் கொண்டேன். நீர் நான் தீர்மானித்த மூவரும் அல்லர்".

                "இப்படி நீ தீர்மானிக்கக் காரணம் என்ன?"

                "நீர் பைத்தியமாக இருந்திருப்பின் ஒளுச் செய்திருக்க மாட்டீர். நீர் அறிஞராக இருந்திருப்பின் அன்னியப் பெண் என்றவுடன் அடுத்து ஏறிட்டுப் பார்த்திருக்க மாட்டீர். நீர் மெய்ஞானியாக இருந்திருப்பின் உம் கண்ணில் இறைவனைத் தவிர இந்த எழிலும் உள்ளே புகுந்திருக்க முடியாது. இந்த மூன்று பேரில் நீர் யாருமே இல்லை".

                துன்னூன் அவர்கள் நிலை தடுமாறி அதிர்ந்து போனார்கள். மாளிகையின் மேல் மாடத்தை கண்ணைக் கசக்கிவிட்டு உற்று நோக்கினார்கள். அங்கே அவள் இல்லை. மாளிகை பால் ஒழுகிய வண்ணத்தில் பளபளத்தது. மாடியில் மங்கை மட்டும் இல்லை.

                துன்னூன் எச்சரிக்கை அடைந்தார்கள். தன் உள் மனதுக்குள் உற்றுப் பார்க்கும் ஆசாபாசங்களைப் பற்றி இறைவன் அனுப்பும் எச்சரிக்கை இது என்பதை அறிந்து விழிகளில் மாலை மாலையாகக் கண்ணீரை வழிந்தோடச் செய்தார்கள்.


            து ஒரு வனாந்தரம். பரந்த வெளியில் பலதரப்பட்ட நோயாளிகள் கூட்டம். ஒருவர் கூட திடகாத்திரத்தில் இல்லை. இந்தக் கூட்டம் இன்று நேற்றல்ல, பல மாதங்களாகக் காத்துக் கிடக்கும் கோலம் தெரிகிறது.

                எங்கும் நோயாளிகளின் வேதனை ஓசைகள். முணங்கல்கள் நெடு மூச்சுகள்.

                துன்னூன் அவர்கள் நோயாளிகளின் அருகில் சென்று விசாரிக்கிறார்கள்.

                நோயாளிகள் அனைவருமே ஒரே செய்தியைத்தான் சொல்கிறார்கள்.

     "அதோ தெரிகிறதே ஒரு சிறு குன்று. அதில் ஒரு மனிதர் நுழைந்து செல்லும் அளவுள்ள  குகை இருக்கிறது. அதில் ஒரு மகா ஞானி எப்போதும் திக்ரில் இருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை வெளியே வருவார். இங்கே கூடி இருக்கும் நோயாளிகள் அனைவருக்குமாக இறைவனிடம் பிரார்த்திப்பார். பின்னர் கூட்டத்தை நோக்கி ஓதி ஊதுவார். எங்கள் நோய்கள் அந்த நிமிடமே கழன்று விழுந்து சிதறி நொறுங்கிப் போகும். அதற்காகத்தான் பல மாதங்களாக இங்கே காத்திருக்கிறோம்."

                இதுதான் நோயாளிகளின் ஏகபோக ஒரே வசனம்.

                துன்னூன் அவர்களுக்கு ஆச்சரியம். அப்படியானால் அந்த மகானின் வருகைக்கு தானும் காத்திருக்கலாம். இந்த மனிதர்கள் தேக நோயினுக்குத் தீர்வு தேடுகிறார்கள். நாம் ஞான குறைவு என்னும்  பெரு நோயினுக்கு அவரிடம் தீட்சை கேட்போம் என எண்ணுகிறார்கள். காத்திருக்கிறார்கள்.

                நோயாளிகள் காத்திருந்த நாள் வந்தது. மகான் குகையை விட்டு வெளிப்பட்டார். நோயாளிகள் கூட்டம் நோக்கி ஒரு தென்றலைப் போல குளிர வந்தார். அன்பு வழியப் பார்த்தார். இரு கரங்களை முகத்துக்கு முன்னே தலைக்கு மேலே உயர்த்திப் பிரார்த்தித்தார். நேரம் நகர்ந்தது. பிரார்த்தனை முடிந்தது. கண்களை இமைகள் மூடிச் சாத்தினார். ஏதோ ஓதினார். அதுவும் நிறைவுபெற்றது. கூட்டத்தை நோக்கி ஊதினார். ஒரு சாதாரண மனிதன் ஊதினால் அவ்வளவு காற்று அலைவரிசை வராது. அத்தனை நோயாளிகள் மீதும் அவர் ஊதிய காற்று தடவிக் கொடுத்தது.

                நோயாளிகளின் நோய் அந்தக் கணமே கரைந்து ஒழுகி விட்டது.

     மகான் வந்த வேலை முடிந்துவிட்டது. குகைக்குத் திரும்பினார்.

     துன்னூன் அவர்கள் மகானின் அருகில் சென்றார்கள். மகானின் மேலங்கியை எட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

     மகான் திரும்பி நோக்கினார். நோக்கே, ஏன் என்று கேள்வி கேட்டது.

     "தாங்கள் இந்த மக்களின் உடல் நோயை இறைவன் துணைக் கொண்டு நீக்கி விட்டீர்கள். என் ஆன்மீக நோயை இறைவனுக்காகக் குணப்படுத்திவிட்டுச் செல்லுங்கள்".

     துன்னூன் அவர்களின் இதழில் வார்த்தைகள் மெலிந்து சரிந்துச் சிதறின.

     "துன்னூனே! உமது கையை என் ஆடையை விட்டும் எடும். “என் நண்பன் தன்னுடைய மாட்சிமை மிகு அரியணையில் அமர்ந்து இதனைக் கவனித்துக் கொண்டுள்ளான். நீர் அவனைத் தவிர வேறொருவனைப்  பற்றிப் பிடித்ததை அவன் பார்க்க நேரிட்டால் உம்மை என்னிடமும், என்னை உம்மிடமும் ஒப்படைத்துவிட்டு அவன் விலகி விடுவான். பின்னர் நாம் இருவரும் ஒருவர் மற்றொருவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழிந்துப் போக வேண்டியதுதான்".

     மகான் இதற்குமேல் பேசாமல் விறுவிறுவென்று கடந்து சென்றுவிட்டார்.

     பாமரர்களுக்கு ஞானிகள் பாதை, ஞானிகளுக்கு இறைவனே ஆசான். துன்னூன் அவர்களுக்கு இந்த ஞானம் பளீச்சிட்டது. ஸ்தம்பித்து நின்றார்கள்.

     ரு நாள் கஅபாவை இடம் சுற்றி வருகிறார்கள் துன்னூன் .

     செவிக்குள் இனிமையான மதுர மொழிகளில் ஒரு பாடல் வந்து விழுகிறது.

           "நண்பனே! நீயே நன்கறிவாய்!
           உன்றன் நண்பன் யாரென்று நீயே அறிவாய்!
           உன்றன் நட்பை நானோ மறைத்தேன்!
           மறைக்க மறைக்க அது வலுவாய் ஆனது!
           இனி மேலும் மறைக்க முடியாத எல்லைக்கு
           அது வந்துவிட்டது.
           வெடித்துவிடும் போல் ஆகிறது"

     இப்படி ஒரு பாடல் துன்னூன் காதுகளைக் குளிர வைத்தது. பாடல் வந்த திசையில் பார்வையை வீசினார்கள்.

     ஒரு பெண் அழுதும் புலம்பியும் கண்ணீர்களுக்கிடையில் கானமழை பெய்து கொண்டிருந்தாள்.

     துன்னூன் நின்று கவனித்தார்கள். பெண்ணின் பாடலும் நின்றது. அவள்  இப்போது பிரார்த்திக்கிறாள்.

                "என் மீது இறங்கி என் இறைவா!
                     என்னை ஆட்கொள்வாய்!
                என்றன்மீது உனக்குள்ள அன்பின்
                     பொருட்டால் மன்னிப்பாய்!

     பெண்ணின் பிரார்த்தனை பூர்த்தியானது.

     அவளின் கண்களில் அருவி சரிந்தது.

     துன்னூனுக்கு இந்தப் பிரார்த்தனை எரிச்சலைத் தந்துவிட்டது.

     "உன் மீது எனக்குள்ள அன்பின் பொருட்டால் என்னை மன்னித்தருள்வாய்"! என்று கேட்பதுதான் மனிதர்களின் பிரார்த்தனை. இந்தப் பெண்மணி இதற்கு மாறுபட்டு "என் மீது உனக்குள்ள அன்பின் பொருட்டால் மன்னித்தருள்" என்கிறாள்.

     இது ஆணவம். திமிர். அல்லது அறியாமை.

     அந்தப் பெண்மணிக்கு அருகில் விரைந்தார்கள். "பெண்ணே! இனி இப்படி பிரார்த்திக்காதே! இறைவனின் அடிமையே! மீண்டுமொருமுறை இவ்விதம் வார்த்தையாடாதே" என்று கொதித்து நின்றார்கள்.

     "நான் உன் மீது கொண்டுள்ள அன்பின் பொருட்டு, இறைவனே! என்னை மன்னி" என இனிமேல் திருத்தமாக பிரார்த்தனை செய்".

     துன்னூன் அப்பெண்மணிக்கு பிரார்த்திக்க கற்றுக் கொடுத்தார்கள்.
    
        "பெரியவரே! பொறுமையாக நில்லும். என் பிரார்த்தனை சரிதான். அதில் நீர் தலையிடாதீரும். அல்லாஹுவுக்கும், எனக்கும் இடையில் நீர் நுழைய எத்தனிக்க வேண்டாம்" பெண்மணி அழுத்தமாகப் பதில் தந்தாள்.

     "அல்லாஹ் உன் மீது அன்பு கொண்டுள்ளான் எனக் கூறுகிறாயே அது உனக்கு எப்படித் தெரியும்?"

     பெண்மணி, துன்னூன் அவர்களை சற்று ஏறெடுத்துப் பார்த்தாள்.

     "துன்னூனே! நீர் குர்ஆனில் 'எவன் இறைவன் மீது அன்பு செலுத்துகிறானோ அவன் மீது அவனுக்கு முன்னர் இறைவன் அன்பு செலுத்துகிறான்' என்ற இந்த இறைவசனத்தை படித்ததே இல்லையா?. இதில் ஏன் உமக்கு நம்பிக்கை இல்லை. நீர் இறைவன் மீது அன்பு செலுத்துவதில் கோளாறு கொண்டுள்ளீரா? அப்படியானால் அவனும் உம் மீது அன்பு செலுத்துவதில் கோளாறு கொள்வான்".

     துன்னூன் அவர்களுக்கு கஅபாவின் முன்னால் ஞானப் பிரம்பால் சுளீரென்று அடி விழுந்தது.

     துன்னூன் வாயிலிருந்து பதில் இறங்கி வரும் சக்தியை இழந்து விட்டது.

     "பெண்ணே! நல்லது. நீ என் பெயரை எவ்வாறு அறிவாய்? இதுவரை உன் பெயரை நான் அறிந்திருக்க வில்லையே"

     "துன்னூனே! இறைவனை அறிந்திருப்பவர்களுக்கு அவனின் படைப்புகளின் பெயரை அறிவது சிரமமா?"

     பெண்மணி துன்னூன் அவர்களிடம் இதற்கு மேல் பேச விரும்பவில்லை. "உம் முகத்தை அப்பால் திருப்பும்" என்றாள். துன்னூன் திரும்பினார்கள். சிறிது கழித்து பழைய நிலைக்கு முகத்தை நேர்படுத்தினார்கள். அங்கே பெண்மணி இல்லை.

     நம்பிக்கை ஞானங்களின் மூத்த சகோதரி. துன்னூன் கஅபாவை  அண்ணாந்து பார்த்தார்கள். ஞானத்தின் பிரகாசத்துளி இதயத்துள் புகுந்ததை உணர்ந்தார்கள்.

------------------------------------------------------------------------
                உருவங்களை இறைவனாகக் கருதி வணங்கி வரும் கிழவி ஒருத்தி வாழ்ந்து வந்தாள்.

     ஒரு நாள் அவள் இல்லம் இருக்கும் வீதி வழியாகத் துன்னூன் அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

     அந்தக் கிழவி வீட்டு முற்றத்தில் பறவைகளுக்குத் தானியங்களை வாரி இறைத்துக் கொண்டிருந்தாள்.

     பறவைகள் குதூகலத்துடன் துள்ளித்தாவி அந்தத் தானியங்களைப் பொருக்கி வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தன.

     துன்னூன் இதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் எழுந்த உணர்வுகளை அடக்க முடியவில்லை.

     "இறை மறுப்பவளான உன்னிடமிருந்தெல்லாம் இறைவன் யாதொரு நன்மையையும் ஏற்றுக் கொள்ள மாட்டான்" என்று வாய்விட்டு கத்திக் கூறிக்கொண்டே சென்று விட்டார்கள்.

     அந்தக் கிழவிக்கு இது இதயத்தில் இறங்கி கத்தியானது.

     சில காலம் கழிந்த பின் ஒரு நாள் கஅபாவிற்குத் தரிசனம் தேடி துன்னூன் அவர்கள் சென்றார்கள். அங்கே அன்று பறவைகளுக்குத் தானியம் வழங்கிய கிழவியை கண்டார்கள்.

     ஆச்சரியத்தால் கிழவியிடம் "நீ எப்படி இங்கே?" எனக் கேட்டார்கள்.

     "துன்னூனே! என்ன ஆச்சரியம் வேண்டிக் கிடக்கிறது. பறவைகளுக்கு நான் வழங்கிய உணவுகளுக்கு என் மீது இக்கம் காட்டி என் இறைவன் எனக்குள் ஈமானை இறக்கிவிட்டான்".

     கிழவியின் பதில் துன்னூன் அவர்களை உறைய வைத்துவிட்டது.

     இறை நேசர்களின் பரிந்துரைக்கு இறைவனிடம் முழுமையான அங்கீகாரம் உண்டு. ஆனால், இறைவனின் தீர்மானங்களை இறை நேசர்களால் உருவாக்க முடியாது.

     இந்தப் பெரிய ஞானத்தின் பிரகாசம் துன்னூன் அவர்களை முழுமையாகச் சூழ்ந்தது.





     துன்னூன்  அவர்களால் இனிமேல் எதிலும் முந்திக் கொண்டு எதனையும் தீர்மானிக்க முடியாது.

No comments:

Post a Comment