Wednesday, August 7, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–12


இரவில் வந்த இரட்டை தந்தி!


சென்னை எனக்கு முதற் பரிட்சயம் 1956 ஆம் ஆண்டு.

அல்லாமா .கா. அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் நிறுவிய மணிவிளக்கில் ஆசிரியர் குழுவில் எங்கள் தந்தையார் பணியாற்ற தென்காசியிலிருந்து சென்னை வந்தார்கள்.

நான், எனக்கு நேர் மூத்த அண்ணன் முஹம்மது பிலால், என் தாயார், எங்கள் தந்தையார் நான்கு பேரும் சென்னையில் வாழ்வதற்காக 1956 ஆம் ஆண்டு சென்னைக்கு குடிபெயர்ந்தோம்.

மண்ணடி செம்புதாஸ் தெருவில் அப்போது செங்கோட்டை ஹசன் அண்ணன் ஒரு முழு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தார். அந்த வீட்டின் மாடியில் ஹசன் அண்ணன் குடும்பமும், கீழ்ப் புறத்தில் நாங்களும் குடியிருந்தோம். மணிவிளக்கு அலுவலகம் அங்கப்ப நாயக்கன் தெருவில் இருந்தது.

என் மூத்த அண்ணன் நத்தர் பாவா ஜலால், அடுத்த அண்ணன் அப்துல் ரஹ்மான் பாரூக் இருவரும் திருநெல்வேலி ஹைகிரவுண்டில் இருந்த எங்கள் சின்ன தாதா மு.. முஹம்மது சாஹிப் கண்காணிப்பில் எங்கள் மாமி ,காதர் ஹைருன்னிஷா பீவி அவர்கள் அரவணைப்பில், சின்ன வாப்பா ஜமால் முஹம்மது சாஹிப் அவர்கள் கண்டிப்பில் வளர்ந்து வந்தார்கள்.

சென்னை தம்பு செட்டி தெருவில் இருந்த ஒரு ஆரம்ப பாடசாலையில் நானும் என் அண்ணன் பிலாலும் சேர்க்கப் பட்டோம். ஆனால் இந்த வாழ்க்கை ஓராண்டு காலம்தான் நீடித்தது.

மணிவிளக்கு அலுவலகத்தை இப்பொழுது நினைத்தாலும் பசுமையான நினைவுகள் எனக்குள் இருக்கிறது.

மணிவிளக்கு அலுவலகத்தின் மாடியில் அல்லாமா பாக்கவி அவர்களின் துணைவியார் தாதியம்மா இருந்தார்கள். நாங்கள் இப்படித்தான் அவர்களை அழைப்போம். தாதியம்மாவின் மூத்த மகனார் அப்துல்லா பாய் காரைக்காலில் இருந்து அடிக்கடி வந்து செல்வார்கள்.

சமது பாய் தாயாருடனேயே மணிவிளக்கு மாடியில் தங்கி இருந்தார்கள். அப்போது அவருக்கு திருமணம் ஆகி இருக்க வில்லை. அவரின் தம்பி அஹமது இப்ராஹிம். இப்படி அவர் பெயரைச் சொன்னால் அன்று எங்களுக்கு தெரியாது. ஆமு பாய் என்றால் உடனே தெரிந்து விடும்.

சமது பாய் அவர்களின் கடைக்குட்டித் தம்பி யஹ்யா அண்ணன். இவர்கள் எல்லாம் அந்த இளம் வயதிலேயே என் மனதில் பதிந்து இருந்தார்கள்.

அல்லாமா அவர்களின் மற்றொரு மனைவியார் மகன், அஹது பாய் அவர்களும் இவர்களோடு இணைந்து நினைவில் இருக்கிறார்.

அல்லாமா அவர்களின் துணைவியார் தாதியம்மாவின் தோற்றம் அப்படியே என் மனத் திரையில், இதை எழுதிக் கொண்டிருக்கும் இப்பொழுதும் என் நினைவுக்கு வருகிறது.

நல்ல ரோஸ் கலந்த வெள்ளை நிறம். சற்று பூரிப்பான தேகம். வயோதிகமான அந்த நேரத்திலும் அவர்களின் கண்களில் ஒரு பிரகாசம் தெரியும். அவர்கள் முகம் சற்று வட்ட வடிவமாக எழில் மயமாய் தோற்றம் தரும். தாதியம்மாவின் புன்னகை வசீகரமானது. எதிரில் இருப்பவர்களை மதிக்கச் செய்யும் வெளிச்சமானது.

அதே புன்னகை, இவ்வளவு ஆழமாக இன்றும் என் மனதில் பதிந்து இருப்பதற்கு காரணம், சமது பாய் அவர்களின் புன்சிரிப்பு, தாதியம்மா அவருக்கு தந்துதவிய தர்மம். என்னுடைய அவ்வளவு அறியாத இளம் பிராயத்து காலத்து பார்வை இப்பொழுதும் என்னில் தெளிவாக இருப்பதற்கு சமது பாயின் தோற்றம்தான் காரணம்.

தாதியம்மாவின் கடைசி புதல்வர் யஹ்யா அண்ணன், பள்ளிகூட மாணவர். சமயங்களில் என்னையும் என் அண்ணன் பிலாலையும் செம்புதாஸ் தெருவிலிருந்து அங்கப்ப நாயக்கன் தெருவுக்கு சைக்கிளில் வைத்து அழைத்து செல்வார்.

இந்த அழைத்துச் செல்லல் நிகழும் போது, எங்களுக்கு ஆனந்தமாக இருக்கும். ஏனென்றால் தாதியம்மாவின் அழைப்பினால் நாங்கள் அழைத்து செல்லப் படுகிறோம். எதற்கு தெரியுமா? இளம் கன்று மாமிசம் பொறிக்கப் பட்டு அங்கே தயாராக இருக்கிறது என்று அர்த்தம். இந்த கறிப் பொரியலின் ருசி ரகசியம் தாதியம்மாவின் உள்ளங்கைக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு நாள் இரவு, நடு இரவாகத் தான் இருக்கும். மணி எல்லாம் அப்போது பார்க்கத் தெரியாது. செம்புதாஸ் தெரு வீட்டில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கும் எங்களை தந்தி அலுவலர் சத்தம் கொடுத்து எழுப்புகிறார். தந்தி வந்திருக்கிறது. எங்கள் தாயாரின் தந்தையார் முஹம்மது முஸ்தபா சாஹிப் தென்காசியில் இறை நாட்டப்படி அவனளவில் சென்று சேர்ந்த செய்தி அதில் இருதது.

அமைதி குலைந்து விட்டது. ஒருமணி நேரம் சென்று இருக்கும். அந்த இரவிலேயே மீண்டும் தந்திக்காரர் வந்து நிற்கிறார். சமது பாயின் தங்கை, அதாவது தாதியம்மாவின் ஒரே மகள், காரைக்காலில் இறை நாட்டப் படி அவனிடம் சென்ற செய்தி, இரண்டாவது தந்தியில் இருந்தது.

மறுநாள், நான், என் அண்ணன், என் தாயார் தென்காசிக்கு புறப்பட்டு விட்டோம். எங்கள் தந்தையார் காரைக்காலுக்கு சென்று விட்டார்கள்.

தென்காசிக்கு வந்த நாங்கள் தென்காசியிலேயே தங்கி விட்டோம். எங்கள் தந்தையார் சென்னையில் இருந்தார்கள். தென்காசிக்கு வந்து போவது அவர்களின் வாடிக்கையாக இருந்தது.

ஐந்தாண்டுகள் கடந்தன. 1962 ஆம் ஆண்டு மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான தேர்தல் வந்தது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்தத் தேர்தலை கூட்டணி அமைத்து சந்திப்பதென முடிவு செய்தது.

 இந்தக் கூட்டணி குரோம்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் அவர்களின் இல்லமான தயா மன்ஸிலில் முடிவானது. ராஜாஜி, அண்ணா, காயிதே மில்லத் இவர்கள் தயா மன்ஸிலில் ஏற்றுக் கொண்ட கூட்டணிப் படி களத்தில் வேட்பாளர்களை இறக்கினார்கள்.

நாகப் பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, வட சென்னை நாடாளுமன்றம், இன்னும் மூன்று தமிழக சட்டமன்ற தொகுதிகளில் முஸ்லிம் லீக் வேட்பாளர்களை நிறுத்தியது. சென்னை பாராளுமன்றத்துக்கு அப்துஸ் ஸமது சாஹிப் நிறுத்தப்பட்டார். நெல்லைத் தொகுதிக்கு காயிதே மில்லத்தின் இளவல், K.T.M. அஹமது இப்ராகிம் நிறுத்தப் பட்டார்.

தென்காசி தொகுதிக்கு என் தாதையார் A .K .ரிபாய் சாஹிப் நிறுத்தப் பட்டார். நாகப்பட்டினம் தொகுதியில் கவிஞர் சாரண பஸ்கரனார் நிறுத்தப் பட்டார். ஆனால் முஸ்லிம் லீகினுடைய அத்தனை வேட்பாளர்களும் தேர்தலில் தோல்வியைத் தான் தழுவினார்கள்.

காங்கிரஸ், அரசியல் காரணங்களை சொல்லி முஸ்லிம் லீகை சந்திக்காமல் பொய்யான மதத் துவேஷத்தை தூண்டி விட்டது. இது தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

1962 தேர்தல் முடிந்தது. மீண்டும் எங்கள் முழுக் குடும்பமும் சென்னைக்கு பயணம் ஆனது. சென்னையில் முஸ்லிம் லீகிற்கென்று ஒரு வார இதழ் தொடக்கமானது. இந்த இதழின் நிறுவனர் காயிதே மில்லத் அவர்கள். இந்த வார இதழின் ஆசிரியர் என் தந்தையார் A .K .ரிபாய் சாஹிப் அவர்கள். இந்த வார இதழின் வெளியீட்டாளர் இளையான்குடி P.N.I. அபு தாலிப் அண்ணன் அவர்கள். அந்த வார இதழ்தான் "உரிமைக் குரல்".

எங்கள் குடும்பம் சைதாப்பேட்டை ஆலந்தூர் ரோட்டில் உள்ள போலீஸ் லைன் சந்தில் ஒரு மிகப் பிரம்மாண்டமானமூன்றடுக்கு மாடிக் கொண்ட பங்களாவில் வாடகைக்கு குடியமர்ந்தது. அன்று அந்த பங்களாவிற்கு அறுநூறு ரூபாய் வாடகை. பங்களா உரிமையாளர்கள் வியட்நாம் தலைநகர் சைக்கோனில் துணி ஆலை வைத்து இருந்தார்கள்.

அவர்களின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.
என் மூத்த அண்ணன் ஜலால், நியூ காலேஜ் மாணவன், அடுத்த அண்ணன், இன்னொரு அண்ணன், நான் மண்ணடி முத்தையால் பேட்டை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். இப்போது ஒரு குட்டிப் தம்பியும் இருந்தான். அவன் முகம்மது இஸ்மாயில் ரபீக். அவன் பள்ளிக்கு செல்லும் வயதை அப்போது எட்டி இருக்க வில்லை.

உரிமைக் குரல் வார இதழ், மண்ணடி வெங்கடமேஸ்திரி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் இயங்கிக் கொண்டிருந்தது. பத்திரிகைக்கு அச்சகம் கிடையாது. அச்சுக் கோப்பு மட்டும் அங்கு நடக்கும். அரண்மனைக் கார தெரு, செங்குந்தர் முதலியார் அச்சகத்தில் உரிமைக் குரல் அச்சாகி கொண்டிருந்தது.

அநேகமாக ஒன்னரை ஆண்டுகள் வெங்கடமேஸ்திரி தெருவில் இயங்கி இருக்கலாம். மரைக்காயர் லெப்பை தெருவில் எண் எட்டு என்ற மூன்று மாடிக் கட்டிடம் வங்கி ஏலத்திற்கு வந்தது. முஸ்லிம் லீக், மாநாடு நடத்தி வசூலான தொகையில் இந்த கட்டிடத்தை ஏலத்திற்கு எடுத்துக் கொண்டது.

இதற்கு அடிப்படை காரணங்களில் ஒருவராக இருந்தவர், இன்னும் சொல்லப் போனால் முக்கியமான காரணமாகத் திகழ்ந்தவர், காயல் பட்டினத்தில் முதல் B .A . பட்டம்  பெற்றவர். B.L. சட்டப் படிப்பும் படித்திருந்தவர். அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப் பட்ட வள்ளல் B.A. காக்கா அவர்கள் தான்.

அவர்களின் பெயர் முஹம்மது தம்பி, ஆனால் அந்த பெயர் மறைந்துக் கொண்டது. காயல்பட்டினத்தின் முதல் B.A வானதினால் B.A. காக்காவாகி விட்டார்கள்.

இந்தக் கட்டிடத்தில் உரிமைக் குரல் வார இதழ் அலுவலகமும் தமிழ் நாடு மாநில முஸ்லிம் லீக் தலைமையகமும் செயல் பட தொடங்கியது. காயிதே மில்லத் வாழ்காலம் வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகமாகவும் செயல் பட்டது. இதன் பின்னர்  தான் தலைமையகம் கேரளத்திற்கு மாற்றப் பட்டது.

சைதாப் பேட்டையில் நாங்கள் குடியிருந்த காலங்களில் அடிக்கடி சனி, ஞாயிறு விடுமுறைகளில் குரோம்பேட்டைக்கு சென்று விடுவோம்.

எங்கள் தாதிக்கு எங்களை தேடிவிடும். அழைத்து வரச் சொல்லி விடுவார்கள். காயிதே மில்லத் அவர்களின் துணைவியார் தான் எங்கள் தாதி. வள்ளல் ஆடுதுறை ஜமால் முஹம்மது சாஹிபினுடைய குடும்பத்தை சார்ந்த மூத்த மகள் எங்களுடைய தந்தையாரை பெற்றெடுத்த ஜமால் பாத்திமா பீவி அவர்கள். அடுத்த மகள் எங்களுடைய சிறிய தந்தையார் ஜமால் முகம்மது சாஹிப் அவர்களின் தாயார் ஜமால் மர்யம் பீவி  அவர்கள். அடுத்த மகள் தான் ,காயிதே மில்லதுடைய துணைவியார், சின்ன வாப்பா மியாக்கானின் தாயார் ஜமால் ஹமீதா பீவி அவர்கள்.

உரிமைக் குரல் வார இதழ் 8, மரைக்காயர் லெப்பை  தெரு சொந்த கட்டிடத்திற்கு மாறி வந்து விட்டது. இந்த கட்டிடம் இன்று 35, மரைக்காயர் லெப்பை தெரு என்று மாறி உள்ளது. அன்று போல் இன்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் மாநில தலைமை அலுவலகமாக தொடர்கிறது. இந்த கட்டிடம் நடுவில் கொஞ்ச காலம் முஸ்லிம் லீக் தலைமையகமாக இல்லாமல் இருந்தது.


இந்த கட்டிடத்திற்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்த வரலாற்றுப் பதிவுகளை அடுத்துப் பார்க்கலாம்!

No comments:

Post a Comment