காவல் துறை தந்த சாட்சியம்!
தமிழகத்தில் விடுதலைக்கு பின் காவல் துறையினரால் அதிகமாக ரகசியமான முறையில் கண்காணிக்கப் பட்ட அரசியல் இயக்கங்கள் இரண்டு.
இவ்விரு இயக்கத் தலைமைகள்,
மற்றும் அவர்கள் இல்லங்கள்,
அவர்கள் சார்ந்தவர்கள் இல்லங்கள் அனைத்தும் பூரணமாக கண்காணிக்கப் பட்டன.
காவல் துறையின் ரகசிய கண்காணிப்பில் முடிவாக அவர்கள் தெரிந்து கொண்டது,
இவ்விரு இயக்கங்களைப் பற்றி வந்த அவதூறுகள்,
சந்தேகங்கள் பொய்யானவை என்ற முடிவாகத் தான் இருந்தது.
அந்த இரு இயக்கங்களில் ஒன்று பொதுவுடைமை இயக்கம்.
மற்றொன்று இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.
இந்த நாட்டை ஏதோ செய்து விட இவ்விரு இயக்கங்கள் செயல் படுவதாக அரசுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அதற்காகத் தான் இந்த கண்காணிப்பு. முடிவில் அரசு தெளிவு அடைந்தது.
தமிழகத்தில் காங்கிரஸ் பேரியக்கம், பெரும் பண முதலைகள்,
உயர் ஜாதிய அமைப்புகள், மக்கள் விரோத எண்ணங்கள் கொண்டிருப்போர் கைவசம் சிக்கிக் கொண்டது.
காங்கிரஸ் தன் தலைவிதியைத் தானே மாற்றிக் கொள்ள வாய்ப்பில்லாது சுருங்கி விட்டது.
இப்படி ஒரு சிறுமையில் காங்கிரஸ் முடங்கிப் போனதால் தமிழகத்திற்கு அதனால் இனிப் பயன் ஏற்படப் போவதில்லை.
காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெளிவானது.
ஆனாலும் காங்கிரஸ்ஸினுடைய எதிர்ப்பு உணர்வுகள் துண்டு துண்டாக சிதறிக் கிடப்பதால் காங்கிரஸ்,
ஜாம்பவான் நடைப் போடுகிறது.
இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்ற முடிவுக்கு தி.மு.க,
சுதந்திரா கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இம்மூன்றும் கூட்டாக முடிவு செய்தன.
தி.மு.க பொதுச் செயலாளர் அண்ணாதுரை,
சுதந்திரா கட்சி தலைவர் ராஜாஜி, லீக் தலைவர் காயிதே மில்லத் சந்தித்து பேசத் தலைப்பட்டனர்.
இந்த மூன்று இயக்கங்களும் கொள்கை அளவில் ஏறுக்குமாறான, பாரதூரமான தன்மைகள் கொண்டவை.
தி.க விலிருந்து பிரிந்து,
தி.மு.க தன்னை அரசியல் இயக்கமாக பிரகடனப் படுத்தியது வரலாற்றில் பிந்தைய காலத்தில்தான்.
தி.மு.க மக்கள் மத்தியில் நாத்திக கட்சி என்றுதான் பரவலாக அறியப் பட்டிருந்தது. இதற்கு காரணம் ஈரோடு ஈ.
வே.ரா.
பெரியார் பாசறைக்குள் பயின்று சமீபத்தில் வெளி வந்த அரசியல் இயக்கமாக அன்று தெரிந்தது.
சுதந்திரா கட்சி ராஜாஜி தலைமையில் தி.மு.க வுக்கு பின்னர் துவங்கப் பட்டது.
ராஜாஜி காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்த காலத்தில் ஆகப் பெரும் இந்தியப் பதவியான கவர்னர் ஜெனரல்
(ஜனாதிபதி போல) பதவி வகித்தவர்.
வங்காள கவர்னராக பொறுப்பில் இருந்தவர்.
சென்னை ராஜதானியின் முதல்வராக (பிரதமர்)
இருந்தவர். காங்கிரஸ்ஸோடு கருத்து முரண்பட்டு வெளியேறி காங்கிரஸ்சை எதிர்ப்பதற்கென்றே சுதந்திரா கட்சியை துவக்கியவர்.
சுதந்திரா கட்சி பெரும்பான்மையும் மேல் ஜாதிக்காரர்களாலும், செல்வந்தர்களாலும் நிரம்பி இருந்தது.
ராஜாஜி ஆழமான பக்திமான். சுதந்திரா கட்சியில் மேல் ஜாதி அல்லாத ஒரே ஒருவர் மட்டும் பிரபல்யமாகத் தெரிந்தார். அவர் தான்
S..S.. மாரிச்சாமி. பின்னால் ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தார்.
சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளர், சிறந்த பேச்சாளர்.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகை பொருத்தவரை பலதரப் பட்ட சந்தேகங்களோடு அரசு கண்காணித்து கொண்டிருந்தது.
இந்த முப்பெரும் தலைவர்களின் கூட்டணி ராஜதந்திரம் மிக்க சரியான அணுகுமுறையாக இருந்தது.
இந்தக் கூட்டணி காங்கிரெஸ்சை 1967 இல் குப்புறத் தள்ளியது.
காங்கிரஸ் இன்றுவரை மூச்சு பிடித்து எழவில்லை.
ஆனாலும் எந்தக் கட்சிகள் கூட்டணி சேர்ந்து தன்னை தள்ளியதோ அந்தக் கட்சிகளின் தோள்களில் தொத்திக் கொண்டு இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த முக்கூட்டணி உருவாவதற்கு தயா மன்ஸிலில் ஏராளமான திட்டங்கள் தயாரிக்கப் பட்டன.
இதன் காரணமாக காயிதே மில்லத் பலமான கண்காணிப்புக்கு உள்ளானார்கள்.
அந்தக் காலத்தில் தமிழகத்தினுடைய காவல் துறையின் உயர் பதவி ஐ.ஜி. (இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்
) என்று இருந்தது. இந்த ஐ.ஜி பொறுப்பில் பலர் இருந்தனர்.
ஆனாலும் ஐ.ஜி என்று சொன்னவுடனே தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ஒருவர் நினைவு தான் வரும். அவர் நெல்லை மாவட்டத்துக்காரர். F.E.. அருள் தான் அவர்.
கருணாநிதி முதல்வரானதின் பின்னால், காவல் துறை உயர் பதவி டி.ஜி.பி.
யானது (டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்).
இவரின் இனிஷியல் கூட பலருக்கு மறந்து ஐ.ஜி. அருள் என்றே அவரை அழைப்பார்கள். ஐ.ஜி, அருள் நேர்மையானவர். எடுக்கிற முடிவில் எந்தவிதமான கம்ப்ரமைசும் ஆகாதவர்.
தி.மு.க அமைச்சரவை அண்ணா தலைமையில் உருவாகிய காலம் வரை தமிழக ஐ.ஜி யாக அருள் இருந்தார்.
அதன் பின் மத்திய அரசுப் பணிக்கு தன்னை மாற்றிக் கொண்டார்.
அண்ணாவுக்கு ஐ.ஜி. அருள் மீது நம்பிக்கை குறைச்சல் இருந்தது.
எந்த அளவுக்கு என்றால்,
அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அண்ணா காங்கிரசுக்கு எதிர்ப்பாக மேடைகளில் ஆதாரங்களை அடுக்கிக் கொண்டிருந்த காலம்.
அந்த நிலையில் சென்னை கடற்கரையில் ஒரு பிரம்மாண்டமான தி.மு.க கூட்டம்.
அண்ணாதுரை மேடைக்கு வருகிறார்.
எதிரில் ஆயிரக் கணக்கான மக்கள் திரள். (சிலர் லட்சத்தை தாண்டி இருந்தது என்றும் சொல்லுவர்.)
மேடையில் பேச எழுந்த அண்ணா, மக்கள் திரளைப் பார்த்து
"எல்லோரும் எழுந்து நில்லுங்கள்" என்று கூறினார்.
அங்கிருந்த யாருக்கும் எதுவும் விளங்கவில்லை. ஆனாலும் மக்கள் திரளும்,
மேடையில் இருந்த மற்றத் தலைவர்களும் எழுந்து நின்றனர்.
ஒரு நிமிடம் கழித்து அண்ணா மக்கள் திரளைப் பார்த்து
"எல்லோரும் அமருங்கள்"
என்றார்.
அனைவரும் அமர்ந்தனர்.
அண்ணா பேச்சைத் துவங்கினார்.
"இந்த அண்ணா சாதாரணமானவன் தான்.
ஆனால் ஒரு பெரும் மக்கள் திரள் இந்த அண்ணாவின் பேச்சை ஏற்று எழுங்கள் என்றால் எழுந்தும்,
அமருங்கள் என்றால் அமர்ந்தும் கட்டுண்டு இருக்கக் கூடிய இந்த செயலை தமிழகத்தினுடைய ஐ.ஜியாக இருக்கும் அருள், உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதற்காகத் தான் இப்பொழுது இதை செய்து காட்டினேன்." என்று அருளுக்கு அண்ணா எச்சரிக்கை தந்தார்.
இது அண்ணாவுக்கும் ஐ.ஜிக்கும் உள்ள விவகாரம்.
ஆனால் அருள் நிச்சயமாக ஐ.ஜி பதவிக்கு முழுமையான தகுதி உள்ளவராக தன் பொறுப்பை நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தார்.
காயிதே மில்லத் மறைவுக்கு பின்னால்,
சில ஆண்டுகள் கழித்து,
சென்னை கலைவாணர் அரங்கத்தில் காயிதே மில்லத் நினைவுக் கூட்டத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது.
இந்தக் கூட்டத்திற்கு அருள் அழைக்கப் பட்டார்.
அப்போது அருள், பதவி ஓய்வுப் பெற்றிருந்தார். இந்த காயிதே மில்லத் நினைவுக் கூடத்திற்கு அருள் வர ஒப்புக் கொண்டார்.
அந்தக் கூட்டத்தில் ஐ.ஜி. சொன்ன செய்திதான் சரித்திரச் சான்றாகப் பதிவு செய்ய வேண்டிய ஒன்று.
"நான் காவல் துறையின் உயர்ந்த பதவியில் தமிழகத்தில் பணி புரிந்தவன். இன்று பதவி ஓய்வில் இருப்பவன்.
நான் எப்பொழுதும் என் பொறுப்புக்கு விசுவாசமாக நடந்துக் கொள்ள கூடியவன்.
நான் இங்கே சொல்வது இதுவரை தமிழகம் அறிந்திருக்க வாய்ப்பு இல்லாதது.
ஆனாலும் அது உண்மையானது. இப்படி நான் பொது மேடையில் இதைச் சொல்வதால் காவல் துறையின் ரகசியத்தை வெளியிட்டு விட்டேன் என்று எவரும் தவறாக புரிந்துக் கொள்ள வேண்டாம்.
நான் இங்கே சொல்லும் செய்தி,
மக்களுக்கு தெரிய வேண்டிய உன்னதமான தகவல்தான்.
முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.
அந்தத் தேவை காவல்துறைக்கு நிச்சயம் இருந்தது.
ஒரு குழுவே முஹம்மது இஸ்மாயிலை கண்காணிக்கத் துவங்கியது. அவருடைய எந்த ஒரு சிறு அசைவு கூட எங்கள் கண்ணை விட்டு மறைந்து விடாத அளவு முழு நேரம் விழித்திருந்து கண்காணித்தோம்.
ஒரு சின்ன அப்பழுக்குக் கூட அவர் செயலில் எங்கள் துறை காணவில்லை.
ஒரு உதாரணம்.
முஹம்மது இஸ்மாயில் சாஹிப் சென்னையில் இருக்கும் காலத்தில், சென்னை மண்ணடியில் உள்ள தலைமையகத்திற்கு மாலை சென்று விடுவார்.
இரவில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரும் மின்சார ரயில் வண்டியில் திரும்புவார்.
இவை அனைத்தும் எங்கள் விழிகளுக்குள் தான் நடைப் பெற்றன.
இது அவருக்கு தெரியாது.
இரவு கடைசி வண்டியில் குரோம்பேட்டை வரும் அவர்,
ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி, மேம்பாலத்தில் ஏறி, தெருப் பக்கம் இறங்கி சற்று தொலைவு தள்ளி இருக்கும் அவர் வீட்டிற்கு நடந்து செல்வார்.
அநேகமாக குரோம்பேட்டை மேம்பாலத்தை காலையில் கூட அநேகம் பேர் பயன்படுத்துவதில்லை.
ரயில் நிலையத்திலிருந்து தண்டவாளம் வழி நடந்து,
ரயில்வே கேட்டை கிராஸ் பண்ணி சென்றால் அதுதான் சுலபமான வழி.
சட்ட விதிப் படி, தண்டவாளம் வழி நடக்கக் கூடாது.
இந்த சின்ன விதியைக் கூட அர்த்த ராத்திரியில் யாரும் இல்லாத நேரத்தில் தனியே கடை பிடித்து,
அந்த வயோதிகத்திலும் படியேறி சென்ற முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் நேர்மையைக் கண்டு, நாங்களே பிரமித்து இருக்கிறோம்.
அவர் கடைப் பிடித்தது, மனிதர்களுக்காக மட்டும் அல்ல.
இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையோடு கடைப் பிடித்து இருக்கிறார்"
என்று அருள், அன்று மேடையில் சாட்சியம் கூறினார்.
தயா மன்ஸில், பல நிகழ்வுகளை பதிவு செய்து இருக்கிறது.
காயிதே மில்லத் உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டு இருந்த கடைசி காலம்,
முதல் பேத்தி ஹிப்பத் பாத்திமாவிற்கு திருமணம் செய்து பார்க்க ஆவல் கொண்டார்கள்.
அந்த நேரம் ஹிப்பத் பாத்திமா M.B.B.S இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார்.
என்னுடைய தந்தையார் A..K.. ரிபாய் சாஹிபையும், மியான் கான் சாஹிபையும் (இருவரும் ஒன்று விட்ட சகோதரர்கள்) அழைத்து தன்னுடைய முடிவைத் தெரிவித்தார்கள்.
உடனடியாக நெல்லையில் இருந்த எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிபுக்கு தகவல் அனுப்பப் பட்டது.
திருமணம் திடீரென்று உடனடியாகவும் முடிவு செய்யப் பட்டது.
A..K.. ரிபாய் சாஹிபின் மூத்த மகனார்,
நத்தார் பாவா ஜலாலுக்கு,
ஹிப்பத் பாத்திமா மணமகள் ஆக்கப் பட்டார்.
நத்தர் பாவா ஜலால்,
வேளாண்துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
இந்தத் திருமணம் தயா மன்ஸிலில் தான் நடந்தது.
இந்த திருமணத்தை விமர்சையாக நடத்த வேண்டிய அவசியம் இரு பக்கத்துக்கும் இல்லை.
எளிமையாக நடத்த காயிதே மில்லத் முடிவு செய்தார்கள். ஆனாலும் நடந்தது என்னமோ பெரிதாகி விட்டது.
கேரளத்து தலைவர்கள் முஸ்லிம் லீக் அமைச்சர்கள், அகில இந்தியத்திலிருந்து தலைவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அமைச்சர்கள், தமிழக லீக் தலைவர்கள், பிற இயக்கத் தலைவர்கள், தமிழக கவர்னர் எனப் பட்டியல் வலுத்து விட்டது.
தயா மன்ஸிலில் நடந்த, காயிதே மில்லத் கண்டு களித்த முதலும் கடைசியுமான திருமணம் இதுதான்.
இந்தக் கால கட்டங்களில் நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இந்தத் திருமண தகவல் எனக்கே திருமணதிற்கு இரண்டு தினங்களுக்கு முன்தான் கவிஞர் தா. காசிமால் தெரிந்தது.
நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
சென்னை செல்லும் சிந்தனையும் அப்போது என்னிடம் இல்லை.
சிதம்பரத்தில் என் நண்பர்களிடமும் இதை சொல்லவில்லை. எப்படியோ என்னுடைய இனிய நண்பன் அழகு பாண்டியன் இதை அறிந்து விட்டான். பேராசிரியர் உளுந்தூர்ப் பேட்டை ஷண்முகத்திடம் சென்று
"ஹிலால் அண்ணனுக்கு நாளை மறுநாள் சென்னையில் திருமணம், ஆனால் இவன் யாருக்கும் இதை சொல்லவில்லை"
என்று தெரியப் படுத்தினான்.
திருமணத்திற்கு முதல் நாள் எல்லா தினசரி பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. ஐயா பேட்டையார், பாண்டியனை எனக்கு கண்காணிப்பாக போட்டு எங்கள் இருவரையும் அவர் பணத்தில் சென்னைக்கு அனுப்பினார்.
நாங்கள் நேரே தயா மன்ஸில் வந்தோம்.
இரவு ஏழு மணிக்கு திருமணம் நிகழ்ந்தது. நான் அப்போது தற்செயலாக கருப்பு சட்டை அணிந்து இருந்தேன்.
ஏற்கனவே அங்கே நிறைய தி.க காரர்களும் வந்திருந்தார்கள். (நான் தி.க காரனாக எப்போதும் இருந்தது இல்லை)
அவர்களில் ஒருவராக என்னை நினைத்துக் கொண்டு தமிழக காவல்துறை இட நெருக்கடி காரணமாக என்னையும் பாண்டியனையும் வெளியே நிறுத்தி விட்டது.
நாங்கள் உள்ளே போக முடியவில்லை.
பாண்டியன் "டேய் இது உன் அண்ணன் கல்யாணம் தானே?
சந்தேகம் இல்லையே?" என்று நையாண்டித் தனமாக கேட்டான்.
திடீரென்று கூட்ட நெரிசல் அங்கே முண்டியடித்தது. மேலும் நாங்கள் பின்னுக்கு தள்ளப் பட்டோம்.
அப்படியே திரும்பி மெயின் ரோட்டுக்கு வந்து விழுப்புரம் பஸ் ஏறி சென்று விட்டோம்.
என் அண்ணன் திருமணத்தையும் பார்க்கவில்லை, திருமண விருந்தையும் அருந்தவில்லை. எங்களுக்கென்று அடிக்கடி கிடைக்கும் டீயையும் பண்ணையும் பருகி விட்டு திரும்ப வந்து சேர்ந்தோம்.
காயிதே மில்லத் இந்த திருமணம் முடிந்த சில நாளில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்கள். மீண்டும் தயா மன்ஸிலுக்கு அவர்கள் வரவில்லை.
No comments:
Post a Comment