Thursday, August 1, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–10

விதிப் பயனோ, வினைப் பயனோ!


அண்ணாமலையில் தமிழ்த் துறையில் அதுவரை இருந்து வந்த ஆசிரியப் பயிற்சிப் பிரிவு நான் புலவர் முடித்த ஆண்டில் கல்வித் துறைக்கு மாற்றப் பட்டது. கல்வித் துறையுடைய பேராசிரியராக குமரி மாவட்டதைச் சார்ந்த கல்வியியல் அறிஞர் பேரா K. K. பிள்ளை பணியாற்றி வந்தார்.


மிகச் சிறந்த மேதை. நல்ல நிர்வாகி.


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல் மற்றும் இரண்டாவது வகுப்பு மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் உறுதியாக உண்டு. பிற பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு மதிப்பெண் பெற்றவர்களுக்கே இடம் உண்டு என்று அண்ணாமலை சிண்டிகேட் விதி வகுத்திருந்தது.


நாங்கள் படிக்கும்போது தமிழ் நாட்டில் மூன்றே பல்கலைக் கழகங்கள் தாம். சென்னை பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம். சென்னைப் பல்கலைக் கழகம் முந்தையது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அடுத்தது. மூன்றாவதாக அப்போதுதான் முளைத்திருந்தது மதுரைப் பல்கலைக் கழகம்.


இந்த விதிமுறைப்படி தமிழ்த் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற நானும், என் வகுப்பு தோழர்கள் பிறரும் ஆசிரியப் பயிற்சித் துறைக்கு விண்ணப்பித்து இருந்தோம். வெளிப் பல்கலைக் கழகத்தின் தகுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பித்து இருந்தார்கள்.


தேர்வு செய்யப் பெற்ற மாணவர் பட்டியல் வெளியானது. அது முதல் பட்டியல். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்ற தகுதி உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் பட்டு இருந்தனர். வெளிப் பல்கலைக் கழகங்களின் மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் பட்டியல் இரண்டாவதாக வரும் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது.


முதல் பட்டியலில் என் பெயர் வரவில்லை. அதாவது, அண்ணாமலையில் தங்கப் பதக்கம் பெற்றவனுக்கு அண்ணாமலையில் மேற்படிப்பு படிக்க தகுதி இல்லை என்பது போல் இருந்தது அது.


என்னை விடவும், என் இனிய நண்பர்களாகவே நீடித்துக் கொண்டிருக்கக் கூடிய என் வகுப்பறைத் தோழர்கள் மாப்பிள்ளை கலைமணி, தம்பி ராமானுஜம், நண்பர் பன்னீர்செல்வம் போன்றோர்களுக்கு அதிகக் கோபம் வந்து விட்டது. ஆனால் அவர்கள் பெயரெல்லாம் அந்த பட்டியலில் இருந்தது.


அவர்கள் என்னிடம் ஓடி வந்தார்கள்.


"ஆசிரயர் பயிற்சிக்கு நீ மனுப் போட்டிருந்தாய் அல்லவா? அந்த மனுவோடு இணைத்திருந்த அக்னாலேட்ஜ்மெண்ட் கார்டு வந்திருந்தது அல்லவா?" என்று கேட்டார்கள். 


அப்பொழுதுதான் என் அறையில் அதை நாங்கள் அனைவரும் தேட ஆரம்பித்தோம்.


என் அறையில் எந்தப் பொருளையும் லேசில் கண்டெடுத்து விட முடியாது. அறை முழுவதும் இலக்கியம்,தற்கால கவிதை, நாவல்,சமூக இயல் அரசியல், தத்துவம், மாத இதழ், வார இதழ், நாளிதழ் போன்றவைகள் குவியல் குவியலாக கிடக்கும். இவற்றில் ஒரு நாளிதழை விரித்து ஏதாவது ஒரு தடிப் புத்தக நூலை தலையணையாக வைத்துக் கொண்டு தூங்குவது தான் எங்கள் வழக்கம்.


நானும் என் கெழு தகை நண்பர் ஆல்பன்ஸ் நதானியலும் (என்னைவிட ஐந்தாண்டு காலம் மூத்தவர் - நாகர்கோயில் பயோனியர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி தற்போது ஓய்வில் இருப்பவர்) இப்படித் தூங்குவதில் வல்லவர்கள். 


கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நாங்கள் தேடினோம். மதுரை தமிழ் சங்கம் 1929 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்த தனிப் பாடல் திரட்டு என்ற ஒரு பழமையான, இரண்டு தலையணைகளை ஒன்றாக்கி வைத்தது போன்ற ஒரு தடித்த புத்தகம் என்னிடம் உண்டு. அதற்குள் அந்த அக்னாலட்ஜ்மென்ட் கார்டு புகுந்து இருந்தது.


வாஸ்கோடகாமா கண்டுபிடிப்பை விட எங்கள் கண்டுபிடிப்பு மேலானது அந்த நேரத்தில்.


அதை எடுத்துக் கொண்ட நாங்கள் அனைவரும் தில்லை வாகீச நகரில் குடியிருந்த உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் ஐயா இல்லத்திற்கு போனோம். செய்தி சொன்னோம்.


அவ்வளவுதான் ஐயா சுனாமி ஆட்டம் ஆடி விட்டார். அப்போதும் அவர் அண்ணாமலைப் பேராசிரியர் தாம். உடனே நண்பன் தட்சிணாமூர்த்தியை வரச் சொல்லி அண்ணாமலை அட்மினிஸ்ட்ரேஷன் அலுவலகத்துக்கு முன், சர்.அண்ணாமலை செட்டியார் இருபது, இருபத்தி ஒன்று அடி உயரத்தில் சிலையாக நின்று இருப்பார். அவரைச் சுற்றி ஒரு அழகான குட்டிப் பூங்கா இருக்கும். அதில் ஒரு டெண்ட் அடிக்க ஆள்களை அழைத்து வரச் சொன்னார்.


நாளைக் காலை நான் அங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்என்றார்.


அண்ணாமலைப் பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவர், பல்கலைக் கழக நிர்வாகத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பது முறையல்ல, அதுவும் ஒரு மாணவனுக்காக இதைச் செய்வது நிச்சயம் விதி முறை மீறலாகும்.


எல்லோரும் எடுத்துச் சொல்லித் தடுத்தோம். ஐயா முடிவெடுத்து விட்டால் முரண்டு பிடிப்பதை நிறுத்த மாட்டார். 


"நான் பேராசிரியராக சென்று அமரவில்லை. ஹிலால் முஸ்தபாவிற்கு நான் தான் கார்டியன். எனவே கார்டியனாக சென்று அமரப் போகிறேன்" என்று சட்ட விளக்கம் தந்தார்.

"பிரச்சினை எதுவாக இருந்தாலும் நான் ஏற்க தயார்" என்றார்.


எனக்கிதில் உடன்பாடு இல்லை. 


"ஐயா ஒருநாள் பொறுங்கள். நான் நாளை பதிவாளரிடம் போய் பிரச்சினை பற்றிக் கேட்கிறேன். அவர் முடிவைத் தெரிந்துக் கொண்டு, அதற்குப் பின் ஒரு முடிவெடுப்போம்" என்றேன்.


இந்த முடிவை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டோம்.


மறுநாள் அக்னாலட்ஜ்மென்ட் கார்டை எடுத்துக் கொண்டு பதிவாளர் அலுவலகத்திற்கு நான் சென்றேன். பதிவாளரிடம் முறையிட்டேன். அக்னாலட்ஜ்மென்ட் கார்டை காட்ட வில்லை. கார்டை காட்ட வேண்டாம் என்று ஐயா சொல்லி அனுப்பி இருந்தார். ஆனால் கார்டு என் கை வசம் தான் இருந்தது.


பதிவாளருக்கு, என் முகம் மறப்பதற்கு வாய்ப்பே இல்லை. என்னைப் பார்த்து "நாளைக்கு வா" என்று சொல்லி அனுப்பினார்.

மறுநாள் சென்றேன்.


"தமிழ்த் துறையில் நீ தங்கப் பதக்கம் வாங்கி இருப்பது சரிதான். ஆனால் நாங்கள் உன் வீடு தேடி வந்து இடம் தர மாட்டோம். நீ உரிய காலத்தில் மனு போட்டிருக்க வேண்டும். உன் மனு பரிசீலிக்கும் மனுக்களில் இல்லை. அதனால்தான் உனக்கு இடம் கிடைக்கவில்லை" என்றார் பதிவாளர்.


நான் அக்னால்ட்ஜ்மென்ட் கார்டை எடுத்து அவர்முன் வைத்தேன். பார்த்த பதிவாளார் அதிர்ந்து போனார். அந்த அதிர்வு நிச்சயமாக நூறு சதவீத உண்மையை வெளிப் படுத்தியது.


இந்தத் தவறில், பிழையில் அல்லது பித்தலாட்டத்தில் பதிவாளருக்கு சம்மந்தம் இல்லை. இது நூறு சதவீதம் உண்மைதான்.


யாரோ ஒரு அதிமேதாவி இந்தக் குற்றத்தை செய்து இருக்கிறார். மறுநாள் மீண்டும் என்னை வரச் சொன்னார்கள். மறுநாளும் போனேன். பதிவாளர், "சரி, ஒரு மனு எழுதித் தா" என்று கேட்டார்.


நான் மறுத்துவிட்டேன்.


"ஐயா நான் இப்போது மனு தந்தால், அது எனக்கு எதிராக அமைந்துவிடும்" என்றேன்.


என்னை வெளியில் உட்காரச் சொல்லிவிட்டு, உள்ளே யார் யாரெல்லாமோ கூடிக் கூடி பேசினார்கள். ஒன்னரை அல்லது இரண்டு மணி நேரம் கழித்து பதிவாளர் என்னை அறைக்குள் அழைத்தார்.


"சரி தம்பி, இரண்டாவது லிஸ்ட் இன்னும் பத்து நாளில் போடுவோம். அதில் உன் பெயரைச் சேர்த்துக் கொள்கிறோம்" என குழைவாக பேசினார்.


"சரி தம்பி அந்த அக்னால்ட்ஜ்மென்ட் கார்டை தந்துவிட்டு போ" என்றார்.


நான், "அது சரிப்பட்டு வராது ஐயா" என்று கூறி விட்டு வந்து விட்டேன்.


எங்கள் ஐயாவிடம் வந்து செய்தி சொன்னேன். அவர் மீண்டும் கோபத்தின் உச்சிக்கு போய் விட்டார். 


"அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தந்த தங்கப் பதக்கத்துக்கு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலேயே இரண்டாவது லிஸ்டில் தான் இடம் என்றால், இது எவ்வளவு பெரிய கேவலம்?" என பிரச்சினையின் வீரியத்தை சுட்டிக் காட்டினார்.


நான்கைந்து நாட்கள் எல்லோரும் உட்கார்ந்து ஆலோசித்தோம். இதற்கிடையில் வகுப்பு நடைபெற தொடங்கிவிட்டது. 


கல்வித் துறையில் என் பிரச்சினை ஏகத்துக்கும் பேச்சுப் பொருளாக மாறி விட்டது. நான் துறைக்குள் வரவே இல்லை. அதுக்குள் தொல்லைக்குள் மாட்டிக் கொண்டேன்.


தமிழில் ஒரு சொலவடை உண்டு 


"விதிப் பயனோ, வினைப் பயனோ" என்பதுதான் அது.


நான் எதுவும் செய்யாமலேயே நானே பிரச்சினையாகிக் கொள்கிறேன்.


ஐயா வீட்டில் நடந்த ஆலோசனையில் ஒரு முடிவு எடுக்கப் பட்டது. இரண்டாவது பட்டியல் என்பது கூடாது. முதல் பட்டியலில் தவறு நடந்து விட்டது. எனவே தனியாக ஹிலால் முஸ்தபா பெயரை பதித்து சிறப்புப் பட்டியல் வெளிவர வேண்டும். அதற்குப் பின் இரண்டாம் பட்டியல் வரவேண்டும். என முடிவானது.


கல்வித் துறையின் பேராசிரியராகப் பணி புரிந்த, பேராசிரியர் டாக்டர். சுந்தர ராஜன் தான் இந்த ஆலோசனையை சொன்னார். பேராசிரியரை எனக்கு துளிக் கூட தெரியாது. ஆனால் சண்முகம் ஐயாவின் நெருக்கமான நண்பர் அவர்.


இந்த முடிவுப்படி நான் பதிவாளரை போய் பார்த்தேன்.

பதிவாளர், “அப்படி ஒரு பட்டியல் வெளியிட முடியாது. அந்த அதிகாரம் எனக்கில்லை,இரண்டாவது பட்டியலில் சேர்க்க என்னால் முடியும்" என்றார்.


நான் உறுதியாக மறுத்து விட்டேன்.


என்னுடைய கார்டியன் பேரா .உளுந்தூர்ப் பேட்டை சண்முகம், "இதற்கு நிர்வாகம் உடன்பட வில்லை என்றால், நாம் உயர்நீதி மன்றம் செல்லலாம் என்றார்கள்" என சொன்னேன்.

"இப்படி ஒரு சிறப்புப் பட்டியல் போட வேண்டும் என்றால், சிண்டிகேட் பார்வைக்கு இது செல்ல வேண்டும்" என்றார் பதிவாளர்.


"ஐயா அது உங்கள் பிரச்சினை" என்றேன் நான். திரும்ப வந்து விட்டேன்.


ஐயாவிடம் வந்து இந்த நிகழ்ச்சிகளை சொன்னேன். பேராசிரியர் சுந்தர ராஜனும், ஐயாவும் கொஞ்சம் பொறுத்திருப்போம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.


வந்திருக்க வேண்டிய இரண்டாம் பட்டியல் வராமல் நிறுத்தப் பட்டது. கிட்டத் தட்ட இருபத்தைந்து நாட்கள் சென்று விட்டன.


ஒரு நாள் என் பெயர் மட்டும் பொறித்து, ஒரு தனிப் பட்டியல், அட்மினிஸ்ட்ரேஷன் நோட்டீஸ் போர்டில் ஓட்டப் பட்டது. அடுத்த நாள் இரண்டாம் பட்டியலும் ஓட்டப் பட்டது.


நிர்வாகத்துக்குள் என்ன நடந்ததோ, அதுதான் உண்மையில் சிதம்பர ரகசியம்.


பேராசிரியர் சுந்தர ராஜனைப் பற்றி ஒரு சின்னக் குறிப்பு இங்கு சொல்ல வேண்டும். பேராசிரியர் சுந்தர ராஜன் அவர்கள், தில்லை வாழ் அந்தணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர் பூணூல் அணிவதில்லை. அந்த பிராமணீயத்தை அவர் அங்கீகரிக்க வில்லை. அதே நேரம் நல்ல பக்திமான். நெற்றியில் எப்போதும் குங்குமம் இட்டு இருப்பார்.


இடது பக்க கை விரல்களில் சிகரெட் புகைந்து இருக்கும்.நேர்மையான துணிச்சலான பேர்வழி.


கல்வித் துறையில் இவருக்கு எதிர் கோஷ்டி உண்டு. அவர்கள் திட்டம் போட்டு, இவரை ஒரு மாணவி விவகாரத்தில் மாட்டி விட்டார்கள். பல்கலைக் கழகத்தில் பெரிய போராட்டம் நடந்தது. இவர் கொடும்பாவி பல்கலைக் கழக வளாகத்தில் கொளுத்தப் பட்டது. 


இவருக்கு ஆதரவான ஒரு போராட்டமும் எதிர்ப் புறம் நடந்தது. சென்னை உயர்நீதி மன்றத்தில் பேராசிரியர் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதி மன்றம், பேராசிரியர் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என தீர்ப்பு வழங்கியது. அதன்பின் பல்கலைக் கழகத்தில் வந்து பணியில் மீண்டும் சேர்ந்தார்.இந்தக் கட்டத்தில் தான் என் பிரச்சினையும் அங்கு வந்தது.


இயக்குனர் இமயம் K .பாலச்சந்தர் இவருக்கு வகுப்பறை தோழர். பேராசிரியர் சுந்தர ராஜனின் இந்த சம்பவத்தைத் தான் சினிமாத் தனம் சேர்த்து, “நூற்றுக்கு நூறுஎன்ற சினிமாவை எடுத்தார்.


உள்ளபடிக்கு பேரா. சுந்தரராஜன் நூற்றுக்கு நூறு சரியான மனிதர்.



அடுத்துக் கல்வித் துறைக்குள் நான் கால் பதித்தேன்.

No comments:

Post a Comment