Sunday, August 4, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–11


.சுப.மா  வின் வாக்குமூலம்


ஒரு வழியாக அண்ணாமலை பல்கலைக் கழக கல்வித்  துறைக்குள் வந்து விட்டேன். ஓராண்டு காலம் இங்கு கடத்தியாக வேண்டும். என்னுடைய வகுப்புக்குள் நான் நுழையும் பொழுது தமிழ்த் துறையில் ஏற்கனவே என் சகாக்களாக இருந்த நிறைய பேர் உள்ளே இருந்தார்கள். சென்னை பல்கலைக் கழகத்தில் வித்வான் பட்டம் பெற்றவர்களும் புதிய முகங்களாக அங்கே இருந்தனர்.

நான் வகுப்புக்குள் வருவதற்கு முன்னே நடந்திருந்த அத்தனை களேபகரங்களையும் மாணவ, மாணவியர்கள் தெரிந்து இருந்தனர்.என்னைப் பார்த்த பார்வையில் ஒரு அந்நியத்தனம் தெரிய ஆரம்பித்து விட்டது.

"இவனை விட்டு விலகி இருப்பது, நமக்கு நல்லது." என்ற செய்திகளை அவர்களின் விழிகளில் நான் வாசித்தேன்.

பேரா. ஆடியபாதம்  அறைக்குள் நுழைந்து இருக்கையில் அமர்ந்தார். அவரை எனக்கு கடுகத்தனையும் பரிட்சயம் இல்லை.

"புதியதாக வகுப்பறைக்கு வந்திருக்கும் மாணவர் யார்?" எனக் கேட்டார் .

நான் எழுந்து நின்றேன்.

"உங்கள் பேரென்ன?" என்றார்.

"ஹிலால் முஸ்தபா" என்றேன்.

அடுத்து அவர் சொன்னது எனக்கு தலையை சுற்றியது.

"இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி, என்னை அவருக்கு தெரியும். அவரை எனக்குத் தெரியும். மற்றதைப் பிறகுப் பார்த்துக் கொள்வோம்" என்றார்.

இது என்ன? ஆரம்பமே திசை மாறிப் போகிறது என்று நினைத்தேன். எனக்குள் இருந்த முந்திக் கொள்கிற துருதுருப்பு என்னை அமைதியாக இருக்க அனுமதிக்கவில்லை.

எழுந்தேன்.

"ஐயா உங்களுக்கு என்னைத் தெரியுமா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நிச்சயமாக துளியும் தெரியாது" என்றேன்.

பேரா. ஆடியபாதம் என்னை முறைத்து பார்த்தார். இது மாதிரி பார்வைகளுக்கு நான் எப்போதும் பயப்படுவது இல்லை. ஆனால் என் சக மாணவ மாணவியர் அனைவர்களின் பார்வையும் என் மீது பதிந்தது.

அந்த பார்வைகள் எனக்கு ஏராளமான தகவல்களைத் தந்தன. என் மாப்பிள்ளை கலைமணி, தம்பி ராமானுஜத்திடம் சத்தமாகவே சொன்னான்.

'தொடங்கி விட்டது யுத்தம்" என்று.

எனக்கும் பேரா. ஆடியபாதத்துக்கும் அந்த நிமிடத்திற்கு முன்வரை எந்த பழக்கமும் கிடையாது. நான் எந்த யுத்தத்திற்கும் தயாராக இல்லை என்பது போல் அமர்ந்துவிட்டேன்.

அன்று மாலை வகுப்பு முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர், துறை அலுவலர் என் வகுப்புக்கு வந்து, என் பெயரைச் சொல்லி, பேராசிரியர்  . அழைத்து வரச் சொன்னார் என்று அழைத்தார்.

அப்போது பேரா. சுந்தர் ராஜன் வகுப்பு  நடத்திக் கொண்டிருந்தார். நான் அவர் அனுமதி பெற்று துறைத் தலைவர்  பேரா .  K .K .பிள்ளை அவர்களின் அறைக்குள் சென்று சேர்ந்தேன்.

பேராசிரியர் என்னைப் பார்த்தார். பேராசிரியரின் முகம் ஒரு நல்ல நாவலைப் போல சுவாரஸ்யமாகவும், ஆழமாகவும் இருக்கும்.

"தம்பி, இன்றுதான் நீங்கள் இந்த துறைக்கு வந்திருகிறீர்கள். இதற்கு முன் நான்காண்டுகள் தமிழ்த் துறையில் இருந்து இருகிறீர்கள். உங்களைப் பற்றி எனக்கு வந்த செய்திகளில் ஒன்றே ஒன்று நல்ல செய்தி. மீதியுள்ள எந்த செய்தியும் நல்லவிதமாக வரவில்லை. ஆனால் உங்களைப் பற்றி வந்த அந்த ஒரு நல்ல செய்தியை நான் முழுமையாக நம்புகிறேன். மீதி உள்ள அனைத்து செய்திகளையும் நான் தள்ளி விட்டேன்.

தமிழ்த் துறை தலைவர், V.SP (வ.சுப) அவர்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தேன்.

அவர் ஒரே ஒரு செய்தி தான் சொன்னார்.

தெளிவாக சண்டை போடுவான். தெளிவாக்குவதற்கே சண்டை போடுவான். என் மனசுக்கு உகப்பான, நான் விரும்பும் மாணவன் அவன். அவனைப் பற்றி வேறு என்ன தகவல்கள் உங்களுக்கு வந்திருந்தாலும் அதில் மெய்யிருக்காது என்று நம்புகிறேன்" இதுதான் .சுப சொன்ன வாக்குமூலம்.

பேரா. .சுப விடமிருந்து வாக்குமூலம் வாங்குவது மிகக் கடினம். உங்களுக்கு அது கிடைத்து இருக்கிறது. ஆனால் இங்கே உங்களால் எந்த சர்ச்சையும் வரக் கூடாது. சர்ச்சைக்குரிய சம்பவங்கள் உருவானால் நீங்கள் என்னிடம்தான் வரவேண்டும்புரிகிறதா?" என்றார் துறைத் தலைவர் K.K. பிள்ளை.

"ஐயா அப்படி என்றால், இப்பொழுதே நான் வந்துவிட்டேன்" என்றேன்.

பேராசிரியர் என்ன விஷயம் என்றார். காலையில் பேரா. ஆடியபாதத்துக்கும் எனக்கும் நடந்த அறிமுகத்தை சொன்னேன்.

"சரி, இதோடு முடித்துக் கொள்ளுங்கள். என்னிடம் சொல்லி விட்டீர்கள் அல்லவா? நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் போகலாம்" என்றார்.

வகுப்புகள்  முடிந்து, நானும், கலைமணியும், ராமானுஜமும் உளுந்தூர்ப் பேட்டை ஐயா அவர்களின் வீட்டிற்கு சென்றோம்.

நடந்ததெல்லாம் ஐயாவிடம் சொன்னோம்.

எனக்கு பின்னால் என்ன நடக்கிறதென்றே யாருக்கும் விளங்கவில்லை. பொறுத்திருப்பதை தவிர வழியில்லை. நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தன. நான் ஆடியபாதம் வகுப்பில் இருப்பதில்லை. வெளியேறி விடுவேன். இந்தப் பாணி எனக்குப் புதிது.

மோதல் ஏற்படும்போது அந்த வகுப்பில் வலிய சென்று அமர்ந்து மோதிக் கொண்டிருப்பது தான் என் பழைய பாணி. இதற்கிடையில் பேரா .சுந்தர் ராஜன் அவர்களிடம் ஒரு நல்ல ஈடுபாடு எனக்கு ஏற்பட்டு விட்டது.

நடுநடுவே சில சர்ச்சைகள் வரும். பேரா. சுந்தர் ராஜனே தலையிட்டு நகர்த்தி தள்ளி விடுவார்.


துறைத் தலைவர் பேரா. K.K.பிள்ளைக்கும் என் மீது ஒரு தனிப் பாசம் இருந்தது. இவையெல்லாம் எனக்கு ஒரு நல்ல பக்கபலம்.

ஆசிரியப் பயிற்சிக் காலத்தில் நாற்பத்தைந்து நாட்கள் சிதம்பரத்திலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியப் பயிற்சி மாணவர்களைப் பிரித்து, வகுப்பெடுக்க அனுப்பி விடுவார்கள்.

என்னோடு சேர்ந்து ஒன்பது பேர்களை  சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பினார்கள்.

என் வாழ்க்கையில் முதன் முதலாக வகுப்பெடுக்க போகிறேன். என் முதல் வகுப்பு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியின் செவன்த் சி. இந்த 'C' செக்சனுக்கும் எனக்கும் நிறைய சம்மந்தங்கள் இருக்கின்றன.

சென்னை முத்தையால் பேட்டை உயர்நிலைப் பள்ளியின் செவன்த் சி யில் தான் ஆசிரியர் மீது மாங்கொட்டை எறிந்து என் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைத்தேன். நெல்லை மாவட்டம் தென்காசி பண்பொழிலில் உயர்நிலைப் பள்ளியில் படிக்க நான் ஆசைப் பட்டு சேர்ந்த போது அதே செவன்த் சி எனக்கு ஒதுக்கப் பட்டது.

இங்கும் படிப்பைத் தொடராமல் நிறுத்துக் கொண்டேன். நான் ஆசிரியப் பயிற்சி எல்லாம் முடித்து விட்ட பின்னால் எங்கள் கிராமம் வாவா நகரத்தில் சும்மா இருந்தேன். அப்போது, செங்கோட்டையில் எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் நடுநிலைப் பள்ளி. அதில் புலவராக பணி புரிந்த அம்மையார் பேறு  காலத்திற்கு சென்றிருந்தார். அந்த லீவ் வேகன்சி இடத்தில்  அன்புக் கட்டாயத்தால் இரண்டரை மாத காலம் பணி புரிந்தேன். அங்கேயும் முதலில் நான் சென்று வகுப்பெடுத்தது செவன்த் சி.

அதன் பின்னால், சில ஆண்டுகள் கழித்து, சென்னை பெரம்பூர் ஜமாலியா மேல்நிலைப் பள்ளி. இது எங்கள் குடும்ப மேனேஜ்மெண்ட் பள்ளி. இப்பள்ளிக்கு புலவர் அலாவுதீன் இழுத்து சென்று என்னைப் பணியில் சேர்த்தார். அங்கே முதல் வகுப்பெடுக்க சென்றேன். அந்த வகுப்பும் செவன்த் சி. ஒன்னரை ஆண்டு காலம் பணிபுரிந்தேன் அங்கே.

நான் பணி புரிந்த பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புவரை பாடம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எல்லாப் பள்ளிகளிலும் செவன்த் சியிலிருந்து தான் தொடங்கி இருப்பேன். ஒரு செவன்த் சி, என் படிப்பை முடித்தது. அடுத்த செவன்த் சி என் படிப்பை தொடராமல் தடுத்தது. மற்றொரு செவன்த் சி நிரந்தரமாக என் ஆசிரியப் பணிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

ஏழரைச் சனியன் போல செவன்த் சிக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்திருக்கிறது.

நான் மறுபடியும் அண்ணாமலை கல்வித் துறைக்கு செல்கிறேன். பேராசிரியர் ஆடிய பாதத்திற்கும் எனக்கும் என்னவென்றே தெரியாமல் நிழற் சண்டைகள் இருந்தன.

தேர்வு நெருங்கி விட்டது. ஆசிரியப் பயிற்சி ப்ராக்டிகல்லுக்கு ஆவணங்கள் தயார் செய்ய வேண்டும். இந்த ஆவணங்கள் தயாரிப்புக்கும் எனக்கும் ஒத்து வராது. மாப்பிள்ளை கலைமணி அற்புதமான ஓவியன். எனக்கும் அவனுக்கும் அவனே தயார் செய்து தந்தான்.

இந்த ஆவணங்களை தேர்வுக்கு முதல் நாள், துறையில் சேர்த்து விட வேண்டும். ஒரு பேராசிரியரைப் பொறுப்பாளராக்கி ஒரு அறையில் இந்த ஆவணங்களை பூட்டி வைத்து விடுவார்கள்.

எங்களுக்கு ஆவண பொறுப்பாளராக ஆடியபாதம் நியமிக்கப் பட்டு இருந்தார்.

நான், கலைமணி, ராமானுஜம் போன்ற எங்கள் சகாக்கள் எங்கள் ரெகார்டுகளை மதியம் பன்னிரண்டு மணியளவில் சென்று கொடுத்து விட்டோம். மாலை மூன்று மணிவரை கொண்டு கொடுக்கலாம்.அதுவரை அந்த பொறுப்பாசிரியர் அந்த அறையில்தான் இருக்க வேண்டும். அதன்பின் அறையை பூட்டி சீல் வைத்து விடவேண்டும். மறுநாள் தேர்வு நடைபெறுவதற்கு முன் திறந்து விடவேண்டும்.

கிட்டத்தட்ட மதியம் இரண்டு மணியளவிலே எல்லா மாணவர்களும் கொடுத்து விட்டார்கள். ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவியர்களில் இருவர் இரண்டு மணி அளவிற்கு வந்து தந்திருக்கிறார்கள்.

அந்த இருவர்தான் கடைசி ஆள்கள். பொறுப்பிலிருந்த பேராசிரியர் அந்த இருவரையும் சற்று இருங்கள், நான் பக்கத்தில் போய் வருகிறேன் என்று அறைச் சாவியை அவர்கள் கையில் கொடுத்துவிட்டு போய் இருக்கிறார்.

மாலை நான்கு மணியாகியும் அவர் வரவில்லை. ஆவணத்தை பாதுகாக்கும் அந்த அறை கொஞ்சம் ஒதுக்குப் புறமாக இருக்கும்.

நான், கலைமணி, ராமனுஜம் இன்னும் சிலர், பெவிலியனில் போய் காற்றோட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்போம். இது வழக்கமான முறை. அங்கே போகும் வழியில்தான் ஆவணம் வைக்கும் அறை இருக்கிறது.

அந்த அறையின் வாசலில் பயந்தபடி ஹாஸ்டலில் உள்ள எங்கள் மாணவிகள் நின்று கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களிடம் சென்று ஏன் நிற்கிறீர்கள் என்று கேட்டேன்.

"பேராசிரியர் சாவியை எங்களிடம் தந்துவிட்டு, இப்பொழுது வருகிறேன் என்று சொல்லி சென்றவர், இன்னும் வரவில்லை" என்றார்கள்.

எப்பொழுது போனார்" என்று கேட்டேன்.

“இரண்டு மணிக்கு போனார்' என்றார்கள்.

“மணி இப்பொழுது நாலரை. இதற்கு மேல் இங்கே நீங்கள் நிற்பது நல்லதல்ல. சாவியை என்னிடம் கொடுத்து விட்டு நீங்கள் ஹாஸ்டலுக்கு போங்கள்என்று அனுப்பி விட்டேன்.

ஐந்து நாற்பது மணியளவில் பேராசியர் வந்தார். எங்களைப் பார்த்தவுடனே கடும் கோபத்தோடு எங்களை நோக்கி வந்தார்.

"நீங்கள் எப்படி இங்கே நிற்கலாம்?" என்று கேட்டார்.

"ஏன்? இரண்டு மாணவிகள்தான் நிற்க வேண்டுமா?"என்று கேட்டேன்.

பேராசிரியர் எங்களை முறைத்து விட்டு, என் கையிலிருந்த அறைச் சாவியை வாங்கவில்லை. பிடுங்கிக் கொண்டார்.

மறுநாள் காலை அந்த அறைக் கதவின் சீல் உடைத்து திறக்கப் பட்டது. மாணவ, மாணவியர் அனைவரும் அவரவர் வைத்த ஆவணங்களை எடுத்துக் கொண்டு பிராக்டிகல் நடக்கும் அறைக்கு செல்ல வேண்டும். எல்லோரும் எடுத்துக் கொண்டு சென்றோம். ஒரு மாணவியின் ஆவணம் மட்டும் இல்லை அங்கே. பிரச்சினை பெரிதாகி விட்டது.

துறைத் தலைவரிடம், பேரா. ஆடியபாதம்,

 “ஹிலால் முஸ்தபாதான் கடைசியாக சாவியைத் தந்தார். கூட கலைமணி, ராமனுஜம் நின்றார்கள். நான் கதவைப் பூட்டி சீல் வைத்து விட்டு வந்தேன். திறந்து பார்க்கும் பொழுது ஒரு மாணவியின் ரெகார்ட் இல்லை”.

அதாவது ஒரு மாணவியின் ரெகார்டை நாங்கள் அழித்து விட்டோம் என்பது புகார்.

நான் நேராக பேரா. சுந்தர் ராஜன் அவர்களிடம் சென்று பிரச்சனயை சொன்னேன். அவர்,

நீ ஒன்றும் செய்ய வேண்டாம். நான் இப்பொழுது நேராக புரபசர் அறையில் சென்று அமர்ந்து விடுகிறேன்.ஆடியபாதமும் அங்கு இருப்பார். உன்னை என்கொயரிக்கு அவர்கள் அழைப்பார்கள். நீ வந்து நடந்ததை அப்படியே சொல்லு. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்"என்றார்.

அதேபோல் என்கொயரிக்கு நான் உள்ளே சென்றேன். பேராசிரியர் என்னிடம் கேட்டார்

"கடைசியாக நீங்கள்தான் அறைச் சாவியை கொடுத்தீர்களா?"என்று கேட்டார்.

நான் "ஆம்" என்றேன்.

பேரா. சுந்தர் ராஜன், அமைதியாக குறிக்கிட்டு ஒரு கேள்வியை என்னைப் பார்த்து கேட்டார்கள்.

"ரெகார்ட் அறைச் சாவி மாணவர் கைக்கு வரக் கூடாதே, அது எப்படி வந்தது உங்கள் கையில்?" எனக் கேட்டார்.

நான்,"ஹாஸ்டல் மாணவியர் இருவர் பெயரைச் சொல்லி அவர்களிடம் இருந்து பெற்றேன்" என்றேன்.

உடனே பேரா. சுந்தர் ராஜன் அவர்கள் இருவரையும் அழைத்து வரச் சொல்லுங்கள் என்றார் பேராசிரியரிடம்.

அவர்கள் அழைத்து வரப் பட்டார்கள். அந்த மாணவிகள் நேற்று நடந்ததை அப்படியே சொன்னார்கள். அவ்வளவுதான் துறைத் தலைவரும், மற்றும் இரு பேராசிரியர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

எங்களை அறையை விட்டு வெளியே போக சொல்லி விட்டார்கள். நாங்களும் வந்து விட்டோம். பிராக்டிகல் தேர்வும் நடைப் பெற்று முடிந்து விட்டது.

ரெகார்ட் தொலைந்த மாணவி தேர்வு அறைக்கு வரவில்லை. ஆனால்  முதல் வகுப்பில் வெற்றி பெற்று விட்டார். ஒழுங்காக தேர்வுக்கு சென்று  இருந்தால் கூட அவருக்கு முதல் வகுப்பு கிடைத்து இருக்காது.

அண்ணாமலை கல்வித் துறை ஓராண்டு படிப்பு இப்படி முடிந்தது.

எப்படியானாலும் அண்ணாமலை பல்கலைக் கழகம், எங்களின் தாய் வீடு. அங்கே பெற்ற அனுபவங்களை பொக்கிஷங்களாக பாதுகாத்து கொண்டிருக்கிறோம்.

நாற்பதாண்டுகளுக்கு பின்னால், அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசு கையகப் படுத்தலாம் என்ற செய்தி தினத் தாள்களில் வந்த போது, நான் உண்மையாக இரண்டு, மூன்று தினங்கள் தூங்காமல் இரவை வேதனையாக கழித்தேன்.

என்னுடைய பரம்பரை சொத்து, இன்று என்னிடம் இல்லை. அதற்காக நான் வருத்தப்பட வில்லை. ஆனால் அண்ணாமலை அரசுடைமை ஆகிறது என்ற செய்தி கேட்டு, என் சொத்து பறிக்க படுகிறதே என்ற வேதனையை நான் அடைந்தேன். இது மிகையான சொல் அல்ல.


இதற்கு பின், என் வாழ்க்கை சென்னையை நோக்கி பயணித்தது. முழு நேர அரசியல் பணியில் ஈடுபட ஆரம்பித்தேன்.

No comments:

Post a Comment