Saturday, August 10, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–13


 பிரார்த்தனை கடமையாகிறது!


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையகம்  8, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை-1.

இந்த கட்டிடம் சமுதாயத்தின் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் உரிமை நிரம்பிய உணர்வோடு கலந்த அற்புத வரலாறு கொண்டது.

முகம்மது இஸ்மாயில் என்கின்ற வணிகர் குடும்பத்திற்கு உரிமையான கட்டிடம் இது. இந்த முஹம்மது இஸ்மாயில் குடும்பம் உருதை தாய்மொழியாக கொண்ட குடும்பம். இந்த குடும்பத்தினர் செய்து வந்த வணிகம் ஏனோ தெரியவில்லை பலத்த வீழ்ச்சிக்கு உள்ளாகி விட்டது. கடன் தலைக்கு மேல் கடந்து பரவியது.

மாற்று வழியாக வங்கியில் வீட்டை அடகு வைத்து தொழில் நடத்தினர். அதிலும் சேதமானது. வட்டி கட்ட முடியாத நிலையில் வீடு கடனில் மூழ்கி விட்டது. மூன்று மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீடு அது. வங்கி இறுதியில் வீட்டை ஏலத்திற்கு விட்டது.

முஸ்லிம் லீக் மாநில மாநாடு போட்டு ஒரு தொகையை கை இருப்பில் வைத்திருந்தது. இந்த இல்லத்தை ஏலத்திற்கு எடுத்தது. காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் பெயரில் தான் இந்த வீடு உரிமையாக்கப் பட்டது.

வங்கியில் இருந்து ஏலத்திற்கு எடுத்த வீட்டை கையகப் படுத்த முஸ்லிம் லீகின் சார்பாக காயல் பட்டினம் பி.. காக்கா, A.K. ரிபாய் சாஹிப், இஸ்மாயில் கனி சாஹிப், இளையனன்குடி P.N.I. அபுதாலிப் சாஹிப், காயல் ஹம்ஸா மற்றும் இன்னும் சிலர் அங்கே சென்றனர்.

சட்ட விதிப் படி அந்த கட்டிடத்தில் உள்ள எந்த பொருளும் முந்தைய உரிமையாளருக்கு சொந்தம் ஆகாது. அங்குள்ள எந்தப் பொருளையும் அவர்கள் எடுத்து செல்லக் கூடாது.

ஆனால் காயிதே  மில்லத் இப்படி சொல்லி அனுப்பி இருந்தார்கள்,
"அங்கே வாழ்ந்து தாழ்ந்து போனவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மன வேதனைகளை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மனம் நம்முடைய எந்தச் செய்கையாலும் புண்பட்டு விடக் கூடாது.

அந்த வீட்டிலிருந்து, எந்த எந்த பொருள்களை அவர்கள் எடுத்துச் செல்ல நாடுகிறார்களோ, அவற்றை எல்லாம் அவர்களை எடுத்து செல்ல, முழுவதுமாக அனுமதித்து  விடுங்கள்"
என்று காயிதே மில்லத் சொல்லி இருந்தார்கள்.

அதன் படி இஸ்மாயில் பாய் குடும்பம் எடுத்துச் செல்ல நாடிய அனைத்தையும் எடுத்து செல்ல அனுமதித்தனர் லீக் குழுமத்தினர்.

கட்டிடத்தில் இருந்த வேலைப்பாடுள்ள தேக்குக் கட்டில்கள், பெரிய பெரிய மர அலமாரிகள், சோபா செட்டுகள், டீப் பாய்கள், மின்விசிறிகள், மின் விளக்குகள், அலங்காரப் பொருட்கள் போன்ற அனைத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

அந்த கட்டிடத்தின் மாடியில் ஒரு பெரிய ஹால் உண்டு. அந்த ஹாலில் மரவேலைப் பாடுகள் பதித்த ஒரு பெரும் கண்ணாடி, கிட்டத்தட்ட ஏழு அடி உயரத்திற்கு, ஐந்தடி அகலத்திற்கு குறையாமல் பெல்ஜியம் கண்ணாடி பொருத்தப் பட்டு இருந்தது. அந்தக் குடும்பத்து பெண்கள் இதை எடுத்து செல்ல அடம் பிடித்தார்கள். யாரும் அதை தடுக்கவில்லை.

சுவரில் இருந்து அதை பெயர்த்தெடுக்கும் போது, கண்ணாடியில் கீறல் விழுந்து விட்டது. பெண்களின் வேதனை அதிகரித்து விட்டது. பெரிய கல்லினை எடுத்து வந்து, அந்தக் கண்ணாடியை சுக்குநூறாக உடைத்து விட்டனர். அந்தக் குடும்பத்தினருடைய மனவேதனை அங்கே சில்லுகளாக சிதறிக் கிடந்தன. இந்த காட்சி அங்கிருந்த அனைவரையுமே உருக்கி விட்டதாம்.

இந்தக் காட்சிகளை, காயல் ஹம்சா சொல்லக் கேட்கும் பொழுது, கேட்கிறவர்கள் விழிகள் கூட அப்போது நடந்த நிகழ்ச்சியைப் பார்ப்பது போல கண்ணீர் பொழியும்.

இத்தனைக்கு பிறகும், அவர்கள் அங்கிருந்து வெளியேறும் பொழுது ஆவேசத்துடன் தெருமண்ணை அள்ளி முஸ்லிம் லீக் குழுவினர் மீது தூக்கி வீசி, சாப மொழிகளை சரமாரியாக கொட்டிச் சென்றார்களாம்.
இந்த தோற்றங்களை யார் மனதிலும் மீண்டும் ஒரு காட்சியாக வராத வண்ணம் இறைவன் காப்பாற்றுவானாக!

ஆனால் கூடுதலாக ஒரு தகவல் இங்கு சொல்கிறேன். அன்று சாப மொழிகள் வாங்கிய அந்தக் குழுவில் இருந்த அனைவருடைய வாழ்க்கையிலும் அந்த சாப மொழியின் நிழல்கள் தொட்டு விட்டு சென்றிருக்கலாமோ என்னமோ? அவர்களின் அடுத்த சில ஆண்டு வாழ்க்கைகளில் சில போராட்டங்கள் தொடர்ந்து இருந்து இருக்கின்றன.

இவை எனக்கும் கூட கொஞ்சம் தெரியும்.

சமுதாய இயக்கத்திற்கு ஒரு தலைமையகம் கிடைத்து விட்டது.தமிழக சமுதாயத்திற்கே அதில் மகிழ்ச்சி இருந்தது.ஆனாலும் அந்த மகிழ்ச்சிக்கு கீழே ஒரு சாப நிழலும் பதிந்து இருந்து, மறைந்து இருக்கிறது.

8, மரைக்காயர் லெப்பை தெரு வீட்டுக்குள் உரிமைக் குரல் பத்திரிகை அலுவலகமும் யூனியன் முஸ்லிம் லீகின் தலைமை அலுவலகமும் ஒரு சேர செயல் பட்டன.

தமிழக மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் லீகர்களுக்கு மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடம் அடைக்கலம் தரும் அன்னை வீடானது.

எல்லா நேரங்களிலும் அங்கே கலகலப்பு இருந்தது. தன்னை அறியாமல் ஒரு முழு உரிமையோடு அங்கே இருந்த அனைவரும் நடமாடி திரிந்தார்கள்.

மாலை வேளைகளில் சென்னையில் இருக்கும் காலங்களில் எல்லாம், காயிதே மில்லத் அவர்கள் அங்கே வந்து விடுவார்கள்.

ஒரு அறிவார்ந்த திருக்கூட்டம் குழுமி இருக்கும். இந்திய அரசியலில் இருந்து உலக அரசியல் வரை அங்கே அலசப்படும்.

 காயிதே மில்லத், பி.. காக்கா, சென்னை மாவட்ட தலைவர் ஹக்கீம் முஹம்மத் இஸ்மாயில் சாஹிப் (மியாகான் சாஹிபின் மாமனார்), அப்துஸ்ஸமத் சாஹிப், .கே. ரிபாய் சாஹிப், மதுரை மாவட்ட  செயலாளர்  ஷரிப் சாஹிப் M.P., பி.என்.. அபுதாலிப் சாஹிப், இப்படி சிறப்புக்கு உரியவர்கள் எல்லாம் இருந்து தினம் தினம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.

இங்கே ஒரு நபரை கட்டாயம் சொல்லி ஆக வேண்டும்.

இஸ்மாயில் கனி அண்ணன். லிப்டன் தேயிலைக் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அந்த நேரம் போக மீதி நேரங்களில் முஸ்லிம் லீக் தலைமை நிலைய அலுவல்களிலேயே காலம் கழித்தார்.

காயிதே மில்லத்திற்கு, இஸ்மாயில் கனி சாஹிபை விட தமிழகத்தில் நம்பிக்கையான ஒரு முஸ்லிம் லீகர் எவருமே கிடையாது. இப்படி துணிந்து சொல்லி விடலாம். இஸ்மாயில் கனி, மிக நேர்மையானவர். ஆழமான நம்பிக்கையானவர். ஏற்றுக் கொள்ளக் கூடிய பொறுப்புகளில், தீவிரமான ஈடுபாடுக் கொள்ளக் கூடியவர்.

முஸ்லிம் லீக், உரிமைக் குரல் அலுவலகமான 8, மரைக்காயர் லெப்பை தெரு கட்டிடத்திலுள்ள அனைத்து கதவுகளுக்கும், அலமாரிகளுக்கும் இரு சாவிகள் உண்டு. ஒரு சாவி தலைமை நிலைய பொறுப்பாளரிடம் இருக்கும், மற்றொரு சாவி இஸ்மாயில் கனி அவர்களிடம் இருக்கும். இது காயிதே மில்லத் செய்து இருந்த ஏற்பாடு.

இஸ்மாயில் கனி நல்ல கவிஞரும் கூட. அந்த கட்டிடதொடு இவர் கொண்டிருந்த உறவின் அளவு இன்னொருவர் எவரும் பெற்று இருக்கவில்லை.

ஆனால், காயிதே மில்லதினுடைய மறைவுக்கு பின்னால், சில பல காரணங்களினால் இஸ்மாயில் கனி அவர்கள், அந்த கட்டிடத்திற்கு வருவதை குறைத்துக் கொண்டார். இது மிகவும் கசப்பான செய்தி.

தலைமையகத்தை சார்ந்திருந்த அனைவரினுடைய நெஞ்சிலும் இந்த வலி இருந்தது. ஆனாலும் விரும்பத் தகாத இது நிகழ்ந்து விட்டது.

காயிதே மில்லதினுடைய இளவல், கே.டி.எம்.அஹமது இப்ராகிம் சாஹிப் மாநிலத்தினுடைய பொது செயலாளராக இருந்தார்கள். அவர்களிடம் தான் மற்றொரு சாவி இருந்தது.

காயிதே மில்லத் வாழ் காலத்திலே கே.டி .எம்.அஹமது இப்ராகிம் சாஹிப்  காலமாகி விட்டார்கள்.

கே.டி .எம். பற்றி இன்னொரு இடத்தில விரிவாக சொல்லி ஆக வேண்டும்.

கே.டி.எம் மறைவுக்கு பின்னால், தமிழ் மாநிலத்தினுடைய பொதுச் செயலாளராக .கே.ரிபாய் சாஹிப் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஒரு நாள் தலைமை நிலையத்திற்கு, இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் வந்தார்கள். தன்னிடம் காயிதே மில்லத் ஒப்படைத்து இருந்த அத்தனை சாவிகளையும் .கே.ரிபாய் சாஹிபிடம் ஒப்படைத்தார். அதனோடு ஒரு லெட்டெர் பேடு தாளையும் ரிபாய் சாஹிபிடம் கொடுத்தார். அந்த லெட்டெர் பேடின் தாள் காயிதே மில்லத் அவர்களின் M.P. லெட்டெர் பேடின் தாள்.




அந்த லெட்டெர் பேட் தாளின் கீழே காயிதே மில்லத் அவர்களின் கை ஒப்பம் இருந்தது. தேதிக் குறிக்கப் படவில்லை. இப்படி ஒரு வெற்றுத் தாளில் காயிதே மில்லத் இந்த உலகில் வேறு எவரிடமும் கையெழுத்து இட்டு கொடுத்ததே இல்லை.

இதை பார்த்த .கே.ரிபாய் சாஹிப் அதிர்ந்து போனார். ஏனென்றால் இந்த தகவல் எவருக்குமே தெரியாது.

இஸ்மாயில் கனி சொன்னார். "தேவைப் படும் பொழுது எந்த அலுவல் காரணத்திற்காகவும், இந்த லெட்டெர் பேடை பூர்த்தி செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது பரம ரகசியமாகவே இருக்கட்டும்என்று காயிதே மில்லத் ஒரு சந்தர்பத்தில் சொல்லித் தந்ததாக சொன்னார்.

.கே.ரிபாய் சாஹிப் அந்த லெட்டெர் பேடு தாள்களை இஸ்மாயில் கனி அவர்களிடமே திரும்ப கொடுத்து விட்டு, "வாப்பா உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அடையாளச் சின்னம் இது. இதை பிரேம் போட்டு நீங்களே பாதுகாத்து வாருங்கள். இது உங்கள் குடும்பத்தின் பொக்கிஷம்" என இஸ்மாயில் கனியிடம், .கே. ரிபாய் சொன்னார்.

அந்த காயிதே மில்லத் கையெழுத்திட்ட வெற்றுத் தாள் இஸ்மாயில் கனி அண்ணன் குடும்பத்திடம் தான் இன்றும் இருக்க வேண்டும்.

ஒருநாள், அப்துல் வஹாப் M .A .PTh  அவர்கள் இஸ்மாயில் கனி இல்லத்திற்கு மனைவியோடு திடீரென்று வந்தார். இஸ்மாயில் கனி இதை எதிர் பார்க்கவில்லை. அப்துல் வஹாப் துணைவியார் கையில் தாம்பூலம் இருந்தது. அதில் சில பேரீத்தம் பழங்களும், வாழைப் பழங்களும் வைத்து இஸ்மாயில் கனி குடும்பத்தாரிடம் தரப் பட்டது.

"என் மூத்த மகனுக்கு உங்கள் மூத்த மகளை மணமுடிக்க பெண் கேட்டு வந்திருக்கிறோம்' என அப்துல் வஹாப் சாஹிப் கூறினார்கள். வேறு எந்த கொடுக்கல் வாங்கலும் நமக்குள் தேவை இல்லை என்று மேலும் சொன்னார்கள்.

இஸ்மாயில் கனி அண்ணன் சிரமத்தில் இருந்த காலகட்டம் அது. அப்துல் வஹாப் சாஹிபின் மகன் உயர்ந்த அரசுப் பதவியில், நிறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இஸ்மாயில் கனி அண்ணனுடைய நேர்மைக்கும், நம்பிக்கைக்கும் இறைவனே வழங்கிய அருட்கொடை அது. இஸ்மாயில் கனி அண்ணன் இன்று இல்லை.

முஸ்லிம் லீகினுடைய மரைக்காயர் லெப்பை தெரு தலைமையகத்தில், இன்றும் என்றும் எவர் நடமாடித் திரிந்தாலும், இஸ்மாயில் கனி அண்ணன் அவர்கள் ஹக்கில் துஆ செய்ய கடமை பட்டிருக்கிறார்கள்.

இன்று தலைமை நிலையத்தில் மேனேஜராக இருக்கக் கூடிய மீரா சாஹிபுக்கு, தொழில் கற்று கொடுத்த குரு இஸ்மாயில் கனி அண்ணன்.

காயிதே மில்லத் காலத்தில் மரைக்காயர் லெப்பை தெரு தலைமை நிலையத்திற்கு வைக்கப்  பட்ட பெயர் கே.டி .எம்.அஹமது இப்ராகிம் மன்ஸில்.

இது பற்றிய பதிவு அடுத்து....

No comments:

Post a Comment