Sunday, August 25, 2013

சின்ன அறிமுகம்!


தேர், யானை,
குதிரை, காலாள் படை
சரித்திர காலப்
போர்த் தளவாடங்கள்!

அணுகுண்டு, விஷபாம்
தற்காலப்
போர்க்கள நாசினிகள்!

ஷைத்தானுக்கு
இவைகள் தேவைப்படவில்லை!
ஹவ்வாவிடம்
ஒரு சின்ன அறிமுகம்!

ஆதம் இதழ்களில்
தடுக்கப்பட்ட
கனி தவழ்ந்தது!

இன்று மனிதன்
ஆயுதக் கிடங்குகளாகத்

தானே மாறிக் கொண்டிருக்கிறான்!

Tuesday, August 20, 2013

அதிசயம்!




அதோ... அந்த
அனாதையின்
கன்னத்தில் தானே முத்தமிட்டேன்!
சுவனத்துப் பாதையில்
கம்பளி விரித்தது யார்?


Monday, August 19, 2013

நிமிடங்கள்




கர்ப்பப்பை
கழட்டி விட்டபின்
காலமெல்லாம் பயணம்தான்

நாமறியாமல்
நமக்கு நடக்கும்
யாத்திரையின் முடிவுவரை...
எத்தனை பயணம்..!

பருவங்களின் பயணம்
ரசவாத மாற்றங்களை
மேனி முழுக்கவும்
தூவுகின்றன..!

கருமை ரோமங்கள்
கால அசைவுகளால்
வெள்ளை விழுதுகளாக
விளம்பரமாகின்றன

விழிக் கூர்மையால்
காதலைப் பேசிய கண்கள்
நிமிடங்களின் நகர்ச்சியால்
பாதைகளைக் கூட
பார்க்க முடியாமல்
தளர்ச்சி சிறையில்
தள்ளாடுகின்றன..!

பிடித்த பிடியில்
இரும்பு கூட நெளிந்தது!
நாட்கள் நடந்தன...
நரம்பு பிடித்தது
துரும்பு கூட
இன்று தொல்லையாகிறது!

இப்படியும் ஒரு பயணம்...

பிறப்பும் இறப்பும்
சதா நேரமும்
சம்பவிக்கின்றன!

யாருக்காக இந்த நடவடிக்கைகள்..!

'எனக்காக'...
என்று சொன்னவர் கல்லறைகள்
காலத்தின் கால்களில்
நசுங்கிக் கிடக்கின்றன!

'பயணத்தில் லாப நஷ்டம்
பயணிக்குத்தானே...?
படைத்தவன் எதற்கு..?
வேடிக்கை பார்க்கவா..?'

இப்படி
எதிர்க் கேள்வி போட்டவர்கள் எல்லாம்
பதில் வரும் முன்பே
பயண முடிவில் பதிந்து போனார்கள்!

நடவடிக்கை எல்லாம்
அந்த ஒருவனின் சொந்தம்!

நடப்பதை அறியும்
ஞானம் நமக்கு கிடைப்பதில்லை..!

முயலும் போது

முடிந்து போகிறது பயணம்..!

பணிவு!






தொழும் போது 
நான் ஸஜ்தா செய்தேன்!
எழும் போது 
அர்ஷின் படிக்கட்டுத் 
தலையைத் தடவியது!



சிறுகதை - மொட்டை







     பஸ்கள் அங்கே எப்போதும் ஒரு ஒழுங்கில் நிற்காது. குஸ்திக்கு முண்டியடித்துக் குத்துவதற்குத் தயாராக உருமிக் கொண்டேயிருக்கும். பயணிகளின் பரபரப்பு, பழவியாபாரிகளின் விற்பனை ஓலம், பெண்களின் படபடப்பு, சிறுவர்களின் தறிகெட்ட துள்ளல், அண்ணா பேருந்து நிலையத்தின் தினசரி நடவடிக்கை.

     பஸ்களுக்கு இடுக்கில் புகுந்து ஓடி மனிதர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் பன்றிக் கூட்டமும் அந்த பஸ் ஸ்டாண்டின் இரண்டாவது இயற்கை.

     கிழக்கு ஓரமாக பெரிய சாக்கடை ஓடை சதா ஓடிக்கொண்டே இருக்கும். மூத்திர வாடை மூன்று கிலோ மீட்டருக்கு மூக்கை உறுத்தும். பெரியவர் சின்னவர் வித்தியாசமில்லாமல் எவராவது ஒருவர் கீழாடையினை வளித்துத் தூக்கிக் கொண்டு இயற்கை உபாதையினை வெளியேற்றிக் கொண்டிருப்பர்.

     பயணிகளின் பார்வைக்கு அந்தப் பிரதேசம் கூச்சத்தை உருவாக்கும்.




     கொஞ்ச காலமாக மொட்டை அசன்கனி அந்தச் சாக்கடை விளிம்பில்தான் உட்கார்ந்திருப்பார். அவர் பேசுவதே கிடையாது.எங்காவது ஒரு துண்டுப் பேப்பரைக் கண்டால் விட மாட்டார். ஓடி ஓடி எடுப்பார். அது அவருக்கு கிடைக்க முடியாத தங்கம். ஏதாவது ஒரு குச்சியை அந்த துண்டு பேப்பரில் எழுத்தாணி போல நட்டு எழுதுவார். எழுதிய பேப்பரை மடிப்பார். நைந்து கிழிந்து அழுக்குகள் விடாமல் இறுக்கிப் பிடித்திருக்கும் தன் சட்டைப் பையில் பத்திரமாகத் திணித்துக் கொள்வார்.

     சிகப்பாக ஒரு பெட்டி எந்தக் கம்பத்தில் தொங்கினாலும் போதும் துண்டுப் பேப்பரை அதில் போட்டு விடுவார். யாருக்கோ அவர் கடிதத்தைப் போஸ்ட் செய்து விடுவார்.

     அசன்கனி என்றால் அந்த ஊரில் எவருக்கும் தெரியாது. மொட்டை அசன்கனி என்றால் ஊருக்கு வெளியே உள்ள மருத மரத்தின் உச்சிக் கிளையில் உட்கார்ந்து அலகை உரசிக் கொண்டிருக்கும் சின்னச் சிட்டுக் குருவி கூட எனக்கு தெரியுமேன்னு கீச்சுக் கீச்சு மொழியில் கத்தும்.

     ஒரு காலத்தில் பஜார் பெரிய மளிகை கடையில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். எல்லா நேரமும் குனிந்து கொண்டே இருப்பார். என்னதான் எழுதுவாரோ?

     அவரின் சட்டைப் பையில் எப்போதும் சில அஞ்சல் அட்டைகளும், கவர்களும் குடியிருக்கும்.

     அந்த அஞ்சல் அட்டைகள் எத்தனையோ பேரின் வயிற்றெரிச்சலை வாரி வாரிக் கொட்டிக் கொள்ளும். அவருக்கு பழக்கமானவரோ இல்லையோ அதைப் பற்றி அசன்கனி கவலைப்பட மாட்டார் யாவரும் சுகமாக நிம்மதியாக வாழ்ந்து விட்டால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாது.

     அப்படி வாழ்பவரை ஒரு கணமாவது துடிக்க வைத்தால்தான் அசன்கனிக்கு இடது மூக்கில் சுவாசம் உள்ளேறி வலது மூக்கில் சீராக வெளியேறும் இல்லையென்றால் அவருக்கு மூச்சு முட்டிக்கொள்ளும்.

     ராமையாத் தேவர் வெள்ளை வெளேர் உடையில்தான் தெருவில் நடமாடுவார். நெற்றியில் சிவப்பு வண்ணத்தில் குங்குமப் பொட்டு அந்த காலத்து காலணா அளவில் கம்பிரமாக ஜொலிக்கும். கழுத்தில் பட்டு நேரியல் சிவபெருமான் கழுத்துப் பாம்பு போல மடித்து தவழும். சிரிப்பு என்று தனியாக ஒன்று தேவரிடம் கிடையாது. அவர் வாயே சிரிப்புத்தான். அடுக்கி வைத்திருக்கும் அழகான பல்வரிசையினை மீசை அடர்த்தி பாதி மறைத்துப் படர்ந்து கிடக்கும்.

     மொட்டை அசன்கனிக்கு இதெல்லாம் பிடிக்காது.
     தன் சட்டைப் பையில் இருந்து ஒரு போஸ்டு கார்டை உருவினார். ராமையாத் தேவர் மனைவியின் பார்வைக்கு ஒரு கடிதம் தயாரனது.

    கும்பத்தைத் தூக்கி ஆடும் நாட்டியக்காரி பேச்சிக்கும் தேவருக்கும் கம்மாத் தோப்பில் ஏதோ கசமுசா நடக்கிறதாம். தேவரின் மனைவி ஜாக்கிரதையாக இருக்கணுமாம்.

ராமையாத் தேவர் அதன்பின் கம்மாத் தோப்பு பக்கம் போகவே இல்லை. தேவரின் மூத்த மகன்தான் தோப்பு மகசூலை பார்க்கத் தொடங்கி விட்டான். தேவர் மனைவியும் கனத்த சரீரத்தைத் தூக்கி அசைத்து வேர்த்து விறுவிறுத்து அடிக்கடித் தோப்புக்கு வர ஆரம்பித்து விட்டார். சூரிய வெளிச்சத்தில் தேவர் மனிவியின் காதில் தொங்கும் பாம்படம் படீரென்று டால் அடிக்கும்.

மொட்டை அசன்கனி கடையில் கணக்கு எழுதும்போதே குனிந்து வாயோரம் சிரித்துக் கொண்டார்.

     பஸ் ஸ்டாண்டு சாக்கடையின் விளிம்பில் எவனோ ஒரு ராஸ்கல் அசிங்கம் செய்துவிட்டு சற்று முன்தான் நகர்ந்து இருக்கிறான். காற்றில் ஒரு துண்டுக் காயிதம் குவியலாகக் கிடக்கும் அந்த மனிதக் கழிவில் வந்து அப்பிக் கொண்டது. மொட்டை அசன்கனிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. ஒடுங்கி உட்கார்ந்திருந்தவர் ஓடிச் சென்று அந்த காயிதத்தை எடுத்தார். அதில் ஒட்டிக கொண்டிருந்த அசிங்கத்தைச் சட்டையின் நெஞ்சுப் பக்கத்தில் தேய்த்துக் காயிதத்தைச் சுத்தம் செய்துக் கொண்டார்,

     அக்கம் பக்கம் துருவித் துருவிப் பார்த்தார். ஒரு மெலிந்த வேப்பங் குச்சி கண்ணில் பட்டுவிட்டது. குடுகுடு ஓட்டம். அங்கேயே சம்மணம் பொட்டு அமர்ந்தார். காயிதத்தில் குச்சியால் எழுதத் தொடங்கி விட்டார். யாருக்கு கடிதம் எழுதப் போகிறார்?

     பேருந்து நிலையத்திற்கு வந்து போகும் எல்லா பஸ்களும் முனிசிபாலிட்டிக்கு வரி கட்ட வேண்டும். அதை வசூலிப்பது பில் கலெக்டர் மைதீன். சுறுசுறுப்பானவன். சுற்றித் திரிவதில் அவனுக்கு அலாதியான சுகம்.

     பில் கலெக்டர் மைதீன் அறியாமல் நான்கு சக்கர வண்டி எதுவும் நகராட்சியின் எல்லைக்குள் வந்துவிடவே முடியாது. தொழிலில் படு சுத்தம்.

     மைதீன் குடும்பம் பெரிது. மூன்று அக்காமார்கள், இரண்டு தங்கைகள், இரண்டு தம்பிமார்கள், அக்காமார்களுக்குக் கல்யாணம் முடிந்துவிட்டது. தங்கைகள் நிக்காஹ்விற்குத் தயார்தான். தம்பி இருவரும் நோட்டுப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு படிக்கப் போவதாகக் கூறிக் கொள்கிறார்கள். பல நேரங்களில் சினிமாத் தியேட்டர்களில்தலை தென்படுவதாகத் தகவல்கள் வருகின்றன.

     அம்மாவுக்கு ஆஸ்துமா. அத்தா கிடையாது. வருமானமும் பத்து. சீட்டுப் பிடிக்க ஆரம்பித்தான்.

     குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது. சீட்டுத் தொழிலில் விருத்தித் தெரிந்தது. சைக்கிளில் திரிந்தவன் மொபட்டில் பறந்தான். எட்டு முழ கரை வெட்டி பேண்ட்டாக மாறியது. தூக்கித் திரிந்த ரெக்ஸின் கைப்பை லெதர் ஹேன்ட் பேக்காக உயர்ந்தது.

     மொட்டை அசன்கனிக்கு இதெல்லாம் பிடிக்காது.

     பில் கலெக்டருக்குச் சீட்டுத் தொழில் தேவைதானா?

     முனிசிபல் கமிஷனருக்குக் கவனம் போதாது. தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பை அசன்கனி எடுத்துக் கொண்டார்.

     மறுவாரம் பில் கலெக்டர் மைதீன் முனிசிபல் கமிஷனர் முன் அடக்கமாக நின்றான்.

     "வட்டித் தொழில இன்னைக்கே நிறுத்திடனும். இல்லாட்டிப் போனா பில் கலெக்டர் வேலையை ராஜினாமா செய்திடணும். மக்களை வதைக்கக் கூடாது. இப்போவெல்லாம் நீ வட்டி வசூலுக்குத்தான் நேரத்தை ஒதுக்குற.நான் வேற மாதிரி ரிப்போர்ட் எழுதி வேலையே இல்லாம ஆகிடுவேன் ஒழுங்கா நடந்துக்கோ".

     கமிஷனரின் மிரட்டல் பில் கலெக்டர் மைதீனுக்கு எரிச்சலைத் தந்தது. இல்லை, அதையும் தாண்டி எச்சரிக்கிறார் எனப்பட்டது.

     "பெரிய பிசாத்து வேலை. சரிதான் போரூமையா. ஒரு துண்டுப் பேப்பர்ல ராஜினாமா எழுதித் தூக்கி மூஞ்சியில விட்டெரிஞ்சிடுறேன். அப்போ என்ன செஞ்சி கிழிச்சிடுவீராம்" சொல்லி விட்டான் மைதீன்.

     வேலை முடிந்தது.

     மளிகைக் கடையில் மொட்டை அசன்கனிக்கு வானமே மடியில் வந்து விழுந்து புரண்டது. ஒரே புல்லரிப்புத்தான்.

சாக்கடையில் அழுகிக் கிடக்கும் புழுத்த பழங்களின் குவியல் மீது புரண்டு கொண்டிருந்த ஈக்கள் ஒரே பாய்ச்சலில் திப்பியாகக் கிடந்த மனித அசிங்கத்தின் மீது புரண்டு எழுந்தன. மொட்டை அசன்கனி வாய் ஓரத்தில் கிச்சுமூச்சு மூட்டிப் பறந்தன. அசன்கனி வலது கையைத் தூக்கி ஈயை ஓட்டிக் கொண்டார்.

     பதினேழு வயதிலிருந்தே மாப்பிள்ளை பார்த்தார்கள். எத்தனையோ பேர்கள் வந்து போனார்கள். எதுவும் கை கூடவில்லை. இருபத்தெட்டு வயதாகிவிட்டது. கல்யாண சுகம் மனமெல்லாம் ஊது பத்தி வாசனை போல சுழன்று சுழன்று பரவுகிறது. கண்களில் அதே ஏக்கம். முகத்தில் கூட ஒரு வறட்டுத்தனம் வந்து விட்டது.

     தேகம் ஒட்டடைக் குச்சியாக உருக்குலைந்து போனது. தன் கூட சமஞ்ச பெண்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். பல்கீஸுக்கு மட்டும் பரிதவிப்பே வாழ்வாகி விட்டது.

     கடைசியாக அவளுக்கு ஒரு விடியல் உதிக்கத்தான் செய்தது. தஞ்சாவூரில் இருந்து ஒரு வரன். அவர்களுக்கும் பெண்ணைப் பிடித்து விட்டது. சம்மதத்துடன் தஞ்சாவூருக்குப் போனார்கள்.

     பலகீஸ் முகத்தில் நிக்காஹ்வின் ரேகைப் படர்ந்தது. உள்ளுக்குள் இனம் புரியாத ரம்மியமான நினைவுகள்.

     மொட்டை அசன்கனிக்கு இதெல்லாம் பிடிக்காது.

     தஞ்சாவூர்காரர்கள் முகவரியை மூன்று நாள்கள் விடாமல் முயன்று கண்டுபிடித்து விட்டார். நிலாவில் முதல் முதல் ஆம்ஸ்ட்ராங் நடந்த போது கூட இவ்வளவு ஆனந்தப் பட்டிருக்க மாட்டார். அசன்கனியின் வெற்றிக்கு ஈடே இல்லை.

     அடுத்த சில நிமிஷங்களில் தஞ்சாவூருக்கு கடிதம் தயாராகி விட்டது.

     உள்ளூரில் பல்கீஸ் ஏன் விலை போகவில்லை? முறைப் பையன்கள் எதற்காக அவளை ஒதுக்கி விட்டார்கள்? வெளியூர்காரர் அநியாயமாக வந்து மாட்டிக் கொண்டாரே, இதுவென்ன நியாயம்?

     பல்கீஸுக்கு சிறு பிராயம் முதல் காக்க வலிப்பு வந்து விடுமாம். நின்ன நின்ன இடத்தில் விழுந்து காலையும் கையையும் உதறிக் கோரமாக வலித்துக் கொள்வாளாம். பார்க்கவே விகாரமாக இருக்குமாம். போதாக்குறைக்கு வலது பக்கத் தொடையிலிருந்து கால் முட்டி வரை வெள்ளை படர்ந்து இருக்குமாம். சின்னப் பிள்ளையில் ஒரு துளிதான் வெள்ளை இருக்குமாம். துளி வெள்ளை இருபத்தெட்டு வயதில் கால் முட்டி வரை வளர்ந்திருக்காம். வெளியூர்காரார்களுக்கு இதுவெல்லாம் தெரியவாப் போகிறது?

     கடிதம் தஞ்சாவூரில் சரியான முகவரியில் கிடைத்து விட்டது. வீட்டில் இடி வந்து ஒழுகி விட்டது. மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் ஒரே முரண்டில் பேச்சு வார்த்தையினை முறித்து விடத் தீர்மானித்து விட்டனர்.

     ஒரு மொட்டைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தர வேணாம் என்று தஞ்சாவூர்க்காரர் சொன்னார். பெண்கள் பக்கம் இதற்கு ஆதரவில்லை. கல்யாணக் கதை முடிந்து விட்டது.

     பல்கீஸ் வீட்டுக்காரர்கள் தகவல் வரும் வரும் என்று காத்திருக்கிறார்கள். நாள்கள் மாதங்களுக்குள் நுழைந்தன. கடிதம் மட்டும் வரவே இல்லை. இந்த சம்பந்தத்திற்கு உதவிய நண்பரை நெருக்கினார்கள். அப்போதுதான் தகவல் தெரிந்தது.

     பல்கீஸ் நொடிந்து போனாள். நிக்காஹ் நின்று போனது. அவளுக்குள் பாறையாக இறுகிக் கனத்தது. தன்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமான செய்தி வேறு அவளை கடப்பாரையால் குத்தி வகுந்தது.

     கன்னி கழியாதவள் நெஞ்சில் கோடிக்கணக்கான உடை முள்கள் குத்திக் குத்திக் கீறி குருதியினை பீறிட்டு வடியச் செய்தன.

     எப்படியோ ஒரு நல்லது விலகிப் போனது.

     மொட்டை அசன்கனி மளிகைக் கடையில் கணக்கெழுதிக் கொண்டே நெஞ்சுக்குள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துச் சரிந்தார்.

     மலத்தைச் சட்டைத் துணியில் துடைத்து சுத்தமாக்கிய காயிதத்தில் அசன்கனி வேப்பங்குச்சிப் பேனாவால் தீவிரமாக எழுதிக் கொண்டிருக்கிறார். யாருக்கோ? எந்த ஊருக்கோ?

     பல்கீஸ் பல இரவுகள் தூங்கவில்லை. வெதும்பி வெதும்பி அழுதாள். ஒரு வெள்ளிக்கிழமை இரவு பல்கீஸ் வேதனையின் இறுதிச் சுற்றுக்குள் விழுந்து கிடந்து துடித்தாள். அந்தத் துடிப்பே அவளுக்குள் தூக்கத்தை விரட்டிக் கொண்டு வந்து விட்டது.

     காலும் கையும் வெட்டி வெட்டி இழுக்கிறது. வாயில் நுரை நுரையாக வழிகிறது. கண்கள் நிலைகுத்தி நிற்கின்றன. கீழ் உதட்டைப் பற்கள வெறித்தனமாக கவ்விப் பிடித்திருக்கின்றன. ஆடைகள் அலங்கோலமாக எங்கெங்கோ விலகிக் கிடக்கின்றன. உடம்பு குறுகிக் குறுகித் துடிக்கிறது.  விறைப்பாக ஒரு கால் ஒரு பக்கம் இழுத்துக் கிடக்கிறது. அங்கே வேறு யாருமே இல்லை.

     பல்கீஸ் பதறி விழிக்கிறாள். தூ... தூ... அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தானிர்ரஜீம். கனவு. இதுவென்ன கெட்ட கனவு? திடீரென்று எழுந்தாள். நடந்தாள். பாத்ரூமில் தண்ணீர் விழுகிறது. பல்கீஸ் ஒளு செய்கிறாள்.



     அலமாரி மேலிருந்து முஸல்லாவை எடுத்தாள். உதறி விரித்தாள். மேற்குத் திசை நோக்கித் தக்பீர் கட்டி நின்றாள். இரண்டு ரக்அத் தொழுதாள். அது தஹஜ்ஜத் தொழுகை. நட்ட நடு நிசி. ஒரே நிசப்தம். அல்லாஹ்வுக்கும் அவளுக்கும் இடைவெளி இல்லாத அணுக்கம்.




     முட்டியிட்டு இருப்பு நிலையில் உயர்ந்து இரு கரங்களையும் தன் முகத்துக்கு முன்பாக மேலுயர்த்தி "யா அல்லாஹ்! என் மீது அபாண்டம் சொன்னவர்களை நீ சும்மா விட்டு விடாதே. என் வேதனை அவர்களை ஒரு போதும் மன்னிக்கவே மன்னிக்காது. இதுவரை என்னிடம் உள்ள ஒழுக்கத்தையும் மீதமுள்ள நாள்களிலும் எனக்கு உருதிப்படுத்தித் தா! யா அல்லாஹ்! யா அல்லாஹ்! யா அல்லாஹ்!

     பல்கீஸ் விழிகள் உதிர்க்கும் உப்புக் கண்ணீர் அவளின் பிரார்த்தனை இதழில் வந்து விழுகிறது. முஸல்லாவிலேயே குன்னிக் குறுகிக் குலுங்கிக் குலுங்கி அழுது கிடந்தாள். தூங்கி விட்டாள்.

     மொட்டை அசன்கனியின் ஒரே மகன் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டான். அவரின் மனைவிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. ஒன்று, இரண்டு, இப்படி பதினேழு முறை கழிந்தது. பதினெட்டாவது முறைக்கு அவள் இல்லை. தெருக்களில் அலைந்தார். அவரின் கண்கள் மட்டும் துண்டுக் காயிதங்களைத் தேடி தேடி அலுத்தன. கடைசியாக அண்ணா பேருந்து நிலையச் சாக்கடையில் அவருக்கு ஒரு நிரந்தர குடியிருப்பு முகவரி கிடைத்து விட்டது.

     பல்கீஸின் நடுநிசிப் பிரார்த்தனை பலித்தே விட்டது.

     மொட்டை அசன்கனி சாக்கடை ஓரத்தில் துண்டுக் காயிதத்தில் எழுதி முடித்து விட்டார். அதை எங்கேயாவது கண்ணில் படும் சிகப்புப் பெட்டியில் போட வேண்டும்.

     ஒரு பஸ் புறப்படுவதற்குச் சப்தத்துடன் குலுங்கியது. அடியில் படுத்துக் கிடந்த பன்றி பதறித் துடித்து வெருண்டு ஓடியது. சாக்கடை விளிம்பில் இருந்த மொட்டை அசன்கனி மீது தாவிச் சரிந்தது. மீண்டும் துடித்தெழுந்து சாக்கடை நீருக்குள் விழுந்து தெறித்து ஓடியது.

     மொட்டை அசன்கனி சிரத்தையுடன் வேப்பங்குச்சிப் பேனாவில் மலக்காயிதத் துண்டில் எழுதிய ஏதோ ஒரு மொட்டைக் கடிதமும் சாக்கடை நீரில் விழுந்து நகர்ந்தது.

     மொட்டை அசன்கனிக்கு உயிரே போய்விட்டது. ஒரு மொட்டைக் கடிதம் போஸ்ட் ஆகாமல் வெறுமனே போகிறதே! அதனையே வெறித்துப் பார்த்துக் கொண்டே மூத்திரத் தரையில் சம்மணம் பொட்டு அமர்ந்து விட்டார்.




Sunday, August 18, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–19

இரு நினைவுகள்!!


நெல்லை கைலாசபுரம் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைமையகத்தை நினைக்கும் பொழுதெல்லாம், எனக்கு சில துணுக்கு துணுக்கான தகவல் நினைவுகள் வருகின்றன. அவற்றை இங்கே கொஞ்சம் பதிவு செய்து  கொள்கிறேன்.

நெல்லை முஸ்லிம் லீக் அலுவலகமும், அந்த அலுவலகத்தின் ஒட்டிய வீடும், மாவட்ட லீகின் உரிமையானது. அந்த வீட்டில் பன்னெடுங்காலமாகக்  குடியிருந்தவர்கள், மௌலானா மௌலவி அபுல் ஹஸன் ஷாதலி ஹஸரத் அவர்கள்.

இவர்கள் என் தாய்வழித் தாயின் உறவுக்காரர். தமிழில் முதலில் வெளிவந்த அன்வாறுல் குர்ஆன் ஆசிரியர், மௌலான மௌலவி அப்துர் ரஹ்மான் பாகவியின் ஒன்று விட்ட சகோதரர். ஷாதலி ஹஸரத்தின் தந்தையார், ஆலிஜனாப் அப்துல் காதர் சாஹிப், மதரசாக்களில் ஸனது பெறாத மாபெரும்  இஸ்லாமிய மார்க்க மேதை.

அவர்கள் காலம் அஹமதிய்யா அமைப்புகளுக்கும் சுன்னத் வல் ஜமாஅத் அமைப்புகளுக்கும் மத்தியில் தத்துவ மோதல்கள், சகட்டு மேனிக்குக் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தன.

‘தாருல் இஸ்லாம்’ பத்திரிகை, அறிஞர் தாவூத் ஷா அவர்களுக்குரியது. ஆங்கிலம், தமிழ், அரபி மொழிகளில் தாவூத் ஷாவின் பாண்டித்யம் அண்ணாந்து பார்க்க வைக்கக்கூடியது.

தாருல் இஸ்லாம் பத்திரிகையில் ஒரு அறிவிப்பு எப்பொழுதும் இருக்கும். அந்தப் பத்திரிகையில் எழுத்துப் பிழை சுட்டிக் காட்டினால், ஒரு எழுத்துக்கு அரையணா தரப்படும் என்ற அறிவிப்புதான் அது. அந்த அளவுக்குத் தமிழில் எழுத்துப் பிழை இல்லாமல் பத்திரிகை இப்பொழுது கூட வருகிறது  என்று சொல்ல முடியாது.

வெளி வந்த நாளில் இருந்து இறுதி நாள் வரை எழுத்துப் பிழை இல்லாத இந்தப் பத்திரிகையில் ஒரே ஒரு முறை ஒரு எழுத்துப் பிழையைக் கண்டு பிடித்து விட்டார் ஒரு முஸ்லிம் லீகர். அவர்தான் கூத்தானல்லூர் கவிஞர் சாரண பாஸ்கரனார். (இவர் சுன்னத் வல் ஜமாஅத் காரர்)

இந்தப் பத்திரிகையில் அஹமதிய்யா கொள்கைகள், வேகத்தோடு வெளிவந்து கொண்டிருந்தன. இதற்குப்   பதில் சொல்லத்  தென்காசியிலிருந்து ‘முஸல்மான்’ பத்திரிகை சுன்னத் வல் ஜமாஅத்துடைய கோட்பாட்டை வீரியமாக வெளியிட்டு கொண்டிருந்தன.

இந்த பத்திரிகையின் நிறுவனரும், ஆசிரியரும் ஷாதலி ஹஸரத்தின் தந்தையார்.

ஷாதலி ஹஸரத்தினுடைய பரம்பரையினருக்குத், தென்காசியில் வங்காரு குடும்பம் என்று பெயர். இந்த வங்காரு என்ற சொல், தெலுங்கு மொழி சொல்லான பங்காரு என்ற சொல்லின் தமிழ் வடிவம்.

தென்காசியில் முத்து வணிகம் செய்த குடும்பம் அது. இந்தப் பங்காரு குடும்பத்தில் பங்காரு முத்து மீரான் என்பவர் தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியவன் காலத்தவர்.

பராக்கிரம பாண்டியன், இந்த முத்து மீரானை சிரச் சேதம் செய்ய கட்டளையிட்டுவிட்டான். அந்த நேரத்தில் மன்னனை நோக்கி வசைகவி பாட, பராக்கிரம பாண்டியன் தலைமுறை சிதைந்து விட்டது என்ற ஒரு சரித்திரக் கதை உண்டு.

பங்காரு குடும்பத்தில் அன்று தொட்டு இன்று வரை, ஆலிம்களும், புலவர்களும் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக வருகின்றனர்.

எங்களின் பாரம்பரியத்தைப் பற்றி  பங்காரு குடும்பத்தில் உள்ள ஷாதலி ஹசரத்தின் முன்னோரில் ஒருவர் கவிதை வழிவாறு பாடித் தந்திருக்கிறார்.

ஷாதலி ஹஸரத் அவர்கள் நெல்லை லீக் தலைமையகதிற்கு அருகில் குடியிருந்த காலங்களில் கைலாசபுரம் பள்ளிவாசலின் இமாமாகப் பணிபுரிந்து வந்தார்கள். அந்தப் பள்ளியின் வளாகத்துக்குள் ஒரு அறையில் வாடகை  கொடுத்து ஜமாஅத்துல் உலமா பத்திரிகையின் அலுவலத்தை உருவாக்கி நடத்தி வந்தார்கள்.

அதன் ஆசிரியரும், வெளியீட்டாளரும் அவர்கள்தான். மேடைப் பேச்சில் கணீரென்ற தொனியில் மணிக்கணக்கில் அள்ளிக் கொட்டக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.

முஸ்லிம் லீகின் ஆணித்தரமான கோட்பாட்டு உறுதிமிக்கவர்கள். ‘முஸ்லிம் லீகின் வரலாறு’ என்ற சின்ன பிரசுரத்தை அந்தக் காலத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தன் வாழ்வின் இறுதி வரை, நெல்லை பள்ளிவாசலின் இமாம் பணியையும், முஸ்லிம் லீகின் அரசியல் பணியையும் விடாமல் கடை பிடித்தவர்கள்.

ஷாதலி ஹஸரத் எனக்கு தாதா முறைக்காரர். என்னை மிகவும் கேலி செய்யக் கூடியவர்.

ஒரு நாள் லீக் தலைமையகத்தின் படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்தேன். ஷாதலி ஹஸரத் அவர்கள் அதை ஒட்டிய, வீட்டின் படிக்கட்டிலிருந்து இறங்கினார்கள். என்னைப் பார்த்தவுடன்,

“வேய் புலவரே, எப்பம் வந்தீர்? புலவராய் இருந்தாலும், பாங்கொலி கேட்டவுடன், பள்ளிக்கு தொழத்தான் வர வேண்டும்.” எனக் கூறிக் கொண்டே படிகளில் இறங்கினார்கள்.

நான், சிரித்துக் கொண்டே, ”தாதா ஆபீசுகுள்ள வாங்களேன்” என்றேன்.

“நான் இப்பொழுதெல்லாம் லீக் ஆபீஸுக்குள் வருவது இல்லை” என்றார்கள்.

“ஏன் லீக் பிடிக்கவில்லையா தாதா?” என்றேன்.

“அது எப்படி பிடிக்காமல் போகும்? லீக் என் உயிர் மூச்சில் கலந்து இருக்கிறது” என்றார்கள்.

“அப்பம் ஏன் ஆபீஸுக்கு வர மறுக்கிறீர்கள்?” என்றேன்.

“லீக் ஆபீசுக்குள் உருவப் படத்தை வைத்து விட்டார்கள்” என்றார்கள்.

அவர்கள் சொன்ன உருவப் படங்களில் ஒன்று, காயிதே மில்லத்தின் படம், மற்றொன்று மு.ந. அப்துர் ரஹ்மான் சாஹிபின் படம்.

“தாதா, ஹஜ்ஜுக்கு, வெளிநாட்டுக்கு எல்லாம் போய் இருக்கிறீங்க, எப்படி பாஸ்போட்டு இல்லாமலா போனீங்க? அதில் உங்கள் படம் இருக்குமே! உங்கள் பையில் கரன்ஸி நோட்டுகள் இருக்கின்றன. அதில் காந்தி படம் இருக்குமே!” என்றேன்.

“புலவர் பட்டிமன்றம் நடத்துறீரோ?” என்று சிரித்து கொண்டே பள்ளிவாசலை நோக்கி இமாமத் பண்ண நடந்து சென்றார்கள்.

நான் அவர்களை மடக்கிவிட்டதாக நினைத்தேன். இது தேவையற்ற வாக்குவாதம் என்று இன்று முழு வாக்குமூலம் தருகிறேன்.

அன்று அவர்கள் மனம் புண்பட்டு இருக்குமேயானால், “மன்னித்துக்  கொள்ளுங்கள்” என்று இறைவன் வழியே பிரார்த்திக்கிறேன்.

ஷாதலி ஹஸரத் அவர்களுடைய மகனார், மௌலானா மௌலவி முஹம்மது இப்ராஹீம் ஹஸரத் தந்தையாருக்கு பின்னர், பள்ளிவாசல் இமாமத் பணியையும், முஸ்லிம் லீகின் தொண்டுப் பணியையும் தொடர்ந்து கடைப் பிடித்தார்கள்.

இன்று, அவர்கள் இல்லை. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன். முஹம்மது இப்ராஹிம் ஹசரத் என்னுடன், தென்காசி காட்டு பாவா ஆரம்ப பள்ளியின் வகுப்பறைத் தோழர்.

சர்தார் இப்ராஹிம் சாஹிப்!
நெல்லை மாவட்ட முஸ்லிம் லீக் தலைமையகத்தோடு இரண்டறக்  கலந்துவிட்ட ஒரு தொண்டர். மேலப்பாளையம் அருகாமையில் உள்ள குறிச்சிக்காரர். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், எங்களுடைய தாதா பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ள குடிலில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்.

இவர், பிறப்பால், தலித் சமுதாயத்தின் சொந்தக்காரர். அந்தக் காலத்திலேயே  நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாசில்தார் ஆபீசில் ஹெட் கிளார்க் பதவி வகித்தவர்.

குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவியவர்.

ஒவ்வொரு வாரமும், சனிக் கிழமை மாலை மேலப்பாளையத்திலிருந்து ரஹ்மத் நகருக்கு சைக்கிளில் வருவார்.

எங்கள் தாதாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார். எங்கள் தாதாவோடு உணவு அருந்தி அங்கேயே தங்கி விடுவார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மாலை சைக்கிளிலேயே மேலப்பாளையம் சென்று விடுவார். அப்போதெல்லாம், பேண்ட், சட்டை, தாடி, தொப்பி கோலத்தில்தான் இருப்பார்.

அரபு மொழி ஞானத்தை வளர்த்துக் கொண்டவர். திருக்குர்ஆன் வசனங்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் எழுதி எங்கள் தாதாவிடம் படித்துக் காட்டுவார். எங்கள் தாதா அவற்றைக் கேட்டுக் கொண்டு “பேஷ், பேஷ்” என்று ஆரவாரம் செய்வார்கள்.

சர்தார் இப்ராஹிம் சாஹிப், எழுதிய பல ஆங்கில பிரசுரங்களை எங்கள் தாதா வெளியிட்டு இருக்கிறர்கள்.

1945 ஆம் ஆண்டு நடந்த நெல்லை மாவட்ட மாநாட்டில் அகில இந்திய முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் ஒருவர், லியாகத்அலி கான் இரண்டரை மணி நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.

அந்த ஆங்கில மொழிபெயர்ப்பை அதே உணர்ச்சி வேகத்தில் தமிழில் மொழி பெயர்த்தவர் தூத்துக்குடி பிரைமரி முஸ்லிம் லீகின் செயளாலர் ஷேக் இப்ராஹிம் சாஹிப். நம் சர்தார் இப்ராஹிம் சாஹிபுக்கு மிகப் பெரிய ஆங்கில மோகம் இருந்தது. அதனால் அன்று லியாகத்அலி கான் உரையை மொழிபெயர்த்த ஷேக் இப்ராஹிம் சாஹிப் பெயரை தனக்கு வைத்துக் கொள்ள ஆசைப் பட்டார். அந்த ஷேக் இப்ராஹிமில் சர்தாரை சேர்த்து, சர்தார் இப்ராஹிம் ஆனார்.

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், வாழ்வின் முழு நேரத்தையும், முஸ்லிம் லீகின் ஆபிசில் பணியாற்றக் கூடிய வாழ்வாக மாற்றிக் கொண்டார்.

பெரும்பாலும் பச்சை சட்டை, பச்சை துண்டு அணிந்தவராகத்தான் இருப்பார். தொழுகை பேணுதலை அவரிடமிருந்து பல முஸ்லிம் லீகர்கள் கற்றுக் கொண்டார்கள்.

இரவு நேரத்தில் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, மங்கிய வெளிச்சத்தில், தஹஜ்ஜத் தொழுகை, இன்னும் என்னென்ன தொழுகையோ அவற்றை ஒரு உருவம் தொழுது கொண்டிருக்கும்.

அந்த உருவம்தான் சர்தார் இப்ராஹிம் சாஹிப்.

அவர் உடம்பில், முகத்தில் வெள்ளைப் படர்ந்து இருக்கும். தோற்றம் ஒரு பக்கீர் போல் இருக்கும். ஆனால் அவர் அரசுப் பணி செய்து பென்சன் வாங்கி வாழ்ந்து கொண்டிருந்தவர்.

லீக் அலுவலகத்தில் வருபவர்களுக்கு பணிவிடை செய்வதில், அவருக்கு ஒரு அசாத்திய பிரியம். டீ, காபி கூட வாங்கி வந்து தருவார். பல லீகர்கள், லீக் அலுவலக ஊழியர் என்று நினைத்து அவரை வேலை வாங்குவார்கள். அப்போதும் அவர் முகம் சுளிக்காமல் பணிவிடை செய்வார்.

இவருக்கு உடல் முழுவதும், தடிப்பும் சீழும் எப்படியோ தொற்றிக் கொண்டது. நாங்களெல்லாம் எத்துணை முறையோ மருத்துவம் பார்க்க டாக்டரிடம் அழைத்தோம். வர மறுத்து விட்டார். ஆனால் ஒவ்வொரு இரவும், விழித்தெழுந்து தஹஜ்ஜத் தொழுது, அழுது இறைவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.

ஆச்சர்யம், அவர் உடலிலிருந்த தடிப்புகளும், சீழும்  அவர் உடம்பிலிருந்து துளியும் தெரியாமல் அவரை விட்டு நீங்கி விட்டது.

அவருக்கு வந்த நோயென்ன? யாருக்கும் தெரியாது? அதற்குரிய  மருந்தென்ன? இறை ரகசியம்.

சர்தார் இப்ராஹிம் சாஹிபுக்கு எப்போதாவது, குறிச்சி மகன் வீட்டில் இருந்து உணவு வரும். அதை வாங்கி வைத்துக் கொள்ளுவார். அவர் மகனின் பெயர் எங்கள் தாதாவின் பெயரான அப்துல் ரஹ்மான் சாஹிப்.

ஒருநாள், இரவு நான் பன்னிரெண்டு மணிக்கு பின்னர், நெல்லை முஸ்லிம் லீக் தலைமையகத்திற்கு வந்தேன். வாசலுக்கு வெளியெ படிக்கட்டுக்கு பக்கத்தில் இருவர் இலையில் உணவருந்திக் கொண்டிருந்தனர். நான் லீக் ஆபிசின் கதவைத் தட்டினேன். சர்தார் சாஹிப் கதவைத் திறந்தார். நான் வாசலுக்குள் நுழைந்தவுடன், வாசல் படிக்கட்டில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களை நோக்கி
“யார் நீங்கள்?, இந்த நேரத்தில் படிக்கட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களே!” என்று சத்தம் போட்டேன்.

சர்தார் பாய், என்னைப் பார்த்து, “சத்தம் போடாதீர்கள், நான் தான் உணவைக் கொடுத்தேன்” என்றார்கள்.

கதவை அடைத்து விட்டு, உள்ளே வந்துவிட்டேன். சர்தார் சாஹிபிடம் கேட்டேன்,

“உணவு ஏது? ஏன் இந்த நேரத்தில் அவர்களுக்கு கொடுத்தீர்கள்” என்று கேட்டேன்.

“மதியம் என் மகன் கொண்டு வந்து கொடுத்தான்” என்றார்கள் சர்தார் சாஹிப்.

“மீதமுள்ளதை இந்த நேரத்திலா அவர்களுக்கு கொடுக்க வேண்டும்?” என்று நான் திரும்ப கேட்டேன்.

“மத்தியான சாப்பாட்டில் மீதமுள்ளதில்ல. முழு சாப்பாடும் அதுதான்” என்றார்.

“நீங்கள் ஏன் சாப்பிடவில்லை?” என்று கேட்டேன்.

“எனக்கு அது ஹலாலானது அல்ல என்றார்.

“அப்படியானால் அவர்களுக்கு?” என்றேன்.

“அவர்களுக்கு அது ஹராமானது அல்ல” என்றார்.

சொன்னவர், அடுத்து கேட்பதற்கு வழியில்லாமல், தக்பீர் கட்டி நின்று விட்டார் அந்த நள்ளிரவில்.

சர்தார் சாஹிப் தூய்மையான மனிதர். அப்பழுக்கற்றவர்.

வெளியே உணவருந்திக் கொண்டிருந்தவர்கள், தவறானவர்கள் என்பது மட்டும் புரிந்தது. அன்று, சர்தார் சாஹிப் சொன்னது எனக்கு புரியவில்லை. இன்று தெரிகிற மாதிரி இருக்கிறது ஆனால் விளங்கவில்லை.

சர்தார் சாஹிப், முஸ்லிம் லீக் அலுவலகத்தின், மூச்சுப் போல கலந்து இருக்கிறார் என்று, இன்று எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கிறது.


Thursday, August 15, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது?–18

சதா உழைத்த சகாப்தம்!


ஒரு பச்சைத் துண்டு மடிந்து தோளில் தொங்கிக் கொண்டிருக்கும். தலையில் ஒரு தொப்பி. சற்று தடித்த மூக்குக் கண்ணாடி. கொஞ்சம் நீண்ட பருத்த ஹேண்ட் பேக் இடது பக்க அக்குலுக்குள் அடங்கி இருக்கும். சட்டை, கைலி. சட்டைப் பை உப்பிசமாக புடைத்து இருக்கும். வலது கையில் ஒரு கைக் கடிகாரம். சற்று பெரிய வட்டத்தில் பதிந்து இருக்கும். ஒரு பக்கம் கொஞ்சமாக சாய்ந்த நிலையில் நடை. இப்படி ஒரு மனிதரை அந்தக் காலத்தில் நெல்லை மாவட்டத்தில் எங்கேயாவது கண்டால், “கரீம் அண்ணே அல்லது கரீம் வாப்பா” என்று அழைத்து தைரியமாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லலாம்.
உடனடியாக கனத்த சாரீரத்தில் “வ அலைக்கும் ஸலாம்என்ற பதில் நம் காதுகளில் வந்து ரீங்காரமிடும்.
இவர்தான் கரீம் அண்ணன். கரீம் வாப்பா.
வெ.கா.உ. அப்துர் ரஹ்மான் சாஹிபின் தயாரிப்பு இவர். வெ.கா.உ.அ வின் அண்டை வீட்டுக்காரர். அணுக்கமான உறவுக்காரர்.
நானெல்லாம் பிள்ளைப் பிராயத்திலிருந்து கொஞ்சம் எம்பிக் குதித்து, இளமைப் பருவத்துக்குள்ளே, மீசையாக பூனை முடி முளைத்திருந்த தருணத்திலிருந்து, கரீம் அண்ணனை இப்படித் தான் பார்த்து இருக்கிறேன்.
இந்தப் பருவத்தில் அவரைப் பார்க்கும் பொழுதும் ஐம்பது வயது போல இருக்கும். அதற்குப் பின் எந்தப் பருவத்தில் பார்க்கும் போதும் ஐம்பது வயது போலவே தோன்றும். கரீம் அண்ணன் நடமாட முடியாமல் வீட்டில் இருந்த தருணத்தில்தான் ஒரு வயோதிகர் அமர்ந்து இருக்கிறார் என்று எங்களுக்கு தோன்றியது.
அப்போதும், “ஸலாம் அலைக்கும் வா வாப்பா” என்ற அழைப்பின் ஓசை அதே பழைய கனத்த சாரீரத்தில் வந்து தழுவும்.
கரீம் அண்ணனுக்கு ஒன்று மட்டும் எல்லாவற்றையும் விட அதிகம் உரிமையாக இருந்தது. அதுதான் உழைப்பு.
கரீம் அண்ணன் அநேகமாக இவ்வுலக வாழ்க்கையை நீத்த பருவத்தில், தொண்ணூற்று மூன்று அல்லது தொண்ணூற்று நான்கு வயது இருக்கலாம்.
சென்னை மெரீனா கடற்கரையில், உழைப்பாளர் சிலை இருக்கிறது. இது சிற்பிகளின் கற்பனைப் பிறப்பு. ஆனால், உழைப்பின் எதார்த்த சின்னமாக அன்று முஸ்லிம் லீகர்களின் மத்தியில் நடமாடிய மனிதர் எங்கள் கரீம் அண்ணன்.
கரீம் அண்ணன். நெல்லை மாவட்டத்தின் சந்து பொந்து, இண்டு இடுக்கு, பட்டி தொட்டி, எங்கெங்கும் அலைந்து திரிந்து சமூகப் பணியாற்றிய சாதனை வடிவம்.
நெல்லை மாவட்டத்தின் முஸ்லிம் லீகின் முதல் தலைவர் எங்கள் தாதா மு.ந.அப்துர் ரஹ்மான் சாஹிபோடும், செயலராக இருந்தவர். அடுத்து தலைவரான என் சிறிய தந்தையார், பொதிகைக் கவிஞர் முன்னாள் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி நகர சபையின் முதல் தலைவர் அ.ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களுடனும் செயலாளராக பணியாற்றியவர். என்னுடைய தந்தையார் A..K.. ரிஃபாய் சாஹிப் அவர்களுடனும் செயலாளராகப் பணிபுரிந்து இருக்கிறார். இப்படி நீண்டதொரு, நிரந்திர மாவாட்ட செயலாளர் போல செயலாற்றிய சிறப்பு, நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர் கரீம் அண்ணனுக்குத் தான் உண்டு.
காயிதே மில்லத், மாநிலத் தலைவர் திருச்சி ஜானி பாய் M.L.C., சிராஜுல் மில்லத் சமது சாஹிப் உள்ளிட்ட தலைவர்களின் மாநில செயற்குழுவில், அசைக்க முடியாத இடம் பிடித்து இருந்தவர் கரீம் அண்ணன்.
தென்னிந்திய இஷாஅத்துல் இஸ்லாம் சபையின் செயலாளர், தெற்குப்பட்டி நூருல் இஸ்லாம் கல்வி நிலையத்தின் தாளாளர், நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் நிரந்திர செயற்குழு உறுப்பினர். இப்படி பலதரப்பட்ட சமூக பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்ட பொறுப்பாளர் கரீம் அண்ணன்.
சமூகத்துக்கென்று ஒரு அர்ப்பணிப்பை வாழ்க்கையாக்கிக் கொண்டிருந்த அவரை நையாண்டி செய்த நபர்களும், இந்த சமூகத்தில் உண்டு.
தென்காசி மரைக்காயர் பள்ளி வாசல் தெரு. இது எங்களின் பூர்வீக தெரு. இந்தத் தெருவில் ஜங்க்ஷன் மாதிரி ஒரு முக்கு (சந்தி) இருக்கும். அங்கே சாயங்காலம் மாலை வேளைகளில் சிலர், நின்று கொண்டோ, சாக்கடை பாலத்தின் சுற்றுத் திண்டில் அமர்ந்துக் கொண்டோ பேசிக் கொண்டிருப்போம்.
அப்படி நானும் ஒரு நாள் நின்று பேசிக் கொண்டிருந்தேன். அந்த முக்கின் மேற்கில் நேரெதிரில் எங்கள் பள்ளிவாசல் இருக்கும்.
அந்தப் பள்ளிவாசல் வலது பக்க சந்து வழியாக, பஜாரில் இருந்து வருபவர் எங்கள் தெருவுக்குள் நுழைவார்கள்.
அப்படி, கரீம் அண்ணன் ஒரு நாள் அஸர் தொழுகைக்கு முன்னே,  அவர்களின் அந்தத் தோற்றப் பொலிவோடு அசைந்த நடையில் எங்கள் தெருவுக்குள் வருகிறார்கள். அவர்கள் வருவது, சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிபை பார்க்கத்தான்.
நாங்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் முக்கை ஒட்டி உள்ள பெரிய வீடு, முஸ்தபா சாஹிபுக்கு உரியது. இவர் தாசில்தாராகப் பணிபுரிந்தவர். சென்னை கிரசன்ட் பொறியியல் கல்லூரியின் டைரக்டர்களில் ஒருவராக இருந்த இன்ஜினியர் பீர் முஹம்மது சாஹிபின் மூத்த அண்ணன். நெல்லை முஸ்லிம் அனாதை நிலையத்தின் செயலாளர். எனக்கு சுற்றி வளைத்து பெரிய வாப்பாமுறை. நெருக்கமாக சொன்னால், என் தம்பியின் (ஷாஹுல் ஹமீது சாஹிப் மகன்) மனைவியின் தந்தையார்.
இவர், அவர் இல்லத்தை விட்டு இறங்கி, தொழுவதற்கு பள்ளிவாசல் நோக்கி வருகிறார். எதிரே சற்று தூரத்தில் கரீம் அண்ணன் வருவதைப் பார்க்கிறார்.
நான் முக்கில் நிற்பதை கவனித்து விட்டு, என்னிடம்
“ஏய் ஹிலால், எதுக்க என்னடேய் பச்சைத் துண்டு வருதுஎன சொன்னார்.
அவர் சொன்னதின் பின்னால்தான் நான் எதிரெ பார்த்தேன். கரீம் அண்ணன் வந்துக் கொண்டிருந்தார்.
அந்த உழைப்பின் அடையாளம் லீகின் அசைத்து பார்க்க முடியாத ஒரு தூண், முஸ்தபா சாஹிபுக்கு நையாண்டித் தனமாக, ”பச்சைத் துண்டாக“ தெரிகிறார். அதுவும் என்னிடமே அதைச் சொல்லுகிறார்.
“வாப்பா கொஞ்சம் நில்லுங்கள், எதிரே வருவது பச்சைத் துண்டு என்றால், அந்தப் பச்சைத் துண்டு யாரைப் பார்க்க வருகிறது தெரியுமா? இதோ மூணாவது வீட்டில் இருக்கும் “பச்சைச் சட்டையைத்” தான் பார்க்க வருகிறார். (பச்சை சட்டை – அ.ஷாஹுல் ஹமீது சாஹிப்)”
கரீம் அண்ணன் பச்சைத் துண்டென்றால் உங்கள் தம்பி, ஷாஹுல் ஹமீது சாஹிப் பச்சைச் சட்டை என்பது உண்மையாகும். இனிமேல் ஷாஹுல் ஹமீது சாஹிபை பச்சைச் சட்டை என்று சொல்லும் தைரியம் உங்களுக்கு இருந்தால், கரீம் அண்ணனை பச்சைத் துண்டு என்று நீங்கள் சொல்லுங்கள்” என்று கடுமையாக நான் சாடிவிட்டேன்.
இந்த நிகழ்வு நடந்த அரைமணி நேரத்துக்குள் எங்கள் ஷாஹுல் வாப்பா வீட்டிற்குள் செய்தி போய் விட்டது. ஷாஹுல் வாப்பா என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள்.
“நாங்கள் கேள்விப் பட்டது சரி தானா?” என்று கேட்டார்கள்.
“நூறு சதவிகிதம் சரிதான்”என்றேன்.
“ரொம்பச் சரியா சொல்லி இருக்கிற”என ஷாஹுல் வாப்பா சொன்னார்கள்.
கரீம் அண்ணன் வருத்தப்பட்டார்கள்.
“ஹிலால், அவர் கிட்ட போய் இப்படி நீ பேசி இருக்க வேண்டாம். பேசுறவன் பேசிட்டு போறான். பச்சைத் துண்டுன்னு தான சொன்னார். அது நம்ம கொடி தானே, ஆனால் அவர் எதையும் மறக்க மாட்டார். உனக்கு ஏதாவது இடைஞ்சல் பின்னால் தருவார்என அக்கறையோடு கரீம் அண்ணன் வருத்தப் பட்டார்.
அவர் சொன்னது மாதிரிப் பின்னர், எனக்கு சில நிழந்தது. அது இங்கே தேவை இல்லை.
சமூகத்தின், சேவைகளை நினைத்து பூரிப்பு அடைகிற ஒரு திருக்கூட்டம் இருப்பது போல, சேவையை நையாண்டித் தனம் செய்யும் சின்னக் கூட்டமும் இருக்கத் தானே செய்கிறது.
கரீம் அண்ணன் உறுதியில், கொள்கைப் பிடிப்பில், செயல் புரியும் வீரியத்தில் எவருக்கும் சளைத்தவர் அல்லர்.
நெல்லையில் முஸ்லிம் அனாதை நிலையத்தில் கல்வி மாநாடு, சமூக இணக்க மாநாடு என்ற இருபெரும் மாநாடு, ஒரே மாநாடாக இரு தினங்களில் நடந்தன.
முதல் நாள் மாநாட்டிற்கு A..K.. ரிஃபாய் சாஹிப் தலைமை தாங்கினார். சிறப்பு சொற்பொழிவு ஆற்ற யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய தலைவர் சுலைமான் சேட் சாஹிப் M.P. வந்திருந்தார். தமிழ் மாநிலத் தலைவர், சமது சாஹிப் M.P. வந்திருந்தார்.
ஆனால், முஸ்லிம் அனாதை நிலையத்தார், முஸ்லிம் லீகர்களை வரவேற்பதில், சற்று கவனக்குறைவாக நடந்துக் கொண்டார்கள். அதாவது, MOC மைதானத்தில் ஒரு மரத்தடிக்கு கீழே தலைவர் சுலைமான் சேட்டுக்கும், தலைவர் சமது சாஹிபுக்கும் இரு சேர்களை போட்டு அமர வைத்திருந்தனர். இது லீகர்கள் மனதைப் புண்படுத்தி விட்டது.
மாவட்டத் தலைவர், அ. ஷாஹுல் ஹமீது சாஹிப், செயளாலர் மேலப்பாளயம் சட்ட மன்ற உறுப்பினர் சாச்சா கோதர்மைதீன் சாஹிப் போன்றோர்களுக்கு மிக எரிச்சலைத் தந்து விட்டது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என தலைவர்களிடம் முறையிட்டனர். கரீம் அண்ணன் கிட்ட தட்ட வானத்துக்கும், பூமிக்கும் குதிக்க ஆரம்பித்து விட்டார்.
இறுதியாக தலைவர் சுலைமான் சேட் மட்டும் மாநாட்டில் பேசுவது என்றும், மற்ற தலைவர்கள் அனைவரும் தென்காசிக்கு சென்று அப்போதுதான் உருவாகி இருந்த ரஹ்மத் நகரில் சென்று முஸ்லிம் லீக் கூட்டமாக நடத்திக் கொள்ளுவது என முடிவெடுத்து, சுலைமான் சேட் பேசியவுடன், அவரையும் அழைத்துக் கொண்டு லீக் தலைவர்கள் தென்காசிக்கு புறப்பட்டு விட்டனர்.
அடுத்து அதே மேடையில் கவியரங்கம். பேராசிரியர் மர்ஹூம் கா. அப்துர் கபூர் சாஹிப் தலைமையில் கவியரங்கம் நடக்க இருக்கிறது. இது அண்ணலாரைப் பற்றிய மீலாது கவியரங்கம்.
இதில் நானும் கலந்து கொள்கிறென். ஆனால் லீகர்கள் யாரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு எடுத்து தென்காசிக்கு செல்கின்றனர்.
சமது சாஹிப் என்னைத் தனியே அழைத்து,
“கவியரங்கத்தில் நீங்கள் கலந்துக் கொள்ளுங்கள், ஒரு லீகன் என்ன செய்ய வேண்டுமோ அதை கவியரங்கத்தில் செய்துக் கொள்ளுங்கள் என சொல்லி சென்று விட்டார்.
இது கரீம் அண்ணனுக்கு தெரியாது. நான் கரீம் அண்ணனிடம் தென்காசிக்கு வரவில்லை. கவியரங்கத்தில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்னேன்.
கரீம் அண்ணன் விழிகள், அந்த பருத்த கண்ணாடியையும் தாண்டி என்னை வந்து குத்தின.
“நீ கலந்து கொண்டால், கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்று கடுமையாக கூறி விட்டு சென்று விட்டார்.
கவியரங்கம் நடந்தது. நான் கவிதை படித்து முடித்த உடன், கூட்டத்தில், பெரிய கலகலப்பு. அதே நேரத்தில் ஆதரவு ஆரவாரம்.
தலைமை தாங்கிய பேராசிரியர், கபூர் சாஹிபுக்கு அதிர்ச்சியும் மனவருத்தமும். என்னுடைய சின்ன வாப்பா முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப், மிகுந்த கோபம் அடைந்தார். இதனால், அவர்களும் நானும், கிட்டதட்ட பதினாறு ஆண்டுகள் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.
கவியரங்கத்தில் நடந்தவை மறுநாள் கரீம் அண்ணனுக்கு தெரிந்து விட்டது. அதற்கு அடுத்த நாள், குற்றாலம் பயணியர் விடுதி இல்லத்தில் சமது சாஹிபிடம் நடந்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தேன்.
கரீம் அண்ணன் அப்பொழுது அங்கு வந்தார். என்னை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டார்.
“நம் தலைவர்களை அவமதிப்பவர்களை நாம் அவமதிக்கத்தான் வேண்டும்” என்றார்.
அந்தப் பசுமையை, இதைப் பதியும் பொழுதும் என்னால் உணர முடிகிறது.
கரீம் அண்ணன் லீக் கொள்கையில் எப்பொழுதும் உறுதியாக இருக்கக் கூடியவர்.
சின்ன வாப்பா ஷாஹுல் ஹமீது சாஹிப், கரீம் அண்ணன் இரட்டையர் போல ஒருவருக்கொருவர் வைத்திருந்த நம்பிக்கையும் தோழைமையும் பிரிவில்லாதது. “விடுதல் அறியா விருப்பு” என்று தமிழில் ஒரு சொல் உண்டு. இதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தனர்.
ஒரு கட்டத்தில், மாநில முஸ்லிம் லீக், ஷாஹுல் ஹமீது சாஹிப் அவர்களை இயக்கத்தை விட்டு ஆறாண்டுகள் விலக்கி வைத்தது. இந்த விலக்கல் செயற்குழுவிலும், கரீம் அண்ணன் கலந்து கொண்டிருந்தார்.
அந்த நிமிடத்தில் இருந்து, ஷாஹுல் ஹமீது சாஹிபை ஆறாண்டுகள் கரீம் அண்ணன் பார்க்கவும் இல்லை. அவர்களிடம் பேசவும் இல்லை. எந்தத் தனிப் பகையும் கிடையாது. இயக்கம் விலக்கியதை தனக்கும் விலக்கலுக்குரிய சட்ட விதியாக ஏற்றுக் கொண்டார் கரீம் அண்ணன்.
இன்னும் ஒரு நிகழ்வு சொல்லித் தான் ஆக வேண்டும்.
சென்னை வாலாஜா பள்ளிவாசலில், காயிதே மில்லத் அடக்கத் தலம் இருக்கிறது. இந்தப் பள்ளிவாயில் சுற்றி உள்ள இடங்கள் ஆற்காடு நவாப் குடும்பத்தினர்களுக்குரியது.
அங்கே ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்கள் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதி பெற்றவர்கள். காயிதே மில்லத் மட்டுமே அங்கே அடக்கமாகி இருக்கும் அன்னியர்.
காயிதே மில்லத்துடைய அடக்கத் தலம் எது என்றே கண்டறியாதபடி நாய்களும் பிற உயிரனங்களும் அங்கு நடமாடிக் கொண்டிருந்தன. அங்கே ஜியாரத் செய்ய சென்ற முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர் ஜமால் முஹம்மது சாஹிப் இந்த நிலைக் கண்டு ரொம்ப வேதனைப் பட்டார்.
சில லீக் தலைவர்களிடம் காயிதே மில்லத் மறைவிடத்தை வெளித் தெரிகிற மாதிரி உயர்த்திக் கட்ட கோரிக்கை வைத்தார்.
அந்த இடம், ஆற்காட்டு நவாப் குடும்பத்தினர்களுக்கு உரியது. அங்கே நாம் எதுவும் கட்ட முடியாது என்ற பதில்தான் லீகர்களிடம் இருந்து வந்தது.
ஜமால் முஹம்மது சாஹிப் உடனடியாக ஒரு தனிக் குழு அமைத்து, ஆற்காட்டு இளவரசரைச் சென்று சந்தித்து, அனுமதிப் பெற்று அந்தக் குழுவினரின் செலவில், உயர்த்திக்கட்டி அடையாளப் படுத்திக் காட்டினார்.
அந்த கபுறில்தான், அத்தனை அரசியல் கட்சி காரர்களும் முஸ்லிம் லீகர்கள் உட்பட ஜூன் 5 அன்று, ஒவ்வொரு ஆண்டும் சென்று, துஆவும் மரியாதையும் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காலகட்டத்தில் லீகர்களுக்கும், முஸ்லிம் அனாதை நிலையத்தினர்களுக்கும் கொஞ்சம் மனமுரண்கள் இருந்தன.
கரீம் அண்ணன் அவர்கள், ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களை சந்தித்து, தன் மனம் நிறைய வாழ்த்து சொன்ன முதல் முஸ்லிம் லீகராக இருந்தார்.

கரீம் அண்ணன் கண்ணோட்டத்தில், காயிதெ மில்லத், முஸ்லிம் லீக், சமூகப் பணி, சதா உழைப்பு இவை மட்டுமே இறுதி வரை அவரிடம் நேர்கோட்டில் இருந்தன.