Thursday, February 5, 2015

நோவா கப்பல் மோசே கைத்தடி...!




இந்த வாக்கியங்கள் மிக நீண்ட காலமாக ஒரு உந்து சிந்தனையாக எனக்குள் பரிணமித்துக் கொண்டே இருக்கின்றன.

எந்தத் தளத்தில் அவற்றை இறக்கி வைப்பது? என்ற அங்கலாயிப்பும் இணைந்தே வந்து கொண்டிருக்கின்றன.

சமூகவியல் சிந்தனையின் பரிமாணங்கள் எனக்குள் எழும் போதெல்லாம் நோவா கப்பல் மோசே கைத்தடி கூடவே பிணைந்துவரும்.

சூஃபி இஸக் கோட்பாடுகளை நினைக்கும் தோறும் இந்த நோவா கப்பல் மோசே கைத்தடி வந்துத் தொற்றிக் கொள்ளும்.

இப்போது கூட இந்தக் கோணங்களின் ஆழத்தில் என் பதிவுகள் இருக்கப் போவதில்லை ஆனாலும் பதிவிடத் தொடங்கி விட்டேன்.

என்னைப் பொறுத்தவரை சமூகவியல் நடவடிக்கைகளையும் சூஃபி இஸக் கோட்பாடுகளையும் பக்கம் பக்கமாக வரும் தண்டவாளங்களைப் போலக் கருத முடியவில்லை.

நோவா கப்பல் மோசே கைத்தடி என்ற தலைப்பில் தொடர் ஒன்று எழுதுவது என் நோக்கம்.அதற்கு இன்று இப்பதிவில் புள்ளி வைத்திருக்கிறேன். இன்னும் பலப் புள்ளிகளைத் தொடர்ந்து வைப்பேன். அதன் பின் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகளை இணைக்கும் போது அதி அற்புதமான ஒரு சித்திரம் முழுமை பெற்றிருக்கும். இதில் அழுத்தமான நம்பிக்கை எனக்கு உண்டு.

விருந்துக்கு முன்னால் சூப் பரிமாறுவது போல தெடங்கி விடுகிறேன்.
நோவா கப்பல் மோசே கைத்தடி - இந்த சொல்லாடல் ஒரு பென்னம் பெரிய அரசியல் தலைவர் தேர்தல் பொதுக் கூட்டத்தில் வெளியிட்டச் சொல்லாடல்.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இச் சொல்லாடலை நான் கேட்டேன். அன்றிலிருந்தே இச்சொல்லாடல் என்னை எனக்குள் உருட்டிக் கொண்டே இருக்கிறது.

அது ஒரு சடடமன்றப் பொதுத் தேர்தல். அரசியல் இயக்கங்கள் மிகத் தீவிரமாக தங்கள் தங்கள் தரப்பு வாதங்களை மக்கள் மத்தியில் வீசிக் கொண்டியிருந்தன.

தமிழகத்தில் இந்திரா காங்கிரஸ், முஸ்லிம லீக, தி.மு.க ஓரணியில் கூட்டமைத்து் தேர்தல் களத்தை அமைத்திருந்தன.

தென்காசி சடடமன்றத் தேர்தல் மிகச் சூடு பிடித்திருந்தது. 1954 -ஆம் ஆண்டிற்குப் பின்னர் தென்காசி சட்டமன்றத்தொகுதியில் சகோதரப் பிராமணச் சமுதாயத்தைச் சார்ந்த எவரும் போட்டியிட்டதில்லை என நான் கருதுகிறேன்.

அந்தச் சட்மன்றத் தேர்தலில் இ காங்கிரஸ் சார்பாக வெங்கட ரமணன் என்ற பிராமணத் தோழர் களத்தில் நின்றார். இவர் வழக்குரைஞசர். முன்னாள் ஜனாதிபதி வெங்கட் ராமனுக்கு வேண்டியவர்.

தொகுதி மக்கள் இவர்மீது நல்லெண்ணம் அற்றிருந்தனர். குறிப்பாக இஸ்லாமிய சமுகத்தினரும் தலித் சமுகத்தினரும் சற்று மிகுந்த அதிருப்தியில் இருந்தனர்.

இவரின் வெற்றி வாய்ப்பில் நம்பிக்கை இன்மையே அதிகரித்திருந்தது.

காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணியில் இருந்த தி மு க மாவட்டத் தலைவர்களையும் லீக் மாவட்டத் தலைவர்களையும் கலந்து ஆலோசனை நடத்தினர்.

மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர், லீகின் மாநிலப் பொருளாளர் அ.சாகுல் ஹமீது சாஹிபும் மாவட்ட செயலாலர் கோதர் மைதீன் சாஹிபும் வேட்பாளர் வெங்கட ரமணனுக்கு நம்பிக்கை ஊட்டினார்கள்.

முஸ்லிம்கள் மத்தியில் உங்கள் மீது அவநம்பிக்கை இருந்தாலும் லீக் ஆதரிப்பதால் முஸ்லிம்கள் தங்கள் வாக்குகளைத் தருவார்கள். இதைப் பூரணமாக நம்பிக் கொள்ளுங்கள் என உறுதிப் படுத்தினார்கள்.

தனிமனித வெறுப்புகளை முன்னெடுக்காமல் இயக்க முடிவுகளை
நடைறைப் படுத்தும் நேர்த்தியும் தேர்ச்சியும் எங்களிடம் உண்டு என லீக் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதன் அடிப்படையில் லீக் தலைவர்களின் பிரச்சாரக் கூட்டத் தேதிகளை ஒழுங்கமைத்தனர்.

தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் பொதுச் செயலாலர் C.H.முகமது கோயா சாஹிப் இயக்கத் துணைத் தலைவர்கள் A.K. ரிபாயி சாஹிப் S.A. காஜா முகைதீன் சாஹப் போன்ற தலைவர்களை ஒருங்கிணைத்து தென்காசி சட்டமன்ற தொகுதியில் ஏழு பகுதிகளில் பொதுக்கூட்டத்தை வடிவமைத்தார்கள்.

C.H. முகமது கோயா சாஹிப் பல முறை பாராளுமன்றம் சென்றவர். கேரளத்து சட்டமன்ற அவைத்தலைவராக, காவல்துறை அமைச்சராக கல்வி அமைச்சராக துணை முதலமைச்சராக பதவிகளை வகித்த மகத்தானத் தலைவர்.

பின்னாளில் கேரளத்து முதலமைச்சராகவும் திகழ்ந்தவர். இந்தியத்தின் தென் நாட்டுக்குக் கிடைத்த முதல் முஸ்லிம் முதல்வர். முஸ்லிம் லீகின் முதல்வர்.

C.H. கோயா சாஹிப் தென்காசியில் வந்து வெங்கட ரமணனுக்கு வாக்குக் கேட்பதில் முஸ்லிம்களில் பலருக்குச் சங்கடம் இருந்தது.

லீகின் கூட்டணித் தர்மத்தை ஒரு போதும் குலைக்க முடியாது. மார்க்கத்திலும் இதற்கு அனுமதி இல்லை என உறுதியுடன் கூறி தேர்தல் கூட்டங்களில் தலைவர் கோயா கலந்து கொண்டார்.

இக்கூட்டங்களில் அ.ஹிலால் முஸ்தபா, இஜட். ஜபருல்லா, கவிஞர் தா.காஸிமும் தொடர்ந்து பேசிச் சென்றனர்.

முஸ்லிம்களின் சின்ன அதிருப்திக்குத் தெளிவான விளக்கத்தையும் தந்தாக வேண்டும். அவர்களும் மனம் நிறைந்து வாக்குகள் வழங்க வேண்டும் எனத் தெளிவான தீர்க்கமான முறையில் பிரச்சாரப் பேச்சுக்களைக் கோயா சாஹிப் வடிவமைத்துப் பேசினார்.

இந்தச் சமூகம் பிரளயப் பொங்கலில் அழிந்து போகாதவாறு ஒவ்வொருவரையும் கைத்தூக்கி மேலேற்றி காப்பாற்ற வேண்டும். முதலில் இந்த மனிதர்கள் தொடர்ந்து வாழ்வதற்காக இந்த நிலையிருந்து தப்பிக்க வேண்டும். அதற்கொரு மகத்தான கப்பல் பிரளயத்தின் மீது மிதந்தாக வேண்டும். அந்தக் கப்பலில் அனைத்து உயிர் வர்க்கங்களையும் ஏற்றிக் கொண்டு ஏதோ ஒரு மலை முகட்டில் தங்கி நாம் பாதுகாப்பைப் பெற்றாக வேண்டும்.

இந்த மாதிரி நேரங்களில் தனிமனிதக் குரோதங்களைக் கோபங்களை முழுக்க மறந்து விட்டு நம்பி வருபவர்களை ஏற்றிக் கொண்டு பயணப் படுவதுதான்
மானுட தர்மம். இதுவே இறைக்கருணை.


அதுதான் நூஹுநபி (நோவா) கப்பல். இந்தக் கப்பல்தான் நம் முஸ்லிம் லீக்.

இக்கப்பலில் மான் மயில் குயில்போன்ற உயிரினங்களும் நம்பிக்கையோடு ஏறியிருக்கின்றன. அதே நேரம் பாம்பு தேள் போன்ற நச்சு உயிரினங்களும்
நம்பிக்கையோடு வந்திருக்கின்றன.

நோவா கப்பல் நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றும்.

நம்பிக்கை காட்டுபவர்கள் பின்னாள்களில் நம்பிக்கைத் துரோகத்தைச் செய்தாலோ நச்சுத் தீண்டலைத் தந்தாலோ அச்சப் படவேண்டியதில்லை.

முஸ்லிம் லீக் நோவா கப்பல் என்ற உறுதியோடு நம்பி வந்த கூட்டணிகளைக் காப்பாற்றும்.

இந்தச் சட்டமன்றத் தொகுதியிலும் நண்பர் வெங்கட ரமணனுக்கு வாக்குகள் தந்து நம் நோவா கப்பலில் ஏற்றிக்கொள்வோம். நம் பணியை நாம்
இறைவனுக்காகச் செய்வோம்.

நச்சுக் குணத்தை நம்மிடம் வந்தவர்கள் வெளியிட்டால் நாம் அஞ்சப் போவதில்லை. மூஸாநபி (மோசே) கைத்தடியும் நம்மிடம் இருக்கிறது. அதுவும்தான் முஸ்லிம் லீக்.

சதி செய்யும் நச்சுக்களை மோாசேயின் கைத்தடி முழுவதுமாக விழுங்கி ஜிரணித்தும்விடும். இதுதான் இறைவனின் இன்னுமொரு கருணை.

மேலே சொன்ன வரலாற்றுப் பதிவுகளை தலைவர் C.H.கோயா தென்காசியில் எல்லாக் கூட்டங்களிலும் பேசினார்.

வேட்பாளர் வெங்கட ரமணன் முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

சகோதர பிராமணச் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பிராமணரை முஸ்லிம் சமுகத்து மக்கள் தம் வாக்குகளை வழங்கி வெற்றிக் கப்பலில ஏற்றி அமர வைத்தார்கள்.

ஆனால் பின்னர் ஒரு சோகம் நிகழ்ந்தது. வாக்குத் தந்த சமுகத்துக்கு அவர் வேதனை அளிக்கும் செயல்பாடுகளைச் செய்தார்.

நோவா கப்பலில் ஏறி வந்த அந்த நச்சுப் பொருள் அதன் இயல்பைக் காட்டத்தான் செய்தது.

மோசேயின் கைத்தடி அதனுடைய நன்மையை நிலைநாட்டியது.

இன்றும் முஸ்லிம் லீக் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் அரசியல் அநாதையாகிக் கிடக்கிறார்.

No comments:

Post a Comment