Monday, February 16, 2015

கலவைக் கலாச்சாரம்...!



காவிரிப் பேராறு கடலில் கலக்கும் முகத்துவாரம். அக்கடலோ ஆழத்தாலும் ஆர்ப்பரிப்பாலும் அடர்த்தியான பயங்கரம் நிறைந்தது.

சோழப் பேரரசின் துறைமுகப் பட்டினம் பூம்புகார். சரித்திரம் பலப்பல செய்திகளைக் குவித்து நிறைத்திருக்கும் துறைமுகப் பட்டினம்.

இந்தக் கடல், ஏதோ ஒரு தேவைக்காக அடிக்கடி மண்புறத்தை, விழுங்கி விழுங்கி, மீண்டும் மீண்டும் கக்கிக் கொண்டிருக்கும் விநோதக் கடல்.

துறைமுகப் பட்டினம் என்பதனால் வணிகம் கொடிகட்டிப் பறக்கும் கோலாகலம் கொண்டது. தமிழகத்து பிற பகுதி வணிகர்களையும் அங்கே காண முடியும். அண்டைப் பிரதேச வணிகர்களையும் அயல் தேச வியாபாரிகளையும் அங்கே பார்க்க முடியும்.

மக்களின் கூட்டம் திரண்டு இருப்பதால், மனிதர்களின் வாழ்விலும் கலாச்சாரக் கலவைகளைக் காண முடியும்.

சோழநாட்டுப் பழக்க வழக்கங்கள் ஒரு வகையானது. பாண்டியநாட்டு நடவடிக்கைகள் இன்னொரு வடிவானது.

சேரநாட்டு வாழ்வமைப்பு வேறொரு தினுசானது. இந்த மூன்று தமிழகப் பகுதிகளின் கலாச்சாரங்களையும் அதன் கலவைகளையும் காவிரிப் பூம்பட்டினத்தில் மிகச் சாதாரணமாகக் காணமுடியும்.

அன்னிய தேசத்தவர்களும் அங்கே வந்து குடியிருந்தனர். இவர்களுக்காகவே அங்கே ஒரு தனிப்பகுதி ஒதுக்கப் பட்டிருந்தது. அந்தப் பகுதிக்கு மருவூர்ப் பாக்கம் என்று பெயர். அரபியர்கள், பாரசீயர்கள் (யவனர்கள்) இன்னும் பிற நாட்டு வணிகர்கள் அப்பகுதியில் குடியிருந்தனர்.

அக்குடியிருப்பிற்குள்ளே வண்ணச் சாந்து விற்பனைக் கடைகள், மலர்க்கடைகள், நவமணி விற்பனை அங்காடி, இசைவாணர் குடியிருப்பு என இப்படிப்பட்ட கடைவீதிகள் அமைந்திருந்தன.

மருவூர்ப் பாக்கத்தைத் தாண்டிப் பட்டினப் பாக்கம் இருந்தது. இந்தப் பட்டுனப் பாக்கத்தில்தான் அரசவீதி பரந்து கிடந்தது. வேளாளர்வீதி விரிந்து கிடந்தது. கணிகையர் வீதியும் கவனம் ஈர்த்தது.

இந்த இரு பாக்கங்களுக்கும் இடையிலே நாளங்காடி(Morning Bazaar), அல்லங்காடி (Evening Bazaar) பொலிந்து கிடந்தன. இந்தப் பகுதிகளில் தெய்வ வழிபாட்டுத் தலங்கள், கலைக்கூடங்கள், சூதாடும் கழங்கள்(Club), மதுபானக்கடைகள் இப்படிப் பக்தியும் கேளிக்கைகளும் கலந்து கிடந்தன.

கடற்கரை மணல்வெளி எங்கும் மனித நடமாட்டங்கள். அங்கங்கே சற்றே ஒதுக்குப் புறங்களில், காதல் இளவட்டங்கள், குடும்பத் தம்பதியர் களித்துக் கிடக்கும் காட்சிகள். அங்கே பூவிற்கும் பூவையர், பல்வேறு தின்பண்டங்கள் விற்போர், கொஞ்சம் தள்ளி மீன்விலை பகர்வோர் இப்படி ஏராளமான நடைபாதைக் குறுவணிகர்கள்.

எல்லாத் தேசத்துக் கலாச்சாரங்களும் இயல்பாகவே பரவிக் கிடந்தன. இக் கலாசாரத் தோற்றங்கள் எந்தவொரு தனிக் கலாசாரக் குழுவிற்கும் சொந்தமில்லாமல் அங்கே அனைவருக்கும் ஏகபோக உரிமையாக இருந்தன.

இத்துறைமுகப் பட்டினத்தை ஒட்டிக் காலாற நடந்து செல்லும் தூரம் அல்லது குதிரைச் சவாரியில் சிறிது பொழுதில் தொட்டுவிடக் கூடிய தொலைவிலுள்ள  குட்டிக் குட்டிக் கிராமங்களில் துறைமுகப் பட்டினத்து நாகரீக வாழ்வு அப்பிக் கிடந்தது எனச் சொல்லமுடியாது.

இந்தச் சின்ன இடைவெளியில் உள்ள கலாச்சார வித்தியாசங்கள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்ளவில்லை. ஒன்றையொன்று தழுவிக் கொள்ளவே ஆசைப் பட்டன.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தக் கலாசாரத்தைக் காலம் கட்டாயம் நிறுவிவிடும்.

காவிரிப் பூம்பட்டினத்தின் கடற்கரை வெளியில் மாலை நேர மனித வாழ்க்கை எப்படியிருந்தது தெரியுமா?

குடும்பத்தோடு வந்திருந்தனர். அவர்களுக்குச் சற்றுத் தொலைவிலேயே காதலிக்கப் பழகியிருந்தவர்கள் களித்திருந்தனர். மூன்றாவது ஒரு வகையினரும் அங்கே தலைப்பட்டனர். உடல் இன்பத்திற்காக மட்டுமே சிலர் ஓரம் ஒதுங்கியிருந்தனர்.

இன்னும் சிலபெண்கள் சிறு குழுக்களாக வந்து அமர்ந்து தங்கள் வேதனைகளை வழியவிட்டிருந்தனர். இவர்கள் கணவர்கள் வேறெங்கோ மடிகளில் மகிழ்ந்து கிடந்தனர். அதன் பொருட்டு இவர்கள் வெதும்பிக் கிடந்தனர்.

ஒரு பட்டினத்திற்குரிய சகல பண்பாடுகளுடனும் சகல விழாக்களுடனும் வேதனைகளுடனும்தான் மனித வாழ்க்கை தன்னுடைய வாழ்காலத்தைக் கடந்து வந்திருக்கிறது.

இங்கே தவறுளும் தடுக்கப் பட்டிருக்கின்றன. அதே நேரம் அதே தவறுகள் வேறொரு ரூபத்தில் நட்டநடு ஊருகளுக்குள்ளே நடைபோட்டிருக்கின்றன.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பூம்புகார் பட்டினக் காட்சிகளை இப்படிப் படம்பிடிக்கிறார் இளங்கோ அடிகள்.

இன்றைய மெரீனாக் கடற்கரையிலும் இதுதானே காடசி.? சென்னை  ECR கடற்கரைச் சாலை, கோவா கடற்கரை வெளிகளிலும் இதுதானே அனுமதியாகிக் கிடக்கிறது.?

இவர்கள்தாம் மனிதர்கள். இவைகள்தான் கலாச்சாரங்கள். இவைகள்தான் சரித்திர முகங்கள்.

இவையெல்லாம் எங்கோ ஐரோப்பிய அன்னிய நாடுகளில் மட்டுமே இருந்து வந்தவை அல்ல. நமது பழம் தமிழகத்திலும் சுய கலாச்சாரமாகவே இருந்து வந்திருக்கின்றன.

இன்னும் கொஞ்சம் பேசுவோம்.

No comments:

Post a Comment