Tuesday, February 17, 2015

நம் முப்பாட்டியின் முறையீடு...!


அடர்ந்து படர்ந்திருக்கும் பருத்த ஆல மரத்தின் நிழலில், அதைச் சுற்றி எழுந்து நிற்கும் மண் திண்ணையில் நாட்டாமை தன் குழுக்களுடன் கூடிவிட்டார்.

மரநிழலிலும் நிழலுக்கு வெளியிலும் அந்தக் குட்டிக் கிராமம் கூடி விட்டது.

அழகான சிற்றூர். ஊர்முழுக்கவும் சொந்த பந்த உறவுகள். அன்னிய மனித வாடை அந்தக் குட்டி ஊரில் தென்படுவதில்லை. ஆனாலும் பஞ்சாயத்துக் கூடிவிட்டது.

அந்த அன்னியோன்யச் சொந்த ஊருக்குள் ஒரு கசப்பு அனுபவம் கைமீறிப் போய்விட்டது. கூட்டத்தின் ஓரத்தில் நாட்டாமை விழிகள் தொட்டுவிடும் தூரத்தில் ஒரு இளம்பெண் கண்ணீரும் கம்பலையுமாக நிற்கிறாள்.

அவள் இளம்பெண். திருமணம் கண்டறியாத வாலைக்குமரி. அவளைப் பற்றித்தான் பஞ்சாயத்துப் புகார். ஊருக்கு அவள் குமரி. அவளுள்ளுக்குள் ஒரு கரு வளர்கிறது.இதுதான் விபரீதத்தின் விசாரணை.

மணமாகாத பெண். மடி கனத்திருக்கிறாள்.மணவாளன் யாரென அடையாளம் தெரியவில்லை.

அவள் கர்ப்பத்திற்குக் காரணமானவன் பற்றிய கதைக்குச் சாட்சி அக் கூட்டத்தில் கிடைக்கவல்லை.

யாரோ அன்னிய அயலூரான் இதற்குப் பொறுப்பாய் இருக்க ஒருபோதும் வாய்ப்பில்லை. அந்த ஊர் அப்படி ஒரு கட்டுக்கோப்புக் கண்காணிப்பில்தான்
அந்த மணித்துளிவரைப் பாதுகாகக்கப் பட்டிருக்கிறது.

ஒரேஒரு மனிதச் சாட்சி கருத்தரித்த அந்த மனிதப் பெண்தான். ஆனால் அவள் ஒருபோதும் சாட்சியாக முடியாது. பாதிக்கப் பட்டவளே அவள்தானே. அவளது சாட்சியை ஊர்ச் சட்டமும் தருமச் சட்டமும் ஒப்புக் கொள்ளாது.

அந்த இளம்பெண் சற்று வினயமான விவகாரம் பிடித்த பெண்ணாக இருப்பாளோ? அல்லது அவள் கரு அனுமதிக்கப்பட்ட வாழ்விற்குரிய கருவாகத்தான் இருக்குமா?

அவள் அக்கிராமத்து நற்குடிப் பிறந்த பெண்தான். ஆனாலும் அவளின் இச் செயல் சமூகச் சம்மதம் இல்லாத அநியாயச் செயல்தானே?

சின்னக் கிராமமாக இருந்தாலும் அச்சமூகத்திற்கு என ஒப்புக்கொள்ளப் பட்டச் சட்டத்தையும் ஒழுக்கத்தையும் வைத்திருந்தது.

ஒழுக்கத்திற்கென்று ஒருபகுதிக் குடியிருப்புக்காரர்களும் ஒழுக்கமீறலுக்குச் சில பகுதியினரும் எனப் பிரித்து வைத்து வாழும் கிராமத்தினர் அவர்கள்.

குடும்பப் பெண்களுக்கு ஒழுக்கமே கற்புநெறி.குடும்பத் தகுதி இழந்தவர்களுக்கு ஒழுங்கீனம் வாழ்க்கை அனுமதி என்ற கலாச்சாரத்தை ஒப்புக்கொண்ட கிராமம்தான்.

காவற் கணிகையர் - இவர்களுக்கு ஒழுக்கம் அழகானது அல்ல. குடும்பத்துப் பெண்கள், முறைகெட்ட ஆண்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி விடாமல் அப் பெண்களைப் பாதுகாப்பதற்கு, இவர்கள் ஆண்களின் பாலுறவு வெறியைத் தங்கள் ஏற்று அந்த ஆண்களைச் சாந்தப்படுத்துவார்கள். அதனால்தான் இவர்கள் காவற் கணிகையர் (வைப்பாட்டியர்).

ஆடற் கூத்தியர் - கலைத்துறை சார்ந்த பாலுறவுத் தொழிலாளர்கள்.

பூவிலை மடந்தையர் - சிவப்பு விளக்குப் பகுதியினர்.

ஏவற் சிலதியர் - குற்றேவல் புரியும் அடிமைப் பாலுறவுப் பெண்கள்.

ஒழுங்கீனம் என்று கருதப்பட்ட வைகளையும் அங்கீகரித்துக் கொண்டு, சமூகக் கலாச்சாரம் பெற்ற மரபுவழிக் கிராமம்தான்.

பஞ்சாயத்திற்கு நிறுத்தப்பட்ட அந்த இளம்பெண், இந்த நான்கு வகைப் பெண்கள் பிரிவைச்சார்ந்தவள் அல்லள்.

இவள் குடும்பப்பெண்தான்.

பின் ஏன் இப்படி?

அந்த இளமகள் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளமகனைக் காதலித்து இருக்கிறாள். காதல் காலத்தில் பாலுறவு சமூகத்தால் தடுக்கப்பட்டிருந்தாலும், அத் தடைகளைமீறித் தேக உணர்வுகள் தீவிரம் அடைந்து விட்டன.

விளைவு? பாலுறவு நிகழ்ந்து விட்டது.

இதன் விளைவு? கரு தயாராகி விட்டது.

எவருக்கும் தெரியாமல் இரு இளம் தேகங்கள் உரசிக் கொண்டன. அந்த தீக்கனல் இப்போது பற்றி எரிகிறது.

கடைசியாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் வாய் திற்கிறாள். அந்தக் கிராமத்திலுள்ள ஓர் இளைஞன் பெயரை உச்சரித்துக் காரண நாயகனைக் காட்டித் தருகிறாள்.

அந்த நற்குடி பிறந்த ஆண்மகன் இதனை மறுதலிக்கிறான்.

நாட்டாமை அப்பெண்ணிடம் இதற்குச் சாட்சி கேட்கிறார். சாட்சி வைத்து நிகழ்த்தக் கூடிய சம்பவமா இது?

சாட்சி ஏது?

ஆறு கடலில் கலக்கும் படுகைக்குப் பக்கத்தில், நாணற் புதர் செழித்துக் கிடக்கும் படுக்கையில், தாழம்பூக்கள் மணம் மலர்த்தும் அந்த ஒடுக்கப் பகுதியில், நாங்கள் மணந்தோம். மகிழ்தோம். இதற்கு மனிதச் சாட்சி கிடையாது.

ஆனாலும் ஒரேஒரு சாட்சி உண்டு. அது வந்து ஒரு போதும் சாட்சி சொல்லாது.

நாங்கள் மணந்த அன்றைய தினத்தில் தாழைமடலுக்கு அடியில் நின்று, மீன் பிடிக்கக் காத்து நிற்ற கொக்குதான் அதற்குச் சாட்சி. (குருகும் உண்டே மணந்த ஞான்றே.)

சாட்சியற்ற அந்த இளம் பெண் சமூகத்தின் தவறிய சின்னமாக அங்கே நிற்கிறாள். கதறுகிறாள். புலம்புகிறாள்.

அவர்களைத் தூண்டி விட்ட உணர்வுகள், வேறொரு கலாச்சாரத்தைக் கொண்டு கண்டுபிடிக்கப் பட்டவையல்ல.

முதல் மனிதனும் முதல் மனுஷியும் தந்து சென்ற ஓர் அலாதியான இயற்கை நிகழ்வு. அதில் இன்று பிழை நடந்திருக்கிறது.

அந்த இளம்பண் நமது தமிழ்ச் சமூகத்தின் முப்பாட்டிகளில் ஒருத்தி.

அந்த அவளின் ஓலத்திற்குப் பின்னே ஒரு கலாச்சாரம், ஒரு கலாச்சாரப்பிறழ்வு, ஒரு கலாச்சாரச் சிதைவு, ஒரு கலாச்சார மாற்றம். இப்படி எத்தனையோ சரித்திரங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

நமது சங்க இலக்கியம் குறுந்தொகை ஒலிக்கும் ஒரு ஓலத்தை இங்கே நான் விவரித்திருக்கிறேன்.

இன்னும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment