நெற்றிப் பொட்டில்
விண்விண்னென்று தெறிக்கிறது. இழுத்துப் பிடித்து வலி. இப்படித்தான் மாதம் மாதம்
அந்த நாட்களில் தலைவலி மனுஷியை வதைக்கும். ஸ்ட்ராங்கா ஒரு டம்ளர் காபியைச் சூடா
இறக்கினா தேவலையா இருக்கும். ரஹ்மத், வலி வரும் போதெல்லாம் முணங்க ஆரம்பித்து
விடுவாள்.
அடுக்களைக்கு போனாள். கறுப்பா திப்பி திப்பியா அப்பி இருக்கும் காப்பித்தூள்
இருக்கும் ஹார்லிக்ஸ் பாட்டிலை மீண்டும் ஒரு முறை சாய்த்துப் பார்த்தாள். காப்பித்
தூள் இருந்ததற்கு அடையாளம் இருக்கிறது. காப்பித்தூள் இல்லை.
மாதக் கடைசி. வலிக்கு அதெல்லாமா தெரியும். எரிச்சல் பிடிங்கிக்கிட்டு வருகிறது. காபி வாசனை வேறு மனசுக்குள் கிறக்கத்தை தருகிறது.
வழி இல்லை. ரோஷம் பாக்கக் கூடாது. ஏலாதவங்க மானம் பாத்தா காணாமத்தான்
போயிருவாங்க... ரஹ்மத் முணுமுணுத்தாள். சொறணை இல்லாத மனுஷனுக்கு வாக்கப் பட்டாச்சி
அனுபவிச்சுத்தான ஆகனும். மேல்வீட்டு பரீதாட்டத்தான் போகனும். குண்டக்க மண்டக்க
பேசினாலும் தருவா.
ரஹ்மத் சின்ன கிண்ணத்தைத் தூக்கிக் கொண்டு
மேல் வீட்டுக்குப் போனாள். முற்றத்தை தாண்டி முன் வராண்டா படிக்கட்டில் பரீதா
அமர்ந்திருந்தாள். அவளுக்குப் பின்னால் ஜுலைகா நன்னி ஒரு மணையைப் போட்டு
உட்காந்திருந்து பேன் பார்த்துக் கொண்டிருந்தாள். பருமனாக ஒரு பேன் மாட்டிக்
கொண்டது. இடது கை பெரு விரலில் போட்டு வலது கை பெருவிரலை மலத்தி அமுக்கி ‘சொடக்'
என்ற சப்தத்தில் பேனை ஜுலைகா நன்னி கொன்று
போட்டாள்.
"வா ரஹ்மத்து... வேலையெல்லாம் ஓஞ்சி
போச்சா... நீ மட்டும் தான் தனியா எல்லாத்தையும் செய்யணும். ஒண்டிக்கட்டை என்ன
செய்வே..."
ஒண்டிக்கட்டை அனுதாப வார்த்தைகள் நழுவி
விழுந்தன.
"அத ஏன் கேக்கற... தலைவலிக்கு நூறா ஒடிக்குது,
தூரமாயிட்டா இப்படித்தான் உயிர புடிங்கிறேன்னு வம்புக்கு நிக்குது. காப்பி குடிக்கலாம்னு
பாத்தா தூள் இல்லை.
அவங்க ஆபீஸ்ல இருந்து ஆறு மணிக்குத் தான்
வருவாங்க. ரபீக்கு பயல் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வர அஞ்சு மணி ஆவும். அதான்
ஒங்க கிட்ட காப்பித்தூள் கேக்கலாம்னு வந்தேன்".
"அதுக்கென்ன.... இந்தா தாரேன். இதுக்கு போயி
இவ்வளவு யோசிக்கிறயே..."
பரீதா அடுப்படிக்கு எழுந்தாள். ஜூலைக்கா
நன்னி பேச ஆரம்பித்தாள்.
"அது என்னமோடி வெக்கமத்துப்போயி
வீட்டுக்குத் தூரமா ஆயிட்டேன்னு வாய் கூசாம பேசுறிங்க... பொம்புள்ளன்னு இருந்தா
வரத்தான் செய்யும். நாங்க எல்லாம் சொல்றதுக்கே வெக்கப்பட்டுவோம். இப்பம்
என்னடான்னா அதுக் கென்னமோ பஞ்சுத் துணி வேற விக்கிறாணுக. அத பொட்டச் சிறுக்கிங்களே
போயி கடையில வாங்கறாளுங்க".
ஜுலைகா நன்னி இப்படித்தான் அசிங்கம் என்று சொல்லிக்கொண்டே
அசிங்கமாகப் பேசிக் கொண்டிருப்பாள்.
பரீதா வந்து விட்டாள். கிண்ணத்தில்
காப்பித்தூள் நிறைந்து இருந்தது.
"காதுல என்னா புதுசா கம்மல
போட்டிருக்கே... வாங்கினியா..."
ரஹ்மத் காப்பித்தூள் வாங்கியதற்குச் சும்மா
கேட்டு வைத்தாள்.
தலையைச் சாய்ந்து இருகைகளாலும் திருகாணியைக்
கழற்றி கம்மலை கையில் எடுத்து ரஹ்மத்திடம் கொடுத்தாள்.
“பெரியம்மா வந்தாங்க இல்லையா அவங்க
போட்டிருந்தாங்க... நல்லா இருக்கேன்னு சொன்னேன்.
எனக்கே தந்துட்டாங்கா”. பரீதா விளக்கம் சொன்னாள்.
"நல்லாத்தான் இருக்கு... ஆனா இன்னும்
நல்ல நல்ல டிசைன்லாம் புதுசா வந்திருக்கே..". ரஹ்மத் சொல்லி வைத்தாள்
தலைவலி நிற்க முடியவில்லை. பரீதாவிடம் சொல்லி
வீட்டுக்குப் புறப்பட்டாள்.
ரஹ்மத் தலை மறைந்தது.
"வக்கத்தவளுக்கு வாயை பாத்திங்களா....
கம்மலைப் பாருடின்னா.... டிசைன் நல்லா இல்லையாம்... காப்பித் தூளு வாங்க
வகையில்ல.... அது நமக்கு தெரியாதுன்னு நெனச்சிக்கிட்டு வாங்கி வர ஆளில்லைன்னு இங்க
வந்து கேக்க வந்தாளா. துட்டு இல்ல... வீட்டுகாரார் சம்பளம் வந்ததும் வாங்கித்
தாரன்ணு காப்பித்தூள் கேட்டா நான் மாட்டேன்னா சொல்லிருவேன். திமிரு புடிச்ச
மூதி..."
ரஹ்மத் அடுக்களையில் பாத்திரங்கள் சப்தித்தன.
காப்பி தயாராகி விட்டது. சூடாக இரண்டு மடக்கு தொண்டைக்குள் இறங்கியது.
"சும்மா பேச்சுக்கு கேட்டா ஒடனே கழட்டி
தந்துட்டா... பெரிய கம்மலு.. பெரியம்மா தந்தாங்களாம். அதுக்கு சோறு போட ஆளில்லாம
மாச மாசம் இங்கே ஓடிவந்து ஒண்டிக்கிட்டு கெடக்கு. இவ புருஷன் ஆபீஸ்ல பெரிய அரிப்பு
கிராக்கி. எவனப் புடிங்கி வாங்கியாந்தானோ... இது கெடந்து அலட்டிக்குது.
ஊருக்காரங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு நெனப்பு... ஹராத்துல வந்த காசுக்கே
இவ்வளவுன்னா..."
ரஹ்மத், பரீதா தந்த காப்பியை உள்ளே இறக்கிக்
கொண்டே முணங்கினாள்.
No comments:
Post a Comment