Tuesday, October 29, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–24

M.M.P யின் பல பக்கங்கள்!


இரவண சமுத்திரம் M.M.P அண்ணனிடம் பண்பு நலம் மேலோங்கி நிற்கும். எல்லாவிடங்களிலும் சமுதாயத்தினருக்கு நிகழக்கூடிய ஒரு சிறுபாதிப்புக் கூட M.M.P அண்ணனை உறுத்தும். இதற்குப் பல உதாரணங்கள் அவர் வாழ்க்கையில் காணக் கிடைக்கும்.

ஒருமுறை சென்னை கடற்கரை மின்தொடர் வண்டி நிலையத்தில் தாம்பரம் செல்வதற்காக M.M.P அண்ணன், கவிஞர் தா.காசிம், இஜட். ஜஃபருல்லா, நான் ஆகியோர் நின்றிருந்தோம்.

நிலையத்தில், டிக்கெட் பரிசோதகர் மூன்று பெண்மணிகளை நிறுத்தி வைத்திருந்தார். அந்த மூன்று பெண்மணிகளும் தஞ்சை மாவட்டத்தில் வெள்ளைப் பர்தா போர்த்தியிருப்பார்களே அதுமாதரி போர்த்தி இருந்த முஸ்லிம் பெண்மணிகள்.

அப்பெண்மணிகள் முகத்தில் கலவரமும், பயமும் தென்பட்டது. அவர்கள் பக்கத்தில் ஐந்தாறு சிறிது, பெரிதாக சூட்கேசுகளும் இருந்தன.

டிக்கெட் பரிசோதகர் அந்தப் பெண்மணிகளைப் பார்த்து தடித்த குரலில் அதட்டிக் கொண்டிருந்தார். பிரச்சனை என்னவென்றால் போதுமான பயணச்சீட்டு அந்தப் பெண்மணிகளிடம் இல்லை.

மயிலாடுதுறையிலிருந்து, சென்னை எழும்பூருக்கு அவர்கள் மூன்று டிக்கெட்டுகள் எடுத்து இருந்தனர். ஆனால் அந்த டிக்கெட்டிலேயே எழும்பூரிலிருந்து சென்னைக் கடற்கரைக்கு வந்து விட்டார்கள்.

பரிசோதகர் இதற்காகத்தான் அவர்களை நிறுத்தி அதட்டிக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணிகள் பரிசோதகரிடம் உரிய அபராதத் தொகை கட்டிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள். அப்படியிருந்தும் பரிசோதகர், தடித்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

நாங்கள் பார்த்து விட்டோம். நேராக M.M.P அண்ணன் பரிசோதகரிடம் சென்றார்.

ஐயா நீங்கள் அரசுப் பணியாளர். அதாவது மக்கள் சேவகர். உங்கள் வார்த்தைகளில் ஒழுங்கு இருக்க வேண்டும். குற்றம் என்றால் அதற்குரிய தண்டனைக்கு வழி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு வார்த்தைகளில் தடித்தனத்தை நீங்கள் பிரயோகிக்க கூடாது. திரும்பவும் சொல்லுகிறேன். நீங்கள் ஒரு பப்ளிக் சர்வண்ட் அந்தத் தகுதிக்கு மேல் ரவுடித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நானும் ஒரு சமுதாயத் தொண்டன்தான். நான் ஒரு Ex. MLA” என்று முகம் சிவக்க பரிசோதகரைப் பேசினார்.


பரிசோதகருக்கும், M.M.P அண்ணனுக்கும் கொஞ்சம் வாக்குவாதம் முற்றியது. உடனே கவிஞர் தா.காசிம், ஜஃபருல்லா, நான் அந்த வாக்குவாதத்திற்குள் நுழைந்து கத்த ஆரம்பித்தோம். எங்களுக்கு ஆதரவாக பொதுமக்கள் சிலரும் சேர்ந்துக் கொண்டனர்.

பரிசோதகர் வார்த்தை அடக்கினார். M.M.P அண்ணன், அந்தப் பெண்மணிகளிடம் சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும். ஏன் இப்படி தவறு செய்கிறீர்கள்? உங்களுக்கு இது அவமானம் இல்லையா?” என்று கண்டித்தார்.

அந்தப் பெண்மணிகள் தாங்கள் தஞ்சை மாவட்டம் நீடாமங்கலத்தைச் சார்ந்தவர்கள் என்றும், மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.

அந்தப் பெண்மணிகளிடமிருந்து பரிசோதகர் விதித்த அபராதத் தொகையை வாங்கி பரிசோதகரிடம் கட்டி ரசீது வாங்கினார். அந்தப் பெண்மணிகளை M.M.P அண்ணனும், நாங்களும் ரயில் நிலையத்திற்கு வெளியே கூட்டி வந்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு ஆட்டோவில் ஏற்றி அனுப்பினோம்.

M.M.P அண்ணனைப் பொருத்தவரை இந்த நிகழச்சி இதோடு நின்றுவிட வில்லை. பக்கத்தில் இருந்த பப்ளிக் பூத்திலிருந்து ராயப்பேட்டையில் உள்ள S.A. காஜா மைதீன் M.P வீட்டிற்கு போன் போட்டார். நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி ஸ்டேஷன் மாஸ்டரிடம் உடனே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு இது சம்மந்தமாகக் கண்டியுங்கள்என்று கேட்டுக் கொண்டார்.


பின்னர், அதே பரிசோதகர் S.A. காஜா மைதீன் M.P இல்லத்திற்குத் தொலைப்பேசி தொடர்பு கொண்டு நடந்தத் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

M.M.P அண்ணன், இந்தச் செய்தி கேட்ட பிறகு தான் அமைதி அடைந்தார்.


டிக்கெட் இல்லாமல் வந்த சகோதரிகள் குற்றம் செய்தவர்கள். அதற்குத் தண்டனையாக அபராதத் தொகை கட்டி விட்டார்கள். தப்புச் செய்த பரிசோதகருக்குத் தண்டனை வேண்டாமா? அதனால்தான் எம்.பி.க்கு போன் செய்து பரிசோதகரை மன்னிப்புக் கேட்க வைத்தேன்.என்ற தன்பக்கத்து நியாயத்தை M.M.P அண்ணன் எங்களிடம் எடுத்து வைத்தார்.


____________________________________________________________
பாராளுமன்றத் தேர்தல் நேரம். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் முஸ்லிம் லீகின் வேட்பாளராகத் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் நிற்கிறார். இவரை எதிர்த்து ஜனதாதள வேட்பாளர் தண்டாயுதபாணி நிற்கிறார். இந்தத் தேர்தலுக்கு முந்தைய தேர்தலிலும் இவ்விருவருமே வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக நின்றார்கள்.

அந்தத் தேர்தலில் அப்துஸ் ஸமது சாஹிப் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் அவ்விரு வேட்பாளர்களே இந்தத் தேர்தலிலும் போட்டியாளராக நிற்கின்றனர். இந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திரா காங்கிரஸ், முஸ்லிம் லீக் கூட்டணி.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கும், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கும் இடையில் விரும்பத்தகாத மதக்கலவரம் வட ஆற்காடு மாவட்டத்தில் நிகழ்ந்து விட்டது.

குறிப்பாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பேட்டைச் சட்ட மன்றத் தொகுதிதான் கலவரத்தின் வீரியம் நிறைந்தப் பகுதியாக இருந்தது. பேரணாம்பேட்டைச் சட்டமன்றத் தொகுதி, தனித்தொகுதி ஆகும். அங்கே சகோதர தலித் சமுதாயத்தினருக்கும், இஸ்லாமிய சமூகத்தினருக்கும் இடையிலேதான் பிரச்சினை உருவாகி இருந்தது.

வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தின் பொறுப்பும் அன்றைய முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாளர் தென்காசி அ. ஷாஹுல் ஹமீது சாஹிப் வசம், அப்துஸ் ஸமது சாஹிப் ஒப்படைத்து இருந்தார்.

என்னுடைய சிறிய தந்தையார் அ.ஷாஹுல் ஹமீது சாஹிப் தேர்தல் பணிகளைப் பம்பரத்தை விட வேகமாகச் சுழன்று ஆற்றிக் கொண்டிருந்தார். ஆனால் வட ஆற்காடு மாவட்ட முஸ்லிம் லீக், பேரணாம்பேட்டைச் சட்டமன்றத் தொகுதிக்குள் தேர்தல் பணிபுரிய ஆட்களைத் தரமுடியாமல் திணறியது.

மாவட்ட லீகர்கள், பேரணாம்பேட்டுக்குள் வரத் தயாராக இல்லை. இந்த நிலையில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபும், அ.ஷாஹுல் ஹமீது சாஹிபும், இஜட். ஜஃபருல்லாவையும், என்னையும் பொறுப்பாளர்களாகப் பேரணாம்பேட்டை தொகுதிக்குள் அனுப்பிவிட்டார்கள்.

நாங்கள் பேரணாம்பேட்டைக்குச் சென்றோம். பேரணாம்பேட்டையில் நிலைமை சரியாகத்தான் இல்லை. தேர்தல் பணி நிகழ்த்த அலுவலகம் அமைக்க முஸ்லிம் லீகிற்கு, முஸ்லிம்களே இடம் தர தயங்கினார்கள். இறுதியில் தீவிரமான முஸ்லிம் லீக் தொண்டனான அப்துல் ஹலீம் என்பவரின் மண்டியில் தேர்தல் பணி அலுவலகத்திற்கு அவர் அனுமதி தந்தார்.

அந்த மண்டி, தோல் பதனீட்டுக்குத் தேவைப் படும் கடுக்காய் மண்டி. கடுக்காய் மகா உஷ்ணமானது. அங்கே ஒரு சின்ன அறையில் கடுக்காய் மூட்டைகளுக்கு நடுவில் நானும், ஜஃபருல்லாவும் தங்கித் தேர்தல் பணி புரிந்தோம்.

இரவில் கடுக்காய் மூட்டைகளுக்கு மத்தியில்தான் படுக்க வேண்டும். காலையில் எழுந்துப் பார்த்தால் எங்கள் விழிகள் எல்லாம் கொதிக்கும்.

கோவைப் பழம் போன்ற விழிகள்என்று படித்திருக்கிறோம். அதைக் கண்ணாடியின் முன் நின்று எங்கள் விழிகளிலேயே நாங்கள் பார்த்துக் கொள்வோம். நாங்கள் அங்குத் தேர்தல் பணிப் புரிந்தக் காலத்தில் மாவட்ட லீகர்கள் யாரும் எங்களை வந்துப் பார்க்கவில்லை.


ஈரோடு ஸமது முதலாளி வேலூருக்கு வந்தவர் தகவலறிந்து பேரணாம்பேட்டுக்கு வந்து கடுக்காய் மண்டியில் சந்தித்தார். எங்களைப் பார்த்து கண்கலங்கி விட்டார். அன்று எங்களோடே இரவுத் தங்கினார்.

தேர்தல் பணிச் செலவுக்காகக் கொண்டு வந்த தொகையைப் பேரணாம்பேட்டுத் தொகுதிக்காக மட்டும் கொடுத்துவிட்டு சென்று விட்டார். வேலூரில் ஈரோடு ஸமது முதலாளி, M.M.P. அண்ணனிடம் எங்கள் நிலவரத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார்.

மறுநாள், M.M.P. அண்ணன் அவர்கள் பேரணாம்பேட்டுக்குப் பிரச்சாரத்திற்குத் தனியே வந்துவிட்டார்கள்.

தொகுதிக்கு உட்பட்ட பல பள்ளிவாயில்களுக்கு முன்னால் நாங்கள் மூவரும் பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பித்து விட்டோம். நாங்கள் எவ்வளவோ தடுத்தும் ஏற்காமல் எங்களோடு கடுக்காய் மூட்டை நிறைந்த வெப்ப அறைக்குள் ஐந்து நாட்கள் தங்கி பிரச்சாரத்திற்கு உயிரூட்டினார்.

M.M.P. அண்ணன் தொடங்கி வைத்த பிரச்சார நிகழ்வுக்குப் பின்னால் பேரணாம்பேட்டை மக்களுக்கு புத்துயிர் கிடைத்து விட்டது. கடுமையான பிரச்சாரத் தேர்தல் பணி தொகுதிக்குள் தீவிரமானது.


ஒரு நிகழ்வை மறக்க முடியாது. அந்தப் பேரணாம்பேட்டுத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சின்னக் குன்றின் மீது சில கிராமங்கள் உள்ளன. அதிலொன்று தியாகத் துர்க்கம் எனும் கிராமம். அங்கு ஜஃபருல்லாவும் நானும் பிரச்சாரத்திற்குச் சென்றோம்.

அது தலித் மக்கள் மட்டுமே வாழக் கூடியப் பகுதி. நாங்கள் அவர்களிடம் வாக்குக் கேட்கப் போன வேளை மதியம். 

ஒரு சின்னச் சிதிலமடைந்த கோயில் அங்கு இருக்கிறது. அந்தக் கோயில் திண்ணையில் எங்களை உட்காரச் சொன்னார்கள். அந்தக் கிராமத் தலைவர் முதியவரும் அங்கு அமர்ந்து இருந்தார். எங்களிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

போன தேர்தலிலும் நாங்கள் வாக்கு அளிக்கவில்லை. காரணம் எங்களுக்குள்ள வாக்குச் சாவடி மலையடிவாரத்திலிருந்து , மூன்று மைல் கல் தொலைவில் உள்ள கிராமத்தில் இருக்கிறது. இங்கு வந்து யாரும் எங்களிடம் வாக்குக் கேட்பதும் இல்லை. வாக்களிக்க அழைத்துச் செல்வதும் இல்லை.


எங்கள் பக்கத்திலும் ஒரு சின்ன கிராமம் இருக்கிறது. அங்கும் எங்கள் உறவுக்காரர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களும் நாங்கள் சொன்னால் கேட்பார்கள். அதனால் தேர்தல் அன்று காலையில் உங்கள் ஆள்கள் இங்கு வந்து மலையடிவாரத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து, தனி வேனில் வாக்களிக்க அழைத்து சென்றால் உங்களுக்கு வாக்கு போடுவோம்.எனக் கோரிக்கை வைத்தார் ஊர் தலைவர்.

நாங்கள் ஒப்புக் கொண்டோம். 

எங்கள் ஊரில் உள்ளவர்கள் இப்பொழுது வீடுகளில் இல்லை. மாலை ஆறு மணிக்கு மேல்தான் வேலை முடித்து இல்லம் திரும்புவார்கள். நீங்கள் இரவு ஏழு மணிக்கு மேல் இங்கே வாருங்கள். நாங்களும், உங்களுடன் பக்கத்து ஊருக்கு வருகிறோம். அங்குள்ள ஐய்யனார் முன் வெத்திலை வைத்து உங்களுக்கு வாக்குத் தருகிறோம். நீங்களும் தந்த வாக்குப் படி நடந்து கொள்ளுங்கள்என்றார் ஊர்த் தலைவர்.


அந்த ஊருக்கு எங்களை அழைத்துச் சென்றவர் பேரணாம்பேட்டு தி.மு.க அவைத் தலைவர் வாத்தியார் கோவிந்தன். இரவு எங்களை அழைத்துக் கொண்டு தியாகத் துர்க்கம் சென்றார்.

சொன்னது மாதிரி ஊர்த்தலைவரும் இன்னும் சிலரும் கோயில் திண்ணையில் அமர்ந்து இருந்தனர். எங்களை அழைத்துக் கொண்டு பக்கத்து கிராமத்திற்குப் புறப்பட்டனர். இன்னொரு குன்றின் மேல் ஏறி நடந்தோம். ஒரு இடத்தில் குன்றின் விளிம்பு வந்துவிட்டது.

அந்த விளிம்பைத் தொட்டு அடிவாரம் வரை பாதாளவெளி. நாங்கள் நின்ற விளிம்புக்கும், பக்கத்து குன்றின் விளிம்புக்கும் இடையே சுமார் மூன்று அடி இடைவெளி. 

எங்களுடன் வந்த ஊர்த்தலைவர், முதியவர்தான். ஆனாலும் ஒரே தாவில் அந்த மலை விளிம்பிற்குச் சென்று விட்டார். அவருடன் வந்தவர்களும் அப்படித் தாண்டி விட்டார்கள். இதெல்லாம் இரவு எட்டரை மணியளவில் இருட்டில் நடக்கிறது. பேட்டரி வெளிச்சத்தில் இந்தத் தாவல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மலையின் இந்த விளிம்பில் நானும், ஜஃபருல்லாவும், நண்பர் கோவிந்தனும் நிற்கிறோம். நானும், ஜஃபருல்லாவும் தாண்டிய பின்னால் நண்பர் கோவிந்தன் தாண்டி வரவேண்டும். இது ஏற்பாடு. (நண்பர் வாத்தியார் கோவிந்தன், பின்னர் பேரணாம்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்)

கோவிந்தன் கையில் இருந்த பேட்டரியை வாங்கி, விளிம்பில் நின்று கொண்டு நானும், ஜஃபருல்லாவும் பேட்டரி அடித்து லேசாக எட்டிப் பார்த்தோம். 

தரைத் தெரியவில்லை. இரவு எட்டு மணி. நல்ல இருட்டு. ஜஃபருல்லா சொன்னார்.

யோவ் மச்சான், பேட்டரி வெளிச்சத்தில் ஏதாவது உமக்குத் தெரியுதா?” என்று கேட்டார்.


நான், “எதுவும் தெரியவில்லைஎன்றேன். 

உம்மக் கண்ணக் கொண்டு கண் டாக்டர்கிட்ட காட்டும், நல்லா பாரும். கீழே இஸ்ராயில் அலைஹிஸ் ஸலாம் (உயிரெடுக்கும் வானவர்) நிற்கிறார்கள்என்றார்.


நண்பர் கோவிந்தன், “இப்படிப் போனா அந்த ஊருக்கு உடனே போய் விடலாம். இல்லையென்றால் ஐந்து கிலோமீட்டர் நடந்து அங்கே சுற்றிப் போக வேண்டும். இரண்டு கிராமத்திலும் சேர்த்து அறுனூத்து ஐம்பது ஓட்டு இருக்கிறதுஎன்றார்.

நானும் , ஜஃபருல்லாவும் யோசித்தோம்.

இறைவா நீயே தவக்கல்த்துஎன்று கூறி நான் தாண்டி விட்டேன்.


ஜஃபருல்லாவுக்கும் சுரணையோடு, ரோஷம் வந்து விட்டது. நண்பர் கோவிந்தன் பேட்டரி வெளிச்சம் அடிக்க, தொப்பென்று தாண்டி குதித்து விட்டார். அந்தப் புறமிருந்த ஊர்த் தலைவர் மேல் நோக்கி பேட்டரி அடித்தார் நண்பர் கோவிந்தன் குதித்து விட்டார்.

அவர்கள் சொன்ன மாதிரி அவர்கள் நடந்து கொண்டார்கள். அறனூற்று ஐம்பது ஓட்டு எங்கள் சின்னத்தில் பதிவானது.

இந்த நிகழ்வை நண்பர் வாத்தியார் கோவிந்தன் M.M.P. அண்ணனிடம் சொன்னார். M.M.P. அண்ணன் எங்களைத் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டார்.

இந்தத் தேர்தலில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிப் வெற்றிப் பெற்றார். வேலூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் பேரணாம்பேட்டு சட்டமன்றத் தொகுதிதான் அதிக வாக்குகளை அவருக்குத் தந்தது.

____________________________________________________________

தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபும், M.M.P. அண்ணன் அவர்களும் சம வயதுக் காரர்கள்தாம். அரசியல் அனுபவங்களிலும் சம பக்குவம் பெற்றவர்கள்தாம். பேச்சாற்றல்களிலும் ஏற்றத் தாழ்வில்லாத இணை கொண்டவர்கள்தாம்.

M.M.P. அண்ணன், தலைவர் ஸமது சாஹிபை, யா அப்துஸ் ஸமதுஎன்றுதான் பிரியமுடன் அழைப்பார். இந்த அழைப்பு எதுவரை என்றால் ஸமது சாஹிப் மாநில முஸ்லிம் லீக் தலைமைப் பொறுப்பை ஏற்கும் நிமிடம் வரையில். அதற்குப் பின்னால், “எம் தலைவர் அவர்களே! எம் தலைவர் அவர்களே!என்றுதான் தன் வாழ்நாள் முழுவதும் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபை அழைத்து வந்தார்.


ஒருமுறை அப்துஸ் ஸமது சாஹிப் அறையில், அவரின் தம்பி ஆமு பாய் (அஹமது இப்ராஹிம்), M.M.P அண்ணன், M.A. அக்பர் அண்ணன், கவிஞர் தா.காசிம், ஜஃபருல்லா, நான், கம்பாசிடர் பல்ராமன், மணிவிளக்கு மெஷின் மேன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நின்றுக் கொண்டு இருந்தோம்.

ஏதோ ஒரு காரணத்திற்காகத் தலைவர், M.M.P அண்ணனைப் பார்த்து என்ன ஜனாப் இப்படியெல்லாம் செய்து விட்டீர்கள்?” கோபமுடன், அதட்டலாகச் சத்தமுடன் கேட்டார்.

M.M.P அண்ணன் கைகளை மார்போடுக் கட்டிக் கொண்டு மன்னித்து விடுங்கள் தலைவர் அவர்களே! மன்னித்து விடுங்கள் தலைவர் அவர்களேஎன அடக்கமுடன் பதில் தந்தார்கள். பள்ளிக் கூட மாணவனிடம்கூட இந்த அடக்கத்தைக் கண்டுவிட முடியாது. இதுதான் M.M.P அண்ணனுடைய மகத்தான பண்பு.


____________________________________________________________


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலப் பேச்சாளரும், தமிழ் நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினருமான நெல்லை பாலாஜி சிறந்த நகைச்சுவைப் பேச்சாளர். குறிப்பாக முஸ்லிம் லீக் தலைவர்களுடன் நெருக்கமாக நட்புக் கொண்டவர்.

பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆட்டுக்கறி அவருக்கு நெல்லை அல்வா. மாட்டுக்கறி அவருக்குச் சங்கரன்கோயில் பிரியாணி. இது உண்மை. எனக்கே நேரடியாக இது தெரியும்.

ஒருமுறை திருநெல்வேலி டவுண் வாகை மர முக்குக்கு கீழ் அ.தி.மு.க கூட்டம் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது. நெல்லை பாலாஜி நகைச்சுவையோடு கருணாநிதியை வாரிச் சுருட்டிக் கொண்டு இருக்கிறார். 

அப்போது, பாலாஜி குறிப்பிட்டார். முஸ்லிம் லீக் தலைவர்களிலே எனக்கு ஒருவரைத்தான் ரொம்பப் பிடிக்கும். ஏன்? தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்களிலும் அவரைத் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்தான் இரவண சமுத்திரம் M.M.பீர் முஹம்மது.

ஒரு மேடையில் கருணாநிதி அமர்ந்து இருக்கிறார். M.M.P மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்குகிறார். தமிழ் நாட்டில் எவனுக்கும் அந்தத் தைரியம் வராது. ஏன் அ.தி.மு.க காரனாகிய எனக்குக் கூட வராது. 

கருணாநிதியைப் பார்த்து, M.M.P “இன்னா பதுக்குனான்என்று தைரியமாகக் கருணாநிதி முன்னாலேயே சொன்னார். கருணாநிதி எல்லாத்தையும் பதுக்குனான் என்று நாம் சொல்லலாம். அது நமது மேடை. ஆனால் கருணாநிதி மேடையிலேயே நின்றுக் கொண்டு இன்னா பதுக்குனாஎன்று சொல்லும் தைரியம் M.M.P க்கு மட்டுமே உண்டுஎன்று நகைச்சுவைக்காக நெல்லை பாலாஜி பேசி விட்டார்.

இதைப் பின்னர் கேள்விப்பட்ட M.M.P அண்ணன் ரொம்ப வருத்தப்பட்டார். நெல்லை பாலாஜியைச் சந்தித்து, என் இனிய நண்பரே பாலாஜி, நெல்லைக் கூட்டத்தில் கருணாநிதியைத் தாக்குவதற்காக நான் உச்சரித்த வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்தியதற்கு நான் வேதனை படுகிறேன்.

கருணாநிதி கோவித்துக் கொள்வார் என்பதற்காக அல்ல. அந்த வாக்கியம் எங்கள் வேதத்தில் உள்ள அரபு மொழியில் இருக்கிறது. நீங்கள் கடவுள் வாழ்த்துப் பாடுவது போல அந்த வேத வரிகளை இன்னா பதக்கனாஎன்று சொல்லித்தான் நான் என் பேச்சை எந்த மேடையிலும் தொடங்குவேன்.

வேத வரிகளை நையாண்டி செய்வதை இனிமேல் நிறுத்திக் கொள்ளுங்கள்என்று சற்றுக் கடுமையாகக் கூறிவிட்டார்.

நெல்லை பாலாஜியும் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment