இந்த M.M.P யை யாருக்காவது தெரியுமா?
1977 அல்லது 1978 ஆம் ஆண்டு, மாதமும் தேதியும் நினைவில்லை. ஒரு நாள் மாலை மூன்று மணியளவில் ஒரு டாக்சியில் சென்று M.M.P. அண்ணன், கவிஞர் தா.காசிம், நான், நாகூர் Z. ஜஃபருல்லா நான்கு பேரும் தேனாம்பேட்டையில் உள்ள S.I.E.T பெண்கள் கல்லூரியின் வாசலில் இறங்கினோம்.
இந்த நால்வரும் அந்தக் காலகட்டங்களில் ஒரே மாதிரியான கடுமையான உருவத் தோற்றம் கொண்டவர்களாகத்தான் இருந்தோம். பெண்கள் கல்லூரிக்குள் எங்களுக்கு என்ன வேலை?
ஆனால் அங்குதான் அன்றைய மாலையில் தேனீர் விருந்து உபசரிப்பு இருக்கிறது.
நீதியரசர் பஷீர் அஹமது, கல்லூரியின் தாளாளராக இருந்த காலம் அது. கல்லூரி நிர்வாகம் மிக கட்டுக்கோப்போடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. தாளாளர் பஷீர் அஹமது மாநில அரசுக்கும் நெளிந்து கொடுக்க மாட்டார், மத்திய அரசுக்கும் பணிந்து இருக்க மாட்டார். இதனால் இரு அரசுகளின் மானியமும் அந்தக் கல்லூரிக்கு வர வாய்ப்பிழந்து போய் விட்டது. அதைப் பற்றியெல்லாம் பஷீர் அஹமதுக்கு அக்கறை கிடையாது.
முஸ்லிம் பெண்கள் மேற்கல்வி கற்கக் கல்லூரி தொடங்கப்பட்டது. சமுதாயம் அந்த நேரத்தில் முஸ்லிம் பெண்களை அதிகம் படிக்க அனுமதிக்காமல் இருந்த நிலை ஒருவகையான பரிதாபம்தான். எனவே S.I.E.T கல்லூரி முஸ்லிம் பெண்கள் கல்விக்கென்று அக்கறை எடுத்து தொடங்கப் பட்டிருந்தாலும், அந்தக் கல்லூரியில் கற்ற மாணவியர் சதவிகிதப் புள்ளி விவரத்தைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்.
முஸ்லிம் பெண்களுக்கென்று ஆரம்பிக்கப் பட்ட கல்லூரியில் முஸ்லிம் பெண்கள் பத்து சதவிகிதத்தைக் கூடத் தொடவில்லை. மீதமுள்ள தொண்ணூறு சதவிகிதமும் சகோதர இந்து, கிருத்தவ சமயத்து மாணவியர்களால்தாம் நிரப்பப்பட்டது.
குறிப்பாகப் பிராமண சமுதாயத்துப் பெண்கள் கல்லூரியில் அதிகம் இருந்தனர். இதற்குக் காரணம், சென்னையில் முதல்தரமான கல்லூரிகள் என்று இருந்த பட்டியலில் S.I.E.T க்கு ஒரு தனி இடம் இருந்தது.
கட்டுப்பாடும், கல்வித்தரமும் எந்த இடத்திலும் சரிந்து விடாத அளவு நீதியரசர் பஷீர் அஹமது நேரடிக் கண்காணிப்பில் நடைப் பெற்றுக் கொண்டிருந்தது..
கல்லூரியில் ஆசிரியர்களும், கல்லூரிக்குள் ஒரே மாதிரியாகக் கொண்டை போட்ட சிகை அலங்காரத்தோடும் நீதிமன்றத்தில் வக்கீல்கள் அணிந்திருக்கும் கருப்பு அங்கி அணிந்த நிலையிலும்தான் உள்ளே இருக்க வேண்டும். தீடீரென்று பார்த்தால், ஹைக்கோர்ட்டில் இருப்பது போன்ற எண்ணம் நமக்கு வரும்.
மாணவியர்களும், கல்லூரி காம்பவுண்டுக்கு வெளியே என்ன மாதிரியான ஆடை அலங்காரங்களும் அணிந்து திரியலாம். கல்லூரி வகுப்பறைக்குள் சேலை அல்லது பாவாடை தாவணியுடன் தான் இருக்க வேண்டும். கல்லூரிக்குள்ளே அவர்கள் ஆடை மாற்றிக் கொள்ள அறை வசதிகள் அமைத்து தரப் பட்டிருந்தன.
அதாவது, சென்னையில் அந்த காலத்தில், பிற கல்லூரிகளிலிருந்து வேறுபட்ட நடைமுறைக் கொண்ட ஒரு முன்மாதிரிக் கல்லூரியாக S.I.E.T திகழ்ந்தது.
நான் குறிப்பிட்ட 77, 78 ஆம் ஆண்டுகளில், கல்லூரி முதல்வராக ராஜம் கிருஷ்ணன் இருந்தார். ( நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணம் அல்லர்). கல்லூரியின் இலக்கிய ஆண்டு நிறைவு விழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த விழா தலை நகரத்தில் உள்ள இலக்கிய பிரபலங்களை அழைத்து சொற்பொழிவு ஆற்ற வைக்கும் விழாவாக பரிணமிக்கும்.
நீதியரசர் பஷீர் அஹமது, அப்பொழுது முன்னிலை வகிப்பார். கல்லூரி முதல்வர் தலைமை தாங்குவார்.
இந்த இலக்கிய நிறைவு ஆண்டு விழாவுக்கு இந்தமுறை M.M.P. அவர்களைப் பஷீர் அஹமது அழைத்திருந்தார். அங்கே இலக்கிய சொற்பொழிவு ஆற்றத்தான் எங்களைத் தன்னோடு M.M.P அழைத்துச் சென்றிருந்தார்.
நீதியரசர் பஷீர் அஹமதே கல்லூரி வாயிலில் நின்று எங்களை அழைத்துச் சென்றார். முதல்வர் ராஜம் கிருஷ்ணமும் உடன்வந்தார். கல்லூரிக்குள் இருந்த ஒரு புல்முற்றத்தில் விருந்து உபசாரம் நடந்தது. தரமான உயரிய விருந்து அது.
கவிஞர் காசிம், ஜபருல்லா மற்றும் எனக்குள்ளும் ஒரு வேடிக்கையான உணர்வு. எங்களுக்கள் பேசிக் கொண்டோம். இளம்பெண்கள் கல்லூரிக்குள் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத உருவத் தோற்றம் கொண்டவர் M.M.P. அண்ணன். அப்படியென்றால் எங்களையெல்லாம் வசீகரத் தோற்றமுடையவர்கள் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், எங்கள் கதையும் அதுதான். அரசியல் மேடைக்கு, ஆன்மிக மேடைக்கு, இலக்கிய மேடைக்குப் பொறுத்தமானவர் M.M.P அவர்கள்.
இளம்பெண்கள் மேடைக்கு M.M.P எடுபடுவாரா? பாவம் இந்தப் பெண்மணிகள். நீதியரசர் பஷீர் அஹமது கட்டுபாட்டிற்குள் விழிபிதுங்கிக் கிடக்கின்றனர். M.M.P. அவர்களின் இன்றைய இலக்கிய பேச்சில் கழுத்தறுபட்டு ரத்தம் சொட்டப் போகின்றனர். இதுதான் எங்களின் முற்றும் முடிந்த முடிவாக அப்போது இருந்தது.
சற்று நேரத்தில் ராஜம் கிருஷ்ணம் முன்னடக்க பஷீர் அஹமது, M.M.P., நாங்கள் பின்தொடர ஆடிட்டோரியத்திற்குள் சென்றோம். மேடைக்கு முதல்வரும், தாளாளரும், M.M.P யும் ஏறிச் சென்றனர். இருக்கையில் அமர்ந்தனர். கீழே முதல் வரிசையில் நாங்களும் எங்களைப் போன்ற பிற அழைப்பாளர்களும் அமர்ந்தோம்.
நீதியரசர் பஷீர் அஹமதின் இன்னொரு பக்கத்தைக் கண்டு உள்ளபடியே அதிர்ந்து போனோம். கல்லூரியைப் பற்றி முன்னே சொன்ன கட்டுப்பாடுகள் நிஜம். சத்தியம். ஆனால் இந்த ஆடிட்டோரியத்திற்குள் கல்லூரி முழுவதும் உள்ள மாணவிகள் அமர்ந்து இருந்தனர்.
அளவற்ற சுதந்திரத்தோடு மாணவியர் அங்கே இருந்தனர். அதனைத் தாளாளர் பஷீர் அஹமதும், ராஜம் கிருஷ்ணமும் அனுமதித்து ரசித்துக் கொண்டிருந்தனர்.
M.M.P. மேடைக்கு ஏறும்பொழுது கைத்தட்டு ஆடிட்டோரியத்தை அதிர வைத்தது. அதைத் தொடந்து வந்த விசில் சத்தம் ஆடிட்டோரியத்தை ஆட வைத்தது. உள்ளபடியே நாங்கள் ஆடிவிட்டோம். மாணவியர் கூட்டத்தை திரும்பிப் பார்த்தோம்.
மாணவியரில் பலர், இருக்கையின் மேல் நின்று விசில் அடித்தனர். ஆகார, ஊகார கோஷங்கள் அலையடித்தன.
கவிஞர் தா.காசிம், எங்களிடம் குனிந்து மெதுவாக, “M.M.P. கதை இன்றைக்கு கந்தல்தான்” என்றார். அவ்வளவு கட்டுப்பாடுள்ள கல்லூரியில் தாளாளர் முன்னிலையிலேயே இவ்வளவு சுதந்திர நடமாட்டமா? என்று எங்களுக்குள் ஆச்சர்யம்.
சற்று நேரத்தில் மழைப் பொழிந்து ஓய்ந்த ஒரு அமைதி. முதல்வர் ராஜம் கிருஷ்ணம் எழுந்து பேசினார்.
“வருகை தந்திருக்கும் பெருமக்களுக்கு ஒரு செய்தி. எங்கள் கல்லூரியில் முழுக் கட்டுப்பாடு உண்டு. அது வகுப்பறைக்குள்ளும், கல்லூரி வளாகத்திற்குள்ளும். எங்கள் மாணவியருக்கு முழு சுதந்திரம் உண்டு. இந்த ஆடிட்டோரியத்திற்குள். இதுதான் எங்கள் நிர்வாகியின் நிர்வாக அணுகுமுறை என்றார்.”
தொடர்ந்து M.M.P அவர்கள் ஒலிபெருக்கி முன் வந்து நின்றார்கள். மாணவியர்களுக்கு மட்டுமல்ல, நமக்கு கூட தப்சு கையில் இல்லாத ஒரு பக்கிரிஷா மாதிரிதான் தோற்றம் தந்தார்.
மீண்டும் அரங்கத்தில் விசில் ஒலி. M.M.P எதையும் சட்டை செய்யவில்லை. வழக்கம் போல், “இன்னா பதக்கனா..” என்ற ஆயத்தை கம்பீரமாக ஒலித்தார். இவர் ஓத, ஒத மாணவியரின் கைத்தட்டல் தாளம் போட்டுக் கொண்டே இருந்தது. மூன்று, நான்கு நிமிடங்கள் இப்படித்தான் கழிந்தன.
M.M.P பேச்சைத் தொடங்கினார்.
“உச்சிக்கு மேலே சூரியன், நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது. அது ஒரு காடு. பூமியென்னும் இளம்பெண் படுத்து நெட்டி முறித்துக் கொண்டிருக்கிறாள். மற்றவர் பார்வைப் பட்டு விடக் கூடாதே என்பதற்காகப் பச்சைப் பசேலென்ற போர்வையை மேனி முழுக்க போர்த்திக் கொண்டிருக்கிறாள். சூரியக் கதிர்கள் அந்தப் பச்சைப் போர்வையைச் சுட்டெரிக்க முயன்று கொண்டிருக்கின்றன.
அந்தக் காட்டுக்குள் ஒரு பங்களா. பங்களா என்று சொல்லக் கூடாது. அது ஒரு குட்டி அரண்மனை. அந்த அரண்மனை மாடியின், உப்பரிகையில் எல்லா அழகையும் திரட்டிய ஒரு ரோஜாப்பூ ஒரு இருக்கையில் சாய்ந்து , அமர்ந்திருக்கிறது. ஆம். ஒரு அற்புதமான இளங்கன்னி அங்கே அமர்ந்து இருக்கிறாள்.
சற்று தூரத்தில், அரண்மனையின் வேலியைத் தாண்டி, ஒரு பெரும் மாமரம். அந்த மாமரக் கிளையில், ஒரு இடைச் சாதிக்காரன் அமர்ந்து இருக்கிறான். கீழே அவன் மாடுகள் , அவைகளுக்குள்ள உணவைப் புசித்து திரிகின்றன. அந்த இடையன் இளைஞன். இதழ்களில் புல்லாங்குழல் ஊதுகிறான். கைவிரல்கள் குழலில் நர்த்தனம் ஆடுகின்றன.
இசை வெள்ளம் சூரிய நெருப்புச் சூட்டைக் கூட குளிர வைத்து, அந்த வனாந்தரம் எங்கும் பரவுகிறது.
அந்தக் குட்டி அரண்மனை உப்பரிகையில் இருக்கும், அந்த குமரிக்குள்ளும் அது நிறைகிறது. அந்தக் கிரக்கத்தில் அவள் கிடக்கிறாள். இது இன்று நடக்கும் அதிசயம் அல்ல.அண்மைக் காலங்களில் அனுதினமும் நடக்கும் ஆனந்த எக்களிப்பு.
அந்தக் குழலிசை சில நாட்களாக அவனாகவே அவளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது. அவனை அவள் விரும்பி விட்டாள். இந்த மாயஜாலம் எதுவும் அவனுக்குத் தெரியாது. அவன் மாடுகளை ஓட்டி வருவான். அங்கே அவைகளை மேய விடுவான். மாமரக் கிளையில் அமர்ந்து, இசைக் கச்சேரி நடத்திக் கொண்டே இருப்பான். அவனுக்கு அந்த மாமரம், தர்பார் மண்டபம்.
அவன் அனுப்பிக் கொண்டிருக்கும் இசை வெள்ளம், இந்த அரண்மனை அழகிக்கு, காதல் அமுத கீதம். இந்த வாழ்க்கை முறை நடந்துக் கொண்டே இருக்கிறது.
அந்த மாடி வீட்டு மங்கை, ஒரு நாள், அமைதியாக இருந்து யோசிக்கிறாள். அறிமுகம் ஆகாத இந்தக் காதல், நிறைவேறுமா? மாடி வீடும், மாமரக் கிளையும், சமமாகுமா? சமூகம் அனுமதிக்குமா? இதென்ன நடைபெற முடியாத ஒரு பெரும் அவஸ்தை. இது வேண்டாம். இந்த விபரீதத்திற்கு நான் ஆளாக வேண்டாம், எனத் தனக்குத் தானே தீர்மானம் செய்து கொண்டாள்.
அந்த நிலையில், மாமர இசை தர்பாரில் இருந்து, குழலோசை இசை மழையைக் கொட்டிக் கொண்டிருக்கிறது. மங்கையின் தீர்மானம் கரைந்து கொண்டிருக்கிறது.
அவளுக்கு எதிரே பழங்கள் வைத்த தட்டும், ஒரு கத்தியும் இருக்கிறது. இசை அவஸ்தை அவளை வதைக்கிறது. இவனில்லாத நான் எதற்கு இருக்க வேண்டும்? என்று முடிவு கட்டி, கத்தியைக் கையில் எடுக்கிறாள். தன் நெஞ்சில் குத்திக் கொள்ள முயல்கிறாள்.
அவளின் ஆறாவது அறிவு விழித்துக் கொள்கிறது. இசையை விட உன் ஆன்மா ரம்மியமானது. அதை ஏன் தேகத்தில் இருந்து விலக்கிவிட முயற்சி செய்கிறாய்? என்று ஆறாம் அறிவு கட்டளையிட, “சீச்சீ, இதென்ன விபரீதம்” எனத் தனக்குள்ளே சொல்லி, கையில் இருந்த கத்தியைத் தூர வீசி எறிகிறாள். அந்தக் கத்தி, மாமரக் கிளை இளைஞன் நெஞ்சில் சென்று சொருகுகிறது. ஐயகோ பாவம். புல்லாங்குழல் இசை நின்று விட்டது.
அந்த ஏழையின் நெஞ்ச ரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது. மாடி வீட்டு மங்கைக்கு இனிமேல்தான் இந்தத் தகவல் சென்று சேர வேண்டும்”
M.M.P அண்ணன் இந்த இசைக் காதற்கதையை ஆலாபனையோடு பேசி முடித்தார். மாணவியர் கூட்டம் அவர் பேசத் தொடங்கியதில் இருந்து எந்த அசைவும் இன்றி அப்படியே இருந்தது.
பாரதி பாடியது போல,
“புல்லாங்குழல் கொண்டு வருவான்- அமுது
பொங்கித் ததும்பும் நற்கீதம் படிப்பான்
கள்ளால் மயங்குவது போலே- அதைக்
கண்மூடி வாய்த்திறந்தே கேட்டிருப்போம்.
அங்காந்து இருக்கும் வாய்தனிலே- கண்ணன்
ஆறேழு கட்டெறும்பை போட்டு விடுவான்.”
எனப் பாரதி சொன்ன இந்த சித்திர காட்சியை S.I.E.T கல்லூரி ஆடிட்டோரியத்தில் அன்று நாங்கள் பார்த்தோம்.
M.M.P அண்ணன், காதல் ரச பேச்சை அதுவரை நாங்கள் கேட்டதில்லை. ஏன் உங்களில் யாராவது கேட்டு இருக்கிறீர்களா?
அதே வேகத்தில் மற்றொரு கதை தொடர்ந்தது.
“கோடீஸ்வரன் வீட்டுப் பெண். அதே தெருவில் உள்ள ஒரு ஏழை வீட்டு இளைஞன். ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். ஊர் ஒத்துக் கொள்ளவில்லை, உறவுகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. காதல் இருவரும் ஊருக்கும், உறவுக்கும் தெரியாமல், வெளியேறி, ஊரின் எல்லையில் உள்ள ஓடையைக் கடந்து அந்தப் பக்கம் சென்று, வேறொரு ஊரில் குடியேறி விடுகிறார்கள்.
நாட்கள் நகர்கின்ற. வருடங்களாக மாறுகின்றன. மாளிகை வீட்டுப் பெண் , ஓலைக் குடிசைக்குள் ஆனந்தமாகத்தான் வாழ்கிறாள். அந்த மகிழ்ச்சி குழந்தை உருவாகக் காரணமாகி விட்டது.
கருத்தரிக்கிறாள், கன்னி இளம்தாயாகி விட்டாள். அந்த இளம்தாய்க்குள் ஒரு ஆசை. அந்த இளம்தாய், தன் தாய்வீட்டிற்குச் சென்று, குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆவல்.
கொண்டவனிடம் கூறுகிறாள். அவன் மறுத்து விடுகிறான்.
“உன் வீட்டாரைப் பொறுத்தவரையில், நீ ஓடிப்போன ஓடுகாலி. எனவே உனக்குள்ள மரியாதை அங்கு இருக்காது” என்று கூறி மறுத்து விடுகிறான்.
அவளுக்கு மன வேதனையாக இருந்தாலும் பொறுத்துக் கொள்கிறாள்.
ஓலைக் குடிசைக்குள்ளேயே அந்த குழந்தைப் பிறக்கிறது. தாய் வயிறு விட்டு வந்தவுடன், அந்த குழந்தை அதிவேகமாகப் புறப்பட்டு விட்டது. பிறந்தது என்று சொல்லி முடிக்கும் முன், இறந்தது என்ற சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
தம்பதியர் இருவருக்கும், நெஞ்சில் அனல் கங்கு விழுந்த மாதிரி ஒரு வேதனை.
காலம் நின்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்காது. கடந்துக் கொண்டே இருக்கும். ஆண்டுகள் மூன்று கடந்தன.
மீண்டும் கருத்தரிக்கிறாள். இந்த முறை அவர்களுக்கு, வறுமையின் கொடுமை அதிகரித்திருந்தது. கருத்தரித்த அவளுக்குத் தாய் வீட்டு ஆசை மீண்டும் துளிர்த்தது.
கணவனிடம் கேட்கிறாள், கணவன் இம்முறையும் மறுத்து விடுகிறான்.
நாட்கள் நகர்ந்தன. ஒரு ஆண்மகன் பிறந்து விட்டான். தம்பதியர்களின் வறுமைக்கு மத்தியில் ஆனந்த பொக்கிஷம் அவன். மேலும் மூன்று ஆண்டுகள் சென்றன.
மீண்டும் கருத்தரிக்கிறாள். வறுமை முன்னை விட அதிகமாக வதைக்கிறது. தாய் வீட்டு நினைவு இப்பொழுதும் அவளுக்கு எழுகிறது.
கணவனிடம் கேட்கிறாள். அவன் மனமென்ன, கல்லா? இரும்பா?
நிறைமாதக் கர்ப்பிணி, மூன்று வயது குழந்தை இவர்களை அழைத்துக் கொண்டு, கணவன், மனைவியின் தாய் வீட்டிற்கு நடக்கிறான்.
இவன் ஊருக்கும், அவள் தாய் ஊருக்கும் நடுவிலே ஒரு ஓடை. மூன்று வயது மகனைத் தோளில் தூக்கிக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவி, கைப்பிடித்து ஓடையில் இறங்கி கடந்து விடலாம். இந்த எண்ணத்தோடு சற்றுத் தூரம் வருகிறான்.
திடீரென்று வான் முழுதும், பேய் இருளாய்த் திரள்கிறது. இடி, தரையைக் கூட தட்டிக் கிழிப்பது போல இடிக்கிறது. மின்னல் விழிகளுக்குள் புகுந்து விடுமோ என்ற பயத்தை உருவாக்குகிறது. மழைக் கொட்டத் தொடங்கி விட்டது.
அது மழை அல்ல. மேக ஏரியில் ஓட்டை விழுந்து விட்டது போல் வாரிக் கொட்டுகிறது.
அந்தப் பெண்ணுக்குப் பேறுகால இடுப்பு வலி தோன்றி விட்டது. வலியில் துடிக்கிறாள். மனைவியையும் தாங்கிப் பிடித்துக் கொண்டு, மூன்று வயதுப் பையனையும் தோளில் சுமந்துக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மரத்தடிக்குச் செல்கிறான்.
மனைவியை மரத்தடியில் மெதுவாக சாய்த்து உட்கார வைத்து, பையனை பக்கத்தில் அமர்த்தி விட்டு, ஊருக்குள் துணைக்கு ஆள் தேடி வர ஓடுகிறான். ஒரு சந்து திரும்புகிறான். ஒரு புதருக்குள் அவன் கால் பதித்து விட்டான்.
இடியோசையில் நடுங்கி உள்பதுங்கி இருந்த ஒரு நாகம் அவன் காலை தீண்டிவிட்டது. அதே வேகத்தில் வாயில் நுரை தள்ளி இறந்து விடுகிறான்.
மரத்தடியில், வலியில் துடித்துக் கொண்டிருக்கும் மனைவிக்கு இது தெரியாது. மூன்று வயது பையன் நடுங்கித் தாயை ஒட்டி அணைத்து அழுது கொண்டிருக்கிறான்.
பேறுகால வலி, உச்சிக்கு ஏறி விட்டது. கருவறையில் தங்க இனி வாய்ப்பில்லை. ஒரு பெண் குழந்தை வெளிவந்து விட்டது. அவள் பேறு காலத்தை அவளே பார்த்துக் கொண்டாள். சற்று நேரத்தில் மயக்கம் தெளிகிறது.
போன கணவன் என்ன ஆனான்? கணவன் போன திசையில், பிறந்த குழந்தையைக் கையேந்தி, மெதுவாக தவழ்கிறாள். பாலகன் பின்தொடர்கிறான். அந்த முனைத் திரும்புகிறாள். கணவன் நுரைத் தள்ளி செத்துக் கிடக்கிறான். பார்க்கிறாள்.
வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. எவ்வளவு நேரம் அழுவது. அடுத்தென்ன செய்வது?
ஓடையை நோக்கி, பிறந்த குழந்தையுடனும், பாலகனுடனும் மெதுவே அடியெடுத்து வைக்கிறாள். இப்பொழுது மழை நின்று விட்டது. ஓடையில் தண்ணீர் அதிகரித்து இருக்கிறது.
ஒரு முடிவு செய்கிறாள். பெற்றெடுத்த பெண் குழந்தையை கையில் எடுத்து, ஒடையைக் கடந்து அக்கரையில் பத்திரமாக வைத்து விட்டு, இக்கரையில் உள்ள மகனை தோளில் தூக்கி அக்கரைக்குச் செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முற்பட்டாள்.
பிறந்த குழந்தையைக் கையேந்தி, ஒடையில் இறங்கி, இடுப்பளவு நீரில் அக்கரைக்கு வருகிறாள். கரையில் உள்ள ஒரு மரத்தடியில், ஈரத்துணியாக இருந்தாலும், உடுத்திய சீலையைக் கொஞ்சம் கிழித்து, கைக்குழந்தையை அதில் படுக்க வைத்து விட்டு, வேகமாக அக்கரையில் உள்ள மகனைத் தூக்கி வர விரைகிறாள்.
பாதி ஒடையில் நின்று, கைக்குழந்தையைத் திரும்பிப் பார்க்கிறாள். ஒரு கானகத்து கொடிய கழுகு, கைக்குழந்தையை கொத்தி, கொத்தி தூக்கிப் பறந்து கொண்டிருக்கிறது.
ஐய்யோ ஐய்யோ என்று இரு கைகளையும் தூக்கி தூக்கிக் கத்துகிறாள். அக்கரையில் நின்று கொண்டிருக்கும் மூன்று வயது பையன் அம்மா தன்னை கையசைத்துக் கூப்பிடுகிறாள் என்று நினைத்து ஓடைக்குள் இறங்கி விட்டான்.
இக்கரையில் கைக்குழந்தையைக் கழுகு ருசிக்கிறது. அக்கரையில் ஓடை நீரில் பாலகன் இழுத்துச் செல்லப் படுகிறான். இறந்து விடுகிறான். கணவன் எங்கோ நுரை தள்ளி செத்துக் கிடக்கிறான்.
ஓடை நடுவில் கல்லாக சமைந்து நிற்கிறாள். ஆனாலும் கொடிய வாழ்க்கை அவளை வாழ அழைக்கிறது. மனதைத் தேற்றிக் கொண்டு இக்கரைக்கு வருகிறாள்.
கரையேறித் தாய் வீட்டிற்குச் செல்லுகிறாள். எதிரில் உறவுக்காரர்கள் கூட்டம் வருகிறது.
அதில் ஒரு வயோதிகர், இவளைப் பார்த்து சொல்கிறார்,
“அடிப்பாவி இப்போதாவது உனக்கு மனம் வந்ததே. பார், உன் அப்பாவையும் அம்மாவையும்.”
எதிரே இரண்டு பாடைகளைத் தூக்கி வருகின்றனர்.
நேற்றுப் பெய்த கொடும் மழையில் இடித்த ஒரு இடி, இவள் இல்லத்தைத் தாக்கி தாயும், தந்தையும் இறந்து விட்டனர்.
தெருவோரத்தில் அப்படியே நிற்கிறாள். அந்தக் கூட்டம் அவர்கள் பணியைச் செய்ய போய் விட்டது. இவள் நிற்கும் இடத்திற்கு நேர் எதிர்த் தெருவில் இருந்து, ஒரு புத்த பிட்சுவும், அவரின் நான்கு சீடர்களும்,
“புத்தம் சரணம் கச்சாமி...” என்று பாடி வருகின்றனர். இவள் அவர்களைப் பார்த்து அர்த்தங்கள் இழந்த ஏளனச் சிரிப்பில் அப்படியே நிற்கிறாள்“
இந்த சோகக் கதையை M.M.P சொல்லி முடித்தார்.
முதல் கதையின், காதல் நெழ்ச்சியிலிருந்த மாணவியர்களில் பலருக்கு, இந்தக் கதை விழி கலங்க வைத்திருந்தது.
மொத்தத்தில் ஒண்ணரை மணி நேரம் கடந்து விட்டன. M.M.P பேசத் தொடங்கிய போது இருந்த மாணவியர் வேறு. பேசும் போதும், பேசிய பின்பும் இருந்த மாணவியர் வேறு.
M.M.P பேசிய மொழிகளில், எங்கிருந்தோ வந்த அருள் கரைந்து அந்த ஆடிட்டோரியத்தையே அவரின் கட்டுப்பாட்டில் நிறுத்தி வைத்திருந்தது.
கூட்டம் முடிந்ததும், முதல்வர் ராஜம் கிருஷ்ணம் மேடையில் சொன்னார்.
“இந்த ஆடிட்டோரியத்தில், ஒண்ணரை மணி நேரம் யாரும் இதுவரை இலக்கியச் சொற்பொழிவு ஆற்றியதில்லை. ஒருமுறை மாணவியர்களில் பலர் விரும்பிக் கேட்டுக் கொண்டதால், எழுத்தாளர், ஜெயகாந்தனை இலக்கியக் கூட்டத்திற்கு அழைத்திருந்தோம். அரை மணி நேரம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, மாணவியரின் குறும்புத் தனத்தால் தன் பேச்சை நிறுத்தி சென்று விட்டார்.
மற்றொரு முறை தீபம் நா.பார்த்தசாரதியை அழைத்திருந்தோம். அவரும் கிட்டத்தட்ட இதே நிலைக்கு வந்து பேசாமல் அமர்ந்து விட்டார்.”
ஆடிட்டோரியத்தை விட்டு, வெளியே வந்தோம். பல மாணவிகள் கையிலிருந்த நோட்டில் ஆட்டோகிராஃப் கேட்டனர் M.M.P யிடம்.
அவரும், அந்த நோட்டுகளில்,
“சமுதாயத் தொண்டன், சகோதரன், இரவண சமுத்திரம் எம்.எம். பீர்முஹம்மது” என்று எழுதிக் கொடுத்தார்.
முதல்வர் அறைக்குச் சென்று அமர்ந்தோம். மீண்டும் எங்களுக்குத் தேனீர் தரப்பட்டது. முதல்வர் ராஜம் கிருஷ்ணம் அவர்கள் ஒரு நோட்டை எடுத்து புன்முறுவலுடன், M.M.P யிடம் ஆட்டோகிராஃப் கேட்டார்.
அதிலும், “சமுதாயத் தொண்டன், சகோதரன், இரவண சமுத்திரம் எம்.எம். பீர்முஹம்மது” என்று எழுதிக் கையெழுத்திட்டார்.
M.M.P அவர்கள் இளம்பெண்கள் திருக்கூட்டத்தில் இலக்கியப் பேருரை ஆற்றி உங்களில் யாரேனும் கேட்டு உள்ளீர்களா?
No comments:
Post a Comment