அதிசயம் நடந்தது!!!
1952 க்கு பின்னால் தமிழகத்தின் பட்டணங்கள், பட்டித்தொட்டிகள் எங்கெங்கும் ஒரு மேடையுகம் தலையெடுக்க ஆரம்பித்தது.
பேசத் தெரிந்தவர்கள், வார்த்தைகளை வீசத் தெரிந்தவர்கள் அந்த மேடையுகத்தின் பிதாமகர்களாக நடமாடிய காலமது.
தமிழில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு சதாவதானி செய்குத் தம்பி பாவலர், சோமசுந்தர பாரதியார். ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க, மறைமலை அடிகள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தமிழின் விற்பனர்கள் மேடைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர்.
தோழர் ஜீவா, தோழர் பாலதண்டாயுதம், தோழர் தா.பாண்டியன் போன்ற பொதுவுடைமைத் தோழர்கள் இஸங்களை மேடைகளில் முழங்கினார்கள்.
இன்னொரு புறம் ஈ.வெ. ராமசாமி பெரியார், தளபதி அழகிரி, அண்ணாதுரை, ஈ.வெ.கி. சம்பத், கருணாநிதி, கண்ணதாசன், நெடுஞ்செழியன், நாஞ்சில் கி.மனோகரன் போன்ற திராவிட நாத்திக சிந்தனை உடையவர்கள் அந்த மேடையுகத்தின் சண்ட மாருதங்களாக வீசிக் கொண்டிருந்தனர்.
மற்றொரு பக்கம் வாகீச கலாநிதி கி.வா. ஜகன்னாத ஐய்யர், கிருபானந்த வாரியார், புலவர் கீரன் போன்றோர் பக்திப் பரவச சொற்பொழிவுகளை மேடைகளில் பொழிந்து கொண்டிருந்தனர்.
ம.பொ. சிவஞானம், திருக்குறள் வீ.முனுசாமி, கவி.கா.மு. ஷரீஃப், பேரா.கா. அப்துல் கபூர், பிறை ஆசிரியர் அப்துல் வஹாப் போன்ற இலக்கிய ரசனை நிறைந்த பேச்சாற்றல் கொண்டவர்களும் அன்றைய மேடைகளில் அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்தனர்.
இன்னபிற பேச்சாற்றல் மிக்கவர்களை விட்டுவிலகி, வேறுபடுத்தி வியப்போடு மக்கள் மத்தியில் மேடை தோறும் நடமாடிய ஒரு திருக்கூட்டம் உண்டு.
தளபதி திருப்பூர் மைதீன், ஆ.கா.அ. அப்துஸ் ஸமத், இரவண சமுத்திரம், M.M. பீர் முஹம்மது, நாவலர். M.M. யூசுஃப், திருவண்ணாமலை ஷம்சுதீன், வடகரை பக்கரண்ணன், கவிஞர் வீ. நூர்முஹம்மது, கவிஞர் தா. காசிம் போன்ற இன்னும் பலர் தமிழகத்து மேடைகளில் ஒரு புதிய பாணியைத் தூக்கி வந்து விரித்து வைத்தனர்.
மேலே சொன்ன இவர்கள் மட்டுமன்றி, இன்னும் இன்னும் ஏராளமான பெருமக்கள் தமிழகத்து மக்களை ஒவ்வொரு மாலை வேளைகளிலும் மேடைகளில் சந்தித்த காலமது.
இவர்களில், பல மேன்மைக்குரியவர்களைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை எழுத இருக்கிறேன். இந்த வரிசையில் இரவண சமுத்திரம் அண்ணன் M.M. பீர் முஹம்மது அவர்களை எழுதிக் கொண்டு வருகிறேன்.
இரவணசமுத்திரம் M.M. பீர் முஹம்மது அண்ணன், ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் சாஹிப் இணைந்து பேசிய நிகழ்வுகளை நினைவுகூருகிறேன்.
ஆ.கா.அ.அப்துஸ் ஸமத் சாஹிபின் தந்தையார் அப்துல் ஹமீது பாக்கவி அவர்கள் திருக்குர்ஆனைத் தமிழாக்கம் செய்த தர்ஜுமாவை வெளியிட்டார்கள்.
இந்தக் குர்ஆன் தமிழாக்கத்தை அப்துஸ் ஸமத் சாஹிபும், M.M. பீர் முஹம்மது அண்ணனும் ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று விற்றுவர ஏற்பாடானது. இன்று இருப்பது போல புத்தக விற்பனைக் கடைகள் அன்று கிடையாது. இந்த இருவரும் திருமறையை ஒவ்வொரு பள்ளிவாயிலுக்கும் எடுத்துச் சென்று விற்கும் வேளையில் பள்ளிவாயிலின் மிம்பருக்கு பக்கத்தில் நின்று (மேடையில்) சற்று நேரம் பேசி விற்பனையைத் தொடங்க வேண்டும்.
இந்தப் பள்ளிவாயில் மிம்பர்களின் பக்கத்தில் இருந்துதான் இவர்களின் பேச்சாற்றல் பரிமாணமானது. பிரகாசமானது.
அப்துஸ் ஸமத் சாஹிபின் சொற்பொழிவுக்கு ஒரு வீரியமும் ரசனையும் பிந்தைய காலங்களில் இருந்ததற்கு ஒரு அடிப்படை இருக்கிறது.
திருக்குர்ஆனினுடைய நடைபாணியில் ஒரு பக்குவத்தை அப்துஸ் ஸமத் சாஹிப் கையாண்டார். திருமறை பலவாறான கேள்விகளை முன்வைக்கும். அடுத்து, அதற்கானத் தெளிவுகளை விரித்து வைக்கும்.
இந்தப் பாணிதான் அப்துஸ் ஸமத் சாஹிபின் மேடைப் பாணி.
“அண்ணாந்து பார்த்திருக்கிறீர்களா? நிலவு தொங்குவது போல் தோன்றவில்லையா?”
“மலர்கள் பல வண்ணத்தில் இருக்கின்றன. மகரந்தம் ஒரே நிறத்தில் இருக்கிறது. சிந்தித்தீர்களா?”
இந்த மாதிரி குர்ஆன் ஒரு பாணியைத் திருமறையில் நிறைத்து இருக்கிறது. இந்த நடைதான் அப்துஸ் ஸமத் அரசியல் பேசும் பொழுதும், மார்க்கம் பேசும் வேளையிலும், இலக்கியம் சொல்லும் தோரணையிலும் நிறைந்து இருக்கும்.
திருமறை, அற்புதமான முன்னர் நடந்த நிகழ்வுகளை சுவையாகச் சொல்லி விளக்கமான பதிவுகளை பல இடங்களில் கையாளும். இந்தப் பாணியை M.M. பீர் முஹம்மது அண்ணன் தன் வசமாக்கிக் கொண்டார்.
அரசியல் பேச்சிலும், ஆன்மீகப் பேச்சிலும், இலக்கிய பேச்சிலும் M.M. பீர் முஹம்மது அண்ணனுடைய பேச்சில் கதை இருக்கும். அந்தக் கதையில் சுவை இருக்கும். ஆழமான செய்தி பதிந்து இருக்கும்.
இந்த இருபெரும் சொற்பொழிவாளர்களின் பேச்சாற்றல் பள்ளிவாசலின் மிம்பருக்குப் பக்கத்தில் இருந்து புறப்பட்டது.
இவர்களைப் பேச கற்றுத் தந்தது திருமறையின் பேரருள். அதனால்தான் இந்த இருவரையும், இந்த இரு பேச்சாற்றல் ஜாம்பவான்களையும் இன்றைக்கும் யாரும் தொட்டுவிட முடியாத உயரத்தில் வைத்திருக்கிறது.
இந்த இருவரைப் பற்றிய ஒரு சுவையான தகவலைப் பதிவு செய்கிறேன். இந்த இருவரும் மேடைகளில், பிற இடங்களில் தாடி தொப்பியுடன்தான் தலைப்படுவார்கள்.
ஆரம்ப காலத்தில் இவர்கள் தலையில் பள்ளிவாசலுக்குச் செல்லும் பொழுது தொப்பி இருந்தது. தாடி இவர்களின் நாடியைத் தழுவியது இல்லை.
திருக் குர்ஆனை ஊர்ஊராகச் சென்று விற்று வரும் வேளையில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள ஒரு கடலோர முஸ்லிம் கிராமதிற்குச் சென்றார்கள்.
முதலில் நண்பர் ஒருவர் இல்லத்திற்கு சென்று சேர்ந்தார்கள். நண்பரின் வீட்டு வாசல் கதவு அடைக்கப் பட்டு இருந்தது. நண்பரின் பெயர் சொல்லி அழைத்தார்கள். சற்று நேரத்தில் ஒரு சின்னஞ்சிறு சிறுமி வந்து கதவைத் திறந்தாள். அந்த சிறுமியிடம் நண்பர் பெயரைச் சொல்லி இருக்கிறாரா? என்று கேட்டு இருக்கிறார்கள்.
அந்தச் சிறுமி வீட்டுக்குள் திரும்பி, “வாப்பா, யாரோ ரெண்டு “----“! (நமது சகோதர சமுதாயத்தின் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி) உங்களை பார்க்க வந்திருக்கிறார்கள்.
அந்த முஸ்லிம் கிராமத்தில் தாடி வைக்காத நபர்களை அந்த ஊர் சின்னப் பிள்ளைகள் பனையுடன் சம்மந்தப் பட்ட “சா” இந்த எழுத்தில் தொடங்கும் சாதிப் பெயரை குறிப்பிட்டு சொல்லுவது வழக்கம்.
இதைக் கேட்ட அப்துஸ் ஸமத் சாஹிபுக்கும், M.M.பீர் முஹம்மது அண்ணனுக்கும் நாடியில் தாடி முளைக்கத் தொடங்கியது. இதுதான் தாடி ரகசியம்.
சென்னை திருவல்லிக்கேணி ஜானிஜான்கான் தெருவில், முஸ்லிம் லீக் பொதுக் கூட்டம்.
அந்தக் கூட்டத்திற்கு S.A. காஜா முஹைதீன் M.P. தலைமைத் தாங்குகிறார். நான், கவிஞர் இஜட். ஜஃபருல்லாஹ் அந்தக் கூட்டத்தில் பேசுகிறோம். சிறப்புச் சொற்பொழிவு M.M. பீர் முஹம்மது அண்ணன்.
இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காகச் சென்னை மரைக்காயர் லெப்பைத் தெரு முஸ்லிம் லீக் அலுவலகத்திலிருந்து M.M. பீர் முஹம்மது அண்ணனும், ஜஃபருல்லாவும், நானும் புறப்பட்டோம்.
“ஆட்டோவில் போகலாம்” என ஜஃபருல்லா சொன்னார்.
“அது விரயம். தேவை இல்லாமல் செலவு செய்வது இஸ்லாமிய முறை இல்லை. நாம் கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடந்து சென்று, 31 பஸ்ஸில் ஏறி , ஐஸ் ஹவுஸில் இறங்கிக் கொள்ளலாம்” என்றார் M.M.பீர் முஹம்மது அண்ணன்.
இப்படி முடிவெடுத்து நாங்கள் சென்ற போது இரவு ஏழு மணி. இந்த நேரத்தில் 31 பஸ்ஸில் ஏறுவது என்றால், ஏறுபவருக்கு சர்க்கஸ் தொழில் தெரிந்து இருக்க வேண்டும்.எங்களில் எவருக்கும் அது தெரியாததினால், மணி எட்டானது. இடையிலே ஐந்தாறு 31 சென்று விட்டன.
M.M. பீர் முஹம்மது அண்ணன் அவர்கள், பிளாட்பாரத்தில் இருந்து ரோட்டில் குதித்து, ஒரு பியட் காரை கை நீட்டி நிறுத்தினார். கார் நின்றது. காரின் டிரைவர் சீட்டில் மட்டும் ஒருவர் இருந்தார். காரில் வேறு எவரும் இல்லை. அந்த காரின் டிரைவரே ஓனர். பார்வையிலே தெரிந்துக் கொண்டோம்.
“ஐயா, நான் ஒரு Ex. MLA. எங்கள் கட்சியின் கூட்டம் ராயப்பேட்டையில் நடக்கிறது. எங்களால் பஸ் ஏறிச் செல்ல முடியாத அளவு பஸ்ஸில் கூட்டம். நீங்கள் மவுண்ட் ரோடு வழியே போவதாக இருந்தால் எங்களை மவுண்ட் ரோட்டில் இறக்கி விடுங்கள்.” எனக் கேட்டார் M.M. பீர் முஹம்மது அண்ணன்.
காரில் இருந்தவர் எங்களை உற்றுப் பார்த்தார். M.M. பீர் முஹம்மது அண்ணன் அவர்களை நன்றாக கவனித்தார்.
“ஐயா, உள்ளே வந்து அமருங்கள். மவுண்ட் ரோடில் இறக்கி விடுகிறேன்” என்றார் கார் உரிமையாளர்.
அந்தக் காருக்குள் வித்தியாசமான உருவங்களாக நாங்கள் இருந்தோம். M.M. பீர் முஹம்மது அண்ணன் பூரணமான இஸ்லாமிய கோலம். கார் உரிமையாளர் நெற்றி முழுவதும் நிறைந்த நாமம் பூசிய தோற்றம்.
ஜஃபருல்லாவும், நானும் எதிலும் சேராத புதிர்கள் மாதிரி. கார் பயணப் பட்டது. பாரிமுனைப் பக்கம் வந்ததும், M.M. பீர் முஹம்மது அண்ணன் குரல் கணீரென்று ஒலித்தது.
“ஐயா, உங்களுக்கு மகப்பேறு இல்லையோ?” என்று.
கார் ஓட்டியவர் அதிர்ந்தார். அப்படியே காரை ஓரத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினார்.
M.M. பீர்முஹம்மது அண்ணனைப் பார்த்து கும்பிட்டார்.
“ஐயா பெரியவங்களே, எனக்கு கல்யாணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன, எங்களுக்குப் புத்திரப் பேறு வாய்க்கவில்லை ஐயா” என்றார்.
அவர் குரல் தளதளத்தது. அவர் கண்களில் நீர்க் கட்டியது.
M.M. பீர் முஹம்மது அண்ணன் அவர் தலையில் கைவைத்து,
“அடுத்த ஆண்டு இறைவன் நாட்டப்படி, நீங்கள் ஒரு ஆண் மகனுக்கு தந்தையாக இருப்பீர்கள்” என்று ஆசீர்வதித்தார்.
காரோட்டி வந்தவரின், முகத்தில் ஓராயிரம் ரோஜாப்பூ மலர்ந்தது.
“உங்கள் வாக்குப் பலிக்கும் ஐயா, பலிக்கும் ஐயா” என்று பணிந்தார்.
எங்களைக் காரோட்டி வந்தவர் மவுண்ட் ரோடில் இறக்கவில்லை. ஜானிஜான்கான் தெருவிற்கே கூட்டி வந்து சேர்த்தார்.
அருகில் இருந்த இனிப்புக் கடையில் தம்காருட் ஒரு கிலோ வாங்கி M.M. பீர் முஹம்மது அண்ணன் அவர்கள் திருமுன்னர் படையல் இடுவது போல பணிந்து கொடுத்தார்.
“ஐயா, சென்னையில் உங்கள் முகவரி தாருங்கள். உங்களிடம் நாங்கள் தம்பதியராக வந்து ஆசி பெற வேண்டும்” என்றார்.
“ஐயா, எனக்கு ஒரு முகவரி இல்லை. ’யாதும் ஊரே! யாவரும் கேளீர்!’ இருந்தாலும் எங்கள் தலைமை நிலைய முகவரி தருகிறேன். தொலைபேசி எண்ணும் தருகிறேன். நீங்கள் எப்பொழுதும் தொலைப்பேசியில் பேசி நான் இருப்பதை உறுதி செய்துக் கொண்டபின் வந்து பாருங்கள்.” எனச் சொல்லி ஜஃபருல்லாவிடம் முகவரியையும், தொலைப்பேசி எண்ணையும் குறித்துக் கொடுக்க சொன்னார்.
ஜஃபருல்லா, குறித்து கொடுத்து விட்டு அவரின் பெயரை கேட்டார்.
“ ஐயா என் பெயர் வெங்கட்ரமணன். ஸ்டேட் பாங்கில் மேனேஜராக பணிபுரிகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் மேடைக்குச் சென்று விட்டோம். மேடையில் எங்கள் பாணியில் அன்றைய அரசியலை கலக்கி எடுத்து விட்டோம்.
முடிக்கும் பொழுது மணி இரவு பதினொன்று இருக்கும். மேடையில் இருந்து நாங்கள் இறங்கி அருகில் எங்களுக்கு உணவு தயாராக இருக்கும் இல்லத்திற்குப் போக நிற்கும் போது, அங்கே வெங்கட்ரமணன் பணிவோடு நிற்கிறார்.
“ஐயா, மேலாளர் அவர்களே! நீங்கள் இன்னும் இல்லம் செல்லவில்லையா?” என்று M.M.P அண்ணன் கேட்டார்.
“ஐயா, உங்களை, நீங்கள் தங்குமிடத்தில் கொண்டு விட்டுவிட்டு நான் இல்லம் திரும்புகிறேன். நல்வாக்குத் தந்த உங்களை நடுவழியில் விட்டுச் செல்ல மனம் ஒப்பவில்லை.” என்றார் அவர்.
நாங்கள் உணவருந்தும் இல்லத்தில் காத்திருந்து, எங்களை அவர், காரில் ஏற்றி மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவிலிருக்கும் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் இறக்கி விட்டு, வெங்கட்ரமணன் அவர் இல்லத்திற்குச் சென்றார்.
நாங்கள் தலைமையகத்திற்கு உள்ளே சென்றதும் ஜஃபருல்லா,
“மாமா, எப்போ மோடி மஸ்தான் ஆனீர்கள்? நல்வாக்குச் சொல்லி ஒரு நல்ல மனிதனை இந்தப் பாடுபடுத்தி விட்டீர்களே? அது எப்படி அவருக்கு பிள்ளை இல்லையென உங்களுக்குத் தெரிந்தது” என்று கேட்டார்.
“மகனே! காரில் உள்ளே அமர்ந்தவுடன் நீங்கள் கவனித்தீர்களோ என்னமோ தெரியாது. காரில் எல்லா பக்கத்திலும் சம்மந்தம் இல்லாத இடத்திலும் குழந்தை ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. இதனால் அவருக்கு குழந்தை இல்லையென்ற முடிவுக்கு வந்து விட்டேன்.”
“அதுசரி மாமா, ஆசீர்வாதம் வழங்கினீர்களே அது எப்படி? நடக்காது போனால் என்ன ஆகும்?” இது ஜஃபருல்லா.
“மகனே! என் மனதில் ரப்பை நினைத்தேன். அண்ணலெம் பெருமானார் காட்சியை நினைவுக்கு கொண்டு வந்தேன். முஹைதீன் ஆண்டகை அவர்களின் நம்பிக்கையில், “யா அல்லாஹ், இந்த மனிதனுக்கு உன் சோதனை நீக்கி, ஒரு மகனை பெரும் பேறாக வழங்கியருள்” என வேண்டி அவர் தலையில் கைவைத்து ஊதினேன். இன்ஷா அல்லாஹ் இது நடக்கும். நான் நம்புகிறேன்” என்றார் M.M.P அண்ணன்.
எனக்கும், ஜஃபருல்லாவிற்கும் கப்ஸா கணதூரத்திற்கு போய் விட்டது என்ற நினைப்பு தோன்றியது.
ஆனால் அந்த அதிசயம் நடந்தது. ஓராண்டு கழிந்திருக்கும். முஸ்லிம் லீக் தலைமை நிலையத்திற்குத் தொலைபேசி அழைப்பு வந்தது.
மேனேஜர் வெங்கட்ரமணன் பேசினார். “மகான் ஐயா இருக்கிறார்களா?” என்று கேட்டார். தலைமை நிலையத்தில் நானும் , ஜஃபருல்லாவும் அப்பொழுது இருந்தோம். M.M.P அண்ணனும் சென்னையில் இருந்தார்கள். ஆனால் MLA ஹாஸ்டலில் இருந்தார்கள். எனவே வெங்கட்ரமணன் அவர்களுக்கு MLA ஹாஸ்டல் தொலைப்பேசி எண்ணையும், M.M.P அண்ணன் அறை எண்ணையும் சொன்னோம்.
வெங்கட்ரமணன், M.M.P அண்ணனிடம் பேசி இருக்கிறார். M.M.P அண்ணன் சொன்னது மாதிரி, வெங்கட்ரமணனுக்கு புஷ்டியான, அழகான ஆண்மகன் பிறந்து விட்டான்.
M.M.P அண்ணன், வெங்கட்ரமணனிடம் “எங்கள் தலைமை நிலையத்திற்கு வாருங்கள் என்று அன்று சொன்னேன். இன்று மாலை ஐந்து மணியளவில் அங்கு வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார்.
மாலை நான்கு மணிக்கு எல்லாம் M.M.P அண்ணன் தலையகத்திற்கு வந்துவிட்டார். வெங்கட்ரமணன் தான் பெற்றெடுத்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு, தன் மனைவியை உடனழைத்து முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு நாலே முக்கால் மணிக்கு வந்து விட்டார்.
வெங்கட்ரமணன், குழந்தையை M.M.P அண்ணன் பாதத்தின் முன்வைக்க குனிந்தார். உடனே M.M.P அண்ணன் தடுத்துவிட்டார்.
“ஐயா, எங்கள் வேதம் சொல்கிறது ‘எல்லா குழந்தைகளும் குழந்தைகளாகவே பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் தங்கள் விருப்பங்களை குழந்தைகளுக்குத் திணித்து அவர்களை மாற்றுகிறார்கள்’ இந்த பொருளில் எங்கள் வேதம் சொல்கிறது. எனவே குழந்தைகளுக்குப் பாத வணக்கம் கற்றுத் தராதீர்கள்” எனக் கூறி கைகளில் குழந்தையை வாங்கி முத்தமிட்டார். அந்தத் தம்பதியர்கள் நெக்குருகி நின்றார்கள்.
ஜஃபருல்லாவும், நானும் ஆச்சர்யத்தில் கிடந்தோம். இந்தக் காட்சியை இப்பொழுது நினைத்தாலும், நெஞ்சுக்குள் என்னமோ செய்கிறது.
No comments:
Post a Comment