ஒரு அழைப்பு! ஒரு வணக்கம்! இடையிலே ஒரு வாழ்க்கை!
M. M. P - இந்த உச்சரிப்பு, தமிழக மேடைகளில் ஒரு காலகட்டத்தில் தாரக மந்திரமாக ஒலிக்கப் பட்ட உச்சரிப்பு.
அரசியல் மேடை, இலக்கிய மேடை, ஆன்மீக மேடை என எல்லா பரிமாணங்களிலும் தனக்கென்று ஒரு கம்பீரத் தொனியுடன், சொல்லாடல்களைப் பூப்போல தூவித் தெளிக்கக் கூடிய ஒரு மந்திர வாகீசம்.
தமிழக எல்லை முழுவதும், மூலை முடுக்குகளிலும், பட்டி தொட்டிகளிலும் நகரப் பட்டணங்களிலும் இவருடைய பேச்சு மொழி தழுவாத பிரதேசங்களே இல்லை.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் மூத்த தலைவர்களில் மகத்தான சிறப்புக்குரியவர். தமிழக சட்டமன்றத்தில் கூட இவரது தமிழ்த் தாண்டவம் ஆடி இருக்கிறது.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டம். சட்ட மன்றத்தில் மது விலக்கை ரத்து செய்ய தீர்மானம் கொண்டு வருகிறார். அந்த அவையில் M.M.P முஸ்லிம் லீகின் உறுப்பினராக அமர்ந்து இருக்கிறார்.
முதல்வரின் அனுமதியோடு வரும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துப் பேச எழுகிறார். அந்த பேச்சை கருணாநிதி ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறார். கருணாநிதி எழுந்து தன்னுடைய வாய் இதழில் விரல் வைத்து, “இப்போதைக்கு தடை இல்லை” என்றார். அதாவது, M.M.P பேசிய தமிழின் போதைக்கு தடை இல்லை என்பது போன்று நையாண்டி செய்தார்.
உடனே M.M.P எழுந்து, “ இப்போ தைக்கு தடை இல்லை என்றால், மாசிக்கா? பங்குனிக்கா?” என்று கேட்டார். அதாவது அப்போது தை மாதம், அதைக் குறிப்பிட்டு தைக்கு தடை இல்லை என்றால், மாசிக்கா? பங்குனிக்கா? என்று கேட்டார்.
தமிழக சட்டமன்றமே பெஞ்சைத் தட்டி ஆரவாரித்த்து. அவருடைய பேச்சாற்றலுக்கு இது ஒரு சிறு துளி.
நெல்லை மாவட்டம் ரவண சமுத்திரத்தில் பிறந்த M.M.பீர் முஹம்மது சாஹிப், இவரைத் தான் M.M.P என்கிறோம். இவரைப் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லியே ஆக வேண்டும். இன்றும், அடுத்து வரும் சில நாள்களிலும் இவரே என் எழுத்துச் செய்தியாக பரிணமிப்பார்.
M.M.P ஒரு நாள் காலை, சுமார் பத்து மணியளவில், சென்னை மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்திற்கு தீடீரென்று வந்து உதயமானார்.
“என் அண்ணன் மகனே (என்னை இப்படித் தான் அவர் அழைப்பார்), நான் நேசித்த சிலருக்கு இன்று மதியம் நம் தலைமை நிலையத்தில் விருந்து வைக்க விரும்புகிறேன். இந்த மிஸ்கீன் தரும் விருந்தை, நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உனக்கும் நான் இன்று விருந்து தருகிறேன். நீயும் இங்கு இருக்க வேண்டும்” என்றார்.
அந்த காலகட்ட்த்தில் முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்தில் நான் முழு நேரமாக பணியில் இருந்தேன்.
M.M.P இப்படித் தான் ஏதாவது செய்வார்.”ஏண்ணே இந்த தீடீர் விருந்து?” என்று கேட்டேன்.”
“காரணம் கேட்காதே, கலந்துக் கொள்!” என்றார். விருட்டென்று வெளியேறிவிட்டார்.
மதியம் வந்தது. அவர் நேசர் என்று குறிப்பிட்டவர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். முஸ்லிம் லீகின் தலைவர் சிராஜுல் மில்லத் முதலில் வந்து அமர்ந்தார். அடுத்து கவிஞர் காசிம், இஸ்மாயில் கனி அண்ணன், மச்சான் நாகூர் கவிஞர் Z. ஜபருல்லா, M.M.P அண்ணனுடைய நண்பராக எங்களுக்கு அறிமுகம் இல்லாத சகோதர இந்து சமுதாயத்தவர் இருவரும் வந்தனர். நான் இருந்தேன்.
எல்லோரும் அங்கே இருக்கிறோம். எங்களுக்குள் பேசிக் கொள்கிறோம்.
“M.M.P நமக்கு ஏன் விருந்து தருகிறார்?” இந்த கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.
சற்று நேரத்தில் இரண்டு கைகளிலும், தூக்க முடியாத பெரிய டிபன் கேரியர், கக்கத்தில் வாழை இலை இருக்க M.M.P யே வேர்க்க, விறுவிறுக்க தானே தூக்கி வந்தார். எங்கள் அனைவருக்குமே இது அதிர்ச்சியான தோற்றம்.
சிராஜுல் மில்லத், “என்ன ஜனாப் இதெல்லாம் நீங்களே தூக்கி வருகிறீர்கள்?” என்றார்.
தலைமை நிலைய மேனேஜராக இருந்த மீராசா ஓடிச் சென்று, அவர் கையில் இருந்த கேரியர்களை வாங்கித் தரையில் வைத்தார். தலைமை நிலைய அலுவலகத்தில் கிடந்த பெரிய மேஜையின் மீது M.M.P கொண்டு வந்திருந்த வாழை இலையை அவரே விரித்தார். இலைகளில் அவரே நீர் தெளித்தார். எங்கள் அனைவரையும் அமரச் சொன்னார். அமர்ந்த நாங்கள் அவரையும் உடன் அமரச் சொன்னோம். மறுத்து விட்டார்.
“இன்று நானே உங்களுக்கு பரிமாறப் போகிறேன்” என்று சொல்லி, எல்லோருக்கும் பரிமாறினார்.
உணவருந்தியதற்கு பின், சிராஜுல் மில்லத்,
“ஜனாப், இப்பொழுதாவது இந்த விருந்துக்குரிய காரணத்தைச் சொல்லுங்கள்“ என்றார்.
“நான் ஒரு நபருக்காக பதிலி ஹஜ்ஜு செல்கிறேன். அதனால் என்னமோ தெரியவில்லை, உங்கள் அனைவருக்கும் இந்த மிஸ்கீன் விருந்து வைக்க முடிவு செய்தேன்” என்றார்.
எங்களுக்கு மேலும் அதிர்ச்சி. M.M.P ஏற்கனவே சில ஹஜ்ஜுகள் செய்து இருக்கிறார். அப்பொழுதெல்லாம் செய்யாத இந்த புதுமையை இப்போது ஏன் செய்கிறார். இதற்கும் யாரிடமும் பதில் இல்லை.
நாங்கள் ஒவ்வொருவராக அவரைத் தழுவி எங்கள் மகிழ்வை வெளிப்படுத்திக் கொண்டோம்.
“அண்ணே, எங்களுக்காக துஆ செய்யுங்கள்” என்றேன் நான்.
என்னை கட்டியணைத்துக் கொண்டு, “நான் முதன்முதலாக ஹஜ்ஜு செய்யும் பொழுது, எங்கள் முதலாளி, உங்கள் தாதா மு.ந. அப்துர் ரஹ்மான் முதலாளி அவர்களுக்கு துஆ செய்தேன். எங்கள் அண்ணன், உங்கள் வாப்பா A.K. ரிபாய் சாஹிப், M.P ஆவதற்கு முன்னால் நான் ஹஜ்ஜு செய்தேன். அப்போது ரிஃபாய் அண்ணனுக்காக துஆ செய்தேன். இப்பொழுது நான் ஹஜ்ஜு செய்ய்யும் பொழுது, ‘அக்கினி நதி’, நாவலுக்கு விமர்சனம் எழுதிய கரங்களுக்குரிய எங்கள் அண்ணன் மகனே! உனக்காக நான் துஆ செய்வேன்” என்றார்
என் விழிகள் கலங்கி விட்டன.
இல்லஸ்ட்ரேட் வீக்லியின் ஆசிரியர் குழுவிலிருந்த குர்ரத்துல் ஐன் ஹைதர் என்ற பெண் நாவலாசிரியர் எழுதிய அற்புதமான ஒரு இதிகாசம். ஆம் அது நாவல் அல்ல. இதிகாசம்தான் ‘அக்கினி நதி’. அந்த நாவலை கிட்டத்தட்ட ஒரு சிறு புத்தகம் போடும் அளவுக்கு, கவிஞர் காசிமின் ‘ சர விளக்கு’ பத்திரிகையில் தொடர் எழுதி இருந்தேன்.
அந்த விமர்சனத்தின் முதல் தரமான ரசிகர், M.M.P தான்.
என் விமர்சனத்தை படித்து விட்டு, அக்கினி நதி நாவல் தமிழில் வந்ததா? என்று கேட்டார். நான் தமிழிலில் படித்து விட்டுதான் விமர்சனம் எழுதினேன் என்று சொன்னேன். அந்த நாவலை எனக்கு படிக்கத் தா” என்று கேட்டார். அந்த நாவல் தலையணை அளவு பருத்து, துக்ளக் சைசில் நீண்டு இருக்கும்.
M.M.P யிடம் எது கொடுத்தலும் கிடைத்து விடும். புத்தகம் கொடுத்தால் மட்டும் அது, ஒருவழிப் பாதையாகி விடும்.
நான் புத்தகம் தர மறுத்து விட்டேன். “நான் திரும்ப நிச்சயம் தந்து விடுவேன்” என்று வற்புறுத்தி வாங்கிச் சென்றார்.
அந்தப் புத்தகம் ஒருவழிப் பாதையாகச் சென்று மறைந்தே விட்ட்து. அந்தப் புத்தகமும் என்னிடம் இல்லை. நான் எழுதிய விமர்சனத் தொடரும் என்னிடம் இல்லை. இந்த நிலையில்தான், கஅபத்துல்லாவில் எனக்காக துஆ செய்கிறேன் என்கிறார்.
இந்தத் தினத்திற்குச் சற்று பின்னர், சிராஜுல் மில்லத்தும், தீடீரென்று ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார். அந்த முறை இசை முரசு நாகூர் ஹனீபாவும் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்.
இவர்கள் மதீனத்தில் ஒரு நாள், இரவில் ஒரு இல்லத்தில் ஒன்றாகக் கூடுகிறார்கள். அப்போது, இசை முரசு நாகூர் ஹனீபாவிடம், கவிஞர் காசிம் எழுதி இசை முரசு ஹனீபா பாடிய பாடலான ஒரு பாடலைப் பாடச் சொல்லி M.M.P கேட்கிறார். இசை முரசு, கடைசி வரை பாட மறுத்து விட்டார்.
அந்தப் பாடலில் “எங்கள் நபியே உங்கள் மதீனத்து மண்ணில் விழுந்து புரண்டு உருள வேண்டும். மரணத்தையும் இங்கேயே தழுவ வேண்டும்” என்ற பொருளில் வரிகள் வரும். இதனால், இசை முரசு அண்ணலார் இருக்கும் மதீனத்தில் இந்தப் பாடலைப் பாட மறுத்து விட்டார்.
அதற்குக் காரணம் சொன்னார். “இதை இறைவன் இங்கே கபூலாக்கி விட்டால் நானென்ன செய்வேன்?” என்றார்.
“எனக்கு அது கபூல் ஆகட்டும்” என்று M.M.P சொன்னார். ஏனோ தெரியவில்லை அது அங்கு நிகழவில்லை.
சிராஜுல் மில்லத் இதற்குச் சாட்சியாக இருந்தார்.
ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு ஹாஜிகள் திரும்பி விட்டனர். M.M.P யும் தமிழகம் வந்து சேர்ந்தார். ஆனால் தமிழக முஸ்லிம் லீகின் தலைமை நிலையத்திற்கு வந்து சேரவில்லை. சென்னைக்கு வந்தவர், ஈரோட்டுக்குப் போய் விட்டார். அங்கிருந்து என்ன நினைத்தாரோ அஜ்மீருக்கு சென்று ஒன்றிரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி விட்டார். பின்னர் அங்கிருந்து சென்னை வந்து ரவண சமுத்திரத்திற்குப் போய் விட்டார்.
அதற்குப் பின், தமிழகத்தில் எங்கெங்கோ சென்றிருக்கிறார். நாங்கள் அவரை சந்திக்க வில்லை. அடுத்த ரமலான் மாதம் வந்து விட்ட்து. M.M.P ரவண சமுத்திரத்திலேயே தங்கி இருந்தார். இவ்வளவு நீண்ட நாட்கள் அவர் சொந்த ஊரில் தங்கியதில்லை.
இருபத்தேழாம் நோன்பு அன்று, இரவு ரவண சமுத்திரம் பள்ளிவாசலில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். அந்த சொற்பொழிவு ஆழமான அற்புதமான சொற்பொழிவு. அதுதான் M.M.P யின் இறுதிச் சொற்பொழிவு.
அந்தச் சொற்பொழிவை ஆரம்பிக்கும் பொழுது, அற்புதமான துவக்கத்தில் தொடங்குகிறார்.
“ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, அதன் காதில் பாங்கு ஒலிக்கிறோம், பாங்கு ஒலித்தால் தொழ வேண்டுமே, அங்கே தொழுகை நடைபெற வில்லை. தொழுகை இல்லாத பாங்கொலி தொடக்கமாகி விட்டது. ஒருவர் மரணித்த பின் ஜனாஸா தொழுகை நடக்கிறது. இந்த தொழுகைக்குப் பாங்கு கிடையாது. இது பாங்கில்லாத் தொழுகை. பிறக்கும் பொழுது பாங்கொலிக்கிறது, தொழுகை இல்லை. இறக்கும் பொழுது தொழுகை நடக்கிறது பாங்கு இல்லை. அந்த பாங்குக்கு இங்கே தொழுகை. இந்தத் தொழுகைக்கு அங்கே பாங்கு. இடையிலே ஒரு வாழ்க்கை” இப்படி அந்த பேச்சை M.M.P தொடங்குகிறார்.
இடையில் வாழக் கூடிய மனித வாழ்க்கை பற்றி அவர் பொழிந்திருக்கும் கருத்துக்கள் இப்போதும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.
M.M.P யைப் பற்றிய சம்பவங்களை இறைவன் நாடினால் தொடர்ந்து எழுதுவேன்.
No comments:
Post a Comment