இந்தியாவை, இந்தியா என்று வரலாறு பூரணமாக அறிவிப்பதற்கு முன்னால், இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் சில பகுதிகளிலிருந்து மனிதர்கள் இலங்கையில் குடியேறினார்கள்.
மேற்கு வங்கம், கடாரம்(ஒரிஸா), தமிழகம் போன்ற இந்தியப் பகுதியிலிருந்து இலங்கைக் குடியேற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இது சரித்திரக் காலச் சம்பவங்கள்.
பூர்விகக் குடிகளாலும், கடல் தாண்டிய இன்னொரு பகுதியிலிருந்து குடியேறிய மனிதர்களாலும் தன் வாழ்வையும் நாகரிகத்தையும் இலங்கை மண் வளர்த்துக் கொண்டது.
சிங்களவர்கள் என்று இன்று குறிப்பிடப்படுபவர்கள் இலங்கை பூர்வீகவாசிகள் மட்டுமாக உள்ள சமுதாயத்தவர்கள் அல்லர். இந்தியத்தின் வடபுலத்திருந்து குடியேறிவர்களையும் உள்ளிட்ட மக்கள் திரளைத்தான் சிங்களவர்கள் என்று இன்றையச் சொல் குறிப்பிடுகிறது.
இவர்களுக்கு முன்பே தமிழகத்திலிருந்து குடியேறிய மக்கள் சிங்களவர் என்ற வரையறைக்குள் வரவில்லை. தமிழர்கள் என்ற தனித்துவத்தோடு திகழ்ந்தனர்.
ஒரு கால கட்டத்தில் சிங்களவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதற்குச் சிங்களவர்கள் ஏற்றுக் கொண்ட புத்த மத கோட்பாடே அடிப்படையாகி விட்டது.
ஈழத்திலிருந்த தமிழர்கள் சைவ சமயத்தையும், வைணவத்தையும், இஸ்லாத்தையும், கிருத்துவத்தையும் கடைபிடித்த காரணத்தால், புத்த மதத்தை ஒப்புக் கொள்ளாத உறுதி இருந்தார்கள். அதனால் சிங்களவர்களாக கருதப் படவில்லை.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சிங்களவர்கள் ஒப்புக் கொண்ட புத்த மதம் இலங்கைக்கு வெளியே கடல் தாண்டி இந்தியத்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதியான மதம். இந்த புத்தமதம் இன்று சிங்களவர் மதமாகி மற்றைய இலங்கை வாழ் மக்களை அன்னியப்படுத்திப் பார்க்கத் தொடங்கியது.
இது மதங்களுக்கு நடுவே நடந்த போராட்டம் அல்ல. பூரணமான அரசியல் பொருளாதாரப் போரட்டம்தான்.
மதங்களும் இனங்களும் வெளிவடிவ கருவிகளாக இன்று ரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றன.
இந்திய இதிகாசம் ராமாயணம் கூட இலங்கைப் பகுதியை அரக்கப் பகுதி என்று அரசியல் நோக்கில்தான் அறிமுகப் படுத்தி இருக்கிறது. ஆனால் புத்த மதம் அந்த அரக்கப் பகுதியைச் சாந்தப் பகுதியாக்க இலங்கைக்குள் பிரவேசித்தது. வெற்றியும் கண்டது.
ஆனாலும் கால ஓட்ட வரலாற்றில் புத்த மதமே அதாவது சிங்கள இனமே ரத்த ஆயுதங்களை கரங்களில் ஏந்தி வீதிக்கு வந்து விபரீதங்களை நடத்தத் தொடங்கிவிட்டது. புத்தம் காணாமல் போய்விட்டது.
இந்தக் கடந்த கால பூகோள அரசியலை இந்த அளவில் நிறுத்திக் கொண்டு இன்றையப் பிரச்சனைக்கு வருவோம்.
2009 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்திருக்கக் கூடிய கொடூரமான யுத்தம், பேரினவாதம் இலங்கையில் நிகழ்த்தி முடித்த இன அழிப்பு அடையாளம்தான்.
தமிழினத்தின் மீது சிங்களப் பேரினத்தினர் கொடூரமான , கோரமான அழிவை நிலைப்படுத்தினார்கள். இந்திய அரசு இந்தக் கண்ணோட்டத்தோடு இதைப் பார்க்கத் தவறிவிட்டது என்று சொல்லுவது கூட அடிப்படை நியாயம் அற்றது. இதை அறிந்தே இந்திய அரசு சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவு தந்தது.
விடுதலைப் புலியினருக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் நடந்து கொண்டிருந்த நீண்ட நாள் போரை, மிகச் சாதுர்யத்தைக் கையாண்டு சிங்கள அரசு தமிழின அழிப்பை அங்கே நிகழ்த்தியது.
இந்திய நாட்டில் சென்னைக்குப் பக்கத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியத்தின் இளைய பிரதமர் மனித வெடிகுண்டால் வரலாறு மன்னிக்காத கொலையைச் சந்திக்க நேர்ந்தது.
இப்படுகொலை விடுதலைப் புலிகளின் கைங்கரியம் என்று உறுதிப்பட்ட பின்னர் இந்திய காங்கிரசு அரசு விடுதலைப் புலி அழிப்புகளை சிங்கள அரசு நிகழ்த்துவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணம் ஆகிவிட்டது.
விடுதலைப் புலி என்னும் பூதத்தை முன்னிறுத்தி இந்திய அரசிடம் மாபெரும் உதவிகளை வாங்கித் தமிழினத்தைக் கோரமாக சிங்கள ராஜபக்சேயின் கொடுங்கோல் அரசு முள்ளிவாய்க்காலின் ரத்தக் கரையாக வரலாறாக்கியது.
ஈழத்துத் தமிழர்களையெல்லாம் விடுதலைப் புலிகள் போல காங்கிரசுக்குக் காட்டி ஈழத்து அரசு தன் கைங்கரியத்தை நிறைவேற்றிக் கொண்டது.
இப்போது இந்தியாவில் காங்கிரசு, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமையில் இருக்கக்கூட அருகதையற்ற நிலையில் ஆட்சியில் உள்ள மோடி அரசிடம் கெஞ்சிப் பார்க்கிறது. நியாயம் கேட்டு முறையீடு செய்கிறது, சட்டத்தை நாடி நீதிக் கேட்கத் தொடங்குகிறது.
இந்த நிலை நிகழ்ந்துவிட்ட பின்னால் இலங்கையிலும் காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.
இன்றைக்கு மோடி அரசிடம் ஆதரவு பெற இன்னொரு வடிவத்தை ராஜபக்சே கைவசம் தூக்கிக் கொண்டார்.
அன்றைக்குத் தமிழர் அழிப்பை நிகழ்த்தும் பொழுது தமிழர்களை இரண்டாக்கி வரலாற்றுப் பிழையை உருவாக்கிக் காட்டினார்கள். தமிழர்கள் - தமிழ் நாட்டிலிருந்து குடியேறியவர்கள் இருகூறாக்கப் பட்டார்கள்.
தமிழ் பேசும் இந்து மதத்தினர் ஒரு பிரிவினர். தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு பிரிவினர். தமிழர்கள் என்ற அடைப்புக்குள் தமிழ் முஸ்லிம்கள் கருதப் படவில்லை.
தமிழர்கள், முஸ்லிம்கள் என்று இரண்டு படுத்தப்பட்டனர். இந்தத் துவேசம் இந்த இரு ஈழத்து தமிழர்களிடமும் ஆதரவு பெற்று இருந்தது என்பதை மறைக்கக் கூடாது. மறுக்கவும் முடியாது.
தமிழ் முஸ்லிம்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் இடையில் நடந்த சிறுசிறு பிரச்சனைகளை பூதாகரப் படுத்தி, தமிழின அழிப்பு இலங்கையில் நடக்கும் பொழுது, தமிழ் முஸ்லிம்கள் கொஞ்சம் கண்டு கொள்ளாத காட்சியாளர்களாக இருந்தார்கள்.
இது ராஜபக்சேக்கு மகத்தான ஒரு கொண்டாட்டமாக மாறியது.
தமிழின அழிப்பு நிறைவு பெற்று விட்டதாக ஓரளவுக்கு முடிவான பின்னர் சிங்களப் பேரினவாதம் அடுத்தத் திட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டது.
மீண்டும் ஒன்றை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் அழிப்பு என்னும் தோற்றத்தை முன்னிலைப் படுத்தி இந்தியத்தின் காங்கிரசு அரசுடைய முழு ஆதரவைத் தன் கைவசம் ராஜபக்சே அரசு எடுத்துக் கொண்டது.
இப்போது தமிழ் முஸ்லிம்கள் அழிப்பை இந்தியாவிலிருக்கும் மோடி அரசின் மனோபாவத்திற்கு ஏற்ப நிகழ்த்தத் தொடங்கிவிட்டது.
தமிழ் முஸ்லிம் இன அழிப்பு இப்பொழுது நடைபெறுகிறது. இதை இப்பொழுதுதான் நிகழ்த்துகிறார்கள் என்று கருதுவது பிழையானது.
சிங்களப் பேரினவாதம் , தமிழ் முஸ்லிம் இன அழிப்பை தொடங்கிய காலகட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1915 மே 28 ஆம் தினத்தன்றிலிருந்துதான்.
அந்த நேரத்தில் சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம்களை சிதைக்க நினைத்ததற்குப் பொருளாதாரப் பின்புலம் காரணமாக இருந்தது.
இலங்கையில் தமிழ் முஸ்லிம்களின் கடைகளும் சொத்துக்களும் அன்று சூரையாடப் பட்டன. பேரின மேலாதிக்க சிங்களவர்கள் தமிழின அழிப்பை முதல் முதல் தொடங்கியது தமிழ் முஸ்லிம்கள் மீதுதான்.
ஆனால் அன்றைய ஈழத் தமிழர்களின் தேசிய உணர்வு பெருக்கத்தின் காரணமாக இந்த அழிவைத் தொடர முடியாமல் சிங்கள அரசு ஒத்தி வைத்து விட்டது.
பிந்தைய காலகட்டத்தில் தமிழர்களை , தமிழர்கள் என்றும் , முஸ்லிம்கள் என்றும் பிரித்து வைத்த சூழ்ச்சியின் காரணத்தினால் இரண்டு விதமாகத் தமிழனத்தை அழிக்கத் திட்டம் தீட்டினர்.
தமிழன அழிப்பை காங்கிரசை வைத்து முடித்துக் கொண்டது. இப்பொழுது தமிழ் முஸ்லிம் அழிப்பை பாஜக அரசை வைத்து சாதித்துக் கொள்ள ராஜபக்சேயின் ராஜதந்திரம் செயல் படத் தொடங்கி விட்டது.
பொது பல சேனா என்னும் சிங்கள இயக்கம் இலங்கையில் ஊரூராக கூட்டங்கள் நிகழ்த்தி “இலங்கையானது புத்தரின் தேசம். இந்நாட்டில் உள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானது” என்ற கோஷத்தைப் பிரச்சாரம் செய்தார்கள்.
“இந்தியா என்பது இந்துத்துவாவிற்கு மட்டுமே உரித்தானது. இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்தியர்கள். மற்ற இந்தியாவில் உள்ள அனைவரும் அந்நியர்களே” இந்தக் கோஷம் இந்தியாவில் யாரால் எழுப்பப் பட்டது?
அவர்களே இந்தியாவில் இன்று ஆட்சி பீடத்தில் இருக்கிறார்கள். இலங்கையில் ஒலிக்கப்படும் கோஷமும் இந்தியாவில் முழங்கப்பட்டு வரும் கோஷமும் ஒன்று.
இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ் முஸ்லிம்களின் வணிகத் தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. தமிழ் முஸ்லிம்களில் முதியவர்கள், குழந்தைகள். பெண்கள், இளையவர்கள் சீரழிக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த நிகழ்வுக்கு முன்மாதிரியாக அயோத்தியில் பாபர் மஸ்ஜித் அழிப்பட்ட வரலாறு இருக்கிறது. மும்பையிலும், குஜராத்திலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் சீரழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதை நிகழ்த்தியவர்கள் யார்? அவர்கள்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இன்று இருக்கிறார்க்ள்.
இலங்கையில் 21 ஜுன் 2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந்தெரியாதவர்களால் ‘நோ லிமிட்’ என்னும் முன்னணி ஆடை விற்பனை நிலையம் தீயிட்டு முற்றுமாக கொளுத்தப்பட்டிருக்கிறது. இந்த நோ லிமிட் நிறுவனம் இலங்கையில் பல கிளைகளைக் கொண்ட பெரும் வணிக நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் உரிமையார் முஸ்லிம். ஆதாவது தமிழ் முஸ்லிம்களின் பொருளாதார அழிப்புக்கு ஒரு முன்னுரை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதற்கு முன்னுதாரணமாக குஜராத்தில் ஏற்கனவே பெஸ்ட் பேக்கரி அழித்தொழிக்கப்பட்டு கோரக் கொலையும் பெண்மைச் சீரழிவும் நிகழ்ந்திருக்கிறது.
இதற்கு யார் காரணம்.? அவர்கள்தாம் இன்று இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
இலங்கையில் ஹலால் சர்ட்டிபிகெட் கொடுப்பதை உடனே தடை செய்ய வேண்டும். ( ஆடு மாடு அறுப்பதை அல்ல. அவற்றை ஹலால் முறையில் அறுப்பதைத் தடை செய்ய வேண்டும்) என்ற கோஷம் சிங்களப் பேரினவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.
இதற்கு ஏற்கனவே ஒரு முன் வடிவமாகப் பொதுச் சிவில் சட்டம் இந்தியாவிற்கு வேண்டும் என்ற கோஷம் யாரால் இங்கே முன்வைக்கப் படுகிறது? அவர்கள்தான் இன்று இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.
இப்படி இன்னும் நிறைய ஒப்பிட்டு பார்க்க முடியும். இந்தப் பதிவின் ஆழமான நோக்கத்தை இங்கே முன்வைக்கிறேன்.
முஸ்லிம் மத ஆதரவாக, அல்லது இஸ்லாமிய மார்க்க வெறித்தனத்தோடு இதைப் பதிவு செய்வதாக எவரும் திசை திருப்பிச் சிந்திக்கக் கூடாது.
ஒரு இன அழிவை எப்படி எல்லாம் காரணம் காட்டி பேரினவாதம் அழிக்க முற்படும் என்கின்ற வரலாற்று நிகழ்வுகளைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.
யூத இனத்தை ஜெர்மனியில் இல்லாமல் ஆக்க எத்தனைச் செயல்பாடுகளைப் பூரணமான நியாயம் மாதிரி முன்னெடுத்து ஹிட்லர் அழித்தொழித்தானோ அதே காரணங்களும் நடைமுறைகளும் இன்று அரசியலாக்கப்படுகின்றன என்பதுதான் என் வாதம்.
விடுதலைப் புலிகளை அடையாளம் காட்டி, இந்தியத்தின் காங்கிரசு ஆட்சி காலத்தில், தமிழினம் அழிக்கப் பட்டது. இப்பொழுது இஸ்லாமிய அழிப்பு என்ற வடிவத்தைக் கையிலெடுத்து தமிழ் இனம் அழிக்கப் படுகிறது.
அன்று காங்கிரசு ராஜபக்சே அரசை ஆதரித்த மாதிரி, இன்றைய பாஜக அரசும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவுகளைத் தரத்தான் செய்யும்.
ஆந்திராவில் 1000 ஏக்கர் நிலத்தில் இலங்கை ராஜபக்சே அரசு வணிகம் செய்யத் தயாராகி விட்டது. முப்பதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு என்ற காரணம் முன்வைக்கப் படுகிறது.
இது மோடி அரசின் அந்தரங்க ஆதரவு.
இந்தியத்தில் இந்துப் பெருங்குடி மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இன்ன பிற சிறுபான்மை மதத்தவர்களுக்கும் நல்லுறவும் இணக்கமான பிடிப்பும் உறுதியாகவும் மேன்மையாகவும் நிச்சயம் இருக்கிறது. ஆனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் பிற கிளை அமைப்புகளும் இந்துத்துவா என்னும் வெறி உணர்வை விதைத்து ஒரு இன அழிப்பை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்வினையாக சில அமைப்புகள் இஸ்லாமிய வெறியூட்டலை முஸ்லிம்கள் மத்தியில் தூவி வருகின்றனர்.
அதே போல் இலங்கையில் பெரும்பான்மையான சிங்களவர்களும் பௌத்தர்களும் தமிழர்களும் இணக்கமானவர்களாகவும், அணுக்கமானவர்களாகவும் வாழ்கின்றனர். பொது பல சேனா போன்ற அமைப்புகள் பௌத்த வெறியூட்டி இன அழிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இதன் எதிர்வினையாக தமிழின வெறியூட்டல் இலங்கையில் நடைமுறை பட்டன.
குறிப்பாக ராஜபக்சே முந்தைய ஹிட்லரை முறியடிக்கும் சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்ட்டிருக்கிறார்.
இந்தியாவில் எந்த அரசுகளாக இருந்தாலும் தனக்கு ஆதரவு தரக் கூடிய நடவடிக்கைகளைத் தன் கைவசம் ராஜபக்சே எடுத்துக் கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment