இந்தி அறிஞர் கோவிந்தராஜன் இந்து தமிழ் நாளிதழுக்கு ஒரு பேட்டி தந்திருக்கிறார்.
இந்தக் கோவிந்தராஜன் நம் பக்கத்துத் தமிழர்.
அலகாபாத்தில் 1976 இல் உருவாக்கப்பட்ட அமைப்பு, “பாஷா சங்கம்”. தமிழர் கோவிந்தராஜன் இந்தச் சங்கத்திற்கு முதல் முறையாக பொதுச் செயலாளராக அமர்த்தப் பட்டுள்ளார்.
சங்க இலக்கியங்களில் சில, இந்தியில் மொழி பெயர்க்க ஒரு வகை காரணமாகவும் இருந்திருக்கிறார். இந்தச் செயலுக்காக அவருக்குப் பாராட்டு வழங்க வேண்டும்.
ஆனால் இந்தியை அவர் ஆதரித்து ஏற்றுக் கொள்வதற்கான காரணம் ஆழமான விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
“தமிழறிந்தவர்கள் தமிழனாகத்தான் இருக்க முடியும். இந்தியைக் கற்றுக் கொண்டால் இந்தியனாகவும் உயர முடியும்” இதுதான் கோவிந்தராஜன், தேசியவாதத்திற்கு இலக்கணம் வகுக்கும் பாணி.
மலையாளம் மட்டுமே தெரிந்த மலையாளப் பாமரன் ஒருவன், இந்தியனாக முடியாது. கன்னடம் மட்டுமே தெரிந்த கன்னடப் பாமரன் ஒருவன் இந்தியனாக வாய்ப்பில்லாமல் ஆகிவிடுகிறான்.
தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா போன்ற பிற இந்திய மொழிகள் மட்டுமே தெரிந்தவனும், இந்தியனாகும் தேசிய வாய்ப்பைத் தவற விட்டவன் ஆகிறான்.
ஆதாவது, இந்திய எல்லைக்குள் ஒருவன் தேசிய மனிதனாக இருக்க வேண்டுமானால் அவன் இந்தி கற்றவனாக இருக்க வேண்டும். இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றைத் தாய்மொழியாகப் பெற்றிருந்தால், அதுவும் தாய்மொழி மட்டுமே அறிந்தவனாக அவன் இருந்தால் இந்தியனாக முடியாது.
இதுதான் ஆதிக்கத் திணிப்பு என்பது. எந்த மொழியும் தாழ்ந்தது இல்லை. குறிப்பாக இந்திக்கு நான் என்றும் எதிராளி அல்லன். ஆனால் இந்திதான் என் தேசியத் தகுதியைத் தீர்மானிக்கும் என்று என் பிடரி பிடித்து கட்டாயப் படுத்தினால் அந்த இந்தியை என்னுடைய வெறுப்பு மொழியாக மாற்றிவிடக் கூடிய கட்டாயம் எனக்கு ஏற்படுகிறது.
இந்தியப் பிரதமர் மோடி, குஜராத்திக்காரர். அவர் தாய்மொழி குஜராத்தி. ஆனால் அவர் , அரசியல் காரணமாக அவரைச் சந்திக்க வரும் வெளிநாட்டவர்களிடம் கூட, இந்தியில் பேசுகிறார். தாய்மொழியில் பேசி குஜராத்தியாகத் தாழ்ந்து விடாமல், இந்தியில் பேசி இந்தியனாக உயர்ந்து நிமிர்ந்து நிற்கிறார். இதுதான் இந்தியனாகும் அடிப்படைத் தகுதி என்பதைச் சொல்லாமல் சொல்லி வைக்கிறார்.
இப்படிச் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
இந்தி, மொழியென்னும் அந்தஸ்த்தை விடவும் இந்துத்துவா என்கிற ஆர்.எஸ்.எஸ் இன் அடையாளமாக மாற்றப் படுகிறது.
‘இந்துத்துவா என்ற கோட்பாடே இந்தியா’ என்கின்ற கோஷத்தை இது வலிய வந்து முன்னிலைப் படுத்துகிறது.
தமிழர் கோவிந்தராஜன், இந்திக் கற்றுக் கொண்டதனால் இந்தியனாக மாறிவிடுகிறார். இதுதான் உயர்வான ஒரு நிலை என மற்றவருக்கும் அறிவுறுத்துகிறார்.
மீண்டும் இந்தி, இந்துத்துவா, இந்தியா என்கின்ற வரட்டுத்தனமான கட்டாயத் திணிப்பு முன்வைக்கப் படுகிறதோ?
No comments:
Post a Comment