“டேய் வேட்டி கட்டிய பயலயெல்லாம் கீழே உக்கார வைடா. பேண்ட்,கோட் போட்டவனை எல்லாம் சேர்ல உக்கார வைடா!”
இந்த வரிகள் நடிகவேள் எம்.ஆர்.ராதாவால் ரத்தக் கண்ணீர் படத்தில் சொல்லப்பட்ட வசனம். எம்.ஆர்.ராதா ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் இன்றையச் சட்டவிதி நடைமுறையை நையாண்டி செய்து இருக்கிறார்.
வேட்டி என்பது கலாச்சாரச் சின்னம். பண்பாட்டு வெளிப்பாடு, தனிமனித சுதந்திரம், இதைத் தடுப்பது தவறு என்றெல்லாம் இன்றையச் சட்டமன்றத்தில்கூட விளக்கமும் எதிர்ப்பும் தரப்பட்டிருக்கிறது.
கிரிக்கெட் கிளப்பில், அவர்களுக்குள்ள உரிமையில், வேட்டி கட்டிய மனிதர்களுக்குக் கிளப்புக்குள் இடமில்லை என்று விதிவகுத்துக் கொண்டார்கள். இந்த விதியால் இன்றைக்குப் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள்.
கிரிக்கெட் கிளப்புக்குள் வேட்டி அணிந்து வந்த இவர்களை கிளப்பின் சட்டவிதியைக் காட்டி உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்.
சட்டத்தின் காவலர்கள், கிளப்பின் இந்த சட்டவிதிக்கு மரியாதைக் கொடுத்து திரும்ப வந்துவிட்டார்கள்.
ஆனால் இந்தச் செயல், சட்டத்துறைக்கே நிகழ்த்தப்பட்ட ஒரு கொடூரமான அவச்செயல்.
வேட்டி, கலாச்சார சின்னம், பண்பாட்டு அடையாளம் என்று மட்டும் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மனிதக் கலாச்சாரத்தின் முதல் கலாச்சாரம் அம்மண நிலைதான். அடுத்தடுத்த வளர்ச்சியில் இலை, தளை ஆடைதான் கலாச்சார சின்னம். அதற்கும் அடுத்தடுத்த நிலையில் விலங்குத் தோல். அதற்கும் அடுத்த நிலையில் துணி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. அதிலும் வேட்டி அல்ல, கோமணம்தான். அதற்குப் பின் வேட்டி வந்தது.
இந்த அடிப்படையில் பார்த்தால் ஆடைக் கலாச்சாரம் என்பது ஒரு நிரந்திர அடையாளம் அல்ல. காலத்துக்கு காலம் உருமாற்றம் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய ஒன்றுதான்.
வேட்டிக்கும் இந்த வரலாறு பொருந்தும்.
கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்று இருக்கும் ஆடை அவமதிப்பு நிகழ்ச்சியை ஒரு கலாச்சார அவமதிப்பு என்று சுருக்கிப் பார்க்க வேண்டாம்.
அதையும் தாண்டி மிகவும் கேவலமான , கொடூரமான தீண்டாமை அவமதிப்பு இந்த நிகழ்வில் இருக்கிறது.
வேட்டி என்ற ஒரு ஆடையை எதனால் கிரிக்கெட் கிளப் தவிர்த்து இருக்கிறது என்ற காரணம் ஆராயப்பட வேண்டும்.
பொதுவாக மேல்தட்டு வர்க்கம், மேட்டிமைச் சமுதாயம், செல்வப் பிரதிநிதிகள், கற்று அறிந்தவர்கள் வேட்டியை ஒரு அவமானச் சின்னமாகப் புறமொதுக்கி விட்டார்கள்.
வேட்டி என்பது பாமரர்களின், பட்டிக்காட்டான்களின், தாழ்நிலைச் சமுதாயத்தவரின் அடையாளமாக மாறிவிட்டதாகச் சமூக நிலையின் எண்ணப் பிரதிபலிப்பு இருக்கிறது.
இந்த உண்மையின் அடிப்படையில்தான் வேட்டிக்குக் கீழ்நிலைப் படித்தரம் வந்து இருக்கிறது.
கிரிக்கெட் என்பது மேல்தர வர்க்கத்தின் விளையாட்டு. அவர்களுக்குரிய கிளப்பில் உயர் வகுப்பினர்தான் பங்கு கொள்ள வேண்டும். உயர் வகுப்பினரின் அடையாளம், கலாச்சாரம் மேலை நாட்டு உடை அலங்காரம் என்று தீர்மானிக்கப் பட்டுவிட்டது.
அதாவது அவர்கள் மேலானவர்கள். உயர் வகுப்பினர்கள். வேட்டி கட்டியவர்கள் தாழ்வானவர்கள். கீழ்தரமானவர்கள் என்ற சாதீய குணம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
இந்தச் செயல் தீண்டாமைக் குற்றத்திற்குரிய தகுதி பெற்று இருக்கிறது. இந்தத் தீண்டாமை மேல் வர்க்க அறிவு ஜீவிகளான உயர்ந்தவர்களையே வேட்டி கட்டிய காரணத்தினால் கீழ்ச்சாதியாக மாற்றிவிட்ட்து.
தீண்டாமைக் குற்றம் நீதிமனிதர்களையே தீண்டி இருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டின் போது தேசியக் கொடியை உடலில் கண்ட இடத்திலும் வரைந்து கொண்டு தேசப் பற்றைக் காட்டும் கோமாளித்தனமான முட்டாள்களை ரசிகப் பெருமக்கள் எனப் பிதற்றித் திரியும் கிரிக்கெட் வாரியம், வேட்டி அணிதலைக் கொச்சத்தனமானது என்று குறிக்கிற தைரியம் எங்கிருந்து வந்தது? தேசியக் கொடி அதன் தரம் தாழ்ந்து அவமானப் படுத்தப் பட்டிருக்கிறது. எந்த நீதிமன்றமும் இதுபற்றி இதுவரை கருத்துக் கூறியதில்லை.
கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் குத்தாட்டத்தில் தேசியக் கொடிக்குள்ள சட்டவிதி பேணப் பட்டிருக்கிறதா? ஆனால் கிரிக்கெட் கிளப்பின் சட்டவிதி நீதிவான்களுக்கே இப்பொழுது நடைமுறையாக்கப்பட்டு இருக்கிறது.
பதினொரு முட்டாள்களின் ஆட்டத்தைப் பல ஆயிரம் மக்கள் ரசிக்கும் முட்டாள்தனத்திற்குப் பேத்தனமான ஆதரவு தந்ததின் காரணத்தால் இந்தப் பித்தாலாட்டங்கள் நடைமுறைப்படுகின்றன.
இந்த விளையாட்டை அரசியல் மேதைகளும் கல்வி மகான்களும் தங்கள் வேலையைப் புறம் ஒதுக்கிவிட்டு வந்து ரசித்த வீணத்தனத்தின் விபரீதம் இப்பொழுது விளையாடி இருக்கிறது.
இந்த வாரியத்தின் தலைவராக மத்திய அமைச்சர் பேன்ற மாண்புமிகுகள் இருக்கின்ற மோசமான விளைவும் சூதாட்டமாக மாறி மக்களை ஏளனப் படுத்துகிறது. தனிச்சட்டம் அமைத்து தீண்டாமையை முன்னிலைப் படுத்துகிறது.
நீதிமன்றங்கள், ஆட்சி அதிகாரங்கள் விழிப்படைய வேண்டும். இந்த வாரியத்திற்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள், மானியங்கள், ஒதுக்கப்படும் இடங்கள் அனைத்தும் மக்களின் வரிப் பணத்தினுடைய வெளிவடிவம்தான்.
இதற்கு மேலும் பண்பாடு, கலாச்சாரம் என்று ஒரு குறுகிய எல்லைக்குள் இதைக் கொண்டு போய் நிறுத்தாமல் இது ஒரு ஒட்டு மொத்த சமூக அவலம் என்ற தீர்மானத்தில் இறங்கி மக்கள் சக்தி முன்னெழுந்து வரவேண்டும்.
தேசத்தந்தை காந்தியடிகள் இன்றைய கிரிக்கெட் கிளப்புக்குள் போக முடியாது. ஏனென்றால் வேட்டியைத் தவிர வேறு ஆடைகளை அவர் முற்றிலுமாக துறந்தவர்.
இதுதான் தக்க தருணம். இதுதான் நேர்மைக்கு நாம் உறுதி சேர்க்க வேண்டிய உன்னத வாய்ப்புக் காலம்.
No comments:
Post a Comment