இந்த அனுபவம் வந்திருக்க வேண்டாம்..!
எங்கள் சிதம்பரமும் அண்ணாமலை நகரும் , இன்றிருக்கும் சிதம்பரமும் அண்ணாமலை நகரும் அல்ல. இன்றிருக்கும் சிதம்பரத்தை எங்கள் விழிகள் விழிப்பார்வையில் இருந்து ஏனோ தெரியவில்லை வாந்தி எடுத்து விடுகின்றன.
சிதம்பரம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் என் விழிகளுக்குள் இன்றையச் சிதம்பரம், ஏதோ ஒரு பொருள் விழுந்து கிடக்கும் உறுத்தலாகத்தான் தெரிகிறது. அது வளர்ச்சியா? அல்லது அதிக பட்ச ஒன்றின் பருமனா?
அன்றைய சிதம்பரத்தையும் அண்ணாமலை நகரையும் இணைக்கும் பாலமாக பாலமான் பாலம் இருந்தது. எங்களுக்கு அது ரவி வர்மா ஓவியத்தை விட ஒரு உயர்ந்தக் காட்சிப் பொருளாக நிலைத்து இருந்தது.
அந்தப் பாலம் இன்று இல்லை. அது மேம்பாலமாக விரிந்து பரந்து இருக்கிறது. ஆனாலும் எங்கள் பாலமானைத் தொலைத்து விட்டோம் என்ற வேதனை இன்னும் நீங்கவில்லை.
இந்தப் பாலமான் பாலம் பல நூறு கதைகளைச் சொல்லும்.
1970 களில் நானும் மாப்பிள்ளை கலைமணி, தம்பி ராமானுஜம், தோழன் அழகு பாண்டியன் இந்தப் பாலத்தைக் காலை மாலையில் கடந்து பல்கலைக் கழகம் செல்லும் சுவாரசியமான வழிபோக்கர்களில் உள்ளவர்களாக இருந்தோம்.
எங்கள் பேராசிரியர்கள் இந்த வழியில்தான் கடந்து போவார்கள். பல்கலைக் கழக மாணவ மாணவியர்கள் இந்தப் பாதையில்தான் தினம் நடமாடித் திரிவார்கள்.
நானும், நாங்களும் மூன்றாமாண்டு புலவர் படித்துக் கொண்டிருந்த காலம் பாலமான் பாலத்தின் ஓரம் எங்கள் பேராசிரியர் என்.வீ.ஜெயராமன் ஐயா புத்தகக் கடை ஒன்று உண்டு. அதில் நானும் கலைமணியும் அமர்ந்திருந்தோம். பேராசிரியர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.
பாலமான் பாலத்தைக் கடந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.
அதில் ஒரு மாணவி அநேகமாக முதலாம் ஆண்டு ஏதாவது ஒரு துறையில் சேர்ந்திருக்க வேண்டும். அவ்வளவு சிறிய வயது.
பேராசிரியர் என்.வீ.ஜெ. எங்களிடம் அந்த மாணவியைச் சுட்டிக் காட்டினார். ஒரு பேராசிரியர் சுட்டிக் காட்டும் அளவுக்கு அந்த மாணவியிடம் என்ன பிரபல்யம் இருந்தது?
நாங்களும் பார்த்தோம். அசந்து விட்டோம்.
அந்த மாணவிக்கு தலைமுடி கிட்டத்தட்ட பாதத்திற்கு ஓரடி மேல்வரை நீண்டு வளர்ந்து தொங்கியது. இவ்வளவு அடர்த்தியான நீளமான முடியை நான் பார்த்ததில்லை என்று சொன்னேன். பேராசிரியரும் அந்த வியப்பிலே எனக்கும் இதுதான் அனுபவம் என்றார்.
மாப்பிள்ளை கலைமணி அற்புதமான ஓவியன். மறுநாள் அந்தப் பெண்ணின் தலைமுடியோடு உருவத்தை வரைந்து வந்திருந்தான்.
எங்களுடைய பேராசிரியர் உளூந்தூர்ப் பேட்டை சண்முகத்திடம் இந்த ஓவியத்தைக் காட்டினோம். அவரும் கலைமணியின் ஓவியத்தை பார்த்துவிட்டு நானும் இந்த பெண்பிள்ளையை பார்க்க வேண்டுமே என்றார்.
இப்படி எல்லார் விழிகளுக்குள்ளும் அவள் கூந்தல் அழகு குடியேறிவிட்டது. நிச்சயமாகவும் சத்தியமாகவும் எங்களில் எவருக்கும் தவறுதலான ஆபாச அறுவறுப்பு உணர்வுகள் ஏற்படவில்லை. கருமையான அருவி ஒன்று ஒழுகிக் கிடப்பது போன்ற ஒரு வசீகர பிரமிப்புதான் ஏற்பட்டது.
இரண்டு தினங்கள் கடந்தன. தமிழ்த்துறை புலவர் முதலாம் ஆண்டு வகுப்பு அன்றுதான் ஆரம்பித்தது. மாணவ மாணவியர்கள் புதிதாக வந்து கொண்டிருந்தனர்.
பாலமான் பாலத்தில் பார்த்த அந்த இளம் மாணவி புலவர் முதலாமாண்டு வகுப்பறைக்குள் அதே கோலத்தில் நுழைந்தாள். எங்கள் துறை சார்ந்த மாணவி என்ற பெருமிதம் எங்களுக்கு இருந்தது.
சில மாதங்கள் கடந்தன. தமிழ்த்துறை மாணவர்கள், மாணவியர்கள் எங்களை அந்தக் காலகட்டத்தில் தங்களில் பிரபல்யமானவர்களாக அறிந்திருந்தனர்.
முதலாமாண்டு புலவர் மாணவன் ராதாவும், ஆசீர்வாதமும், உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் ஐயா அவர்களின் ரசிகனானார்கள். எங்கள் கூட்டத்தில் அவர்களுக்கும் பங்களிக்கப் பட்டது.
இந்த நட்பு ஆழமாக வலுப் பெற்றது.
அவர்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அந்த பாலமான் மாணவியும் எங்கள் வட்டத்திற்குள் ஒருவராக இருந்தார்.
அந்த மாணவி சிதம்பரம் பஸ் ஸ்டான்டிற்கு பக்கத்தில் உள்ள கல்யான லாட்ஜை அடுத்து இருக்கும் வ.உ.சி தெருவில் குடி இருந்தவள். அதே தெருவில்தான் எங்கள் வட்டத்து மாப்பிள்ளை இஞ்சினியர் செல்வம் வீடும் இருந்தது.
செல்வம் வீட்டிற்கு எதிர் வரிசையில் பதினைந்து வீடு தள்ளி பதினாறாவது வீடு அவள் வீடு.
நண்பன் ராதா அவள் வகுப்பு தோழன். அவளை ஒரு கட்டத்தில் அவன் விரும்பினான். அவளிடமிருந்தும் ஆதரவு சமிக்கினை அவனுக்குக் கிடைத்திருந்தது.
நண்பன் ராதா செஞ்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவன். அந்த இளம் மாணவி வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்தவள்.
இந்தக் காதலுக்கு அந்தக் காலகட்டத்திலும் ஆதரவு நிச்சயமாக கிடையாது.
உளுந்தூர்ப்பேட்டையார் வீட்டு மாடி வெட்டவெளியில் நாங்கள் எல்லாம் அமர்ந்து இது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம். பேட்டையார் இந்த விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
முதலாண்டுதானே தொடங்கி இருக்கிறது. இரண்டாமாண்டில் இது பற்றி சிந்திப்போம் என்று சொன்னார்.
இரண்டாமாண்டில் ஹாஸ்டலில் தங்கி இருந்த நண்பன் ராதா ஒர் இரவில் கோரமாகத் தாக்கப் பட்டான். கைவிரல் ஆணியால் குத்தப் பட்டு கிழிபட்டு இருந்தது. உடல் முழுவதும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனை அப்படியே தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு மாப்பிள்ளை கலைமணி அண்ணாமலை நகர் மருத்துவமனைக்கு ஓடினான்.
முதல் சிகிச்சை நடந்தது. ஆனால் ஆபத்துக் கட்டம் மாறவில்லை. கடலூர் அரசு பொது மருத்துவனைக்கு நண்பன் ராதா மாற்றப் பட்டான். இரு தினங்களில் ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி தேறிவிட்டான்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் அந்த இளம் மாணவியும் ராதாவிடம் பேசுவதில்லை. ராதாவும் அவளிடம் பேசுவதில்லை. ஏதோ ஒன்று ரத்தக் களரியாக வெளிப்பட்டு இருக்கிறது என்று இருவரும் புரிந்துக் கொண்டனர்.
நாங்களும் அண்ணாமலைத் தமிழ்த்துறையை முடித்துக் கொண்டு கல்வித் துறையிலும் ஓராண்டு கற்று வெளியேறி விட்டோம்.
உளுந்தூர்ப் பேட்டை சண்முகம் ஐயா அவர்கள் சிதம்பரத்தை விட்டு சென்னைக்குக் குடி மாறிவிட்டார். கலைமணி , நான் சென்னைக் குடிவாசிகளாக அவருடன் மாறிக் கொண்டோம்.
மூன்றாண்டுகள் கழிந்தன. சிதம்பரம் வ.உ.சி தெருவில் இருந்த மாப்பிள்ளை செல்வம் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அந்தப் பாலமான் மாணவி நினைவுக்கு வந்தாள். செல்வத்திடம் இது பற்றி கேட்டோம். செல்வம் சொன்னது எங்கள் நெஞ்சத் திரையையே கிழித்தது.
அதே தெருவைச் சார்ந்த தி.மு.கழக பிரதிநிதி மாயா மச்சேந்திரன் வீடும் இருந்தது. இவர் சிதம்பரத்தையே அதிர வைக்கும் ஒரு பெரிய கேடி. இவரின் தம்பி அந்த மாணவியை இரண்டாண்டுகளுக்கு முன் அவளுடைய அனுமதியோடு கடத்திச் சென்று திருமணம் செய்திருந்தானாம். அதோடு அவள் படிப்பு முடிந்தது.
அடுத்த ஓராண்டில் அவளையும் ஒரு கைக்குழந்தையுடன் சேர்த்து விரட்டி விட்டானாம். அவளது தாய் வீட்டாரும் அவளைச் சேர்க்கவில்லை. அவள் எங்கோ சென்று விட்டாள் எனச் செல்வம் சொன்னான்.
இந்தச் செய்தி எங்களை அதிரத்தான் வைத்தது. எங்கள் வீட்டு பெண்களில் யாருக்கோ ஒருத்திக்கு இப்படி நடந்துவிட்டது போன்ற ஒரு மாயத் தழும்பு இப்பொழுதும் எங்களிடம் இருக்கிறது.
அடுத்து ஒரு சில மாதங்கள் கழித்து கடலூரிலிருந்து சிதம்பரத்திற்குக் காலை நேரப் பேசஞ்சர் ரயிலில் நான், கலைமணி, ராமானுஜம், சிவக்குமார், நாகலிங்கம் வந்து கொண்டிருந்தோம்.
ஓடிக் கொண்டிருந்த ரயிலில் எலும்பும் தோலுமாக ஒரு கைக் குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு அதை விட எலும்பும் தோலுமாக ஒரு அம்மா பிச்சைக் கேட்டுக் கொண்டு வந்தாள். எங்களைப் பார்த்தவுடன் ஓவென்று அழுதுவிட்டாள். எங்களுக்கும் பொறி கலங்கிப் போனது.
அதே இளம் மாணவி. இன்று கிழப் பிச்சைக்காரியாக யாசகம் கேட்கிறாள். மாப்பிள்ளை கலைமணி அவள் தோளில் இருந்த கைக்குழந்தையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டான். அவளை அப்படியே அமரச் சொன்னோம். நாங்கள் அவள் கதை எதையும் கேட்கவில்லை. அவளும் சொல்லத் தயாரில்லை.
பேசஞ்சர் ரயில் அது போக்கிற்கு கூவிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. என் பையில் இருந்து 100 ரூபாயை எடுத்து அந்தக் குழந்தை கையில் கொடுத்தேன். நண்பர்களும் அவர்கள் பங்குக்குக் கொடுத்தார்கள். எங்களுக்கு எதுவுமே தோன்றவில்லை.
நாங்கள் எல்லோரும் அவளின் நோஞ்சான் குழந்தையை அள்ளி எடுத்து முத்தமிட்டு அவளிடமே கொடுத்தோம்.
ஒரு ரவி வர்மா ஓவியம் நான்கைந்து ஆண்டுகளுக்குள் இவ்வளவு கேவலமாகவா சாயம் வெளுத்து கிழிந்து தொங்கும்?
இன்று (ஜூலை 5) அதிகாலை ஒரு கனவுத் தோற்றம் எனக்கு. அந்தப் பெண்ணை நான் பார்த்தேன். நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன. அந்த வலி இன்னும் அப்படியே என்னில் தெரிந்தது.
நண்பன் ராதா என்ன ஆனான்? என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.
நண்பன் ராதாவை நாங்களெல்லாம் கடைசியாகப் பார்த்தது அவன் கல்யாண தினத்தன்றுதான். செஞ்சிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மணல் பரந்து கிடக்கும் பகுதியில் ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயிலில் வைத்துதான் அவனுக்குத் திருமணம். அங்கே தங்குவதற்கு இடம் கிடையாது. மணல் வெளியில்தான் படுத்துக் கிடந்தோம். அதிகாலையில் திருமணம். ராதாவின் மணத்தோழர்கள் நாங்கள்.
திருமணச் சடங்கு முடிந்து மணமகனும் மணமகளும் ஒருவர் கைவிரலை ஒருவர் கோர்த்துக் கொண்டு கோயில் பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும். மணமகன் நண்பன் மணமகன் கையைப் பிடித்து முன் செல்ல வேண்டும். இது தாழ்த்தப் பட்டோரின் திருமணச் சடங்கில் ஒன்று.
மணமகன் கையைப் பிடித்து முன் செல்லும் நண்பனாக என்னை அவன் தேர்ந்தெடுத்து விட்டான். நான் முன்னே செல்ல மணமகனும் மணமகளும் பின்னே வந்தனர். (இங்கே இஸ்லாமியச் சட்டங்களை தயவு செய்து கொண்டு வந்து பொருத்திப் பார்க்க வேண்டாம்).
எனக்கு அந்தக் கோயில் மீது நம்பிக்கைக் கிடையாது. நண்பன் ராதாவுக்கும் நம்பிக்கை கிடையாது. ஆனால் அது திருமணச் சடங்கு. நடந்து நிறைவேறி விட்டது.
நாற்பது, நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி இது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் அழகு பாண்டியன் ராதாவைக் கண்டுபிடித்தான்.
மாப்பிள்ளை கலைமணியின் இளைய மகன் திருமணத்தன்று அழகு பாண்டியன் ராதாவை அழைத்துக் கொண்டு சிதம்பரம் வந்தான்.
எங்களுக்கெல்லாம் உள்ளபடியே பேரதிர்ச்சியாக இருந்தது. இருபத்து நான்கு மணி நேரமும் குடித்து சீரழிந்து போன ராதா எங்கள் முன் தள்ளாடிக் கொண்டிருந்தான். அவன் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டானாம்.
அவனைப் பார்த்தவுடன் கலைமணி சொன்னான். “அண்ணாமலை ஹாஸ்டலில் அடிபட்ட அன்றே இவன் செத்து இருக்க வேண்டும். இவன் பிழைத்தது எதற்காகவும் அல்ல. இன்று நம்மை மனத்தளவில் சாகடிக்கத்தான்.”
கலைமணியின் இந்த வார்த்தை எங்களுக்குப் பூரண சம்மதமாகத்தான் பட்டது.
No comments:
Post a Comment