Saturday, July 26, 2014

இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்..!


சென்ற வாரம் டெல்லியில் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசுக்குரிய சதன் இல்லத்தில் அம்மாநிலத்தின் எம்.பி க்களான 11 சிவசேனா எம்.பி க்களுக்கு அம்மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் பரிமாறப்படவில்லை.

இதனைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா அமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மக்கள் பிரதிநிதிகள் 11 பேருக்கும் கோபம் கொப்பளித்து விட்டது.

கோபத்தின் உச்சத்தில் நின்ற மக்கள் பிரதிநிதிகள் 11 பேரும் செயல்பாட்டில் இறங்கினர்.

இந்த உணவுகளை பரிமாறியது ஐ.ஆர்.டி.சி என்னும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளரை பிடித்துப், பலவந்தப்படுத்தி அவரின் வாய் இதழைப் பிதுக்கித் திறந்து அங்கு சமைத்து வைக்கப்பட்டிருந்த உணவை அந்த மேற்பார்வையாளரின் வாய்க்குள் திணித்து விழுங்கச் செய்ய மக்கள் பிரதிநிதிகள் 11 பேரும் வன்முறையில் ஈடுபட்டு உள்ளனர்.

மக்கள் பிரதிநிதிகளின் இந்த நடைமுறை வெளிப்படையான வன்முறையின் தீவிர வடிவம்.

உயர்ந்த பதவி வகிக்கின்ற காரணத்தால் எந்த நிர்பந்தத்தையும் யார் மீதும் திணிக்கலாம் என்ற நியாயம் இன்று முன்வைக்கப்படுகிறது.

இதில் முக்கியமான ஒரு செய்தி. அந்த உணவு நிறுவனத்தின் மேலாளர் அர்ஷத் சுபைர் என்கின்ற முஸ்லிம். இந்த நபரும் ரமலான் மாதத்தினுடைய நோன்பை மேற்கொண்டிருக்கக் கூடியவர்.

அந்த நோன்பை முறிக்க வன்முறை பாதையில் மக்கள் பிரதிநிதிகள் பகிரங்கமாக முயற்சித்து இருக்கின்றனர்.

பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததற்குப் பின்னால் அந்த மக்கள் பிரதிநிதிகள் கொஞ்சூண்டுசாந்தம் அடைந்து பதில் தருகிறார்கள்.

மேற்பார்வையாளர் முஸ்லிம் என்று எங்களுக்குத் தெரியாது. அவர் சமைத்த உணவை அவரே சாப்பிடட்டும் என்றுதான் இப்படிச் செய்தோம். இதை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி அரசுக்குப் பிரச்சனைகளை உண்டு பண்ணக் கூடாது

இது அந்த சிவசேனாகாரர்களின் பதில் மொழி.

அந்த உணவு மேலாளர் முஸ்லிமாக இல்லாமல் கூட இருக்கட்டும். அந்த நபரைப் பிடித்து நிறுத்தி வாயைப் பிதுக்கி உணவைத் திணித்த ஒரு செயல் எவ்வளவு அற்புதமான ஒரு நடைமுறை? அதுவும் மக்கள் பிரதிநிதிகளின் நடைமுறை பண்பாட்டு அழகு?

நாடாளுமன்றத்தில் பிரச்சனை அமளிதுமளியாகும் பொழுது அமைச்சர் வெங்கையா நாயுடு, “இது உணர்ச்சி பூர்வமான பிரச்சனை இதனைக் கவனமாகக் கையாள வேண்டும்எனப் பதில் தந்திருக்கிறார்.

இதுதான் உண்மை. ஒரு உணர்ச்சிப் பூர்வத்தை உண்டாக்கி விடுவதுதான் சிவசேனாவின் மக்கள் பிரதிநிதிகளின் ராஜதந்திரம்.

மக்கள் பிரதிநிதிகள் இப்படி ஒரு செயலை ரமலான் மாதத்தில் தேர்ந்தெடுத்ததற்கு உள் நோக்கம் நிச்சயம் உண்டு. அதுவும் ஒரு முஸ்லிம் பணியாளரின் வாய்க்குள் உணவைத் திணித்து அவர் மேற்கொண்டிருக்கும் நோன்பை முறிக்கச் செய்வதில் ஒரு அர்த்த நோக்கமிருக்கிறது.

இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் பொழுது நாடாளுமன்ற அவையில் தெற்கு டெல்லி மக்கள் பிரதிநிதியான பாஜகவைச் சார்ந்த ரமேஷ் பிதூரி தன் இருக்கையை விட்டு எழுந்து ஆவேசமாகக் கத்தி சிவசேனா மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆதரவைத் தந்து இருக்கிறார்.

அவை 15 நிமிடம் ஒத்தி வைக்கப்படுகிறது. மீண்டும் அவை கூடுகிறது. வெங்கைய்யா நாயுடு ரமேஷ் பிதூரியைக் கண்டிக்கிறார். அவையில் மன்னிப்புக் கேட்கச் சொல்லுகிறார்.

ரமேஷ் பிதூரி அவையில் மன்னிப்புக் கேட்கிறார். இத்தனை திருவிளையாடல்களும் பிரதமர் மோடியின் முன்னால்தான் அரங்கேறி இருக்கிறது.

ஆனாலும் மும்பையில் இருந்து வெளிவரும் சிவசேனாவின் அதிகார பூர்வ நாளிதழான சாம்னாதன் தலையங்கத்தில் இந்த எம்.பிக்களின் செயலை நியாயப்படுத்தி இருக்கிறது. ஆதரித்து இருக்கிறது.

வெங்கைய்யா நாயுடு சொல்லி இருக்கிறாரே இந்தப் பிரச்சனை உணர்ச்சிப் பூர்வமானது என்று. இது எந்த மாதிரி உணர்ச்சியை உண்டு பண்ணும்?

இதற்கு எதிர் நடவடிக்கையாக ஆவேசம் கொண்ட சில முஸ்லிம்கள், இந்து மதத்தைச் சார்ந்த யாரிடமாவது இப்படி ஒரு வன்முறையை நிகழ்த்தச் செய்யும் என்பதுதானே வெங்கைய்யா நாயுடு வெளிப்படுத்தும் வார்த்தையின் பொருள்.

இதனால் ஒரு மதக் கலவரம் மகாராஷ்டிரத்தில் கொழுந்துவிட்டு எறிய வேண்டும். டெல்லியில் அதனுடைய நிழல் பதிய வேண்டும். இந்தியா முழுவதும் இந்தக் கோரம் எப்படியாவது விரிவடைய வேண்டும் என்ற ஒரு நிலைப்பாட்டை உருவாக்கத்தானே இது நிகழ்த்தப்படுகிறது.

இதனால் யாருக்கு லாபம்?

பாஜக தேர்தலுக்கு முன்னர் அங்கங்கே மதத் துவேஷங்களை முன்னிலைப் படுத்தி இந்துக்களுக்கு ஆபத்து என்ற சுலோகத்தை எடுத்து வைத்து ஆட்சியமைத்து விட்ட நிலையில் , ஆட்சி ஏறியதற்குப் பின் நாங்கள் இன்னுமொரு காங்கிரசுதான் என்ற நிலைப்பாட்டை மறைப்பதற்காக மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைதான் இந்த ராஜதந்திரம்.

இதைத்தான் உணர்ச்சிப் பூர்வமான விஷயம் என்ற மொழிகளில் பாஜக இந்தச் செயலை வர்ணித்து இருக்கிறது.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்ஸாலும், பாஜகவாலும், சிவசேனாவாலும் தயாரிக்கப்பட்ட அத்தனை மதக் கலவரங்களும் இது மாதிரி உணர்ச்சி மயமான பிரச்சனைகளில்தான் நிறைவேறி இருக்கிறது.

இந்தியாவில் பெரும்பான்மையான குடிமக்கள் பிரதானமான இந்து தர்மத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடியவர்கள்.

எங்கேயெல்லாம் மதக் கலவரம் நிகழ்த்தப் படுகிறதோ அங்கேயெல்லாம் இந்த மத வெறியர்கள் தங்களை மதத்தின் பிரதிநிகளாக முன்னிலைப் படுத்தி அரசியல் நடத்தும் கலை அறிந்தவர்கள்.

ஆனால் கலவரம் நடக்கும் பகுதிகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய இந்துப் பெருங்குடி மக்களும் முஸ்லிம் மக்களும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரண்களாக இருந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை நிலை.

இதை மேலும் சிதைக்க இந்தத் தீவிரவாத அரசுச் சிந்தனையாளர்கள் முடுக்கிவிடக்கூடிய சதிச் செயல்கள்தாம் இதுமாதிரி செயல்களின் உள் நோக்கம்.

அடுத்த மதத்தின் வழிபாட்டுத் தலத்தைத் தகர்ப்பது தர்மம் என இந்துப் பெருங்குடி மக்கள் ஒப்புக் கொள்வதே இல்லை. இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவா இதைச் செய்யும்.

ஒரு இந்துவை இவர் காஃபிர் (உருவ வழிபாட்டாளர்) என்பதனால் முஸ்லிம்களுக்கு எதிரி. இவர் தகர்க்கப் பட வேண்டியவர் என்று சொன்னால் முஸ்லிம் பெருமக்கள் ஒரு போதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் ஜிஹாதிகள் செய்வார்கள்.

குஜராத்தில் ஒரு நிறைமாத முஸ்லிம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கீறி உள்ளிருக்கும் சிசுவை வெளியில் எடுத்து மண்ணெண்ணெய் இட்டுக் கொளுத்தும் கொடூரத்தை இந்துப் பெருங்குடி மக்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவா செய்யும்.

முஸ்லிம் பெண்கள் கல்விக் கூடத்திற்குச் செல்வதற்குத் தடை இருக்கிறது. அவர்களுக்குக் கல்வி தேவையில்லை என்று சொன்னால் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அது அவன் தர்மமும் அல்ல. ஆனால் அல்காயிதா அதைச் செய்யும்.

ஒரிஸாவில் ஸ்டீபன் பாதிரியார், அவர்தம் பாலகர்கள் உயிரோடு கொளுத்தப்பட்டபோது எந்த ஒரு இந்துப் பெருங்குடி மக்களும் அதை அங்கீகரித்துக் கொள்ளவில்லை. இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவா இதைச் செய்யும்.

கிருத்துவ கன்னிகாஸ்திரிகள் விடுதியில் இருந்து வீதிக்கு இழுத்து வரப்பட்டு கற்பழிக்கப்பட்டதை எந்த ஒரு இந்துப் பெருங்குடி மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் இந்துத்துவாகாரர்கள் இதைச் செய்வார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு பிரசவத்தை நடத்தத் தவிர்க்க முடியாத நிலையில், ஒரு ஆண் மருத்துவர் மருத்துவம் செய்ய நேரிட்டால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது அதனால் அந்தப் பெண் இறந்தாலும் தவறில்லை என்பதை முஸ்லிம் பெருமக்கள் ஒருகாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது அவர்கள் தர்மமும் அல்ல. ஆனால் அல்காயிதா இதைச் செய்யும்.

பிரச்சனை என்னெவென்றால் இந்துத்துவாவிற்கும் ஜிஹாதிகளுக்கும் இடையிலே நடைபெறுகிற அரசியல் வன்முறைகள் முழுக்க அரசியல் நோக்கம் கொண்டவை. எனினும் பாதிப்புக்கள் இந்து மக்களுக்கும் , முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பரிமாறப்படுகின்றன. இதைப் புரிந்துக் கொண்டு இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தப் பயங்கர கொடிய வன்முறையாளர்களை அடையாளம் கண்டு அவர்களைத் தனிமைப் படுத்த வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ், பாஜக, சிவசேனா போன்ற இந்த பயங்கரவாதத் தீவிரவாத அமைப்புகளின் இந்துத்துவாஎன்பது இந்து இஸம் அல்ல. இந்து தத்துவம் அல்ல.

இதேபோல் இஸ்லாம் என்ற பெயரை அரசியல் படுத்தி செயலில் இறங்கும் தீவிரவாத ஜிஹாதிகள் போன்ற அமைப்புகளும் வைக்கும் இஸ்லாமிய கோட்பாடு இஸ்லாத்தின் தர்மமும் அல்ல. இஸ்லாமிய இஸமும் அல்ல.

இதை இந்துப் பெருங்குடி மக்களும் புரிந்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய மக்களும் அறிந்துக் கொள்ள வேன்டும்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவா இந்திய மண் சார்ந்த சிந்தனை அல்ல. உலகத்தின் மூத்த மதங்களில் ஒன்றான யூத மதத்தின் கோட்பாடுகளை இந்திய தர்மம் போல இந்துத்துவா முலாம் பூசி வழங்கப் படுகிறது.

ஜுலை 20 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை தி இந்துதமிழ் நாளிதழில் ராமச்சந்திர குஹா எழுதியுள்ள ஒரு செய்தி நினைவு கூரத்தக்கது.

இந்துத்துவா தனித்தன்மை உள்ளதா? யூதர்களும் இதையேதான் கூறி வந்தனர். உலகிற்கே வழி காட்டக் கூடியவர்கள் நாங்கள்தான் என்றும் கடவுளுடன் தங்களுக்கே நெருக்கமான உறவு இருப்பதாகவும் கூறினர்.

இரு தரப்பினரிடையும் சிறிய வித்தியாசம் இருக்கிறது.

யூதர்கள் தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் என்று கருதுவது பரப்பில் மிகச் சிறியது.

இந்துத்துவா ஆதரவாளர்கள் அடைய விரும்பும் அகண்ட பாரதமோ அளவில் பெரியது.

இந்தக் கருத்து ஆழமாக சிந்திக்கப் பட வேண்டிய ஒன்று. யூதர்கள் எப்பொழுதுமே தங்களைப் புனிதமானவர்களாக நம்பக் கூடியவர்கள். யூதராக பிறக்கத்தான் முடியும் எவரொருவரும் யூதராக ஆக முடியாது.

ஏனென்றால் அவர்கள்தாம் ஆண்டவனுக்கு அணுக்கமானவர்கள் என்று அறிவித்துக் கொள்ளக் கூடியவர்கள்.

ஒரு குழந்தை குழந்தையாகத்தான் பிறக்கிறது. அது வளர்ப்பில் பெற்றோர்களாலும் சார்ந்துள்ள சமூகத்தவர்களாலும் முஸ்லிமாகவோ , கிருத்துவராகவோ, யூதராகவோ, சமணராகவோ,புத்தராகவோ வேறு எந்த மதத்தினராகவோ ஆக்கப் படுகிறது. அல்லது அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனாகி தன் சொந்தச் சிந்தனை அடிப்படையில் ஏதாவது ஒரு மதத்தைத் தேர்ந்தெடுத்து தன்னை மதம் மாற்றிக் கொள்கிறது என்ற இயற்கை விதிக்கு முரணான கோட்பாட்டை யூத மதம்தான் உலகில் முதன்முதல் முன்வைத்தது.

ஒரு குழந்தை மதமாகத்தான், சாதியாகத்தான் பிறக்கிறது. தன் நிலையை எந்த நிலையிலும் மாற்றிக் கொள்ள அல்லது மாறிக் கொள்ள அந்தக் குழந்தைக்கு உரிமையே கிடையாது. அதாவது அந்தந்த மதத்தில் அந்த சாதியில்தான் பிறக்க முடியும் என்ற தத்துவத்தை முன் வைத்து மனிதன் மத மனிதனாகத்தான் பிறக்கிறான். அதை அவன் மீறிக் கொள்ள கூடாது. முடியாது என்ற வினோதக் கோட்பாடுதான் யூதக் கோட்பாடு.
யூதர்கள் வரலாற்று ரீதியாக இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தவர்கள்.

சிந்து சமவெளி வழியே இந்தியத்திற்குள் புகுந்த யூதர்கள் தாங்கள் பெற்ற அனுபவ அடிப்படையில் தங்கள் புனிதமும் கெட்டு விடாமல் தங்கள் வர்க்கத்திற்குக் கீழே இன்னும் சில வர்க்கங்களை உருவாக்கி அவர்க்ளுக்குள்ளும் புனிதங்களைப் புகுத்தி தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தனர். அப்படி ஒரு பெரும்பான்மையைத் தத்துவமாக்கி இந்தியத்தில் இருந்த பல வணக்க வழிபாட்டு சமயத்தினரை தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரக் கற்றுக் கொண்டார்கள்.

பிராமணராக ஒருவர் ஆக முடியாது. பிராமணராக பிறக்கத்தான் முடியும். இந்தக் கோட்பாடு அவர்களுடைய பூர்விக யூத மதத்தின் சாஸ்திர பிடிப்பு. இவர்கள்தான் ஆண்டவனுக்கு அணுக்கமானவர்கள்.

இதே போல இங்கு வாழ்ந்து கொண்டிருந்த பலதரப்பட்ட சமயத்தினருக்கும் புனிதத்தைக் கற்றுத் தந்து தங்கள் கைவசம் வைத்துக் கொண்டனர்.

முதலியார்கள் முதலியார்களாகத்தான் பிறக்க முடியும். இதே போல் பிள்ளைமார், பறையர், செட்டிமார், பள்ளர் அவரவர் சமயத்தில்தான் பிறக்க முடியும். எவரும் எந்த சமயத்தையும் ஏற்று அந்தச் சமயத்தில் இணைந்து கொள்ள முடியாது என்ற யூத தத்துவத்தை நிலைப் படுத்தி வைத்தார்க்ள்.
இந்த யூத தத்துவத்தை இந்துத்துவா என்ற போர்வைக்குள் மூடி மறைக்க எத்தனிக்கிறார்கள்..

லக்னோ இந்து மகா சபையின் தலைவராக 1940 களில் இருந்த கேரள மாநிலத்தைச் சார்ந்த தீர்த்தர் தடைகல்என்று அவர் எழுதிய புத்தகத்தில் இந்து தர்மத்தைத் தேடுகிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதுதான் உண்மை. இந்துத்துவாவில் இந்து தர்மம் இல்லை.

இன்றையப் பெண்ணியவாதிகள் தாங்கள் அடிமைகளாக ஆக்கப் பட்டதற்கு முழுமையான வரலாற்றுக் காரணம், தங்களிடமிருந்து மாதாந்திரம் வெளிப்படும் தீட்டை வெளிப்படுத்தி அதைக் கொச்சையாக்கி இந்தத் தீட்டுக்குடையவர்கள் பிரம்மஹத்தி சாபம் பெற்றவர்கள் என்று கூறி ஆணாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டார்கள் என்ற செய்தியை முன்வைக்கிறார்கள். இந்தத் தத்துவம் கூட யூத தத்துவம்தான்.

ஏவாள் சாத்தனுடையப் பேச்சை நம்பி செய்த தவறால்தான் மானுடப் பாவம் பிடித்துக்கொண்டது. அந்த மானிடப் பாவம் பெண்களுக்கு மாதந்தோறும் வெளிப்படும் அசுத்தத்தின் அடையாளம். இதைத்தான் இங்கே பிராமண தர்மம் பெண்களைப் பிரம்மஹத்தி சாபம் என்று குறிப்பிட்டது.

சமீப காலம்வரை கூட யூதப் பெண்கள் பிரசவ காலத்து வேதனையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை வெளிக் கொண்டுவரக் கூடாது. பெண்களின் முதல் மனுஷி ஏவாளின் பாவத்துக்குக் கிடைத்த தண்டனை இது என்ற கொடூரமான கோட்பாட்டை யூதர்கள் கடைபிடித்துக் கொண்டிருந்தார்கள். இதை கிருத்துவத்திலும் அவர்கள் புகுத்தி வைத்து இருந்தார்கள்.

பெண் பிறப்பு மரணத்திற்கு பின் சொர்க்கத்தையும் அடைய முடியாது. அவள் மறுபிறப்பு பல எடுத்து ஆணாகப் பிறந்து மரணிக்க வேண்டும்.

சொர்க்கத்திற்குச் செல்ல யாராக இருந்தாலும் பிராமண பிறப்பெடுத்து மரணித்தால்தான் முடியும் என்ற கோட்பாடெல்லாம் யூதப் புனிதத்தின் நீட்சி ஆகும்.

எந்த ஒரு இந்தியக் குணம் சார்ந்த இந்துப் பெருமக்களும் வன்முறையில் நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்லர்.

ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்துவா, யூத தத்துவத்தின் பூரண வடிவம். இதனை இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான சகோதர இந்து சமயத்தினர்கள் தெளிவாகப் புரிதுக் கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர்.

சுருக்கமாக இந்துத்துவா என்ற வெறித்தனமும் , ஜிஹாதி என்ற கொடுந்தனமும் இந்திய மக்களின் குணப்பாடே அல்ல.


உணர்ச்சி வசப்படாமல் உண்மையினை உள்வாங்க வேன்டிய கால கட்டம் நம் அனைவருக்கும் உரியதாகும்.

Thursday, July 24, 2014

இதெல்லாம் எப்படி நடந்தது-39

முரண்களின் ஏகபோகக் கலைஞன்.!

எங்கள் நட்பு வட்டத்தில் ஒருவன் ஓவியப் புலவன் நாகலிங்கம்.

இவன் ஏகப்பட்ட முரண்களினால் ஏகபோகமாகத் தொகுக்கப்பட்ட விசித்திரன்.

நாகலிங்கம் விழிகள் அவனுக்கென்றே பொருத்தி அனுப்பப்பட்ட ஒரு வரமாகும். அந்த விழிகளில் எப்பொழுதுமே நிறைவேற முடியாத, திருப்திப்பட்டுப் போக முடியாத ஒரு சில அபூர்வக் கனவுகள் மிதந்து கொண்டு இருக்கும்.

நல்ல அகன்ற நெற்றி. கொஞ்சமாக ஒடுங்கி சிறிது நீண்ட முகம். வார்த்தைக்குள் அடங்காத நேர்த்தியான மூக்கு.

மாந்தளிரை விட கொஞ்சம் கூடுதலாக வெளிறிய நிறம். ஒடிசலான உருவம். வாயில் எப்பொழுதுமே வெற்றிலையும் புகையிலையும் குதப்பியச் சிகப்புச்சாறு தஞ்சமடைந்து இருக்கும்.

எங்கள் நாகலிங்கம் பேசுவது எப்பொழுதுமே கொஞ்சம்தான். பேசுவதைக் குறைக்கத்தான் வாயில் புகையிலைப் புகுந்து கொண்டு இருக்குமோ? என்று நாங்கள் எண்ணுவது உண்டு. அவன் விரல்களில் வண்ணத்தில் முங்கி நனைந்து இருக்கும் ஓவியத் தூரிகை (பிரஷ்) ஏதாவது ஒரு பொருளில் எதையாவது தீட்டிக் கொண்டு இருக்கும்.

சட்டை அணியாது வேட்டிகட்டி அவன் வீட்டுத் திண்ணையில் இருக்கும் அவன் தனி அறையில் அவன் இருப்பான். இந்த நேரம் தவிர அவன் வெளியில் புறப்படும் போது அவன் தோற்றம் இன்னும் விநோதமாக இருக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் வகுப்பிற்கு எப்போதாவது வந்து போவான். ஆனாலும் புலவர் பட்டம் பெற்றுவிட்டான்.

நான், மாமா புலவர் சங்கரன், மாப்பிள்ளை புலவர் கலைமணி, மாப்பிள்ளை இஞ்ஜீனியர் செல்வம் இப்படி உள்ள எங்களில் யாராவது ஒன்றிரண்டு பேர் அவன் வீட்டுத் திண்ணையில் அவனோடு எப்பொழுதும் இருப்போம்.

அவன் வீதிக்கு வரும்போது மட்டும்தான் மேலாடை அணிவான். ஜிப்பாதான் அவன் மேலாடை. அவன் ஜிப்பாவின் வலது கை துணி மேல் நோக்கி சுருட்டப்பட்டு இருக்கும். இடது கை ஜிப்பா துணி நீளமாகத் தொங்கிக்கொண்டு இருக்கும். எல்லா நேரங்களிளும் வேட்டிதான் கட்டுவான். ஒரு சில பொழுதுகளில் பேண்ட்டும் அணிவான்.

சிதம்பரம் வீதிகளிலும், அண்ணாமலை நகர் வெளிகளிலும் புலவர் வகுப்பறையிலும் இதே தோற்றத்தில்தான் தென்படுவான்.

முக்கியமான ஒரு தகவல். அநேகமாக சில வேளைகளைத் தவிர ஏதாவது ஒரு போதைத் திரவத்தை (விஸ்கி, ரம், கள்) தனக்குள் நிறைத்துக் கொண்டு இருப்பான். அவனிடம் எந்தத் தள்ளாட்டமும் இருக்காது. எந்தக் கண்ணியக் குறைவும் அவனைச் சீண்டாது.

நாங்களெல்லாம் உளுந்தூர்ப்பேட்டை சண்முக ஐயாவின் வட்டத்திற்கு உரியவர்கள்.

நாகலிங்கம் பேட்டையாரிடம் பேசும் போது கூட இப்படித்தான் இருப்பான். அவனுக்கு ஒளிவு மறைவு கிடையாது. அவன் அப்பட்டமான யதார்த்தப் பேர்வளி. இவற்றைத்தவிர அவனிடம் வேறு எந்தத் தவறையும் எவரும் என்றும் கண்டது இல்லை.

நாகலிங்கத்தின் வீடு சிதம்பரத்தின் கடைக்கோடிப் பகுதியில் உள்ள தொப்பையன் தெருவில் இருந்தது. அவனுக்கு அது சொந்த வீடு.

அவன் தாய், தந்தை எப்பொழுதோ இறந்து விட்டார்கள். இவன்தான் மூத்தவன். இவனுக்கு ஒரு தம்பி. அவன் வீட்டுக்கு இவர்கள்தான் உரிமையாளர்கள்.

நாகலிங்கத்தின் தம்பி என்றுமே நேரெதிரில் நின்று அவனிடம் பேசமாட்டான். ஒரு பக்கத்தில் ஒதுங்கி கைகட்டி நின்றுதான் பேசுவான். நாகலிங்கம் எடுக்கும் எந்த முடிவும் தம்பிக்குத் தேவ அறிவிப்பு. இப்படி ஒரு சகோதரப் பிணைப்பு எங்களுக்கே ஒரு பேராச்சரியம்தான்.

நாகலிங்கம் தம்பி அதே தெருவில் உள்ள ஒரு பெண்ணோடு தொடர்போடு இருந்தான். அந்தப் பெண் இரண்டு குழைந்தைகளுக்குத் தாய். இந்தச் செய்தி நாகலிங்கத்திற்கு அந்தத் தெருவில் உள்ளவர்களிலேயே கடைசியாகத்தான் தெரிய வந்தது.

அறிந்த நாகலிங்கம் ஒரு முடிவெடுத்தான். அவன் தெருவில் உள்ள சொந்தக்காரர்களை அழைத்தான். இந்தத் தகவலைப் பகிரங்கப் படுத்தினான். தனித்து வாழ்ந்த அந்தப் பெண்மணியை அழைத்தான். தன் தம்பியையும் அழைத்தான், “இந்தப் பெண்மணியோடும், இரு குழந்தைகளோடும் நம் வீட்டில் வந்து வாழ்க்கை நடத்து. நம் வீட்டில் எனக்குள்ள உரிமையை உனக்கும் உன் குடும்பத்தினர்களுக்கும் எழுதித்தந்து விடுகிறேன்என்று சொன்னான்.

அண்ணன் கட்டுப்பாட்டை எப்பொழுதும் மீறாதத்தம்பி அப்படியே நடந்து கொண்டான்.

நாகலிங்கம் தன் வீட்டின் திண்ணையில், தட்டிகளால் தடுத்து ஒரு சின்ன அறையை உருவாக்கிக் கொண்டான். அதில்தான் அவன் வாழ்ந்தான்.

நாகலிங்கத்தின் தம்பி அவன் குடுப்பத்தோடு இன்றும் அங்குதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.

நாகலிங்கத்தின் அந்தச் சின்ன அறைக்குக் கதவுகள் கிடையாது. சிதம்பரத்தின் கடைவீதிகளில் உள்ள பெரும்பான்மையான கடைகளில் நாகலிங்கம் எழுதிய பெயர்ப்பலகைதான் மின்னிக்கொண்டு இருக்கும்.

நாகலிங்கம் எழுதிய எழுத்துகளுக்கும் ஓவியங்களுக்கும் கீழே அவன் கையெழுத்துப் போடுவது இல்லை.

காரணம் கேட்டால், “ஒரு கையெழுத்து என்னை அடையாளம் காட்டக் கூடாது. என் எழுத்துகளும் என் ஓவியங்களும் என் முகவரியை அறிவிக்க வேண்டும்என்பான்.

அது எப்படி அறிவிக்கும்? என்று கேட்டால்..,

இவற்றைப் பார்த்து இதை ஆக்கியவன் யார்? என அந்தக் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். அந்தக் கடைக்காரர் என் முகவரியை அவருக்குத்தந்து என்னிடம் அனுப்பிவைப்பார். இதுதான் எனது பாணிஎன்பான்.

அவனுக்கு ஒரு தொழில் தர்மம் இருந்தது. அவன் தொழிலுக்குப் பேரம் பேசக்கூடாது. அவன் சொன்ன தொகையை ஒப்புக்கொள்ள வேண்டும். அவன் தொகையை நிர்ணயிப்பதே அலாதியானது. அன்றைக்கு அவனுக்கு என்ன தேவையோ அதுதான் அவன் நிர்ணயிக்கும் தொகை.

வாடிக்கையாளர்களுக்கு இதனால் லாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். ஆனால் அவன் வாடிக்கையாளர்கள் அவனிடம்தான் வந்து கொண்டு இருந்தார்கள்.

அவன் கையில் இருக்கும் பணத்தை அவன் திண்ணை அறையில் வைத்து இருப்பான். அந்த அறைக்குக் கதவு கிடையாது. வெளியே போய்விட்டு அறைக்குவந்து பணத்தைத் தேடுவான். அங்கே பணம் இருக்காது. யாரோ தேவையானவர்கள் எடுத்து விட்டார்கள்என்று சொல்லி விட்டு பட்டினியாகப் படுத்துக் கொள்வான்.

அவன் தெருவில் உள்ள யாரோ தேவையானவர்தான் அதை எடுத்து இருப்பார். சில நேரங்களில் காணாமல் போனப் பணம் அவன் அறையில் அதே தொகையில் வந்து அமர்ந்து இருக்கும். எடுத்த பணத்தைத் திரும்ப வைத்திருக்கிறார்கள்என்று சொல்லி செலவு செய்து விடுவான். இந்தத் தொகையைக் கடனாக எடுத்தது யார்? வைத்தது யார்? அவனுக்கே தெரியாது.

உளுந்தூர்ப் பேட்டையார் சென்னை கௌரிவாக்கம் எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைக்குக் குடிவந்து இருந்தார்.

பேட்டையார் பொறுப்பேற்ற சில மாதங்களில் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பிரச்சினை வந்து விட்டது. மாணவர்கள் பக்கம் பேட்டையார் உறுதியாகச் செயல் பட்டார். அவர்கள் பக்கம் ஒரு நியாயம் இருந்தது.

கல்லூரி நிர்வாகம் பேட்டையாரையும் அவருக்கு ஆதரவான 6 பேராசிரியர்களையும் பணி நீக்கம் செய்தது.

மாணவர் போராட்டம் கொதித்தெழுந்தது.

போராட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பை பேட்டையார் எங்களிடம் ஒப்படைத்தார்.

சிதம்பரத்தில் இருந்து நான், கலைமணி, செல்வம், நாகலிங்கம் சென்னைக்கு வந்தோம். எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரி மாணவர்களுக்குப் போராட்ட முறைகளை வகுத்துக் கொடுத்தோம்.

சென்னை சைனா பஜார் பூக்கடை ஹோல்சேல் துணிக் கடைகளில் துணிகளைச் சுற்றப் பயண்படுத்தப்படும் நீண்ட கோல்களை நிறைய வாங்கி வந்து வெள்ளை காட்போர்டுகளில் போராட்ட சுலோகங்கள் எழுதி ஆணி அடித்து பொருத்த வேண்டிய வேலை நாகலிங்கத்திற்கு உரியது.

கௌரிவாக்கத்தைத் தாண்டி எப்போதும் பூட்டிக்கிடக்கும் ஒரு பங்களா இருந்தது. அதன் மாடியில் இரவுகளில் நாங்கள் தங்கி இருந்து இந்தப் பணிகளைச் செய்து கொண்டு இருந்தோம்.

இன்றைக்கு இருக்கும் கௌரிவாக்கம் பரபரப்பானது. நான் குறிப்பிடும் சம்பவம் 1973-ம் ஆண்டு நடந்தது. அன்றைய கௌரிவாக்கம் வெறும் வெட்ட வெளி மணற் காடாக இருந்தது. இரவில் சர்வசாதாரணமாகப் பாம்பும் தேளும் ஊர்ந்து கொண்டு இருக்கும்.

இந்த மாணவப் போராட்டம் தமிழக அரசு தலையீட்டால் மாணவர் சார்பாக வெற்றியைத் தேடித்தந்தது.

மீண்டும் பேட்டையார் சிதம்பரம் வந்தார். நாங்களும் சிதம்பரத்தில் இருந்தோம்.

சிதம்பரத்தில் மாமா சங்கரன் திருமணம் நிகழ்ந்தேறியது. ஒருநாள் சங்கரன் மனைவியை அழைத்துக் கொண்டு நாகலிங்கம் திண்ணைக் குடிலுக்குத் திடீரென வந்து விட்டான்.

அவ்வளவுதான் 10 பாம்பு 20 தேள் கொத்தியது போல துடித்தெழுந்த நாகலிங்கம் தெருவில் வந்து நின்று விட்டான்.

புதுத் தம்பதியரை வரவேற்கத்தெரியாத பதற்றத்தில் துடித்தான். மாமா உடனே மனைவியைக் கூட்டிக் கொண்டு தயவு செய்து போடா போடாஎன்று விரட்ட ஆரம்பித்து விட்டான்.

நாகலிங்கத்திற்கு அன்பு செலுத்த மட்டும்தான் தெரியும். அது பற்றிய நகாசு வேலைகள் எதுவும் அவனுக்குத் தெரியாது.

நாகலிங்கம் தொடர்ந்து அருந்தி வந்த மதுப் பழக்கம் அவன் உடலை ரொம்பவும் பாதித்துவிட்டது.

அப்பொழுது நான் சென்னை மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள முஸ்லீம் லீக் அலுவலக மாடியில் தங்கி இருந்தேன். மணிவிளக்கு மாத இதழில் நானும் கவிஞர் இஜட்.ஜஃபருல்லாவும் துணையாசிரியர்களாக இருந்தோம்.

மணிவிளக்கு அலுவலகத்திலேயே அறமுரசு அலுவலகமும் இருந்தது. அறமுரசை எம்.ஏ.அக்பர் அண்ணன் கவனித்துக் கொண்டு இருந்தார்.

சற்றுத் தொலைவில் கவிஞர் தா.காசிமின் காயிதே மில்லத் அச்சகம் இருந்தது. அதில் இருந்து சரவிளக்கு மாத இதழ் வந்து கொண்டு இருந்தது.

சிதம்பரத்தில் எங்கள் நண்பர் வட்டம் கூடி ஒரு முடிவு எடுத்தார்கள். இனிமேல் நாகலிங்கம் சிதம்பரத்தில் இருந்தால் குடித்து சீரழிந்து விடுவான். சென்னையில் ஹிலாலிடம் இவனை ஒப்படைத்துவிட வேண்டும் என நண்பர்கள் தீர்மானித்து விட்டார்கள். எனக்கும் தகவல் தந்தார்கள். நானும் சென்னையில் இருந்து சிதம்பரம் சென்றேன்.

நாகலிங்கம் என் பொறுப்பில் சென்னை வர சம்மதிக்கவில்லை. நாங்களெல்லாம் சேர்ந்து அவனை உதைத்துத் தூக்கி வர முடிவு செய்து விட்டோம். முடிவாக சம்மதப்பட்டு என்னுடன் வர இசைந்து விட்டான்.

ஒர் இரவில் சிதம்பரத்தில் பஸ் ஏறினோம். அதிகாலை பாரிஸ் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினோம் (அப்போது கோயம்பேடு கிடையாது). அன்று ரமளான் மாதம். முதல் நோன்பு ஆரம்பம். அங்கப்பன் நாயக்கன் தெருவில் நடந்து வந்தோம்.

அங்கே ஒரு கட்டிட மாடியில் போரா முஸ்லிம்பள்ளிவாசல் இருக்கிறது. அங்கே ஸஹர் உணவு அருந்திவிட்டு ஒரு கூட்டம் தெருவில் நிரம்பி நின்றது. அதைத்தாண்டி நடந்தோம். மரைக்காயர்லெப்பை தெருவிற்கு வந்து விட்டோம். முஸ்லிம் லீக் தலைமை அலுவலக 3-வது மாடியில் உள்ள என் அறைக்கு வந்து சேர்ந்தோம்.

நான் நாகுவிடம் கூறினேன், “டேய் நாகு! இது முஸ்லிம் லீக் அலுவலகம். இங்கே எங்களில் யாருக்கும் மது ஆகுமானது இல்லை. உனக்கோ மது இல்லாமல் முடியாது. உன்னை நான் தடை செய்யவில்லை. நீ மது அருந்தி விட்டு இந்த கட்டிடத்திற்குள் கால் வைத்தால் உன்னோடு நானும் வெளியேற வேண்டியதுதான். நீ மது அருந்தினால் நானும் உன்னோடு இந்த பிளாட்பாரத்தில் வந்து தங்க வேண்டியதுதான். ஒன்று மதுவை நீ விட்டுவிடு. இல்லையேல் நான் உன்னோடு பிளாட்பாரத்திற்கு வரத் தயாராக இருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் உறுதி நீ சிதம்பரத்திற்குத் திரும்பப் போகக் கூடாது.இப்படி நான் உறுதியாகக் கூறிவிட்டேன்.

அந்த ஸஹர் நேரத்திலும் அவன் ஒரு குத்து புகையிலையை எடுத்து வாயில் அமுக்கினான். எந்த முடிவும் சொல்லாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.

நாங்கள் அது தொடங்கி 6,7 மாதம் முஸ்லிம் லீக் அலுவலகத்திலேயே தங்கி இருந்தோம். ஒரு நாள் கூட என் நாகலிங்கம் மதுவை அருந்தவும் இல்லை, மது பாட்டிலைத் தொடவும் இல்லை.

நாகலிங்கத்திற்கு ஏற்கனவே ஒரு பழக்கம் உண்டு. அவன் நண்பர்களாக ஏற்றுக் கொண்டவர்களை ஒருபோதும் மது அருந்த சம்மதிக்க மாட்டான்.

அவன் மதுப் பிரியன் ஆனால் மதுப் பிரியர்களுக்கு அவன் எதிரானவன்.

கவிஞர் தா.காசிம், எம்.ஏ.அக்பர் அண்ணன், நாகுவின் கலைத்திறமை கண்டு டைட்டில் எழுதுவதற்கும், படம் வரைவதற்கும் நிறைய வாய்ப்புகள் வாங்கித் தந்தார்கள்.

நிறைய அவன் சம்பாதித்தான். புதுப்பிக்கப்பட்ட அவன் வாழ்க்கை செம்மையாகவும் செழிப்பாகவும் மலர்ந்தது. அவன் வருமானத்தில் நானும் அவனும் தினம் தினம் அசைவ சாப்பாடு சாப்பிட்டோம். அவன் மெருகேறினான். நானும் கூடத்தான்.

அப்போது தமிழகச் சட்டமன்றத்துக்குத் தேர்தல் வந்தது. கடையநல்லூர் தொகுதியில் என் சிறிய தந்தையார் அ.சாகுல் ஹமீது சாஹிப் முஸ்லிம்லீக் வேட்பாளராகப் போட்டி இட்டார். நான் தேர்தல் பணிக்காகச் சென்னையில் இருந்து கடையநல்லூர் செல்ல இருந்தேன்.

நாகு சிதம்பரம் செல்ல என்னிடம் அனுமதி கேட்டான். நான் மறுத்தேன். டேய் நான் குடிக்க மாட்டேன்என்று சொன்னான். நாகு வாக்கு மீறாதவன். சரி, நீ சிதம்பரம் செல், நான் கடையநல்லூரிலிருந்து தேர்தல் முடிந்தவுடன் சிதம்பரம் வருகிறேன். இருவரும் சேர்ந்து சென்னை வந்து விடலாம்என்றேன்.

இந்த ஒப்பந்தத்தோடு மறுநாள் பிரிந்தோம்.

சிதம்பரத்தில் அ.இ.அ.தி.மு.கவினர் இரட்டை இலைச் சின்னத்தைப் பிரம்மாண்டமான கட்டவுட்டாக வரைய இவனுக்கு ஆர்டர் கொடுத்தனர். நாகலிங்கத்தின் தம்பிதான் அந்தப் பகுதி அ.இ.அ.தி.மு.க. செயளாலர். இதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர், தி.மு.க., உதய சூரியன் சின்னத்தின் பெரிய கட்டவுட்டை வரைய இவனுக்கு ஆர்டர் கொடுத்துப் பெற்று இருந்தனர்.

அந்த உதய சூரியன் சின்னத்தை மறைக்கிற மாதிரி இவன் வரைந்த இரட்டை இலை கட்டவுட்டைக் கட்டி விட்டனர். அ.தி.மு.க. வினருக்கும் தி.மு.க வினருக்கும் வாய்ச் சண்டை முற்றி கைகலப்பு ஆரம்பித்து விட்டது.

அ.தி.மு.க.வினர் மீதுதான் குற்றம் என்று உணர்ந்த நாகு, அந்த இடத்திற்குச் சென்று தன் தம்பியிடம் இரட்டை இலைச் சின்னத்தை இங்கே வைக்காதே. இன்னொரு கட்சிச் சின்னத்தை மறைக்காதே என்றுக் கண்டித்தான்.

அண்ணன் சொல்லை என்றுமே தட்டியறியாத நாகுவின் தம்பி, “அண்ணா நீங்க விலகிக்குங்க. நாங்கப் பாத்துக்கிறோம்என்று கூறி நாகலிங்கத்தின் கையைப் பற்றி தெரு ஓரத்துக்கு இழுத்துவிட்டான். நாகலிங்கம் தடுமாறி விழுந்தான். அவன் விழுந்த இடத்தில் ஒரு பாராங்கல் கிடந்தது. நாகலிங்கம் தலை அதில் வேகமாக மோதி விட்டது. இது மட்டும்தான் நடந்தது நாகலிங்கம் மரணித்து விட்டான்.

மறுநாள் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு. காவல் துறையினர் நாகலிங்கத்தின் தம்பியைக் கைது செய்து விட்டனர். நாகலிங்கம் உடல் மருத்துவமனைக்குப் போஸ்ட்மார்டத்திற்கு சென்று விட்டது. போஸ்ட் மார்டம் முடிந்த உடன் தி.மு.க.வினர் தி.மு.க கொடியினைப் போர்த்தி தி.மு.க. தியாகி என்பது போல ஊர்வலம் நடத்தி கொண்டு போய் எரித்து விட்டனர்.

ஆனால் நாகுவுக்கு அரசியல் கிடையாது. அவன் முழுவதுமாக முரண்களால் சமைக்கப்பட்ட ஏகபோகக் கலைஞன்.

இந்த சம்பவம் நடக்கும் போது நாங்கள் எவரும் சிதம்பரத்தில் இல்லை.

எங்கள் நாகுவை இந்தக் கோரக்கோலத்தில் நாங்கள் யாரும் பார்க்கவில்லை.

இறுதிவரை அவன் தனியனாகவே இருந்து விட்டான். அவன் மட்டுமே இறந்து இருக்கிறான். ஆனால் எங்கள் நினைவுகளில் அவன் நிழல் பதித்து இருக்கிறான்.

இலங்கை, இந்தியாவின் நிழல்..!


இந்தியாவை, இந்தியா என்று வரலாறு பூரணமாக அறிவிப்பதற்கு முன்னால், இன்றைய இந்தியா என்று சொல்லப்படும் சில பகுதிகளிலிருந்து மனிதர்கள் இலங்கையில் குடியேறினார்கள்.

மேற்கு வங்கம், கடாரம்(ஒரிஸா), தமிழகம் போன்ற இந்தியப் பகுதியிலிருந்து இலங்கைக் குடியேற்றம் நிகழ்ந்து இருக்கிறது. இது சரித்திரக் காலச் சம்பவங்கள்.

பூர்விகக் குடிகளாலும், கடல் தாண்டிய இன்னொரு பகுதியிலிருந்து குடியேறிய மனிதர்களாலும் தன் வாழ்வையும் நாகரிகத்தையும் இலங்கை மண் வளர்த்துக் கொண்டது.

சிங்களவர்கள் என்று இன்று குறிப்பிடப்படுபவர்கள் இலங்கை பூர்வீகவாசிகள் மட்டுமாக உள்ள சமுதாயத்தவர்கள் அல்லர். இந்தியத்தின் வடபுலத்திருந்து குடியேறிவர்களையும் உள்ளிட்ட மக்கள் திரளைத்தான் சிங்களவர்கள் என்று இன்றையச் சொல் குறிப்பிடுகிறது.

இவர்களுக்கு முன்பே தமிழகத்திலிருந்து குடியேறிய மக்கள் சிங்களவர் என்ற வரையறைக்குள் வரவில்லை. தமிழர்கள் என்ற தனித்துவத்தோடு திகழ்ந்தனர்.

ஒரு கால கட்டத்தில் சிங்களவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வதற்குச் சிங்களவர்கள் ஏற்றுக் கொண்ட புத்த மத கோட்பாடே அடிப்படையாகி விட்டது.

ஈழத்திலிருந்த தமிழர்கள் சைவ சமயத்தையும், வைணவத்தையும், இஸ்லாத்தையும், கிருத்துவத்தையும் கடைபிடித்த காரணத்தால், புத்த மதத்தை ஒப்புக் கொள்ளாத உறுதி இருந்தார்கள். அதனால் சிங்களவர்களாக கருதப் படவில்லை.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் சிங்களவர்கள் ஒப்புக் கொண்ட புத்த மதம் இலங்கைக்கு வெளியே கடல் தாண்டி இந்தியத்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதியான மதம். இந்த புத்தமதம் இன்று சிங்களவர் மதமாகி மற்றைய இலங்கை வாழ் மக்களை அன்னியப்படுத்திப் பார்க்கத் தொடங்கியது.

இது மதங்களுக்கு நடுவே நடந்த போராட்டம் அல்ல. பூரணமான அரசியல் பொருளாதாரப் போரட்டம்தான்.

மதங்களும் இனங்களும் வெளிவடிவ கருவிகளாக இன்று ரத்தம் சிந்திக் கொண்டிருக்கின்றன.

இந்திய இதிகாசம் ராமாயணம் கூட இலங்கைப் பகுதியை அரக்கப் பகுதி என்று அரசியல் நோக்கில்தான் அறிமுகப் படுத்தி இருக்கிறது. ஆனால் புத்த மதம் அந்த அரக்கப் பகுதியைச் சாந்தப் பகுதியாக்க இலங்கைக்குள் பிரவேசித்தது. வெற்றியும் கண்டது.

ஆனாலும் கால ஓட்ட வரலாற்றில் புத்த மதமே அதாவது சிங்கள இனமே ரத்த ஆயுதங்களை கரங்களில் ஏந்தி வீதிக்கு வந்து விபரீதங்களை நடத்தத் தொடங்கிவிட்டது. புத்தம் காணாமல் போய்விட்டது.

இந்தக் கடந்த கால பூகோள அரசியலை இந்த அளவில் நிறுத்திக் கொண்டு இன்றையப் பிரச்சனைக்கு வருவோம்.

2009 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்திருக்கக் கூடிய கொடூரமான யுத்தம், பேரினவாதம் இலங்கையில் நிகழ்த்தி முடித்த இன அழிப்பு அடையாளம்தான்.

தமிழினத்தின் மீது சிங்களப் பேரினத்தினர் கொடூரமான , கோரமான அழிவை நிலைப்படுத்தினார்கள். இந்திய அரசு இந்தக் கண்ணோட்டத்தோடு இதைப் பார்க்கத் தவறிவிட்டது என்று சொல்லுவது கூட அடிப்படை நியாயம் அற்றது. இதை அறிந்தே இந்திய அரசு சிங்களப் பேரினவாதத்திற்கு ஆதரவு தந்தது.

விடுதலைப் புலியினருக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் நடந்து கொண்டிருந்த நீண்ட நாள் போரை, மிகச் சாதுர்யத்தைக் கையாண்டு சிங்கள அரசு தமிழின அழிப்பை அங்கே நிகழ்த்தியது.

இந்திய நாட்டில் சென்னைக்குப் பக்கத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இந்தியத்தின் இளைய பிரதமர் மனித வெடிகுண்டால் வரலாறு மன்னிக்காத கொலையைச் சந்திக்க நேர்ந்தது.

இப்படுகொலை விடுதலைப் புலிகளின் கைங்கரியம் என்று உறுதிப்பட்ட பின்னர் இந்திய காங்கிரசு அரசு விடுதலைப் புலி அழிப்புகளை சிங்கள அரசு நிகழ்த்துவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணம் ஆகிவிட்டது.

விடுதலைப் புலி என்னும் பூதத்தை முன்னிறுத்தி இந்திய அரசிடம் மாபெரும் உதவிகளை வாங்கித் தமிழினத்தைக் கோரமாக சிங்கள ராஜபக்சேயின் கொடுங்கோல் அரசு முள்ளிவாய்க்காலின் ரத்தக் கரையாக வரலாறாக்கியது.

ஈழத்துத் தமிழர்களையெல்லாம் விடுதலைப் புலிகள் போல காங்கிரசுக்குக் காட்டி ஈழத்து அரசு தன் கைங்கரியத்தை நிறைவேற்றிக் கொண்டது.

இப்போது இந்தியாவில் காங்கிரசு, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமையில் இருக்கக்கூட அருகதையற்ற நிலையில் ஆட்சியில் உள்ள மோடி அரசிடம் கெஞ்சிப் பார்க்கிறது. நியாயம் கேட்டு முறையீடு செய்கிறது, சட்டத்தை நாடி நீதிக் கேட்கத் தொடங்குகிறது.

இந்த நிலை நிகழ்ந்துவிட்ட பின்னால் இலங்கையிலும் காட்சிகள் மாறத் தொடங்கிவிட்டன.

இன்றைக்கு மோடி அரசிடம் ஆதரவு பெற இன்னொரு வடிவத்தை ராஜபக்சே கைவசம் தூக்கிக் கொண்டார்.

அன்றைக்குத் தமிழர் அழிப்பை நிகழ்த்தும் பொழுது தமிழர்களை இரண்டாக்கி வரலாற்றுப் பிழையை உருவாக்கிக் காட்டினார்கள். தமிழர்கள் - தமிழ் நாட்டிலிருந்து குடியேறியவர்கள் இருகூறாக்கப் பட்டார்கள்.

தமிழ் பேசும் இந்து மதத்தினர் ஒரு பிரிவினர். தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஒரு பிரிவினர். தமிழர்கள் என்ற அடைப்புக்குள் தமிழ் முஸ்லிம்கள் கருதப் படவில்லை.

தமிழர்கள், முஸ்லிம்கள் என்று இரண்டு படுத்தப்பட்டனர். இந்தத் துவேசம் இந்த இரு ஈழத்து தமிழர்களிடமும் ஆதரவு பெற்று இருந்தது என்பதை மறைக்கக் கூடாது. மறுக்கவும் முடியாது.

தமிழ் முஸ்லிம்களுக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் இடையில் நடந்த சிறுசிறு பிரச்சனைகளை பூதாகரப் படுத்தி, தமிழின அழிப்பு இலங்கையில் நடக்கும் பொழுது, தமிழ் முஸ்லிம்கள் கொஞ்சம் கண்டு கொள்ளாத காட்சியாளர்களாக இருந்தார்கள்.

இது ராஜபக்சேக்கு மகத்தான ஒரு கொண்டாட்டமாக மாறியது.

தமிழின அழிப்பு நிறைவு பெற்று விட்டதாக ஓரளவுக்கு முடிவான பின்னர் சிங்களப் பேரினவாதம் அடுத்தத் திட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டது.

மீண்டும் ஒன்றை நினைவுப் படுத்திக் கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் அழிப்பு என்னும் தோற்றத்தை முன்னிலைப் படுத்தி இந்தியத்தின் காங்கிரசு அரசுடைய முழு ஆதரவைத் தன் கைவசம் ராஜபக்சே அரசு எடுத்துக் கொண்டது.

இப்போது தமிழ் முஸ்லிம்கள் அழிப்பை இந்தியாவிலிருக்கும் மோடி அரசின் மனோபாவத்திற்கு ஏற்ப நிகழ்த்தத் தொடங்கிவிட்டது.

தமிழ் முஸ்லிம் இன அழிப்பு இப்பொழுது நடைபெறுகிறது. இதை இப்பொழுதுதான் நிகழ்த்துகிறார்கள் என்று கருதுவது பிழையானது.

சிங்களப் பேரினவாதம் , தமிழ் முஸ்லிம் இன அழிப்பை தொடங்கிய காலகட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1915 மே 28 ஆம் தினத்தன்றிலிருந்துதான்.

அந்த நேரத்தில் சிங்களவர்கள் தமிழ் முஸ்லிம்களை சிதைக்க நினைத்ததற்குப் பொருளாதாரப் பின்புலம் காரணமாக இருந்தது.

இலங்கையில் தமிழ் முஸ்லிம்களின் கடைகளும் சொத்துக்களும் அன்று சூரையாடப் பட்டன. பேரின மேலாதிக்க சிங்களவர்கள் தமிழின அழிப்பை முதல் முதல் தொடங்கியது தமிழ் முஸ்லிம்கள் மீதுதான்.

ஆனால் அன்றைய ஈழத் தமிழர்களின் தேசிய உணர்வு பெருக்கத்தின் காரணமாக இந்த அழிவைத் தொடர முடியாமல் சிங்கள அரசு ஒத்தி வைத்து விட்டது.

பிந்தைய காலகட்டத்தில் தமிழர்களை , தமிழர்கள் என்றும் , முஸ்லிம்கள் என்றும் பிரித்து வைத்த சூழ்ச்சியின் காரணத்தினால் இரண்டு விதமாகத் தமிழனத்தை அழிக்கத் திட்டம் தீட்டினர்.

தமிழன அழிப்பை காங்கிரசை வைத்து முடித்துக் கொண்டது. இப்பொழுது தமிழ் முஸ்லிம் அழிப்பை பாஜக அரசை வைத்து சாதித்துக் கொள்ள ராஜபக்சேயின் ராஜதந்திரம் செயல் படத் தொடங்கி விட்டது.

பொது பல சேனா என்னும் சிங்கள இயக்கம் இலங்கையில் ஊரூராக கூட்டங்கள் நிகழ்த்தி இலங்கையானது புத்தரின் தேசம். இந்நாட்டில் உள்ள சகலதும் பௌத்தர்களுக்கு மாத்திரமே உரித்தானதுஎன்ற கோஷத்தைப் பிரச்சாரம் செய்தார்கள்.

இந்தியா என்பது இந்துத்துவாவிற்கு மட்டுமே உரித்தானது. இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இந்தியர்கள். மற்ற இந்தியாவில் உள்ள அனைவரும் அந்நியர்களேஇந்தக் கோஷம் இந்தியாவில் யாரால் எழுப்பப் பட்டது?

அவர்களே இந்தியாவில் இன்று ஆட்சி பீடத்தில் இருக்கிறார்கள். இலங்கையில் ஒலிக்கப்படும் கோஷமும் இந்தியாவில் முழங்கப்பட்டு வரும் கோஷமும் ஒன்று.

இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. தமிழ் முஸ்லிம்களின் வணிகத் தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. தமிழ் முஸ்லிம்களில் முதியவர்கள், குழந்தைகள். பெண்கள், இளையவர்கள் சீரழிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஏற்கனவே இந்த நிகழ்வுக்கு முன்மாதிரியாக அயோத்தியில் பாபர் மஸ்ஜித் அழிப்பட்ட வரலாறு இருக்கிறது. மும்பையிலும், குஜராத்திலும் முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம் பெண்கள் சீரழிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை நிகழ்த்தியவர்கள் யார்? அவர்கள்தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இன்று இருக்கிறார்க்ள்.

இலங்கையில் 21 ஜுன் 2014 அன்று விடிகாலை மூன்று மணிக்கு இனந்தெரியாதவர்களால் நோ லிமிட்என்னும் முன்னணி ஆடை விற்பனை நிலையம் தீயிட்டு முற்றுமாக கொளுத்தப்பட்டிருக்கிறது. இந்த நோ லிமிட் நிறுவனம் இலங்கையில் பல கிளைகளைக் கொண்ட பெரும் வணிக நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் உரிமையார் முஸ்லிம். ஆதாவது தமிழ் முஸ்லிம்களின் பொருளாதார அழிப்புக்கு ஒரு முன்னுரை வழங்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு முன்னுதாரணமாக குஜராத்தில் ஏற்கனவே பெஸ்ட் பேக்கரி அழித்தொழிக்கப்பட்டு கோரக் கொலையும் பெண்மைச் சீரழிவும் நிகழ்ந்திருக்கிறது.

இதற்கு யார் காரணம்.? அவர்கள்தாம் இன்று இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

இலங்கையில் ஹலால் சர்ட்டிபிகெட் கொடுப்பதை உடனே தடை செய்ய வேண்டும். ( ஆடு மாடு அறுப்பதை அல்ல. அவற்றை ஹலால் முறையில் அறுப்பதைத் தடை செய்ய வேண்டும்) என்ற கோஷம் சிங்களப் பேரினவாதிகளால் முன்வைக்கப்படுகிறது.

இதற்கு ஏற்கனவே ஒரு முன் வடிவமாகப் பொதுச் சிவில் சட்டம் இந்தியாவிற்கு வேண்டும் என்ற கோஷம் யாரால் இங்கே முன்வைக்கப் படுகிறது? அவர்கள்தான் இன்று இந்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

இப்படி இன்னும் நிறைய ஒப்பிட்டு பார்க்க முடியும். இந்தப் பதிவின் ஆழமான நோக்கத்தை இங்கே முன்வைக்கிறேன்.

முஸ்லிம் மத ஆதரவாக, அல்லது இஸ்லாமிய மார்க்க வெறித்தனத்தோடு இதைப் பதிவு செய்வதாக எவரும் திசை திருப்பிச் சிந்திக்கக் கூடாது.

ஒரு இன அழிவை எப்படி எல்லாம் காரணம் காட்டி பேரினவாதம் அழிக்க முற்படும் என்கின்ற வரலாற்று நிகழ்வுகளைத்தான் இங்கே பதிவு செய்கிறேன்.

யூத இனத்தை ஜெர்மனியில் இல்லாமல் ஆக்க எத்தனைச் செயல்பாடுகளைப் பூரணமான நியாயம் மாதிரி முன்னெடுத்து ஹிட்லர் அழித்தொழித்தானோ அதே காரணங்களும் நடைமுறைகளும் இன்று அரசியலாக்கப்படுகின்றன என்பதுதான் என் வாதம்.

விடுதலைப் புலிகளை அடையாளம் காட்டி, இந்தியத்தின் காங்கிரசு ஆட்சி காலத்தில், தமிழினம் அழிக்கப் பட்டது. இப்பொழுது இஸ்லாமிய அழிப்பு என்ற வடிவத்தைக் கையிலெடுத்து தமிழ் இனம் அழிக்கப் படுகிறது.

அன்று காங்கிரசு ராஜபக்சே அரசை ஆதரித்த மாதிரி, இன்றைய பாஜக அரசும் ராஜபக்சே அரசுக்கு ஆதரவுகளைத் தரத்தான் செய்யும்.

ஆந்திராவில் 1000 ஏக்கர் நிலத்தில் இலங்கை ராஜபக்சே அரசு வணிகம் செய்யத் தயாராகி விட்டது. முப்பதாயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு என்ற காரணம் முன்வைக்கப் படுகிறது.

இது மோடி அரசின் அந்தரங்க ஆதரவு.

இந்தியத்தில் இந்துப் பெருங்குடி மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிருத்துவர்களுக்கும் இன்ன பிற சிறுபான்மை மதத்தவர்களுக்கும் நல்லுறவும் இணக்கமான பிடிப்பும் உறுதியாகவும் மேன்மையாகவும் நிச்சயம் இருக்கிறது. ஆனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் அதன் பிற கிளை அமைப்புகளும் இந்துத்துவா என்னும் வெறி உணர்வை விதைத்து ஒரு இன அழிப்பை தயாரித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்வினையாக சில அமைப்புகள் இஸ்லாமிய வெறியூட்டலை முஸ்லிம்கள் மத்தியில் தூவி வருகின்றனர்.

அதே போல் இலங்கையில் பெரும்பான்மையான சிங்களவர்களும் பௌத்தர்களும் தமிழர்களும் இணக்கமானவர்களாகவும், அணுக்கமானவர்களாகவும் வாழ்கின்றனர். பொது பல சேனா போன்ற அமைப்புகள் பௌத்த வெறியூட்டி இன அழிப்பை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இதன் எதிர்வினையாக தமிழின வெறியூட்டல் இலங்கையில் நடைமுறை பட்டன.

குறிப்பாக ராஜபக்சே முந்தைய ஹிட்லரை முறியடிக்கும் சாதனையை நோக்கி முன்னேறிக்கொண்ட்டிருக்கிறார்.

இந்தியாவில் எந்த அரசுகளாக இருந்தாலும் தனக்கு ஆதரவு தரக் கூடிய நடவடிக்கைகளைத் தன் கைவசம் ராஜபக்சே எடுத்துக் கொண்டிருக்கிறார்.