இந்தியத் தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளிவந்துவிட்டன. பாஜக 340
ஐத் தொட்டு ஒடிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் அறுபதைத் தொடுவதற்கு
எம்பிக் கொண்டிருக்கிறது. பிற கட்சிகள் அல்லது மாநில இயக்கங்கள் 150 ஐ
சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இடதுசாரி இயக்கங்கள் பத்தைத் தாண்டி இருபதை
நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
சுருக்கமாக பாஜக கூட்டணி என்ற தேர்தலுக்கு முன்னிருந்த கோட்பாட்டைத்
தாண்டி ‘தனியணியே’ என பகிரங்கப் படுத்துமளவுக்கு வெற்றி எண்ணிக்கையைத் தொட்டுவிட்டது.
இந்த வெற்றி எதிர்பாராத ஒரு வெற்றி என்ற கருத்து எல்லோருக்கும்
உடன்பாடானது அல்ல.
பாஜகவோ அதன் கூட்டணிகளோ இப்படி எண்ணவில்லை. இந்த அணியை எதிர்த்த
எதிரமைப்புகள்கூட இது நடந்துவிடலாம் என்ற எண்ணியே இருந்தனர். அல்லது இந்த அபாயம்
நடந்துவிடக் கூடாதே என்ற எதிர்ப்பார்ப்பில் உள்ளுக்குள் எதிர்ப்பார்த்துக்
கொண்டிருந்தனர்.
இன்னும் பாஜக கூட்டணியை இணைத்து ஆட்சியை அமைத்துவிடலாம் என்ற உணர்வும்
எல்லோருக்கும் இருந்தது.
இந்தக் கணிதத்தை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது பாஜக வெற்றி
என்பது எதிர்பாராத அதிர்ச்சி வெற்றி அல்ல.
ஆனால் இந்த அசுர வெற்றி திட்டமிடப்பட்டு உழைப்பாலும் கோட்பாட்டாலும்
கொண்டு வரப் பெற்ற வெற்றி என்று சொல்லிக் கொள்வது நிலைமைக்கு பின் பிதற்றிக்
கொள்ளும் போலித்தனமானதாகும்.
புதிய தலைமுறை வாக்காளர்கள் அதாவது நவீன இளைஞர்கள் அரசியலையோ சமூக
தளத்தில் மக்களுடைய அடிமட்டத்தையோ அல்லது சராசரி வர்க்கத்தினரையோ அறிந்திருக்காத
நிலையில் நவீன மீடியாவான சமூக வலைதளங்களில் ஏசி அறைக்குள் இருந்து விவாதித்துக்
கொண்டு இந்திய சமூகத்தின் ஆழங்களையும் அவசியங்களையும் அறிந்துவிட்டதாக
தீர்மானித்து முதிர்ச்சி இல்லாத அரசியல் நிலையில் வழங்கி விட்ட வாக்குகளின்
தீவிரம்தான் இந்த அசுர எண்ணிக்கையின் விபரீதம்.
சில மாதங்களுக்கு முன்னால் டெல்லி சட்டமன்ற தேர்தலில் இதே வேகத்தில்
ஆம் ஆத்மிக்கு ஆதரவைத் தந்துவிட்டு அடுத்த ஒன்றிரண்டு மாதங்களிலே தங்கள் தவறைச்
சரிசெய்துக் கொண்டு இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மியை முழுவதுமாக டெல்லியில்
விளக்குமாற்றால் துடைத்துவிட்டார்கள்.
இந்த அவசர முதிர்ச்சியற்ற முடிவுகளால் நடந்துவிடக் கூடிய தீமைகளை
அடுத்த ஒராண்டுக்குள் இந்த அவசர புதுசுகள் புரிந்துக் கொள்வார்கள்.
நான் இளைய வர்க்கத்தைச் சிந்தனை பலமற்றவர்கள் என்று கருதியதாகத் தவறாக
நினைக்க வேண்டாம். இவர்கள் சிந்தனைக்கு வழிகாட்டிகளான மீடியாக்கள் இவர்களை
உருவாக்குகின்றனர். இவர்கள் அரசியல் தீர்வுகளை உருவாக்கவில்லை என்பதுதான் என்
வாதம்.
இந்தியாவினுடைய உத்திரப் பிரதேசம், பீஹார்
போன்ற மாநிலங்கள் பாஜகவுக்கு அசுர பலம் வர ஆவண செய்துவிட்டன. பாஜகவைப்
பொருத்தளவில் அது சிறுபான்மை அழிப்பு இயக்கமான ஆர்.எஸ்.எஸ். இன் செல்லப் பிள்ளை.
அதே நேரத்தில் தீவிரமான சண்டிப் பிள்ளை என்ற விமர்சனம் எப்பொழுதும் உண்டு.
இது பிழையான விமர்சனம் என்று நிரூபிக்க இன்றுவரை இந்தியத்தில்
உண்மையான தெளிவான ஆதரங்கள் நிச்சயமாக இல்லை என்பதும் உண்மை.
ஆனாலும் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழக் கூடிய
உ.பியிலும், பிஹாரின் சில பகுதிகளிலும் சிறுபான்மையினர் வாக்கு பாஜகவை
விலக்கிவிடவில்லை. இதற்கென்ன காரணம்?
வட மாநிலத்தில் சிறுபான்மைச் சமுதாயங்களை மோடியும் , பாஜகவும்
மோசமான முறையில் சிதைத்து இருக்கிறார்கள் என்பதும் உண்மை. அடுத்தும் தேவைப் பட்டால்
இது நிகழ்த்தப் படும் என்பதும் சத்தியம்.
இங்குதான் ஆழமாக அரசியல் கண்ணோட்டத்தோடு சிந்திக்க வேண்டும்.
பாஜகவுக்கு உயிர் வாழ்க்கை நிலைத்திருக்க வேண்டுமானால் இந்துத்துவா
கோஷம் உயிர் பெற்று இருக்க வேண்டும். இந்துத்துவா என்பது இந்து தத்துவம் என்று
புரிந்துக் கொள்ள கூடாது.
பாஜக அதில் கவனமாக இருக்கிறது.
இந்துத் தத்துவத்தை இந்தியாவிற்குள் முன்வைத்து அரசியல் நடத்துவது பல
ஆபத்துகளை இந்துத்துவாவிற்கே ஏற்படுத்தும் என்பது எல்லாரையும்விட பாஜகவுக்கே
நன்குத் தெரியும்.
இந்துத்துவாவிற்கு எதிரிகளை உருவாக்க வேண்டும். அந்த எதிரிகளைச் சாட
வேண்டும். அந்த எதிரிகளும் பாஜகவை எதிர்ப்பதற்கு பதிலாக இந்துத்துவாவை எதிரியாக
கருதித் தாக்க முற்பட வேண்டும் என்று ராஜரீக தந்திரத்தை ஆர்.எஸ்.எஸ், அதன்
கைப்பிள்ளையான பாஜகவைக் கொண்டு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ், பாஜகவினுடைய இந்தச் செயல்பாட்டை பேயாக்கி மோடியென்ற நபரின்
நடவடிக்கைகளை பிசாசாக்கி இதிலிருந்து சிறுபான்மையினரைக் காக்க
நாங்களிருக்கிறோமென்று பூச்சாண்டிக் காட்டி தங்கள் அரசியல் பலத்திற்கு ஆதரவாக
வைத்துக் கொண்டிருந்தனர்.
இந்த யதார்த்த உண்மையை சிறுபான்மையினர் புரியத் தொடங்கினர். ஆனாலும்
அந்தப் புரிதல் தவறான புரிதலாக இருந்த காரணத்தினால் பாஜக தனது எண்ணிக்கையை இந்தத்
தேர்தலில் உயர்த்திக் கொண்டது.
முதல் கட்டமாக பாஜகவின் இந்த வெற்றியை இந்த மாதிரி கணிப்பில் இருந்து ஆராயத் தொடங்குவோம்.
முதல் கட்டமாக பாஜகவின் இந்த வெற்றியை இந்த மாதிரி கணிப்பில் இருந்து ஆராயத் தொடங்குவோம்.
இதை முதல் தகவலாக பதிவு செய்கிறேன். பாஜக தனது அரசு பொறுப்பை
ஏற்கட்டும். அதற்குப் பின்னால் இன்னும் ஆழமாக அகலமாக உற்று நோக்குவோம்.
No comments:
Post a Comment