வார்த்தைகள் வர்க்கங்களை அடையாளப் படுத்துகிறது.
சங்கக் கால மன்னர்கள் பெயர்ப் பட்டியலை எடுத்துப் பார்க்கும் பொழுது
அவர்களைக் கலப்படம் இல்லாத தமிழ் மன்னர்களாகப் புரிந்துக் கொள்ள முடியும்.
தலையாலங்கானத்து நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன், சோழன் கரிகால் பெருவளத்தான் இப்படி அந்தப்
பெயர்கள் கலப்படம் இல்லாத ஒரு தனி வர்க்கத்தை அடையாளம் காட்டுகின்றன.
உபய குலோத்துங்க சோழன், நந்திவர்மன், மகேந்திர
பல்லவன் என்ற பெயர்கள் கலப்பினத்தை அடையாளப் படுத்துகின்றன.
இப்படித்தான் பெயர்ச்சொற்களே வர்க்கத்தைச் சொல்லிக் காட்டிவிடுகின்றன.
தமிழகத்தில் உள்ள அக்கிரகாரங்களிலோ, சைவத் திருமடங்களிலோ,
வைணப் பகுதிகளிலோ எவரும் சுடலைமாடன், மண்ணாங்கட்டி,
அமாவாசை போன்ற பெயர்களை வைக்கவே மாட்டார்கள்.
ஆச்சாரியார், வரதராஜ பெருமான், ராமகிருஷ்ணன், வெங்கடேஷ் போன்ற நாமாவளிகளைச் சேரிப் பகுதிகள் வைத்துக் கொள்ளவே
செய்யாது.
அக்கிரகாரம் சுடலைமாடனைத் தாழ்ந்ததாகக் கருதித் தவிர்த்துக்
கொள்ளலாம். இதைப் புரிந்துக் கொள்ள முடிகிறது.
விஷ்ணு வர்தனை சேரிப் புறம் ஏன் தீண்டத்தகாததாக ஒதுக்கிக் கொள்ள
வேண்டும்.?
இப்படியான கேள்விகளுக்கு எல்லாம் பதில் கிடைக்காது.
அந்தந்த வர்க்க உணர்வுகளை அவர்களே தீவிரமாகப் பேணிக் கொள்வதால் இது
மாதிரி பெயர்ச் சொற்கள் இடம் மாற முடியவில்லை.
மராட்டியத்தில் பீமராவ் தமிழகத்தில் சுடலைமாடன் போன்ற சொல்.
இந்தியாவின் அரசியல் நிர்ணய சபைக்கு தலைமையேற்ற டாக்டர்.அம்பேத்கர் பெயர்
பீமராவ்தான். அதை மாற்றிவிட அம்பேத்கர் தீர்மானிக்கிறார். அதனால் அவருடைய
நேசத்திற்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியர் அம்பேத்கர் என்பவரின் பெயரைத் தன்
பெயராக்கிக் கொண்டார்.
ஆசிரியர் அம்பேத்கர் தலைச்சாதியான பிராமணச் சாதியர். அதாவது
அம்பேத்கர் எனும் பெயர் அக்கிரகாரத்திற்குரியது.
பீமராவ் அதைத் தன் பெயராக்கிக் கொண்டார்.
அன்று முதல் இன்று வரை அம்பேத்கர் என்ற சொல்லை அக்கிரகாரம் தலித்
வர்க்கத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டது.
அம்பேத்கர் என்ற பெயர் தீண்டத்தகாதது ஆனது. அம்பேத்கர் அதை வைத்துக்
கொண்டதால் அன்றிலிருந்து அந்தப் பெயர் நம்ம ஊர் சுடலைமாடன் ஆகிவிட்டது.
குஜராத்தி மொழியில் நெட்டையன் என்ற பொருளைக் குறிக்கும் ஜின்னா என்ற
பெயர் முஹம்மது அலி ஜின்னாவோடு ஒட்டிக் கொண்டதன் பின்னால், அன்றிலிரிந்து
அந்தக் குஜராத்தி சொல் மதம் மாறி முஸ்லிம் ஆகிவிட்டது.
குஜராத்தில் கூட ஜின்னா என்ற பெயரை முஸ்லிம் அல்லாதவர்கள் வைத்துக்
கொள்வதில்லை.
குஜராத்தி மொழியைத் துளிகூட அறியாத கன்னியாகுமரி வாழ் முஸ்லிம் ஒருவன்
ஜின்னா என்ற பெயரை முஸ்லிம் பெயராகத் தாங்கித் திரிகிறான்.
சீதக்காதி என்ற பெயர் தமிழ் முஸ்லிம் பெயராகி விட்டது. இந்தச்
சொல்லுக்கு தமிழில் அர்த்தம் கிடையாது.
கான் அப்துல் கபார் கான் என்ற பெயரைத் தமிழக முஸ்லிம் கேட்டால் உடனே
அவரை உருது முஸ்லிம் என்று சொல்லிவிடுவான்.
இப்படி ஒவ்வொரு சொற்களுக்குள்ளும் ஒரு வரலாறு ஒளிந்து
கொண்டிருக்கிறது.
வெறும் பெயர்ச்சொல் என்று ஒதுக்கி விடமுடியாது. அந்தப்
பெயர்ச்சொல்லுக்குள் சாதித்துவம் இருக்கிறது. மதத்துவம் இருக்கிறது. உயரத்துவம் இருக்கிறது.
தாழ்ச்சித்துவம் இருக்கிறது.
இப்படி ஒரு வரலாற்றைத் தொகுத்தால் சமூக வரலாற்றின் யதார்த்த முகம்
துல்லியமாக அடையாளப் படலாம்.
No comments:
Post a Comment