Monday, May 26, 2014

அந்தரங்கம்தான் உண்மையானது..!



தி இந்து நாளிதழ் மே 25 இல் ஒரு பேட்டி பிரசுரமாகி இருக்கிறது. பேட்டி எடுத்தவர் ஆர்.ஷஃபீ முன்னா. பேட்டிக் கொடுத்தவர் சேஷாத்ரி சாரி.

இந்த சேஷாத்ரி சாரி ஆர்.எஸ்.எஸ் - யின் அதிகார பூர்வ ஆங்கில இதழான ஆர்கனைசரின் முன்னாள் ஆசிரியர். பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர். இவற்றையெல்லாம் விட ஆர்.எஸ்.எஸ் தளபதிகளில் அதிமுக்கியமானவர். கூடுதலாக இவர் மும்பை வாழ் தமிழர்.

மோடி என்ன சொல்கிறார்? என்று ஆராய்வதைவிட, பாஜக என்ன நினைக்கிறது? என்று தெரிந்து கொள்வதைவிட, ஆர்.எஸ்.எஸ் என்ன முடிவு எடுத்து இருக்கிறது என்பதிலேதான் பூரணமான உண்மை புரிய வரும். ஆர்.எஸ்.எஸ்-யின் முடிவு இப்படித்தான் என அதன் தளபதிகளில் பலரும் பல நேரங்களில் சொல்லி விடுவார்கள்.

இது ஒரு சாமர்த்தியமான அணுகுமுறை. பாஜகவை யாரும் குற்றம் பிடிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் பாஜகவின் நிழலல்ல. அல்லது ஆர்.எஸ்.எஸ்- யின் சுவடு பாஜக அல்ல என லாஜிக் பேசி பாஜக தப்பிக் கொள்ள கடந்த காலங்களில் இதைத்தான் கடைப்பிடித்துள்ளது. எதிர்வரும் நாள்களுக்கும் இது சாலப் பொருந்தும்.

சேஷாத்ரி சில கேள்விகளுக்குத் தந்திருக்கும் பதில் அவர் சொந்தப் பதிலல்ல. அதுதான் பாஜகவின் அந்தரங்கப் பதில். ஆர்.எஸ்.எஸ்- யின் அறிவிப்பு.

பேட்டித் தொடர்கிறது..

நடக்கவிருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியா? பாஜகவின் ஆட்சியா?”

பாஜக எண்ணுவது போல, அது தனி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கும் போதும், தே.ஜ.கூ ஆட்சியாக இருக்க வேண்டும் என்று அது விரும்புவதையே ஆர்.எஸ்.எஸ் வரவேற்கிறது. இதில் பாஜக நல்லாட்சிகளுக்காகப் பத்தடிகள் எடுத்து வைத்தால் அதனுடன் கூட்டணிக் கட்சிகளும் பத்தடிகள் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த நாட்டின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும்.

இந்தப் பதிலைச் சிந்திக்க வேண்டும்.

பாஜக நல்லாட்சிக்காகப் பத்தடிகள் எடுத்து வைத்தால்இந்த வாசகம் தெளிவாக இருக்கிறது.

பாஜக எது நல்லாட்சி என்று முடிவு செய்கிறதோ அந்த முடிவை அமைக்க பத்தடிகள் எடுத்து வைக்கும். கூட்டணிகள் அதனோடு சேர்ந்து பத்தடிகள் தூக்கிக் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டின் பிரச்சனைகளை நாம் தீர்க்க முடியும் என்கிறார்.

பாஜகவின் மனோபாவம் கொண்ட நல்லாட்சிக்கு அதன் கூட்டணிகள் ஒத்தூத வேண்டும். அதாவது கூட்டணிகளின் சுயத்தன்மைகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும். அதுதான் இந்த நாட்டின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய வழி என ஆர்.எஸ்.எஸ் அறிவித்துவிட்டது.

இது தே.ஜ.கூ ஆட்சியெனில் மோடி பதவியேற்புக்கு சார்க் நாட்டு ஆட்சி தலைவர்களை அழைக்க பாஜக தனித்து முடிவெடுத்தது ஏன்?”

இது பாஜகவின் தன்னிச்சையான முடிவு அல்ல. அடுத்து இனிவரும் நாட்களில் வெளியுறவு விவகாரங்கள் எப்படி இருக்க வேண்டும் எனவும் இந்த நாட்டின் சக்தியை எப்படி உபயோகப் படுத்த முடியும் என்பதற்கும் ஆதாரமாக விடப்பட்டதுதான் இந்த அழைப்பு. இந்த விஷயத்தைத் தமிழகத்தில் ராஜபக்சேவின் வரவை எதிர்க்கும் அரசியல் கட்சிகளுக்கு மெல்ல மெல்ல புரிய வைப்போம். அவர்கள் புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.

சேஷாத்ரி சாரி, ஆர்.எஸ்.எஸ் -யின் அந்தரங்கத்தைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

பாஜகவின் இந்த முடிவு தன்னிச்சையான முடிவு அல்ல. கூட்டணியின் முடிவா? என்றால் அதுவும் இல்லை.

அப்படியென்றால் யாரைக் கலந்து பாஜக முடிவு எடுத்திருக்கிறது? மேலும் வெளியுறவுக் கொள்கையும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இதில் அடையாளம் இருக்கிறது என்று சொல்லும் சேஷாத்ரி சாரி அந்த வெளியுறவுக் கொள்கை ஆர்.எஸ்.எஸ்-யின் கொள்கைதான் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறார்.

இந்த உண்மைகளை புரிந்துக் கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் மெல்ல மெல்லப் புரிய வைப்போம். புரிய மறுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்பதையும் தெரிவிக்கிறார்.

அது நாட்டிற்கு நல்லதல்ல என்று சொன்னால் என்ன பொருள்?

புரிந்துக் கொள்ள இயலாத தமிழக அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை. தேசத் துரோகச் சட்டம் உங்கள் தலையில் வந்து அமரலாம்.

ஐ.நா தீர்மானத்திற்கு முன்பாக தமிழகத்தின் பாஜக தலைவர்கள் தம் தலைமையிடம் கேட்டபொழுது அதன் தேசிய தலைவர்கள் வெளிப்படையாக வந்து கருத்து சொல்லாதது ஏன்?”

கருத்து கூறினார்கள். அது பரவலாக செய்திகளில் வரவில்லை. இலங்கை தமிழர் பிரச்சினைக்கு காஷ்மீர் ஒரு பெரிய உதாரணம். பலஸ்தீனமும் ஒரு நல்ல உதாரணம். இதுபோல பல பிரச்சனைகள் இந்த உலகத்தில் உலக மயமாக்கப் பட்டு அவை தீர்க்கப் படாமலேயே உள்ளன. எனவே இந்த பிரச்சனை இலங்கைத் தமிழர், இலங்கை அரசு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே தீர்க்கப் படுவதுதான் சிறப்பாக இருக்கும்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை அவர்களின் முக்கிய விருப்பங்களின் பெயரில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தீர்க்கப் பட வேண்டும் என்பதில் இந்தியா மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம். இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம்.

சேஷாத்ரி சாரியின் இந்தப் பதிலில் ஆர்.எஸ்.எஸ் -யின் சரியான முகம் தெரிகிறது.

வரலாற்றை எப்பொழுதுமே தன் வலைக்குள் இழுத்து முடக்கிக் கொள்ளும் கலையில் ஆர்.எஸ்.எஸ் அசகாய சூரன். இங்கேயும் அந்த ஞான வெளிப்பாட்டை சேஷாத்ரி சாரி பதிவு செய்கிறார். காஷ்மீரும் பாலஸ்தீனமும் சந்தித்துக் கொண்டிருப்பது அதன் பிறப்பில் இருந்து நடந்துக் கொண்டிருப்பது. இலங்கைப் பிரச்சனை போன்றது அல்ல அது.

இலங்கையின் பிரிவினையை ஆர்.எஸ்.எஸ் எதிர்க்கிறது. இதில் எங்கேயோ ஒரு அடிப்படை வரலாறு உருத்திக் கொண்டிருக்கிறதோ? என்ற ஐயம் நமக்கு எழுகிறது. இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் குடியேறிவர்கள்தாம். இலங்கைவாசிகள் இலங்கை மலையகப் பூர்வகுடிகள்.

இந்த வரலாறு நினைவுக்கு வரும்பொழுது சிங்களவர்கள் என்கின்ற இனம் வங்காளம், குஜராத், ஒரியா பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறிய குடியேறிகள்தாம். அவர்கள்தாம் சிங்கள குடிகளாக அறியப்படுகின்றனர் என்ற உண்மை, உண்மையானால் இலங்கையில் இன்று நடப்பதும், தமிழக - இந்திய வடபுல வர்க்கத்தினரின் மோதலாகத்தான் ஆர்.எஸ்.எஸ் ஆழ்மனதில் பதிவு செய்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் உறுதி ஆவதால்தான், இலங்கை பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம் என்ற ஆர்.எஸ்.எஸ்-யின் கருத்தை சேஷாத்ரி சாரி பதிவு செய்து இருக்கிறார்.

இந்த விளக்கத்தைத் தேர்தலுக்கு முன்பாக அளித்து இருக்கலாமே? “

எங்கள் விளக்கத்தை பொது மக்கள் கவனத்துக்குக் கொண்டுச் செல்வதைத் தமிழகத்தின் அரசியல் சாதுர்யவான்கள் தடுத்து விட்டனர். இது நம் அரசியல் அமைப்பின் ஒரு குறைபாடு.

ஆர்.எஸ்.எஸ்- யின் முழு பூசணிக்காய் இலையில் வந்து விழுந்துவிட்டது.

நாங்கள் இலங்கைப் பிரச்சனையை இப்படித்தான் அணுகுகிறோம் என்று மக்கள் கவனத்துக்கு கொண்டு வரத்தான் செய்தோம். ஆனால் தமிழகத்தில் எங்களோடு கூட்டணியில் இருந்த அரசியல் சாதுர்யவான்கள்தடுத்து விட்டனர் என்கிறார்.

யார் இந்த சாதுர்யவான்கள்? வைகோவா? ராமதாஸா? தமிழருவி மணியனா? விஜயகாந்தா? சாரிதான் விளக்க வேண்டும்.

இத்தனைத் தமிழகத் தலைவர்களும் பாஜக உண்மை சொல்ல வந்ததைத் தடுத்த குற்றத்திற்குரியவர்கள் ஆகிறார்கள். மேலும் தமிழக மக்களின் செவிகளையும் கண்களையும் மறைத்து பாஜகவுக்கு வாக்குக் கேட்டு வீதியுலா வந்து வாக்குகளை வாங்கித் தந்த கொடும் குற்றத்துக்கும் உள்ளாகிறார்கள்.

இது நம் அரசியல் அமைப்பின் குறைபாடுஎன்று சாரி குறிப்பிடுவது எதையென்று புரியவில்லை.

கூட்டணி - என்றால் தலைமை ஏற்போரின் பாதம் பற்றி நடப்பதைத் தவிர வேறு தனிப்பட்ட கோட்பாடுகளை கூட்டிக் கொண்டு வரக்கூடாது என்று தெளிவாக புரிய வைக்காத குறைபாடுதான் நம் அரசியல் குறைபாடுஎன்று சாரி குறிப்பிடுகிறாரா?

பாஜக எவ்வளவு சாதுர்யமாகத் தன் சக அரசியல் தலைவர்களைத் தான், தனி அதிகாரத்தில் வந்தவுடன் காவுக் கொடுத்து விட்டது பார்த்தீர்களா?

சார்க் நாடுகளின் ஆட்சித் தலைவர்களுக்கான அழைப்பு மூலம் பாஜக சொல்லும் செய்தி என்ன? இந்தியா ஒரு வல்லரசு என்கிறீர்களா? மோடி அதன் முடிசூடா சர்க்கவர்த்தி என்கிறீர்களா?”

இது உலகின் எந்த உலக நாடுகளுக்கும் கிடைக்காத ஜனநாயகத்தின் வெற்றி. இதில் அதிக அளவில் வாக்களிப்பு நடைப்பெற்று ஒரே கட்சிக்கு மாபெரும் வெற்றிக் கிடைத்துள்ளது. இதை இந்தியாவின் அண்டை நாடுகளுக்கும் உலகத்திற்கும் எடுத்துக் காட்ட விரும்புகிறோம்.

இந்த ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைக்கும் எனவும் இதுதான் நாட்டிற்கான சிறந்த வளர்ச்சி என்பதையும் உலகத்திற்கு உணர்த்த சார்க் நாடுகள் அழைக்கப் பட்டிருக்கின்றன.

ராஜபக்சே போன்ற சார்க் நாட்டு அதிபர்களைப் பாஜக அரசு மோடி பதவியேற்புக்கு அழைத்ததில் மறைபொருள் வெளிப் பாய்ந்துவிட்டது.

பாஜகவும் மோடியும் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியா முழுவதும் ஒட்டு மொத்தமாக எமக்குத் தந்த வெற்றி. இதை அண்டை நாடுகள் புரிந்து கொள்ளுங்கள்.

நாங்கள் தீர்மானிப்பதுதான் இனி இந்தியா. அந்த உரிமையை இந்திய மக்கள் மனப் பூர்வமாக எமக்குக் கொடுத்து விட்டார்கள். அதனால் இந்த முடிசூட்டு விழாவிற்கு வாருங்கள்.

எங்கள் ராஜ்ஜிய ராஜாவின், ராஜ்ஜிய பரிபாலனத்தையும் எங்களின் ராஜ்ய அதிகாரத்தையும் நீங்கள் உணர்ந்துக் கொள்ளுங்கள் என்பதை வெளிக்காட்டத்தான் சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்து இருக்கிறோம் என்ற தகவல் தரப்பட்டு விட்டது.

இதுதான் ஆர்.எஸ்.எஸ் -யின் நீண்ட கால லட்சியம். அதற்கு வாய்த்து .இருக்கும் வாய்ப்பு இது என்பதைத் தெளிவு படுத்திவிட்டார்.

அண்டை நாடு, நேச நாடு என்ற வாசகங்கள் எல்லாம் வெளிப்புறத்துக்குச் சொல்லும் வேடிக்கை மொழிகள். அந்தரங்கத்தில் இதுதான் எங்கள் ராஜ்ய பரிபாலனம் என்ற உத்தரவாதத்தைத் தருவதற்குத்தான் சார்க் நாட்டுத் தலைவர்களின் அழைப்பு.


பாஜகவின் போலிப் பரிதாப முகத்தை தேர்தலுக்கு முன்னால் தூக்கித் திரிந்த அதன் நேசக் கட்சிகளே! உங்களுடைய பரிதாபத்தை வரலாறு அவமானகரமானதாக நிச்சயம் பதிவு செய்து விட்டது.

No comments:

Post a Comment