இரண்டு தினங்களுக்கு முன்னால் தந்தி டிவியின் ஆயுத எழுத்துப்
பகுதியில் பா.ஜ.க.வினுடைய நண்பர் ராகவன் பல செய்திகளை முன் வைத்தார்.
அவற்றில் இரண்டு தகவல்கள் தனியே சிந்திக்கத்தக்கவை.
“இந்து என்று ஒரு மதமே கிடையாது. இந்து மதம் என்று சொல்பவர்
அறியாமையில் சொல்லுகிறார். இந்தியாவில் உள்ள அனைவருமே இந்துகள்தாம். பா.ஜ.க.
இதைத்தான் முன்வைக்கிறது”.
ராகவனின் இந்தக் கருத்து, பூரணமாக பா.ஜ.க.வை அடையாளம் காட்டுகிறது.
இந்து என்பது மதக் கோட்பாடு கொண்ட பெயர்ச்சொல் அல்ல. அது மண்
பரப்பளவின் எல்லையைச் சுட்டிக் காட்டும் ஒரு பெயர்ச்சொல் என்ற ஒரு செய்தியை அவர்
முன்வைக்கிறார்.
இந்தியா என்ற ஒரு பெயர் இந்த மண் பிரதேசத்திற்கு எப்போது தரப்பட்டது?
என்ற கேள்விக்கு வரலாற்று ரீதியான பதிலை ராகவன்தான் தந்தாக வேண்டும்.
இந்தியா என்ற சொல்லின் கண்டுபிடிப்பிற்கு, பாரசீகத்துக்காரர்களும்,
அரபு மொழிக் காரர்களும், ஆங்கிலேயர்களும் சொந்தம் கொண்டாடக்கூடிய
தகுதி பெற்று இருக்கிறார்கள் என்கிற சரித்திர நிரூபணம் இன்றுவரை நிலை பெற்று
இருக்கிறது.
இந்தியாவில் வாழ்கிறவர்கள் அனைவரும் இந்துக்கள் என்ற சொல்லுக்குள்
அடைபடுவார்கள் என்பது உறுதியானால், இந்தியா என்கின்ற பெயர்ச் சூடல் இந்த
மண்ணிற்கு வருவதற்கு முன்னால் இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் இந்துக்கள் அல்லர்
என்ற முடிவுக்கு ராகவன் வரத் தயாராக இருக்கிறாரா?..
இந்து, மதமல்ல என்ற வார்த்தையில் உண்மையான நம்பிக்கை ரகவனுக்கு இருக்குமானால்,
அதனை வரவேற்கத்தான் வேண்டும்.
ஏனென்றால், நமது அரசியல் அமைப்புச் சட்டம் இந்து என்ற மதத்தவரைக் குறிப்பிடும்
பொழுது, “யார் முஸ்லிம் இல்லையோ? யார் கிறிஸ்தவர் இல்லையோ? யார்
பார்சி இல்லையோ? அவர் இந்து ஆவார்” என்ற பொருள்பட குறிப்பிடுகிறது.
அதாவது ஒரு அடையாளம் கேட்கப்பட்டால் அந்தப் பொருளிலிருந்துதான்
அடையாளம் காட்டப்பட வேண்டும். இதுதான் அறிவியல் பூர்வமானப் புரிதல்.
அதைத் தவிர்த்து, ஒரு பொருளின் சுற்றுவட்டார அடையாளங்களைச் சொல்லி இவைகள் அல்லாதது அது
என குறிப்பிட்டால் இந்த விளக்கம் எவ்வளவு வேடிக்கையானதோ அந்த அளவு அர்த்தமற்ற
விளக்கமாக அது அமைந்திருக்கும்.
ராகவன் இப்படித்தான் இந்து என்ற சொல்லைப் புரிந்திருக்கிறாரா? அப்படி
ஏற்றுக் கொண்டால் இங்கே நிகழ்ந்து இருக்கக் கூடிய அத்தனைக் கலவரங்களுக்கும் ஒரு
பொருளுமே இல்லையா? பொய்த் தோற்றத்தை வைத்துக் கொண்டு அரசியலை நாம் நடத்திக் கொண்டு
இருக்கிறோம் என்பதை அவர் ஒப்புக் கொண்டு விட்டாரா?
மாயமான் ஆசையில் சீதா தேவி வழிகெட்ட குணாம்சம்தான் இந்தியத்தின்
அரசியல் போக்குகளா?
இந்து, மதம் என்று ஒப்புக் கொள்ளக் கூடியவர்கள் ஏற்றுக் கொண்டு இருக்கும்
வேதங்களில், இதிகாசங்களில் மற்றும் உள்ள உபனிஷத்துக்களில் எங்குமே, இந்து
என்ற ஒரு சொல் காணப்படவில்லை.
இந்தியா என்ற இன்றைய வரைபடத்திற்கு அப்பாற்பட்ட அன்னியர்கள்தாம் இந்து
என்ற சொல்லை உருவாக்கி நமக்குத் தந்து இருக்கிறார்கள். இந்த அன்னியர்
கண்டுபிடிப்பை வைத்துக் கொண்டு சுதேச முழக்கமாக பா.ஜ.க. அரசியல் நடத்துவதை ராகவன்
ஏற்கிறாரா? வெறுக்கிறாரா?
இந்தியா என்ற இன்றைய மண்பரப்பு முந்தைய வரலாற்றுக் காலங்களில் ஒரு
ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்ததில்லை.
மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, ஹர்ஷப் பேரரசு, ராஜபுத்திரப் பேரரசு, கலிங்கப் பேரரசு, மராட்டியப்
பேரரசு, விஜயநகரப் பேரரசு, சேரப் பேரரசு, சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு, பல்லவப் பேரரசு, சதகரணிப் பேரரசு இப்படி அடுக்கிக் கொண்டே போகக் கூடியப் பேரரசுகளின்
தொகுப்புகள்தாம் இன்றைய இந்தியம்.
இனங்களால், மொழிகளால், இன்னும் உள்ள பல வர்க்கப் பிரிவுகளால் முற்றிலும் மாறுபட்ட
கடைப்படிப்புக் காரர்களால் இந்த மண் பிரதேசம் ஆளப்பட்டு இருக்கிறது என்ற உண்மையை
ராகவன் மறைத்து விட முடியாது.
இவர்களை எல்லாம் இந்துகள்தாம் எனக் கட்டாயப்படுத்தி, ஒரு
தொழுவத்துக்குள் அடைக்கப்பட்ட நான்குகால் பிராணிகள் என வலியுருத்துவதுதான்
பா.ஜ.க.வின் அடிப்படை அரசியல் தந்திரம். இந்தத் தந்திரம் ஆர்.எஸ்.எஸ். என்ற அரக்க
கர்ப்பத்தில் உதித்த கொடிய விஷமாகும்.
இந்தியாவிற்கு ஆதாரமான கோட்பாட்டுக்களை ராமாயணம், மஹாபாரதம்
என்ற இரண்டு இதிகாசங்களில்தான் காணமுடிகிறது என ராகவன் இன்னொரு செய்தியையும்
சொல்லி இருக்கிறார்.
இந்த இரு இதிகாசங்களுக்கும், பாரசீகத்து
யூத சிந்தனைகளுக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு.
யூத தெய்வங்கள், மதக் கோட்பாடுகள், ஆட்சி அணுகுமுறைகள், ராஜதந்திரங்கள், நீதி
போதனைகள், ஒழுக்க வரையறைகள் இந்த இரண்டு இதிகாசங்களிலும் ஆழமாகப் பதியப்பட்டு
இருக்கின்றன.
இந்தக் கோட்பாடுதான் இவர்கள் காணும் இந்தியக் கோட்பாடுகள் என்ற
பாஜகவின் உண்மையை நாம் புரிந்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது?..
1947 இல் நம்மிலிருந்து பிரிந்து போன அண்டைப் பகைநாடு பாகிஸ்தானம், வங்காளம், அதற்கு முன் பிரிந்து போன ஆப்கானிஸ்தானம் போன்றப் பிரதேசங்கள்
இந்தியாவில் இருந்தவைதாம்.
அதாவது ராகவன் கூற்றுப் படி இந்தியவில் உள்ளவர்கள் அனைவரும்
இந்துக்கள் என்று முடிவானால் பாகிஸ்தானர்களாக இருக்கும் இந்துக்கள் இந்தியாவை
உடைத்து விட்டார்கள். வங்காள இந்துக்கள் பாகிஸ்தானைச் சிதைத்து விட்டார்கள்.
ஆப்கானிஸ்தான இந்துக்களும் இந்தியாவிற்கு அன்னியமாகி விட்டார்கள் என்று
சொல்வதுதானே சரியாக இருக்கும்?
இந்தியா ஒரே கலாச்சாரத்திற்குக் கீழ் இருக்க வேண்டும் என்ற யூத ஆரிய
குறும்புத்தனம் மீண்டும் முன்வைக்கப் படுகிறது.
ஆட்சியை பாஜக கைவசம் கொள்ளப் போகிறதோ இல்லையோ? தெளிவாகத்
தெரியவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் தத்துவங்களை மீடியாக்களில் வெளிப்படையாக
முன்வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
ராமர் பிறந்த இடம் அயோத்தி. அவர் பிறந்த அறைதான் இடிக்கப்பட்டு அங்கு
பாபரி மஸ்ஜித் எழுப்பப்பட்டது எனவே அதை தகர்த்துவிட்டோம். அங்கே ராமரின் கோயில்
உருவாக்கியே தீருவோம் எனப் பிரகடனப் படுத்திவிட்டார்கள்.
வரலாற்று ஆய்வாளர் என்று முத்திரைக் குத்தப்பட்ட ஒ.பி.தியாகி
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஏற்கனவே ஒரு கதையை அவிழ்த்து
விட்டிருக்கிறார்.
கிருஷ்ணன் கோபியர்களுடன் லீலா வினோதங்களை நிகழ்த்திய யமுனை நதிக்கரை
எது தெரியுமா? எந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கிருஷ்ணன் கோபியர் ஆடைகளை அபகரித்து
அமர்ந்திருந்தானோ அந்த மரம் இருந்த இடத்தில்தான் , அந்த
யமுனைக் கரை தீரத்தில்தான் முகலாயப் பேரரசன் தன் மனைவியின் காதல் சின்னமாகத்
தாஜ்மகாலை எழுப்பி இருக்கிறான்.
தாஜ்மஹால் என்ற காதல் சின்னம் கிருஷ்ண லீலா வினோதத்தை மறைக்க
எழுப்பப்பட்ட ஒன்றுதான். எனவே அந்தச் சின்னத்தைத் தகர்த்துவிட்டு கிருஷ்ணனுக்கு
அங்கே கோயில் எழுப்ப வேண்டும் என ஓ.பி. தியாகி ஏற்கனவே சொல்லிவைத்த இந்தக் கொடூரம்
டெல்லியில் பாராளுமன்றத்துக்குள் பாஜக நடமாடத் தொடங்கினால் அடுத்து
நடைமுறையாகலாம்.
உலக அதிசயங்களில் ஒன்றாக வரலாறு பதிவு செய்து இருக்கக் கூடிய
தாஜ்மஹால், பாபரி மஸ்ஜித் மண்ணாகிப் போன கதைபோல குப்பைக் குவியலாக மாற்றப்
படலாம்.
நரசிம்மராவ் டெல்லியில் ஆட்சியாண்ட போது பாபரி மஸ்ஜித் காணாமல் போனது.
மோடி ஆட்சியில் அமரும் வாய்ப்பு வந்தால் உலக அதிசயங்களில் ஒன்று உருத்தெரியாமல்
போகலாம்.
இப்படித்தான் பாஜக தன்னுடைய பிறப்பின் அர்த்தத்தை இதுவரை
நடைமுறைப்படுத்தி வந்து கொண்டிருக்கிறது.
இந்தத் தகவல்களினுடைய மறைமுக அறிவிப்புத்தான் நண்பர் ராகவன்
போன்றவர்களின் தத்துவ பொன்மொழிகள்.
மோடி அலையென்னும் மோசடி, எதிர்க்காலத்தில் உலக வெளிக்கு இப்படி ஒரு
இந்திய அவமானத்தை நிகழ்த்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் யாரும் தர முடியாது.
No comments:
Post a Comment