அம்மா உருவில் ஒரு ஹல்வா ஐயர்..!
இந்த மாலைக்கட்டித் தெருவில் கிளைத்தெருக்களாகச் சில தெருக்கள் முட்டி
வந்து நிற்கும். லேனா தியேட்டரைத் தொடர்ந்து இரண்டாவதாக வந்து
மாலைக்கட்டித்தெருவில் முட்டி நிற்கும் தெரு, போல்
நாராயணம் பிள்ளைத் தெரு.
மாலைக்கட்டித் தெருவும் போல் நாராயணம் பிள்ளைத் தெருவும் முட்டி
நிற்கும் முனையில் ஹோட்டல் மகாலட்சுமி என்ற ஒரு சின்ன உணவகமிருந்தது.
நான் குறிப்பிடும் காலம் 1969ஆம்
ஆண்டு. மகாலட்சுமி ஹோட்டலைத் தொட்டு நகரசபைப் பள்ளிக்கூடம் ஒன்றிருக்கும்.
ஹோட்டல் மகாலட்சுமியின் உரிமையாளர் பிராமணச் சமுதாயத்தைச் சார்ந்தவர்.
இந்த ஹோட்டலின் உணவு, வீடுகளின் கைச்சுவையை நினைவு படுத்தும்.
உணவு சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். உரிமையாளர் ஐயருக்குக்
குழந்தைகள் கிடையாது,
மகாலட்சுமி ஹோட்டலில் மாத கணக்கு வைப்பவர்கள் கூட்டம்தான் அதிகம்.
ஏதாவது பணியில் இருப்பவர்களுக்கு மாத கணக்கைத் தொடங்க உரிமையாளர் ஐயர்
அனுமதிப்பார். கராராக முன்பணமாக 150 ரூபாய் கட்ட வேண்டும்.
சில அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களுக்கும் மாத கணக்கு வைத்துக்
கொள்ள சம்மதித்து இருந்தார்.
மாணவர்கள் 100 ரூபாய் முன்பணம் கட்டிவிட வேண்டும். இப்படியெல்லாம் சட்டதிட்டங்களை
வைத்து சமரசம் செய்து கொள்ள முடியாத கண்டிப்புடன் நடந்துக் கொள்வார்.
நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எல்லாக் காலமும் பல்கலைக் கழக
விடுதியில் தங்கியதே இல்லை. சிதம்பரத்தில் அறை எடுத்துத்தான் தங்கிப் படித்தேன்.
கல்லூரி விடுதியில் தங்கக் கூடாது என்ற சங்கல்பம் எனக்குக் கிடையாது.
ஆரம்பத்தில் சிதம்பரமே எனக்குப் பரிட்சயம் இல்லாத ஊர்தான்.
பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் புலவர் படிக்க இடம் கிடைத்தவுடன்
நானும் எல்லா மாணவர்களைப் போலவும் பல்கலைக் கழக விடுதிக்கு மனு செய்தேன்.
மனு செய்த எல்லா மாணவர்களுக்கும் விடுதியில் இடம் கிடைத்தது. என்
மனுவுக்குப் பதிலே இல்லை. இது ஏன் நடந்தது? இதுவரை
எனக்கும் தெரியாது.
ஆனால் அந்தக் காலத்து அண்ணாமலை விடுதி உணவு ராஜபோகமான உணவு. அதைத்
துய்ப்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் மனு செய்த எனக்கு
மட்டும் கிடைக்கவில்லை. அதனால் சிதம்பரத்தில் அறை எடுத்துத் தங்கினேன்.
தினம் ஒவ்வொரு கடைகளாகத் தின்று திரிந்தேன். உளூந்தூர்ப் பேட்டை
சண்முகம் ஐயா தொடர்பு வந்ததின் பின்னால், ஐயா
வீட்டில் தங்கிப் படித்த புலவர் மாணவர்கள் தகடூர் பாவாணன் ( தர்மபுரி
மேலப்புலியூர் கிருஷ்ணன்), எழிலன் இவர்கள் கணக்கு வைத்திருந்த மகாலட்சுமி ஹோட்டலில் எனக்கும்
கணக்கு வைக்கச் சிபாரிசு செய்தார்கள்.
அந்த நேரத்தில் என் கையில் முன்பணமாக கட்ட வேண்டிய 100 ரூபாய்
இல்லை. அதை அவரிடம் சொன்னேன். ஐயர் என்னை உற்றுப் பார்த்தார். என்ன நினைத்தாரோ
தெரியவில்லை.
“சரி, இந்த நோட்டில் உங்கள் பெயரை எழுதிக் கொள்ளுங்கள். கணக்கு தொடர்ந்து
கொள்ளுங்கள். பின்னர் முன்பணம் கட்டுங்கள்” என்று
சொல்லி அனுமதித்தார்.
ஆனால் நான் கணக்கு வைத்திருந்த இரண்டரை ஆண்டுகளில் முன்பணம் கடைசிவரை
கட்டவில்லை. ஐயர் சட்டதிட்டங்களை மீறாதவர். ஆனாலும் அவர் கடையில் அக்கவுண்ட்
வைத்திருந்த அனைவரிடமும் அதைக் காட்டினார். என்னிடம் மட்டும் விதிவிலக்காக
நடந்துக் கொண்டார்.
ஐயரை பார்க்கும் பொழுது, யாராக இருந்தாலும் அவர்கள் மனதில் ஒரு
மரியாதை ஏற்படும். அவர் வார்த்தைகளில் கண்டிப்பு இருக்கும். அதே நேரத்தில் அவர்
மொழிகளிலும் நடவடிக்கைகளிலும் அன்பு கனிந்த ஈரம் கசிந்து கொண்டே இருக்கும்.
ஐயரை உற்றுக் கவனித்தால் நமது குடும்பத்தில் யாராவது ஒரு
உறவுக்காரரின் தோற்றம் தெரியும். அப்படி ஒரு வடிவ நேர்த்தி. உணவுப் பரிமாற்றத்ததை
அவரே கவனித்து பரிமாறுவார்.
அந்தப் பரிமாற்றத்தில் ஒரு பாசம் நம் இலைகளில் வழிந்துக் கிடக்கும்.
மகாலட்சுமி ஹோட்டலில் உணவருந்தியர்கள் எவரும் வெறும் உணவை மட்டும் அருந்தவில்லை.
ஐயரின் பாசத்தையும் கனிவையும் கலந்தே அருந்தினார்கள்.
அந்த சின்ன மகாலட்சுமி ஹோட்டலில் அவர் கல்லாவில் அமர்ந்திருக்கும்
பொழுது அது ஒரு தோரணையாக கொலுவிருக்கும். சிம்மாசனத்தில் ஒரு குறுநில மன்னன்
வீற்றிருக்கும் அரசாட்சி கோலம் தரும்.
அந்த சின்ன இடம் அவர் சம்ராஜ்யம் என்ற உணர்வு அவருக்கு இருக்கும்.
ஐயர் மாணவர்களுக்கு பரிமாறும் பொழுது தாயாகவே மாறிவிடுவார். சாதத்தை
இலையில் கொட்டும்பொழுதும் , சாம்பாரை இடும்பொழுதும், காய்கறிகளை நிரம்ப வைத்து ஊட்டிவிடாத
குறையாக உபசரிப்பார்.
தயிருக்கு மட்டும் தனியாகக் காசு தர வேண்டும். தனி பசுத்தயிர் கொழு
கொழு என கட்டித் தன்மையில் இலையில் வந்துவிழும்.
சில மாணவர்கள் பொருளாதார காரணத்தால் தயிரைத் தவிர்ப்பார்கள். ஆனால்
ஐயர் விடமாட்டார்.
“தம்பி, நீ காசு தர வேண்டாம். தயிர் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. நான்
தருகிறேன். நீ கண்டிப்பாக உணவருந்து.” என கட்டாயப்படுத்தித் தயிரைச் சாதத்தின்
மத்தியில் தழும்ப விடுவார்.
ஐயருக்கு ஒரு ஆழமான மன உறுதி உண்டு. அவர் கடையில் சாப்பிடுகிற
மாணவர்கள் வெளியூரிலிருந்து இங்கு வந்து படிப்பவர்கள். அவர்கள் வீட்டில் தாய்
தரும் உணவை சாப்பிட வாய்ப்பில்லாதவர்கள். அவர்களுக்கு அந்தக் குறை இருக்கக்
கூடாது.
“நான் ஹோட்டல் மட்டும் வைத்திருக்கவில்லை. என் கடைக்கு வரும் மாணவர்கள்
வெறும் வாடிக்கையாளர்கள் மட்டுமில்லை. அவர்களின் தாய்மார்களின் பணியை நான் ஏற்று
இருக்கிறேன். அதில் குறை வைத்தால் தில்லை நடராசப் பெருமாள் எங்களை சும்மா
விடமாட்டார்.” என அடிக்கடி எங்களிடம் சொல்லுவார்.
மகாலட்சுமி ஹோட்டல் எங்களுக்கு ஒரு ஹோட்டலல்ல. எங்கள் தாய் வீட்டு
அடுக்களை.
குறிப்பாக என் மீது ஐயருக்கு ஏனோ தெரியவில்லை ஆழமான ஈடுபாடு இருந்தது.
மாலை வேளையில் மகாலட்சுமி ஹோட்டலில் ஹல்வா , பஜ்ஜி,
காப்பி அருமையாக இருக்கும். நான் மாலையில் ஸ்வீட், காரம் ,
காபி அருந்தும் பழக்கம் கொண்டிருந்தேன். சில நேரங்களில் பணக்குறைக்
காரணமாக ஹல்வாவைக் கட் பண்ணுவேன்.
ஐயர் அதை சட்டை செய்ய மாட்டார். என் இலையில் ஹல்வாவும் கம்பீரமாக
வந்து அமர்ந்து இருக்கும். அவராக வைக்கும் ஹல்வாவிற்குப் பணம் வாங்க மாட்டார்.
“தம்பி, இந்த மாலை நேர உணவு உன் சுவை சம்மந்தப் பட்டது. அதை நீ மாற்றிக் கொள்ள
வேண்டாம். பணம் இல்லாது போனால் பரவாயில்லை. இந்த ஹல்வா உன் அம்மா வைத்த ஹல்வா
என்று நினைத்துக் கொள்” என்று கூறுவார்.
என்னுடைய வகுப்பறைத் தோழன் மாப்பிள்ளை கலைமணி ஐயருக்கு வைத்த பெயர் ,
“ஹல்வா ஐயர்”. இன்று வரை அந்த பெயர்தான் எங்களுக்குத் தெரியும். அவர் சொந்தப் பெயர்
யாருக்குத் தெரியும்?
இரண்டரை ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த உயர்தரமான ஹல்வா ஐயருக்கு ஹோட்டல்
நடத்த முடியாத அளவு பொருளாதார நெருக்கடி வந்துவிட்டது.
ஹோட்டலை இன்னொருவருக்கு விற்றுவிட்டார். அந்த மகாலட்சுமி ஹோட்டல்
வாசலுக்கு அருகாமையில் ஒரு பெட்டிக் கடையைப் போட்டு அதில் அமர்ந்தார்.
அந்தப் பெட்டிக் கடையில் ஒரு குறு நில மன்னனைப் போல்தான்
அமர்ந்திருப்பார்.
அப்போதும் எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல் அழுத்தமான பிடிமானத்தோடும்,
ஹோட்டல் முதலாளியாக இருந்த தோரணையோடும் சற்றும் சஞ்சலம் காட்டாத முகத்தோடும் பெட்டிக் கடையில் புன்முறுவலோடும்
கம்பீரமாக அமர்ந்திருப்பார்.
அவரை ஏற்றத்தாழ்வுகள் எதுவும் செய்துவிட முடியாது. அவருக்கு எல்லாமே
சரிசமமானதுதான். அவர் எப்பொழுதும் ராஜராஜ சோழன்தான். கட்டெறும்புக் கடிபட்டுக்
கருங்கல்லா சிதைந்துவிடும்?
ஹல்வா ஐயர் இல்லாத ஹோட்டலில் அதற்குப்பின் நாங்கள் நுழைந்ததே இல்லை.
ஐயருடைய பெட்டிக் கடையில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டோம்.
அவர் பெட்டிக் கடையில் குளிர்பானம் அருந்துவோம். சாக்லேட்டுகள்
வாங்குவோம். நான் சிகரட் பிடிக்கும் பழக்கம் கொண்டவன். அவர் கடையில் சிகரெட்
விற்பனையும் உண்டு. நான் சிகரெட் கேட்பேன். அவர் தரமாட்டார்.
எனக்கு மட்டுமல்ல. மாணவர்கள் என்று தெரிந்த எவருக்கும் சிகரெட்
மட்டும் தரமாட்டார்.
நான் சிகரெட் கேட்கும் பொழுதெல்லாம் ஒரு வாழைப் பழத்தை பிய்த்து
என்னிடம் தருவார். பழத்திற்குக் காசு தர மாட்டேன் என்பேன்.
“நீ கேட்கவில்லையே , நானேதான் தந்தேன். நான் தருவதற்கு நீ எப்படி காசு தருவாய்?” என்று
சொல்லுவார்.
நான் அந்த இளம் வயதுக்கே உள்ள அழிச்சாட்டியத்தால் ஒவ்வொரு நாளும்
வீம்புக்கு அவரிடம் சிகரெட் கேட்பேன். அவர் சற்றும் தளராமல் ஒரு பழத்தைப் பிய்த்து
தருவார்.
ஒரு கட்டத்தில் என் மனம் என்னை உறுத்த ஆரம்பித்து விட்டது.
“ஐயா , ஏன் இப்படி செய்கிறீர்கள்?” என்று
கேட்டேன்.
“தம்பி, உனக்கு சாதம் போட்ட கரங்களிவை. இந்தக் கரங்களால் வாய்க்குக் கொள்ளிதர
மாட்டேன். அன்னமிட்ட அம்மா கை, விஷம் கொட்டுமா?” என்று ஹல்வா ஐயர் சொன்னார்.
அந்த நேரத்தில் ஹல்வா ஐயர் அந்தக் கடையில் இல்லை. என் அம்மா அவர்கள்
புன்சிரிப்போடு அமர்ந்திருந்தார்கள்.
ஏனோ தெரியவில்லை. ஹல்வா ஐயர் அடுத்த சில மாதங்களில் பெட்டிக்
கடையையும் மூடிவிட்டார். அதற்குப் பின்னர் எங்கள் கண்களில் அவர் படவில்லை.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப்பின் ஹல்வா ஐயர் எங்கள் அம்மாவாக
அடிக்கடி வந்து புன்னகைக்கிறார்.
No comments:
Post a Comment