இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டின் தேர்தல் முடிவு நமக்கு பல
செய்திகளைச் சொல்கின்றது.
பாஜகவின் தாக்கம் தமிழகத்தில் முளைவிடவில்லை. மோடி அலை என்ற பம்மாத்து
தமிழகத்தில் தலையெடுக்கவில்லை. இந்த உண்மை எப்படி நிகழ்ந்தது?
பாஜக ஒரு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியது. திமுக இன்னொரு
கூட்டணியை உருவாக்கியது. பாஜக கூட்டணிக்கு இரண்டு இடங்கள் கிடைத்திருக்கின்றன.
ஒன்றை பாஜகவே எடுத்துக் கொண்டது. மற்றொன்றை பாட்டாளி மக்கள் கட்சி
பறித்துக் கொண்டது.
பாஜக கன்னியாகுமரியில் வெற்றி முகம் காட்டி இருக்கிறது. சிறுபான்மைச்
சமுதாய கிருத்துவர்களும் முஸ்லிம்களும் கணிசமாக இருக்கக் கூடிய தொகுதி
கன்னியாகுமரி தொகுதி. ஆனாலும் லட்சத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று பாஜக வெற்றிப்
பெற்று இருக்கிறது.
தமிழ் நாட்டில் அநேகமாக 100% கல்வி
அறிவு பெற்ற மாவட்டம் அது. கல்வி அறிவு பெற்றால் பாஜக வென்றுவிடும் என்று முடிவு
கட்டக்கூடாது. நமது கல்வியறிவு ஒரு வினோதமானது. சுயநலக் கணக்குப் போடுவதில்
கெட்டிக் காரத்தனமானது.
கன்னியாகுமரி வாக்காளர்கள் காங்கிரசுக்கு ஆதரவு தரக்கூடிய
பழக்கமுள்ளவர்கள். இந்த முறை டெல்லி பாராளுமன்றத்தில் காங்கிரசு அமரப் போவதில்லை
என்ற கணிப்பில் பாஜகவுக்குத்தான் அந்த வாய்ப்பு வரும் என்ற நினைப்பில்
பொன்.ராதாகிருஷ்ணனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
தங்கள் தொகுதி மத்திய கேபினட் அமைச்சர் தொகுதி என்று முடிவு கட்டி
தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இதனால் தங்கள் தொகுதிக்கு மிகப் பெருத்த லாபங்கள்
வந்து சேரும் என்று முடுவெடுத்து இருக்கிறார்கள்.
பொன்.ராதாகிருஷ்ணனும் பாஜக தலைவராக இருந்தாலும், தன்
தொகுதியில் எல்லா வாக்காளர்களுக்கும் ஏற்றவராகவே தன்னை மாற்றிக் கொள்வார்.
அந்தத் தொகுதியைப் பொறுத்தவரை தனது கட்சி கொள்கைகளை நீக்கிக்
கொள்வார். இது அந்தத் தொகுதியில் நடந்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரு உண்மை. ஆகவே
அந்த வெற்றியை பாஜக தனி வெற்றி என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் மருத்துவர் அன்புமணி தான் பிறந்து
வளர்ந்த சொந்தத் தொகுதிக்கு சம்மந்தமே இல்லாத தர்மபுரி தொகுதியில் நின்று வென்று
இருக்கிறார்.
தர்மபுரி, சாதிக் கலவரம் உச்சத்தைத் தொட்டுக் கூத்தாட்டம் ஆடி சமீபத்தில்தான்
தன் கோர முகத்தைக் காட்டி இருக்கக் கூடிய தொகுதி. இந்த சாதித் தாக்குதலின் காரணமாக
அன்புமணி சாதியைச் சார்ந்தவர்கள் கணிசமாக வாழக் கூடிய தர்மபுரியில் சாதி வெறி என்ற
கோரமுகம் மாறுவதற்கு முன்னாலேயே அன்புமணி அங்கு நின்று வெற்றி பெற்று இருக்கிறார்.
தர்மபுரியில் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக் கூடிய அவர் சாதியினரில்
பெரும்பான்மையினர் அன்புமணிக்குத்தான் வாக்களித்து இருக்கறார்கள். எனவே இது பாஜக
கூட்டணிக்கோ, மோடியினுடைய அலைக்கோ வந்த வாக்கு அல்ல.
தமிழகத்தின் மீதமுள்ள 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி சூடி
இருக்கிறது. அதாவது பாஜக பம்மாத்து பலிக்கவில்லை. மோடியின் அலை என்பது
சிமிழுக்குள் அடங்கிய நீர்க்குமிழிப் போலானது.
இதற்கு என்ன காரணம்?
திமுக கூட்டணியா? தனித்து நின்ற காங்கிரசு சக்தியா? இடதுசாரி
இயக்கங்களா?
இந்த மூன்றும் இல்லை. அதிமுக என்ற தனிக்கட்சியின் தேர்தல் உத்திதான்
இதற்குக் காரணம்.
ஒருவகையில் பார்த்தால் இந்தியாவிலேயே பாஜகவை பிடறியைப் பிடித்து
வெளியே தள்ளிய கட்சி அதிமுகதான்.
ஆனால் இந்த பாராட்டை முழுமையாக அதிமுகவுக்குக் கொடுக்கலாம் என்று
நினைக்கும் பொழுது கூடவே ஒரு சந்தேகமும் நமக்கு எழுகிறது.
எதிர்க்காலத்தில் தனிப்பெரும் எண்ணிக்கைக் கொண்ட பாஜகவை சில பல
ஆதாயங்களுக்காக அதிமுக ஆதரித்து பாஜக நிகழ்த்த இருக்கக் கூடிய பெரிய தீங்குகளுக்கு
ஒத்துழைப்புத் தராமல் இருக்குமா? உறுதி சொல்ல முடியாது.
சிறுபான்மை மக்கள் கணிசமாக இருக்கக் கூடிய தொகுதியாக வெளிப்படையாக
தெரியக்கூடிய தொகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் எப்படி பதிவாகி
இருக்கின்றன என்று அடுத்து கவனிக்க வேண்டும்.
கிருத்துவ சமுதாயத்தவர் அதிகமிருக்கக் கூடிய கன்னியாகுமரி தொகுதி பாஜக
கைவசம் போய்விட்டது. அதன் வெற்றிக்கு சிறுபான்மைச் சமுதாயத்தின் ஓட்டும் கணிசமாகப்
பங்காற்றி இருக்கிறது.
மயிலாடுதுறை, சிறுபான்மைச் சமுதாய முஸ்லிம்கள் கணிசமாக இருக்கக் கூடிய ஒரு சின்ன
தொகுதி. இந்தத் தொகுதியில் முஸ்லிம் அரசியல் அமைப்பைச் சார்ந்தவர் நிற்கிறார்.
ஆனால் மூன்றாவது இடத்திற்கு வந்து தோற்று இருக்கிறார். அதிமுக வென்று இருக்கிறது.
வேலூர் பாரளுமன்ற தொகுதி முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதி.
அங்கேயும் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் மூன்றாவதாக வந்து தோற்று இருக்கிறார்.
முதலிடத்தில் அதிமுக வந்து வெற்றி பெற்று இருக்கிறது. இரண்டாமிடத்தில்
பாஜக இருக்கிறது.
ராமநாதபுரம் தொகுதி, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் தொகுதி அதிமுக
ஒரு முஸ்லிமை நிறுத்துகிறது. திமுக ஒரு முஸ்லிமை நிறுத்துகிறது. ஆனால் அதிமுக
முஸ்லிம் வெற்றி பெற்று இருக்கிறார்.
திமுக முஸ்லிம் தோற்று இருக்கிறார். இந்தத் தேர்தலில் செல்வாக்குள்ள
அத்தனை முஸ்லிம் அமைப்புகளும் திமுகவை ஆதரித்து இருக்கின்றன. அதிமுகவைக் கடுமையாக
எதிர்த்து இருக்கின்றன.
ஆனால் வெற்றி பெற்றது அதிமுக முஸ்லிம்தான். இது எப்படி நடந்து
இருக்கும்?
தமிழகத்தினுடைய முஸ்லிம் அமைப்புகள் தொடர்ந்து ஒரு வாத்த்தை வைத்துக்
கொண்டிருக்கிறது. தமிழக முஸ்லிம்களுக்கு நிரந்தர பாதுகாவலன் கலைஞரும்
திமுகவும்தான் என்று.
இப்படி தமிழக முஸ்லிம் உணர்வுகளை , தமிழக
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தவறுதலாக புரிந்து பழக்கிக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.
கருணாநிதி அடிக்கடி மேடையில் சொல்லிக் கொள்வார். “என்
பிணத்தின் மேல் மிதித்துதான் தமிழக முஸ்லிம்களை எதிரிகள் தாக்க முடியும்” என்று
இதைச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
இங்கேயும் பாஜக என்ற பேயை பூதமாக்கி அதிலிருந்து பாதுகாக்க என்
பின்னால் வாருங்கள் என்று முஸ்லிம் சமுதாய தலைவர்களை தனக்குப் பின்னால் நிறுத்திக்
கொண்டு தன் அரசியலை வளர்த்தவர் கருணாநிதி.
இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளில் துறு ஏறி இருக்கிறது. விழிகளில்
காமாலைப் படர்ந்து இருக்கிறது. இவைகளைப் பக்குவமாக கருணாநிதி உருவாக்கித் தன்
அரசியல் வாழ்வை அலங்கரித்துக் கொண்டார்.
தமிழகத்தின் முஸ்லிம்களைப் பொருத்தளவில் இதுவரை கூட்டணிக்
கட்சிக்குத்தான் அவர்கள் வாக்கைப் பதிவு செய்து வந்தார்கள். பாஜகவை இடது கையால்
கூட தொட மாட்டோம் என்று தங்களுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த
நிலைப்பாட்டில்தான் முஸ்லிம்களின் வாக்குகள் தமிழகத்தில் பதிவாகி வந்து
இருக்கின்றன.
மாயவரத்தில் முஸ்லிம்களுடைய வாக்கு அவர் எந்த அரசியல் அமைப்பைச்
சார்ந்தவர்களாக இருந்தாலும் அங்கு தேர்தல் களத்தில் நின்ற மனிதநேய மக்கள்
கட்சியின் பொதுச் செயலாளர் ஹைதரலிக்குத்தான் விழுந்து இருக்கிறது. ஆனால் ஹைதரலி
தோற்று இருக்கிறார்.
தோழமைக் கட்சிகளான திமுக மற்றும் பிற கட்சிகளின் வாக்கு சாதிய
அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிரிந்து அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் போய்
சேர்ந்து இருக்கின்றன.
வேலூர்த் தொகுதி அனைத்து முஸ்லிம் அரசியல் அமைப்புகளும் இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளருக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள். ஆனாலும்
இவரும் தோற்று இருக்கிறார்.
இந்தத் தொகுதியிலும் திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சாதி மத
அடிப்படையில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் வாக்களித்துவிட்டார்கள். அதனால்தான்
முஸ்லிம் லீக் மூன்றாவது இடத்தைத் தொட்டு இருக்கிறது.
பாஜக மட்டும்தான் மதவாத கட்சியா? திமுக
எப்படி தந்திரத்தைக் கையாண்டு இருக்கிறது? புரிந்துக்
கொள்ள வேண்டிய நேரமிது.
ராமநாதபுரம் தொகுதியில் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்கிறார்கள்.
திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள்.
முஸ்லிம் அரசியல் அமைப்புகள் அதிமுகவை ஆதரிக்காதீர்கள் என்று உறுதியாக
அறிவித்து செயல்பட்டு இருக்கின்றனர்.
வேலூரைப் போல, மயிலாடுதுறையைப் போல திமுக அமைப்பினருக்கு முஸ்லிம்களின் வாக்குப்
போயிருந்தால் தோழமைக் கட்சி ஓட்டும் அவருக்குக் கிடைத்திருந்தால் திமுக முஸ்லிம்
வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மாறாக அதிமுக
முஸ்லிம் வேட்பாளர் வென்று இருக்கிறார்.
அதிமுகவினுடைய வாக்குகள் அதிமுக முஸ்லிமுக்கு கிடைத்து இருக்கிறது.
முஸ்லிம்களின் ஒரு சிறுபான்மை வாக்கும் அதிமுக முஸ்லிமுக்குப் போய் சேர்ந்து
இருக்கிறது.
திமுக மற்றும் அதன் கூட்டணி வாக்குகள் திமுக முஸ்லிமுக்கு முழுமையாகச்
சென்று சேரவில்லை. அது சாதி அடிப்படையில் பிரிந்து இருக்கிறது. அதனால்தான் திமுக
முஸ்லிம் அங்கே தோற்று இருக்கிறார்.
இன்னொரு உதாரணம். இந்த முறை தமிழகத்தினுடைய பிற தொகுதிகளிலும் தமிழக
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாமல் அதே நேரத்தில்
காங்கிரசுக்கோ பாஜக கூட்டணிக்கோ வாக்கை மாற்றிப் போட்டுவிடாமல் அதிமுகவிற்கு
போட்டு இருக்கிறார்கள்.
அதிமுகவின் வெற்றிகளுக்கு அதுவும் ஒரு காரணம். அதாவது முஸ்லிம்
அமைப்புகளின் அரசியல் தலைவர்கள் தவறான புரிதலில் திமுகவின் முதுகிற்குப் பின்னால்
அணிவகுத்து இருக்கிறார்கள்.
ஆனால் முஸ்லிம் மக்களில் ஓரளவுக்கு கணிசமானவர்கள் இந்தத் தலைவர்களின்
அணுகுமுறையை தூக்கித் தூர எறிந்து இருக்கிறார்கள்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு உதாரணம். மத்திய சென்னை தயாநிதி மாரன்
தொகுதி, முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஒரு தொகுதி. ஆனால் நாற்பதினாயிரத்துக்கும்
மேல் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறார்.
அதாவது முஸ்லிம்களின் வாக்கின் ஒரு பகுதி அதிமுகவிற்குப் போய்விட்டது.
தலைவர்கள் திமுகவை ஆதரிக்கிறார்கள். மக்களில் ஒரு பகுதியினர் அதிமுகவைப்
பார்க்கிறார்கள்.
முஸ்லிம் கட்சிகள் நின்ற தொகுதிகளில் முஸ்லிம்கள்
முஸ்லிம்களுக்குத்தான் வாக்களித்திருக்கின்றார்கள். மற்ற தொகுதிகளில் முஸ்லிம்கள்
பாஜகவையும் திமுகவையும் சமமான
மதவெறி இயக்கம்தான் என்ற முடிவில் கணிசமான முறையில் அதிமுகவிற்கு வாக்களித்து விட்டார்கள்.
உடனடியாக இந்தக் கண்ணோட்டத்தோடு அரசியலை ஆராயத்தான் வேண்டும்.