Saturday, September 28, 2013

இதெல்லாம் எப்படி நடந்தது–20


திரும்பவும் தில்லை!


சென்ற வாரம் நான் சிதம்பரம் சென்றிருந்தேன். இதில் புதுமை இல்லை. அடிக்கடி நான் பயணமாகும் பகுதிதான் அது.

சுமார் மாலை ஏழு மணியளவில், தில்லை நடராசப் பெருமான் கோயிலின் வெளிச்சுற்று கல்முற்றப் பாதையில் அங்கங்கே சின்ன சின்ன கும்பல்களாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அங்கே கிடைக்கிற காற்று அலாதியான சுகம் கொண்டது.

நான், மாப்பிள்ளை இஞ்சினியர் செல்வம், மாமா புலவர் கு. சங்கரன், மாப்பிள்ளை தில்லை. கலைமணி நண்பர் இல்லத்தினர்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

மாப்பிள்ளை கலைமணி என்னிடம் சொன்னான், “டேய் மாமா, நம்ம ஆனந்த நடராச தீட்சதரை இரண்டு தினங்களுக்கு முன்னால், இந்த கோயில் வளாகத்தில் இப்படி இருக்கும்பொழுது சந்தித்தேன். அவர், “ஹிலால் முஸ்தபா இப்போது எங்கு இருக்கறார். உங்களுக்கு தொடர்பு உண்டா?” என்று கேட்டார்.

நான், “கிட்டதட்ட தினம் தினம் தொடர்பு கொள்வோம்” என்று சொன்னேன். தீட்சிதர், “அப்படியானால், இங்கு அவர் வரும்பொழுது ஆத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ, ரொம்ப வருஷங்கள் ஆச்சு. உங்களை பார்த்தவுடனே அவா நினைப்பும் கூடவே வந்திடுச்சு” என்று சொன்னார்.


கலைமணி இப்படி என்னிடம் சொன்னவுடன், ஆனந்த நடராஜ தீட்சிதர் என் நினைவிலும் வந்து சேர்ந்தார்.

ஆனந்த நடராஜ தீட்சிதர் தில்லை வாழ் அந்தணர் எனப் பெருமிதம் கொள்ளும் தீட்சிதர் குலத்தில் உதித்தவர். நாங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த 1970 களில் தமிழ்த்துறையின் பேராசிரியர்களில் ஒருவராக பணி புரிந்தவர்.

நல்ல தமிழ் ஆய்வாளர். பிராமணீய குடுமியுடன் நெற்றியில் பட்டையும், வெள்ளைச் சட்டையும், பஞ்சகச்ச வேட்டியும், வலக்கை மணி கட்டில் சிகப்பு நிற கயிறு கட்டியும் இருக்கும் இதே கோலத்துடன் தான் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைக்கு வருவார். வகுப்பறையிலும் பாடம் எடுப்பார். எங்களுக்கு ஓராண்டு பாடம் எடுத்தார். கம்ப ராமாயண வகுப்பு அவர் பொறுப்பில்தான் இருந்தது.

பேராசிரியர், ஆனந்த நடராஜ தீட்சிதர் பின்னாளில் முனைவர் பட்டமும் பெற்றிருந்தார்.

எங்கள் வகுப்பறையில், கம்ப ராமயணம் வகுப்பெடுக்க உள்ளே நுழைவார். ஆசிரியர் இருக்கும் அந்த மேடையில் சென்று அமர்வார். அவருக்கு எதிரே மாணவர்கள் அமர்ந்து இருப்பார்கள். அவர்களில் எவரையும் அவர் பார்த்து இருக்க மாட்டார் என்றுதான் நாங்கள் நினைத்துக் கொள்வோம். நாற்காலியில் அமர்ந்து எதிரே தெரியும் மின்விசிறியை உற்றுப் பார்த்துக் கொண்டு கம்பரின் அற்புதமான கவிதைகளை ஒப்பித்துக் கொண்டிருப்பார்.


அப்போது அவரின் தடித்த கண்ணாடிக்கு உள்ளே இரண்டு துண்டுகளாக விழிகள் சுழன்று கொண்டிருக்கும். மின்விசிறிக்கு கீழ் இருக்கும் மாணவ மாணவிகளை அவர் சட்டை செய்வதே இல்லை. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், அதற்கு நடராச பெருமானே கைங்கரியம் வழங்கட்டும் என விட்டு விடுவார்.

அவர், பாடம் நடத்தும் கம்ப ராமாயணத்தில், எங்களைப் போலவே கம்பனும் காணாமல் போய் விடுவான். ஆனால் பக்தி ரசம் சொட்ட சொட்ட பேராசிரியர் தீட்சிதர் மின்விசிறிக்கு கதை சொல்லிக் கொண்டிருப்பார்.

பேராசிரியர் தீட்சிதர், தமிழறிஞர். அதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் உலக மகாகவி கம்பனை அவர் பார்வையில் எங்களுக்கு அடையாளப் படுத்த மட்டும் அவருக்கு தெரியவில்லை.

பேராசிரியர் தீட்சிதரைப் பற்றி, தமிழ்த் துறையில் ஒரு தகவல் நடமாடிக் கொண்டிருந்தது. அதை பேராசிரியர் சாமிநாதன், “அது உண்மைக் கதை” என்று ஒருமுறை சொன்னார்.

தமிழ்த் திரை உலகில் பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு பெரிய இயக்குனர், பேராசிரியர் தீட்சிதரை திரைப்பட பாடல் எழுத அழைத்திருந்தாராம். தீட்சிதரும் அந்த திரைப்படத்தின் காதல் காட்சிக்குப் பாடல் எழுதி சென்றாராம்.


மெல்லிசை மன்னர்கள், விஸ்வநாதன், ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த காலமது. பேராசிரியர் தீட்சிதருக்கு இசை ஞானமும் கொஞ்சம் உண்டு. தீட்சிதர் எழுதிய பாடலுக்கு அவரே ஒரு ராகமும் மனதில் அமைத்துக் கொண்டிருந்தார்.

விஸ்வநாதன், ராமமூர்த்தி முன்னர் தீட்சிதர், பாடலை ராகத்தோடு அவரே பாடினார். மெல்லிசை மன்னர்கள் ஆடிப் போய்விட்டார்கள். இது தமிழ்ப் பாடலா என்ற பயம் அவர்களுக்கு வந்து விட்டது.

தூய தமிழில், இலக்கணம் பிசகாத பத்து வெண்பாக்களை எழுதி மெல்லிசை மன்னர்கள் முன் கொட்டினால் அவர்கள் என்ன தான் ஆவார்கள்?

“திரைத்துறைக்குத் தமிழ் தெரியவில்லை” என அலுத்துக் கொண்டு பேராசிரியர் தீட்சிதர் தில்லைக்கு வந்துவிட்டார்.

எனக்குக் கம்பனில் கொஞ்சம் ரசனை அதிகம். ஆனால் பேராசிரியர் தீட்சிதரின் கம்ப ராமாயண வகுப்பு, கம்பனை, யேசுவை சிலுவையில் அடித்த கதைதான். எனக்கு இது சங்கடமாக இருந்தது


ஒரு நாள் வகுப்புக்கு பேராசிரியர் தீட்சிதர் வந்தார். அவர் இருக்கையில் அமர்ந்தவுடன், நான் எழுந்து நின்றேன். அவர் என்னை உற்றுப் பார்த்தார். அப்பாடா முதல் முறை வகுப்பறைக்குள் ஒரு மாணவனைப் பார்த்து விட்டார் என்ற திருப்தி எங்களுக்கு.


“ஐயா, மேலே சுழலும் மின்விசிறியை விட அதற்கு கீழே அமர்ந்து இருக்கும் நாங்கள் கொஞ்சம் விலை மதிப்புள்ளவர்கள்தாம். எங்களைப் பார்த்து கம்பனைப் பேசுங்கள்” என்றேன்.

பேராசிரியர் தீட்சிதர் ஐயா தந்த பதில் எங்களை எல்லாம் ஆட வைத்து விட்டது.

“ஹிலால் முஸ்தபா” என்று என் பெயரைச் சொல்லி என்னை அழைத்ததும், வகுப்பே அவரை வியப்புடன் பார்த்தது. தீட்சிதர் ஐயாவிற்கு மாணவர் பெயரும் தெரிந்திருக்கிறதே? இந்த வியப்பு நீங்க சில மணித்துளி ஆனது.


மீண்டும் பேசினார். “உங்கள் அனைவரைப் பற்றியும் எனக்கு தெரியும். ஹிலால் முஸ்தபா எனக்கு எதிரில் அங்கு இருக்கிரார். ஹிலால் முஸ்தபாவிற்கு எதிரில் இங்கு நான் இருக்கிறேன். இதுதான் எங்களுக்குள்ள இடைவெளி. அவரை விட சில பத்து வயது மூத்து இருப்பேன். இது எங்களுக்குள் உள்ள கால இடைவெளி. மற்றபடி எனக்கு தெரிந்த கம்பர், ஹிலாலுக்கு தெரிந்தவர்தான். ஹிலாலுக்கு தெரிந்த கம்பர் எனக்கு தெரிந்தவர்தான். இதில் எங்களுக்குள் வித்தியாசம் இல்லை. என்ன செய்ய பகவான் இப்படி சில நேரங்களில் செய்து விடுகிறார்.” என்றார்.

வழக்கம் போல் பாடத்தை தொடங்கி விட்டார்.

வகுப்பு முடிந்தவுடன், நான், ராமனுஜம், பாண்டியன் எழுந்து சென்று தீட்சிதர் ஐயாவை வெளியில் சந்தித்தோம்.

நான் “ஐயா உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றேன்.

“அப்படி எல்லாம் இல்லை, அப்படி எல்லாம் இல்லை. நான் சத்தியத்த தான் சொன்னேன். நான் சத்தியத்த தான் சொன்னேன்.” என எப்போதுமுள்ள புன்முறுவலோடு சொன்னார். அன்றிலிருந்து அவரைப் பற்றிய மரியாதை எனக்குள் நிமிர்ந்து நின்றது. நன்றாகப் பழகிக் கொண்டோம்.

தீட்சிதர் ஐயா நிச்சயமாக நல்ல தமிழறிஞர். அவர் கலாரசனை மட்டும் எப்பொழுதும் புர்தா அணிந்தே இருக்கிறது. பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார்.


கிட்டதட்ட, நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்த கால கட்டத்தில், என் பெயரை நினைவு வைத்து, எனக்கு அழைப்பு தந்திருக்கிற அவரின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைத்தது. இப்போது அவரை சந்திக்க வாய்ப்பில்லாமல் திரும்ப வந்துவிட்டேன். அடுத்த முறை அவரை சந்திக்கும் வாய்ப்பை நெஞ்சில் ஏந்திக் கொண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment