கப்பல் ஹம்சா முதலாளி கட்டித் தந்த பள்ளிவாசல்.
பள்ளிவாசலுக்கு முன்னால் ஒரு சின்ன மண்டபம். அதைத் தொட்டுக்கொண்டு மூன்று பனை உயரத்தில் இரண்டு மினாரா. மினாராவில் உள்ள
பொந்துகளில் புறாக்கள் இறக்கையைப் படபடத்துக் கொண்டு பறந்து கொண்டே இருக்கும்.
புறாக்களின் சத்தம் விக்கல் மாதிரி எப்போதும்
ஒலிக்கும். மண்டபச் சுற்றுப்புறத்தில் அவைகள் இட்ட எச்சங்கள் வெள்ளைத் துளிகளாக
எங்கும் இறைந்து கிடக்கும்.
மண்டபத்தில்
அகலமாக இரு பக்கமும் திண்ணை இருக்கும். வலது பக்கத் திண்ணையில் சந்தூக்கு ஓரமாக
எழும்புக் கூடுமாதிரி சோம்பிக் கிடக்கும். திண்ணையில் இதற்குப் பிறகும் காலி இடம்
இருக்கும். மத்தியானம் வெய்யில் சுட்டுப் பொசுக்கும் போது அந்தத் திண்ணையில்
ஒருக்களித்து படுத்தால் ஜன்னத்தில் இருந்த மாதிரி ஒரு சுகம் தெரியும். குளு குளுவென்று
காற்று ஒரே சீராக வருடிக் கொண்டே கடந்து போகும்.
ஹம்ஸா
முதலாளி அந்த ஊரில் பரம்பரைப் பணக்காரர். ஆனாலும் பணத்துக்கு மேல் பணம் சேர்த்தவர்
ஹம்ஸா முதலாளித்தான். சிலோனுக்கு என்னவெல்லாமோ ஏற்றுமதி செய்தார். இரும்பு பெட்டி
பூராவும் தங்க, வைர நகைகளாக வழியத்தான் செய்தது.
பெரிய
பெரிய சாக்கு முடைகளில் ரூபாய் நோட்டுக்களை அமுக்கி அமுக்கிக் திணித்து
வைப்பாராம். அப்படி ஆயிரக்கணக்கான மூடைகள் முதலாளி வீட்டில் இருக்குமாம்.
சாக்கு
முடைக்குள்ளே இருப்பதால் நோட்டுகள் புழுங்கி மக்கிப் போயிருமாம். அப்போதெல்லாம் அவர் வீட்டின்
மூன்றாவது மாடி தட்டவட்டியில் ரூபாய் நோட்டுக்களை அள்ளிப் போட்டு வெய்யிலில் காய
வைத்து மறுபடியும் சாக்கு மூடையிலே திணிப்பார்களாம். அதுக்கென்று தனியே இருவர்
வேலைக்கு இருந்தார்களாம்.
ஹம்ஸா
முதலாளி வியாபாரம் கொடி கட்டிப் பறந்து உச்சக்கட்டத்துக்கு போன போது சரக்குகளை
சிலோனுக்கு எடுத்துப் போக அவரே சொந்தமாக ஒரு கப்பலை வாங்கினார். தூத்துக்குடி
துறைமுகத்தில் ஹம்ஸா முதலாளி கப்பல் பந்தய குதிரை மாதிரி தண்ணீரைக் கீறிக் கொண்டு
பாயும்.
கப்பல்
ஹம்ஸா முதலாளி வீட்டுக்கு, விருந்து வராத நாளே இருக்காது. கந்தூரி கணக்கா எப்போதும்
பாத்தாலும் ஜே ஜேன்னு கூட்டம்தான்.
முஸாபர்களுக்கு
தனியா நார் பெட்டியில் சோறும் குட்டி தேக்சாவில் ஆணமும் தயாராக இருக்கும்.
தாராள
மனசுக்காரர் ஹம்ஸா முதாலாளி. அவர் வீட்டுச் சோறும் கறியும் படாத வயிறு அந்த ஊரில்
இருக்கவே முடியாது.
குமர்களுக்கு
நிக்காஹ் என்று எவர் வந்தாலும் அவர்களை வெறுங்கையாகத் திரும்ப அனுப்பமாட்டார். புண்ணியவான் தர்ம
பிரபு.
அந்த
ஊரில் மட்டுமில்லை எத்தனையோ ஊரில் ஹம்ஸா முதலாளி பள்ளிவாசல் கட்டித்
தந்திருக்கிறார்.
முஸ்லிம்களுக்குத்
தான் செய்தார் என்றில்லை எல்லா மதத்துக்காரர்களுக்கும் என்னவெல்லாமோ செய்தார்.
ஹம்ஸா முதலாளியை அவர்கள் ஆண்டவன்தான் என்று வாய் நிறைய சொல்லுவார்கள்.
மனிதன்
ஆண்டவன் இல்லை என்று காட்ட அல்லாஹ் நாடிவிட்டான் போல.
கப்பல்
ஹம்ஸா முதாலாளிக்கும் கஷ்டம் கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது.
எப்படி
வருகிறது. எங்கே இருந்து வருகிறது யாருக்குமே தெரியவில்லை. ஆனால் கஷ்டம் வந்தது.
பூசணம்
பூத்துக் கிடந்த மூடை மூடையான ரூபாய் எல்லாம் என்ன ஆச்சு? காயப்போடும்போது குருவி
கொத்திக் கொத்தி தூக்கிக் கொண்டு போய்விட்டதா? பள்ளிவாசல் மினாரா பொந்துக்குள்
புறாக்கள் தூக்கிக் கொண்டு போய் திணித்து வைத்துக் கொண்டதோ என்னமோ?
தூத்துக்குடி
கடலில் ஹம்ஸா முதலாளி கப்பல் மிதந்து மிதந்து சிலோனுக்குப் போகும் போது
நடுக்கடலில் தீடீர் புயல் வீசியது. மினாரா உயரத்துக்கு அலை எழுந்து விழுந்து
இடையில் பட்ட எல்லாவற்றையும் சுருட்டி யானை தேங்காயை துதிக்கையில் மடக்கி வாய்க்குள்
அமுக்குவது போல விழுங்கி விட்டது. ஹம்ஸா முதலாளி கப்பலும் சமுத்திரத்தின் குடலுக்குள்
பொசுக்கென்று புகுந்து விட்டது.
ஹம்ஸா
முதலாளி கலங்கவில்லை. அவருக்கு ஒரு கம்பீரம் கூடவே பிறந்திருந்தது. அதை எந்த சமுத்திர
அலையும் விழுங்கவே முடியாது.
கப்பல்
மூழ்கிவிட்ட செய்தி ஹம்ஸா முதலாளிக்கு வந்தது. அந்தச் செய்தியின் கூடவே அஸர் நேர
பாங்கும் ஒலித்தது. முதலாளி பூண் போட்ட கைத்தடியை எடுத்தார். துண்டை சட்டைக்கு மேல்
வீசிப் புறப்பட்டு விட்டார்.
இந்தச்
செய்தியைத் தெரிவிக்க வேண்டிய இடத்துக்கு அவர் சர்வ சாதாரணமாக நடந்தார். கலக்கமே
இல்லை. வழியில் சலாம் சொன்னவர்களுக்கு சிரித்தபடி பதில் சொல்லிக் கொண்டே கடந்தார்.
ஹம்ஸா
முதலாளியும் மவ்த்தாக வேண்டிய மனுஷன்தானே கப்பல் கவிழ்ந்த பின் ரொம்ப காலம்
வாழவில்லை.
ஒருநாள்
காலை பதினொரு மணி. பள்ளிவாசலில் ஒரு விவகாரம். அதை விசாரித்துத் தீர்த்து வைக்க
வேண்டிய ஹம்ஸா முதலாளி பள்ளி வாசலுக்குள் போய் அமர்ந்தார்.
பள்ளிவாசல்
பின் பக்கம் மையத்தாங் குழி. அங்கே தென்னை மரங்கள் நிறைய உண்டு.
அந்தத்
தோப்பிலிருந்து ஐந்து தேங்காய்களை நாகூர்கனி ராவுத்தர் எடுத்துக்கொண்டு வெளியில்
வரும் போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். பள்ளிவாசல் சொத்து ஹராம்.
இதுவெல்லாம் பசிக்கிற வயிற்றுக்கு தெரியவா போகிறது?
ஹம்ஸா
முதலாளி தோரணையாக உட்கார்ந்து விசாரித்தார்.
''வேய்
நாகூர்கனி ஏன் வேய் தேங்காயை பறிச்சீரு?''
“மொதலாளி
அல்லா மேல் சத்தியமா நான் பறிக்கல. நம்ம ராவுத்தர்கனி கபுரு பக்கத்தில் இந்த கொல
விழுந்து கிடந்துச்சி. நான் அத எடுத்துக் கிட்டு வந்தேன். மோதினாரிட்ட குடுக்கணும்,
ஆனா நான் குடுக்கல. தெரியாம எடுத்துட்டுப் போய் விக்க நெனச்சேன். தப்புத்தான்
மொதலாளி இந்த ஒரு வாட்டி அல்லா ரசூலுக்காக மன்னிசிருங்க. புள்ளகுட்டிக்காரன் பசி
தாங்க முடியல செஞ்சிட்டேன். வெட்கமா இருக்கு மன்னிச்சிருங்க”
நாகூர்கனி
ராவுத்தர் அழுதார். ஹம்ஸா முதாலாளிக்கு முகம் வியர்த்து விட்டது.
''வேய்
இது தப்பு. அல்லாவூட்டுச் சொத்த திருடக் கூடாது. பள்ளிவாசல்ல கிடந்தா அது பள்ளிவாசலுக்குத்தான்
சொந்தம். நம்ம பசிக்காக அத தூக்கிட்டுப் போவக் கூடாது. வயசான மனுஷன் நீரு.
நல்லாத்தான் ஒரு காலத்துல வாழ்ந்தீரு. என்ன செய்ய ரப்பு சோதிச்சிட்டான் சரி
சரி.... பள்ளிவாசல் உண்டியலில் ரெண்டு ரூபா போட்டுறும்''.
''முதலாளி
ரெண்டு ரூபாவுக்கு நான் எங்கே போவேன். அது இருந்தா நான் ஏன் இத தூக்கிட்டுக்
கள்ளன் மாதிரி போவப் போறேன்.”
நாகூர்கனி
ராவுத்தர் குலை நடுங்கினார்.
''வேய்
அதெல்லாம் சொல்லக்கூடாது. தண்டனை
தண்டனைதான். என்ன செய்வீரோ எனக்குத் தெரியாது. அடுத்த ஜும்ஆவுக்குள் ரெண்டு
ரூபா பள்ளிவாசலுக்கு வந்திரணும். சரி சரி... மத்தவங்கள் எல்லாம் போகலாம்”
நீதி
விசாரணை முடிந்து விட்டது. கூட்டம் கலையத் தொடங்கியது. மோதினார் ஓரமாக நின்றார்.
நாகூர்கனி ராவுத்தர் தலைக் குனிந்து விக்கிக் குலுங்கினார்.
ஹம்ஸா
முதலாளி கைத்தடியை ஊன்றி எழுந்தார். நாகூர்கனி ரவுத்தரைக் கடக்கும் போது மெதுவாக
''வேய் இங்கெ வாரும். பொறவு என்ன வந்து பாரும் சரி சரி அழாதீரும்.'' என்று
சொல்லிவிட்டு நகர்ந்தார்.
பள்ளி
வாசலின் படிக்கட்டில் வலது காலை தூக்கி கீழே வைத்தார். இடது காலை தூக்கி வைக்கும்
முன் தடாலென்று சரிந்தார். ரூஹு அடங்கி விட்டது.
ஊரே
கூடியது. கப்பல் ஹம்ஸா முதலாளி மவ்தாகி விட்டார். நாகூர்கனி ராவுத்தரை பிறகு ஏன்
வந்து பார்க்க சொன்னார். வீட்டுக்கு வரச் சொன்னாரா? மஹ்ஸருக்கு வரச் சொன்னாரா?
மறு
நாள் ஊர் முழுக்க கூட்டம். மலையாளத்தில் இருந்தெல்லாம் ஆயிரக்கணக்கில் மக்கள்
வந்தனர்.
கப்பல்
ஹம்ஸா முதலாளி கட்டித் தந்த பள்ளி வாசலுக்கு அவர் ஜனாஸா பயணம் ஆனது.
செந்தூக்கில்
மனிதர்களின் தோளுக்கு மேல் பச்சைத்துணி போர்த்தப் பட்டு பவனி வந்தது. அந்த
செந்தூக்கும் அவர் செய்து தந்ததுதான். தூத்துக்குடி கடலில் ஹம்ஸா முதலாளி கப்பல்
அசைந்து அசைந்து செல்வது போல மக்கள் கடலில் அவரின் ஜனாஸாவைச் சுமந்து செந்தூக்கு
பயணமாகி கொண்டிருந்தது.
ஹம்ஸா
முதலாளி குடும்பம் அதற்குப் பிறகு தலை தூக்கவே இல்லை.
முப்பது
வருஷம் வாழ்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை.
ஹம்ஸா
முதலாளி கட்டித்தந்த மண்டபத்தின் திண்ணையில் அதே செந்தூக்கு இப்போதும் ஒரு
அப்பாவியைப் போல படுத்துக்கிடக்கிறது.
பக்கத்தில்
இப்போது இன்னொரு ஹம்ஸா ஒருக்களித்துப் படுத்திருக்கிறார். கப்பல் ஹம்ஸா
முதலாளியின் அதே ரத்தம். ஒரே பேரன் ஹம்ஸாதான் படுத்துக்கிடக்கிறார்.
செந்தூக்கு
மரச் சட்டத்தால் ஆன எலும்புக்கூடு. ஹம்ஸா முதலாளி பேரன் எலும்பால் ஆன எலும்புக்கூடு.
காற்று
சுகம் சுகமாக வீசுகிறது. தாதா கட்டிக் கொடுத்த பள்ளிவாசல் ஹம்சாவுக்கு அதில்
படுத்திருப்பதே ஒரு கௌரவமாகப் பட்டது.
நிக்காஹ்
விட்டில் கிடைத்த சாப்பாடு வயிற்றில் திடமாகக் கிடக்கிறது. பீடி வேண்டும்
துட்டுக்கு எங்கே போக?
வேலுச்சாமி
நாடார் கடையில் ஏற்கனவே கடன் அதிகம். அவன் தரமாட்டான். கப்பல் ஹம்ஸா முதலாளியிடம்
தோப்புக்காவல் பார்த்தவன் தான் வேலுச்சாமி. அதை எல்லாம் இப்போது நினைக்கவா
போகிறான்.
பீடி
வேண்டும் துட்டு வேண்டும். ஹம்ஸா புரண்டு புரண்டு படுக்கிறார்.
பள்ளிவாசல்
படிக்கட்டுக்கு உள்ளே ஓரமாகப் பச்சைக் கலரில் ஒரு பேப்பர் துண்டு கிடக்கிறது.
ஹம்ஸா கூர்ந்து பார்க்கிறார். ரூபாயாக இருந்ததால் படீரென்று எழுந்து அதை நோக்கி
ஓடினார். குனிந்து விருட்டென்று எடுத்தார். ஐந்து ரூபாய் நோட்டு. மடியில் வேக வேகமாக சொறுகிக் கொண்டார்.
இனி
படுக்க முடியாது. பீடி வாங்க வேண்டும். பெட்டிக் கடைக்கு நடந்தார். கடையில் வேலுச்சாமி
நாடார் மகன் இருந்தான்.
கப்பல்
ஹம்ஸா முதலாளி வாரிசு, அதே ரத்தம் மிடுக்காக ரூபாயை நீட்டி ஒரு கட்டுப் பீடியும்
தீப்பெட்டியும் கேட்டார். கடைக்காரர் பீடியும் தீப்பெட்டியும் அடக்கமாகத் தந்தார்.
மீதிச் சில்லறையும் ஹம்ஸா கையில் மிதந்தது.
ஒரு
பீடியை எடுத்தார். இதழில் பொறுத்தினார். தீக்குச்சி நெருப்பில் பீடி நுனி கனன்றது.
வாய் முழுக்க புகை மண்டியது. நிக்காஹ் சாப்பாடு வயிற்றுக்குள் திமிங்கலமாக
கிடந்தது. அதனைக் கூட பீடிப்புகை ஒரு தட்டு தட்டி விட்டது. அப்பாடா...
ஹம்ஸா
பீடி புகை சுருண்டு பறந்து கலைய நடந்து கொண்டே இருந்தார். காலில் சுரீரென்று ஒரு
குத்தல் வலி புடிங்கியது. ஹம்ஸா குனிந்து பார்த்தார். கண்ணாடிச் சில் பாளமாக
அறுத்திருந்தது. ரத்தம் கசிந்து மண் தரையில் துளி போட்டது.
பள்ளிவாசலில்
கிடக்கும் பொருள் பள்ளிவாசல் சொத்து. கப்பல் ஹம்ஸா முதலாளி எப்பவோ தீர்ப்பு வழங்கினார்.
No comments:
Post a Comment