Monday, October 6, 2014

இதுதான் மனித வதை..!


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு, தூர்தர்ஷன் ஒளிபரப்பில் நேரடியாக ஒரு மணி நேரம் காட்டப்பட்டது பற்றி எதிர்ப்புகள் கடந்த இரண்டு தினங்களாக ஏராளமாக வந்து விட்டன. அந்த எதிர்ப்புப் பூரண நியாயமானது என்று பதிவு செய்து விட்டு, அது பற்றிய விளக்கங்களை இங்கே தவிர்த்துக் கொள்கிறேன்.

ஆனால் அவருடைய சொற்பொழிவில் உள்ள அடாவடித்தனமான கருத்துக்களை விமர்சிப்பது ஒரு இந்தியக் குடிமகனாகிய எனக்கு இருக்கும் உரிமைகளிலும் கடமைகளிலும் உள்ள தகுதியாகும். அதன்படி அவற்றைப் பதிவு செய்கிறேன்.

இது மாதிரியான பதிவு வேளைகளில், ஒரு பிழையான அணுகுமுறைகளும் திசை திருப்பும் சாதுர்யங்களும் மிகச் சிறுத்த சிலருக்கு ஏற்படுகிறது.

என் பெயர் ஹிலால் முஸ்தபா என்று இருப்பதால் இவன் ஒரு முஸ்லிம். இவர்களுக்கான ஆதாயங்களுக்காக வலிந்து பதிவு செய்கிறான்என்ற நினைப்பில் முரண்படுபவர்களைப் பற்றி நான் அக்கறைக் கொள்ளப் போவதில்லை. இப்படி எண்ணுபவர்கள் தங்களுக்குள்ளேயே தான்தோன்றித்தனமாக எண்ணிக் கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரை எனக்குள்ள உண்மையை நான் மிகுதியும் நேசிக்கிறேன்.

தரப்பட்டு இருக்கும் செய்தியை அதன் வரலாற்றுப் பின்னணியோடு நான் நினைவு கூருகிறேன். இந்த நினைவு கூரலுக்கு எவரிடமும் அனுமதி வாங்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்னும் தார்மீகப் பொறுப்போடு இந்தப் பதிவை அமைக்கிறேன்.

பாகவத் தன் பேச்சில், ஒரு கோரிக்கை வைக்கிறார். பசுவதை மற்றும் இறைச்சி ஏற்றுமதிக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். இந்தச் சட்டத்தை அரசு நிறைவேற்றி ஆக வேண்டும்என்ற இவரது கோரிக்கையில் எத்தகைய அரசியல் அடங்கி இருக்கிறது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பசு மாமிசத்தை இந்திய எல்லைக்குள் பிறந்தவர் எவரும் புசிக்கக் கூடாது எனச் சொல்ல முனையும் பாகவத் எந்த அடிப்படையில் இதைப் பேசுகிறார்?.

பசு இந்து சமூகத்தின் கடவுள். அதைப் புசிப்பது கடவுளைப் புசிப்பதற்குச் சமம். எனவே அதைப் புசிப்பவர் இந்தியாவில் இருக்கக் கூடாது என்று அவர் கருதுகிறார் போலும்.

வங்காளத்து பிராமணர்கள் மீன் புசிப்பதை மதரீதியாக அங்கீகரித்துக் கொண்டார்கள். அசைவத்துக்குள் இருந்த மீனை சைவத்துக்குள் பொருத்திக் கொண்டார்கள்.

மீன் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான மச்ச அவதாரம். இந்த மச்ச அவதாரத்தைப் புசிப்பது தெய்வத்தைப் புசிப்பதற்குச் சமம். இதற்கும் தடைச்சட்டம் கொண்டுவரக் கோரலாம்.

மலர்கள் அனைத்தும் தெய்வத்தோடு சம்மந்தப்பட்டப் புனிதங்கள். அந்தப் புனித மலர்களைச் செடிகளில் இருந்து, மரங்களில் இருந்து பிய்த்து வதை செய்து அவற்றைக் கொண்டு மாலைகள் அமைப்பதும் மண மேடை அமைப்பதும் பிண ஊர்வலத்தில் வீசி எறிவதும், பாகவத் போன்ற தலைவர்களின் தோள்களில் மாலையாக்குவதும் தெய்வத்தை வதை பண்ணுவது போல் அல்லவா ஆகிறது. அதற்கும் தடைச் சட்டம் கொண்டு வரலாம்.

மாமிச உணவு இந்திய உணவல்ல. இறைச்சி உணவு வகைகள் இந்தியர்களுக்கு உரியது அல்ல என்றெல்லாம் கருத்துச் சொல்லி அதை வலியுறுத்த அரசாங்கத்தைக் கட்டாயப் படுத்துவது வரம்பு மீறிய செயல்.

சிறுபான்மை முஸ்லிம்கள், கிருத்தவர்கள் மட்டும்தான் இறைச்சி, மாமிசம் புசிக்கும் மிலேச்சர்கள் என்ற பாணியில் பிரச்சாரத்தை ஆர்.எஸ்.எஸ். தோன்றிய நாளில் இருந்து தொடங்கி வைத்து வருகிறது.

நான் தமிழன். நிச்சயமாகத் தமிழன். பிறப்பால் இஸ்லாமிய சமூகத்தில் பிறந்து வாழ்ந்து கொண்டு இருப்பவன். தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கக் கூடிய இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இது பொருந்தும். இந்தியத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுக்கும் கூடத்தான் இது பொருந்தும். எங்கள் தமிழினத்தினுடைய வரலாற்றை நான் நினைவு கூருகிறேன்.

கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் பற்றிய தகவல் ஒன்றை நினைவு கூருகிறேன்.

தமிழ் மூதாட்டி அவ்வையார், புறநானூற்றிலே ஒரு தகவலைப் பதிவு செய்கிறார்.

அதியமானிடம் மது குறைந்த அளவில் இருந்தால் அந்த மதுவை எங்களுக்குத் தந்துவிட்டு, அவன் பருகாது இருந்து விடுவான். நிறைந்த அளவு இருந்தால் அவனும் அருந்தி எங்களுக்கும் வழங்குவான். அது மட்டும் அல்ல எலும்புகளே இல்லாத மாமிசத் துண்டுகளால் தயாரிக்கப்பட்ட உணவை எங்களுக்கு வழங்குவான். ஒரு கையிலே மதுக் கோப்பையையும் மறு கையிலே மாமிசத் துண்டையும் மாறி மாறி சுவைத்து மகிழ்ந்து கொண்டு இருப்போம்”.

இப்படிப் பதிவு செய்து இருப்பது பெண்பாற் புலவர் அவ்வையார். இப்படிப் பதிவு செய்து இருக்கக் கூடியக் காலம் முஹம்மது நபியின் காலத்துக்கும் முந்தைய காலம்.

தமிழர்களினுடைய உணவுகளில் மாமிசம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தமிழர்கள் மட்டும் அல்லர் இன்றுள்ள இந்திய எல்லைக்குள் இருக்கும் அனைத்து இன மக்களின் உணவுப் பட்டியலில் மாமிசம் முக்கிய உணவாக இருந்திருக்கிறது, இருந்து வருகிறது.

வேதகால பிராமணர்கள் மாமிசம் புசித்து இருக்கிறார்கள். வேள்விகளில் பசுக்கள் பலியிடப்பட்டு இருக்கின்றன. பலியிடப்பட்ட பசுக்களை மற்ற நைவேத்தியங்கள் போன்றே, வேத விற்பனர்களும் மற்றவர்களும் புசித்துப் பருகி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

பிந்திய பிராமணர்கள் மாமிசத்தைத் தவிர்த்து வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டார்கள். இந்தச் சிறுபான்மையினர் தங்களுடைய உணவு முறைகளை இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டம் இயற்றச் சொல்கிறார்கள்.

இந்தியாவின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலித்துகள் மற்றும் இந்திய இன மக்கள், தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக் காலம் தொடங்கி புசித்து வந்த உணவை, ஒரு சட்டம் போட்டுத் தடை செய்ய சொல்லுகின்ற அநாகரீகம் பாகவத் போன்றவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

ஆனந்த விகடனின் பழைய ஆசிரியர் குழுவில் இருந்த மணியன், அந்தப் பத்திரிகைச் சார்பாக உலகின் பல பாகங்களுக்குச் சென்று வந்து, “இதயம் பேசுகிறதுஎன்று ஒரு பயணக்கட்டுரை எழுதினார்.

மணியன் அமெரிக்கா பற்றியப் பயணக் கட்டுரையில் குறிப்பிடும் ஒரு செய்தி இப்போது என் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்காவில் ஒரு விழாவில் விருந்தின் போது சில அமெரிக்கர்களோடும் அமெரிக்கத் தலைவர்களோடும் மணியன் கலந்துரையாடலில் ஈடுபட்டு இருந்தாராம். அவர்கள் பேச்சு இந்தியாவைப் பற்றித் திரும்பியதாம்.

அப்போது சிலர் மணியனிடம் கேட்டு இருக்கிறார்கள், “இந்தியா தன் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலையில் இன்று இருக்கிறது. அங்கே பஞ்சம் அதிகரித்து இருக்கிறது. தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய அளவு விவசாயம் இல்லை. உணவுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு இருக்கிறது. இந்நிலையில் உங்களிடம் வைத்து இருக்கக் கூடிய கால்நடைகளை உணவுக்காகப் பயன்படுத்திக் கொண்டால் கொஞ்சம் தன்னிறைவு பெற வாய்ப்பு இருக்கிறது அல்லவா?.. இதை விட்டுவிட்டு பசு மாமிசத்தைப் புசிக்கத் தடை செய்யப் போராடி வருகிறீர்களே அது ஏன்?” – இதுதான் அந்த அமெரிக்கர்களின் கேள்வி.

மணியன் இதற்குப் பதில் சொல்லி இருக்கிறார், “பசு எங்களின் வணக்கத்துக்கு உரிய தெய்வத்தன்மை கொண்டது. அதை உணவாக எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்.
அமெரிக்காவுக்குப் பஞ்சம் வர வேண்டாம். ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன் அப்படி ஒரு பஞ்சம் அமெரிக்காவில் வந்து விட்டால், நாங்கள் பசுவுக்குத்தரும் அந்தஸ்தை நீங்கள் உங்கள் வளர்ப்பு நாய்களுக்குத் தருகிறீர்கள். நானே இதை இங்கே கண்கூடாகப் பார்த்து இருக்கிறேன்.

அந்த நிலையில் நாயை, அறுத்துப் புசித்து பசியில் இருந்து தப்பித்துக் கொண்டால் என்ன? என்று நான் உங்களைக் கேட்டால் உங்களுக்கு அது எப்படி இருக்கும்?” இப்படி மணியன் கேட்டு இருக்கிறார்.

நான் அந்த அமெரிக்கர்களின் வாயை அடைத்து விட்டேன்அன்று சந்தோஷப் பட்டேன். ஆனால் அவர்கள் அனைவரும் தந்த பதில் என்னை அதிர வைத்து விட்டது. என்று மணியன் குறிப்பிடுகிறார்.

அந்த அமெரிக்கர்கள் சொல்லி இருக்கிறார்கள் மிஸ்டர். மணியன் அப்படி ஒரு நிலை அமெரிக்காவிற்கு ஏற்பட்டால் நாங்கள் நாய்களை அறுத்துப் புசிப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டோம். அந்த உணவை எப்படியெல்லாம் சுகாதாரமாய்த் தின்ன வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து முடிவு செய்வோம். மேலும் இன்னும் அதிக அளவில் நாய்களை எப்படி உற்பத்தி செய்யலாம் என்னும் ஆராய்ச்சியிலும் இறங்குவோம்” – என அந்த அமெரிக்கர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

பாகவத் உரையில் அமெரிக்காவை அங்கீகரித்துக் கொண்டு இருக்கிறார். இன்னும் இங்கு இருப்பவர்கள் எல்லாம் பல நேரங்களில் அமெரிக்காவை முன்னுதாரணமாக்குகிறார்கள். அமெரிக்காவின் இந்த நடைமுறையையும் இவர்கள் ஏற்றுக் கொண்டால் என்ன?..

வங்கத்துப் பஞ்சம் இந்திய சரித்திரத்தைத் திக்பிரம்மை பிடிக்க வைத்த ஒரு கொடூரப் பஞ்சம். அந்தக் காலகட்டத்தில் மழை இல்லா காரணத்தால் உணவு தானியங்கள், உற்பத்தி அற்றுப் போயின. உணவில்லாக் காரணத்தால் பாமர மக்கள் நடைபாதைகளில் செத்துக் கிடந்தார்கள். உணவில்லாக் காரணத்தால் செத்த மிருகங்களின் மாமிசத்தைப் புசித்தார்கள். மீன்களை அருந்தினார்கள். இந்த நிலையில் பசுக்களையும் உணவாக்கினார்கள்.

மஹாராஷ்டிரத்தில் இருந்த சில இந்து அமைப்புகள், பசுக்கள் அறுபடுவதைச் சகிக்காமல் அதற்கு மாற்று வழி காண, உணவுக்காக விற்கப்படும் பசுக்களை வங்கத்தில் இருந்து விலை கொடுத்து வாங்கி வந்து மராட்டியத்தில் ஒரு பெரும் நிலப்பரப்பில் அந்தப் பசுக்களை மேய விட்டு, அந்தப் பசுக்களே சாகும் வரை வாழ வைப்பது என முடிவு செய்தனர். (அதாவது தெய்வங்களைக் கொல்லக் கூடாது, தெய்வங்கள் தாங்களாகவே செத்துக் கொள்ளட்டும் என்பது போல).

இதற்குப் பெரும் தொகை தேவைப்பட்டது. மக்களிடம் வசூல் செய்வது என முடிவு செய்தனர். இதற்காகச் சுவாமி விவேகானந்தரையும் நாடினர்.

சுவாமி விவேகானந்தர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

வங்காளத்தில் மக்கள் பசியால் செத்துக் கொண்டு இருக்கும் பொழுது பசுக்களைப் பாதுகாக்க நினைப்பது வினோதமானது, ஏற்க முடியாதது. கடவுள்களை, கடவுளாக்கிப் பார்ப்பதற்கு மனிதர்கள் மட்டுமே மிக முக்கியமானவர்கள். இந்த மனிதர்கள் எல்லாம் மரணக்குழியில் விழுந்து கொண்டு இருக்கும் பொழுது அந்தக் கடவுளர்கள் எல்லாம் யாருக்காகத் தேவைப்படுகிறார்கள்?” என்று சுவாமி விவேகானந்தர் பதில் சொல்லி விட்டார்.

முன்னே சொன்ன அமெரிக்கத் தத்துவம் அந்நியத் தத்துவமாக இருக்குமேயானால் அதைத் தவிர்த்து விட்டு சுவாமி விவேகானந்தர் காட்டிய இந்திய வழி முறையை ஏற்றுக் கொள்வதர்க்கு ஏதாவது தடை இருக்கவா முடியும்?..

இவ்வளவு தூரத்திற்கு முரண்பட்ட செய்திகளை முன்வைத்த பாகவத் உரையை இந்தியப் பிரதமர் மோடி பாராட்டி வரவேற்று இருக்கிறார்., “மோகன் பாகவத் தனது உரையில் தேசத்தின் முக்கியமானப் பிரச்சினைகள் குறித்துப் பேசியுள்ளார். சமூக சீரமைப்புப் பற்றிய அவரது கருத்துக்கள் மிகப் பொருத்தமானவைஎன்று மோடி பாராட்டி உள்ளார்.


பிரதமர் மோடி மறைத்து வைத்து இருக்கும் ஒவ்வொரு கறும்பூனைக் குட்டிகளும் ஒவ்வொன்றாகத் துள்ளிக் குதித்து வெளிவரத் தொடங்கி விட்டன.

No comments:

Post a Comment