ஒரு சின்ன அறையும்..! சாதாரண மனிதர்களும்..!
பல நேரங்களில் வரலாறுகளை நிகழ்த்தக் கூடிய சம்பவம் மிகச் சாதாரண
மனிதர்களாலும் மிகச் சிறிய அறைகளுக்குள்ளும் பிறப்பெடுத்து வெளி உலகுக்குப்
புறப்பட்டு வந்து இருக்கிறது.
அப்படி ஒரு நிகழ்வு 1985 – ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி
வெள்ளிக் கிழமை இரவு, சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள மலையப்பன் தெருவில் இருக்கும் ஒரு
சின்ன இல்லத்தின் அறையினுள் தோற்றம் செய்தது.
சென்னை பெரம்பூர், ஜமாலியா மேல் நிலைப் பள்ளியின் அன்றையத் தலைமை ஆசிரியராக இருந்த
முகம்மது இக்பாலின் வீடு மலையப்பன் தெருவில் இருக்கிறது.
அந்த இல்லத்தில்தான் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவையின் உதயத்தின்
வித்து பதிவானது.
1985, மார்ச் மாதம் 29-ம் தேதி, காலையில் சென்னை ஜமாலியா மேல்நிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர் புலவர்
அ.ஷேக் அலாவுதீன், மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவில் இருந்த இந்தியன் யூனியன் முஸ்லிம்
லீகின் தலைமையகத்தில் வந்து என்னைச் சந்தித்தார். அப்போது நான் அங்குதான் குடி
இருந்தேன்.
இன்று இரவு தலைமை ஆசிரியர் இக்பால் இல்லத்தில் ஒரு முக்கிய ஆலோசனைக்
கூட்டம் இருக்கிறது “அதற்கு நீரும் வர வேண்டும். முக்கியமாக எதிர்ப் பாக்கிறோம்” என்ற
அழைப்பை, அழைப்பாகவல்ல , வற்புறுத்தலாக என்னிடம் தெரிவித்தார்.
அந்த இரவு இக்பால் இல்லத்தில் கூடினோம். இக்பால் இருந்தார். புலவர்
அலாவுதீன் இருந்தார். மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்
சேமுமு. முஹம்மதலி உடன் இருந்தார். நானும் சென்று கலந்து கொண்டேன்.
மொத்தமாக நாங்கள் நான்கு பேர்தான். இந்தக் குழுவுக்குப் பெயர்தான்
ஆலோசனைக் கூட்டம்.
பேராசிரியர் சேமுமு. முஹம்மதலியிடம் இந்த நிகழ்வுக்கு முன் அவ்வளவு
பரிட்சயம் எனக்கு இல்லை.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை என்ற இலக்கிய அமைப்பின் தலைவர் அவர்
என்று தெரிந்து இருந்தேன். அந்த இலக்கிய பேரவையின் செயலாளர் கவிஞர் இ.பதுருதீன்
எனக்கு நன்கு அறிமுகமானவர். இந்த இ.பதுருதீன்தான் பின்னாளில் தமிழ்நாடு வக்பு
வாரிய பத்திரிகையான இஸ்மி மாத இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்த தத்துவக் கவிஞர்
இ.பதுருதீன்.
இந்த இலக்கிய பேரவைக்குள் சிலபல காரணங்களால் விரும்பத்தகாத
விளைவுகளும் நடைமுறைகளும் ஏற்பட்டுவிட்ட காரணத்தால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப்
பேரவையை மாற்றி அமைக்க, புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அமைப்பின் தலைவராக இருந்த சேமுமு.
முஹம்மதலியும், அதன் செயலாளர் இ.பதுருதீனும் கருத்து முரண்பட்டார்கள்.
இந்தக் கருத்துமுரணின் அடிப்படையில் புதிய இலக்கியப் பேரவை உதயமாகிவிட
வேண்டும் என்ற முடிவில் தலைமையாசிரியர் இக்பாலும் , புலவர்
சேக் அலாவுதீனும் தீர்மானமாக இருந்தனர்.
அதனடிப்படையில் பேராசிரியர் சேமுமு.முஹம்மதலியுடன் உடன்பட்டு, புதிய
இலக்கியப் பேரவையை உருவாக்க நடந்த ஆலோசனைக் கூட்டம்தான் அது.
இக்பாலும், அலாவுதீனும் என்னை இதுபற்றி ஆலோசனையில் இணைத்துக் கொள்ள வேண்டும்
என்று முடிவு கட்டி அழைத்திருந்தார்கள்.
மலையப்பன் தெருவில் இருந்த தலைமையாசிரியர் இக்பாலின் சிறிய வீட்டின்
ஒரு சின்ன அறையில் மிகச் சாதரணமான நாங்கள் நான்கு பேரும் ஆலோசித்து
முடிவெடுத்தோம்.
பேராசிரியர் முஹம்மதலியைத் தலைவராகவும் இக்பாலைத் துணைத் தலைவராகவும்,
புலவர் சேக். அலாவுதீனைச் செயலாளராகவும் நாயகப் பேரோளி கவிஞர்
ம.மைதீனை இணைச் செயலாளராகவும் கொண்டு புதிய இஸ்லாமிய இலக்கியப் பேரவை அந்த
நள்ளிரவில் உதயமானது.
1985 மார்ச் 29 நள்ளிரவு எனக்கு இவ்வளவு நினைவில் இருப்பதற்கு முக்கிய காரணம்,
அந்த இரவில்தான் என் மூத்த மகள் ராயபுரம் ரெய்னி ஆஸ்பத்திரியில் இரவு
பிறக்கிறாள்.
மருத்துவமனையில் ஆப்பனூர் காசிம் அண்ணன், பீர்
அண்ணன், கவிஞர் காசிம் போன்றவர்கள் என்னை வலைப் போட்டு தேடிக்
கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் தெரியாமல் நான் ஐஸ் ஹவுஸ் மலையப்பன் தெருவில்
இக்பால் இல்லத்தில் தீவிர இலக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறேன்.
இந்தியாவுக்கு நள்ளிரவில் சுதந்திரம் வந்தது போல புதிய இஸ்லாமியத்
தமிழ் இலக்கியப் பேரவை இந்த நள்ளிரவில் தலைமையாசிரியர் இக்பால் இல்லத்தில்
உதயமானது.
ஏற்கனவே இருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவையை அதன் செயலாளராக
இருந்த கவிஞர் இ.பதுருதீன் விட்டுவிடாமல் முன்னெடுத்துச் சென்றார். அதன் தலைவராகக்
காங்கிரஸ் இயக்கத்தின் பிரமுகரான இதாயதுல்லாவை, அவர்
தேர்ந்தெடுத்துக் கொண்டார். ஆக மொத்தம் இரண்டு இஸ்லாமியப் பேரவைகள் நடமாடின.
பேராசிரியர் சேமுமு. முஹம்மதலி தலைமையில் உள்ள புதிய இஸ்லாமியத்
தமிழ்ப் பேரவை ஒரு புத்துயிரும் புதுவேகமும் கொண்டு முன்னெழுந்து சென்றது.
ஆப்பனூர் காசிம் அண்ணன் , பீர் அண்ணன் போன்ற முஸ்லிம் லீகின் செல்வாக்கு மிக்கவர்களால் இந்த இலக்கியப் பேரவை வீரியம் பெற்றது. முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் அவர்களின் பூரண ஒத்துழைப்பு இந்தப் பேரவைக்குத் திருப்தியான அளவு கிடைத்தது.
அதுவரை இலக்கிய ஆர்வலராகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் குறிப்பிட்ட
வட்டத்தில் தெரிந்திருந்த, சேமுமு முஹம்மதலி தமிழகத்தில் ஓரளவு பரவலாக அறிமுகமாக இந்த இலக்கியப்
பேரவைதான் காரணமாக அமைந்தது.
இந்த இலக்கியப் பேரவைத் தோன்றிய ஒரு சில மாதங்களிலேயே பல அரிய
சாதனைகளைத் தமிழகத்தில் படைக்க ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் அதுவரை நடந்திராத ஒரு அற்புதமான ஷரீஅத் மாநாட்டை இந்தப்
பேரவை நடத்தியது.
இந்த ஷரீஅத் மாநாடு தமிழக மகளிர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட முதல்
ஷரீஅத் மகளிர் மாநாடு. சென்னை ஜார்ஜ் டவுணில் பிராட்வே அருகில் உள்ள ஒரு பெரும்
மண்டபத்தில் காலை தொடங்கி மாலை வரை மகளிர் ஷரீஅத் மாநாடு நடைபெற்றது.
தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் மகளிர் பெருமக்கள்
பங்கெடுத்துக் கொண்டார்கள். பெரிய அரசியல் கட்சி மாநாடு போன்று போஸ்டர்கள்
அச்சடித்து தமிழகமெங்கும் ஒட்டப்பட்டன.
இந்த மாநாட்டின் அமைப்பாளராகப் புலவர் சேக்.அலாவுதீன் துணைவியார்
புலவர் ஜவஹர் நிஷா இருந்தார். அமைப்புப் பணிகளை கவனித்து வந்தார். இந்த மாநாட்டின்
கூட்டத்தை, சென்னை எழும்பூர் பெண்கள் கிரஸன்ட் ஓரியன்டல் பள்ளி தலைமையாசிரியை
ஷரீபா அஜீஸ் தலைமையேற்று நடத்தினார்.
சென்னை S.I.E.T தமிழ்ப் பேராசிரியர் பாத்திமா பேகம், வண்டலூர்
கிரஸன்ட் ஓரியன்டல் பள்ளி ஆசிரியை புஷ்ரா அமானுல்லா, சேமுமு.
முஹம்மதலி துணைவியார், வைஸ்யா வங்கியில் பணிபுரிந்து வந்த ஹுமைரா முஹம்மதலி போன்ற பலரும்
பங்கேற்றனர்.
கிட்டதட்ட பதினான்கு பெண் சொற்பொழிவாளர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.
அவர்கள் பெயர்களை மறந்துவிட்ட பிழை என்னைச் சார்ந்தது. அவர்கள் இதற்காக மனம்
பொருத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாநாட்டு விளம்பர போஸ்டர்களில் ஒரு தனித்தன்மையான விளம்பரம்
இணைந்திருந்தது.
“இது பெண்களால் நடத்தப்படும் மாநாடு, ஆண்களுக்குத்
தனி இட வசதி உண்டு” என அச்சிட்டு இருந்தது.
தமிழகக் கூட்டங்களில், மாநாடுகளில் “பெண்களுக்கு
தனி இட வசதி உண்டு” என்று போஸ்டர் ஒட்டுவதுதான் அதுவரை இருந்துவந்த வழக்கம். இந்த ஷரீஅத்
மாநாடு மட்டும் “ஆண்களுக்கு தனி இட வசதி” என்று அறிவிப்புச் செய்தது. மாநாடும்
அப்படியே நடைபெற்றது.
தமிழக மாவட்டங்களில் இருந்தெல்லாம் பெண்கள் திரண்டு வந்திருந்தனர்.
தனி இட வசதி பெற்று இருந்த ஆண்கள் பகுதியில் மாநில முஸ்லிம் லீகின் தலைவர் அப்துஸ்
ஸமது சாஹிப், பொதுச் செயலாளர் அப்துல் லத்தீப் சாஹிப், மற்றொரு
பொதுச் செயலாளர் திருச்சி. ஏ.எம். யூசுப் சாஹிப் , பேராசிரியர்
கே.எம். காதர் மைதீன் சாஹிப் , எஸ்.ஏ. காஜா மைதீன் எம்.பி. சாஹிப் போன்ற முன்னணி தலைவர்களும்
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க வி.ஐ.பி.களும் அமர்ந்திருந்து நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.
தமிழகத்திலேயே அதுவரை முஸ்லிம் மகளிர்களால் இப்படி ஒரு பிரம்மாண்டமான
மாநாடு தனியே நடந்ததில்லை. இந்தச் சாதனைக்கு இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை
நல்லதொரு முதல் முன்மாதிரியாக இருந்தது.
இந்தப் பிரம்மாண்டத்திற்குப் பின்புலமாக, பொருளாதார
பலமாக, இன்னும் ஊக்க சக்தியாக திகழ்ந்தவர்கள் ஆப்பனூர் காசிம் அண்ணன்,
ஆப்பனூர் பீர் அண்ணன் , ஆப்பனூர் சென்னைவாழ் ஜமாத்தார்கள் என்ற
உண்மையை இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும்.
இந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை இன்னுமொரு சாதனையையும்
செய்தது. சென்னை அண்ணாசாலையில் அன்றைக்கு இருந்த கலைவாணர் அரங்கத்தில் ஒரு
பிரம்மாண்டமான கவியரங்கம் நிகழ்த்தியது.
தமிழகத்தில் அப்போதைக்கு இருந்த தமிழ் இலக்கிய அமைப்புகள் எவையும்
செய்திராத அளவு இந்தக் கவியரங்கம் பிரம்மாணடமானதாக இருந்தது.
“மானுடம் வென்றதம்மா” என்ற தலைப்பில் மீலாது கவியரங்கம் நடந்தது.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் , கவிஞர் மு.மேத்தா, வாணியம்பாடி பேராசிரியர் கவிஞர் அலிப்பூர் ரஹீம், பேராசிரியர்
கவிஞர் அப்துல் காதர், அ.ஹிலால் முஸ்தபா, இஜட். ஜபருல்லாஹ், புலவர் சேக். அலாவுதீன் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்தக் கவியரங்கத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. தமிழகத்தில் இதுவரை
தலைசிறந்த பேச்சாளராக, எழுத்தாளராக, அராசியல் தலைவராக, பாராளுமன்றவாதியாக அறிமுகமாகி இருந்த தமிழ் மாநில முஸ்லிம் லீகின்
தலைவர் ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப் இந்தக் கவியரங்கத்தின் தலைவராக
பொறுப்பேற்றார்.
இந்த ஒரு கவியரங்கத்தில்தான் அவர் வாழ்நாளில் அவர் எழுதிய கவிதையை
அவர் வாசித்து இருக்கிறார். அப்துஸ் ஸமது சாஹிபிற்குள் ஒரு கவிஞன் ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டிருக்கிறான் என்ற ரகசியத்தை நானும் கவிஞர் ஜஃபருல்லாவும் அறிந்து
வைத்திருந்தோம்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரை உசிப்பி விட்டோம். அந்த
கவிஞன், அவருக்குள் இருந்து எழுந்து இக்கவிதை அரங்கில் தலைமைக் கவி
பொழிந்தான். இதுதான் உண்மை. ஒரு அற்புதமான தலைமைக் கவிதையினை அன்று அப்துஸ் ஸமது சாஹிப்
வெளிப்படுத்தினார்.
இந்தக் கவியரங்கத்திற்கும், ஆக்கத்தையும்
ஊக்கத்தையும் அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தவர்கள் ஆப்பனூர் காசிம் அண்ணனும்,
பீர் அண்ணனும்தான்.
இந்த இலக்கியப் பேரவை இன்று செயல்பாடு பெற்று இருக்கவில்லை. இது ஒரு
வேதனையான செய்திதான்.
இந்த இலக்கியப் பேரவைக்கு மனித காரணங்களாக இருந்தவர்களில் சிலர் இன்று
இல்லை. ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமது சாஹிப், ஆப்பனூர் காசிம் அண்ணன், தலைமையாசிரியர்
இக்பால் போன்றவர்கள் நம்மை விட்டு மறைந்து விட்டார்கள்.
எஞ்சி உள்ளவர்கள் நல்ல நட்புறவோடு தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.
பேராசிரியர் சேமுமு.முஹம்மதலி நாடகங்களை ஆய்வு செய்து, முனைவர்
பட்டம் பெற்றவர். அந்த ஆய்வை நூலாக்க முதலில் ஆப்பனூர் பீர் அண்ணன் பொருளாதார உதவி
செய்து வெளிக் கொணர்ந்தார்.
அதேபோல் சென்னையில் 1990 களில் நான் சற்று சிரமப்பட்டு கொண்டிருந்த
காலகட்டங்களில் ஒரு நெருக்கடியான நேரத்தில் மேடவாக்கம் காயிதெ மில்லத்
கல்லூரிக்குச் சென்று அவசர உதவிக்காக ரூபாய் ஆயிரம் பேராசிரியர்
சேமுமு.முஹம்மதலியிடம் கேட்டேன்.
அப்போது அவர் கைவசம் அந்தப் பணம் இல்லாத போதும் வேறு ஒருவரிடம் வாங்கி
அந்த உதவியைச் செய்தார்.
இப்படி எங்களுக்குள் பிணைப்போடு இருக்கிறோம். இந்த நட்பையும் இந்தப்
பிணைப்பையும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவைதான் நீடிக்கச் செய்திருக்கிறது.
அந்தப் பேரவை இன்று காணாப் பொருளாகிவிட்டது.
அந்த நட்பு மட்டும் கரைந்து போகாமல் எஞ்சி இருக்கிறது.
No comments:
Post a Comment